பதிவு செய்த நாள்
22
மார்
2016
12:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நாளை (மார்ச் 23) நடப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, புகழ்பெற்ற சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தேர்த்திருவிழாவில், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என, மூன்று மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, நாளை (மார்ச் 23) காலை நடப்பதை முன்னிட்டு, ஓசூர் டவுன் போலீசார் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகம் மற்றும் தேர் வலம் வரும் பகுதிகளில், 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும், 370 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். தேர்ப்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக, தெப்பக்குளத்தை சுற்றி பாதுகாப்புக்காக கம்புகள் கட்டப்பட்டு வருகிறது. தேர் வடிவமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், தேர் வலம் வரும் பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அரசியல் கட்சியின் விளம்பர பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர் வைப்பதற்கு முன்கூட்டியே, போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.