பதிவு செய்த நாள்
22
மார்
2016
12:03
அவிநாசி: திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயமான, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தல விருட்சம் பாதிரி மரம். ஊழிக்காலத்தில், கருணாம்பிகை அம்மன் பாதிரி மரத்தின் கீழ் தவம் செய்து, வலப்பாகம் பெற்றார் என்பது, தல வரலாறு. இதை நினைவு கூறும் வகையில், இன்றளவும் பாதிரி மரம் உள்ளது.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், தெப்பக்குளம் எதிரே உள்ள அம்மன் சன்னதி வளாகத்தில், பாதிரி மரம் இருந்துள்ளது. காலப்போக்கில், அது பட்டுப்போனது. இருப்பினும், அதன் வேர் பரவி, அருகே உள்ள கோ சாலையில், புதிதாக பாதிரி மரம் முளைத்தது. அது, வளர்ந்து, இப்போது பூ பூத்துள்ளது. சிவாச்சார்யார்கள் கூறுகையில், "வழக்கமாக, பங்குனி, சித்திரை மாதத்தில் பாதிரி மரத்தில் பூக்கள் பூக்கும். நடப்பாண்டு, கோவில் தல வரலாறான முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் நடக்கும் சமயத்தில், பாதிரி மரத்தில், பூக்கள் பூத்துள்ளது விசேஷமானது. இம்மரத்தில், பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடும்; காய் பிடிக்காது என்றனர்.