பதிவு செய்த நாள்
22
மார்
2016
12:03
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காவடி பழனியாண்டவர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, மார்ச், 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. காலை, 6 மணிக்கு, விக்னேஷ்வர, சங்காபிஷேகம் ஆகிய, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் மற்றும் முருகனுக்கு, திருக்கல்யாண உற்வசம் நடத்தப்பட்டது. இதையடுத்து, வள்ளி திருமணம் என்ற, தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சேலம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவான நாளை (23ந் தேதி), மூலவர் கந்தசாமிக்கு, காலை, 6 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, விசேஷ பூஜை செய்யப்படுகின்றன.
* வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர விழா, கடந்த, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவில் திருவீதி உலா நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில், பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருமணம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாளான நாளை (23ந்தேதி) மாலை, 4 மணியளவில், தேரோட்டம் நடக்கிறது.