பதிவு செய்த நாள்
22
மார்
2016
05:03
பண்ணாரி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் புகழ் பெற்ற,
பண்ணாரி மாரியம்மன் கோவிலில், அதிகாலை குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக
நடந்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பண்ணாரி
மாரியம்மன் கோவில் தமிழக – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளதால், தமிழகம்
மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள்
வழிபடுவது வழக்கம். இக்கோவிலின் முக்கிய பண்டிகையான குண்டம்
பெருந்திருவிழா கடந்த 7 ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, அம்மன் உலா புறப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பி,
கடந்த, 15ம் தேதி இரவு, திருக்கம்பம் சாற்றப்பட்டது. விழாவின் முக்கிய
நிகழ்ச்சியான குண்டம் விழா அதிகாலை கோலாகலமாக நடந்தது. நேற்று இரவு, 3
மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், சப்பரத்தில் அம்மனை துாக்கி,
திருக்குளம் சென்று அம்மன் அழைத்தல், வரம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை, 3.50 மணிக்கு திருக்குண்டம் முன் சிறப்பு பூஜை செய்து, மலர்,
கனிகளை வானத்தில் இறைத்து, பூசாரிகளும், சப்பரத்துடன் அம்மனை அழைத்துக்
கொண்டு கோவில் ஊழியர்களும் குண்டத்தில் இறங்கினர்.
தொடர்ந்து
பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த நான்கு நாட்களாக
வரிசையில் காத்திருந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், குழந்தையுடன்
தாய்மார்களும், மாற்றுத்திறனாளிகளும் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
ஒரு அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட குண்டத்தில் மதியம் ஒரு மணி வரை
பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து, பசு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள்
இறங்கின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கியதால்
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கலெக்டர் பிரபாகர், எஸ்.பி.,
சிபிசக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில், 400க்கும் மேற்பட்ட போலீசார்
கோவில் ஊழியர்கள், தனியார் அமைப்பினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.