பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயிலிலும், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலிலும் பங்குனி தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாச்சல மூர்த்தி கோயில் பங்குனி திருவிழா மார்ச் 14 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சுவாமிக்குசிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை 6.30 மணிக்கு கோ ரதத்தில் சுவாமி சண்டிகேஷ்வரரும், சட்டரதத்தில்விநாயகப்பெருமானும், வைரத்தேரில் சுவாமி கழுகாச்சலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின் தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இன்று (மார்ச் 23)இரவு தீர்த்த வாரியும், இரவு 8 மணிக்கு தபசு காட்சியும் நடக்கிறது. நாளை இரவு7 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு 7 மணிக்கு பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஆழ்வார் திருநகரி: ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதி நாதர் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 14 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ திருப்பதியில் கடைசி கோயிலான ஆதி நாதர்கோயில் திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் இரவு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார். ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி பொலிந்து நின்ற பிரான், தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர்.