பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
வடபழனி முருகன் கோவிலில், நேற்று நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், ஆகம விதி மீறப்பட்டதாக, கோவில் நிர்வாகத்துடன் பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி, 10 நாட்கள் திருவிழா நடக்கும். அதில், ஆறு நாட்கள் லட்சார்ச்சனை, பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மூன்று நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கும். இந்த ஆண்டு, 20 முதல், 22ம் தேதி வரை, மூன்று நாட்கள் மட்டுமே லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. அதிலும், பங்குனி உத்திரத்தன்று லட்சார்ச்சனையை, கோவில் நிர்வாகம் நீக்கி விட்டது. இதுகுறித்து, நேற்று பக்தர்கள் கோவில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தசரதபுரம், மேற்கு மாம்பலம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து, 4 ஆயிரம் பால் குடங்கள் எடுத்து வரப்பட்டன. நேர்த்திக்கடன் செலுத்த, 200க்கும் அதிகமான காவடிகள், வடபழனி கோவிலுக்கு வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சன்னிதி தெருவில், பக்தர்கள் கோவிலுக்கு வரிசையாக செல்ல தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. காவடி பால் குடம் வந்த நேரத்தில், கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தவில்லை. காவடி மற்றும் பால் குடங்களை கோபுர வாசல் வழியாக அனுமதிக்காமல், மேற்கு வாசல் வழியாக அனுப்பினர். குறுகிய வழியில், பெரிய காவடிகள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட, நேற்று செய்து கொடுக்கப்படவில்லை. கட்டண தரிசனத்தில் சென்றவர்களை அனுமதித்து, இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். பால்குட காவடியோடு, பக்தர்களையும் ஒரே நேரத்தில் உள்ளே அனுமதித்ததால், அங்கு நெரிசல் ஏற்பட்டது. - நமது நிருபர் -