பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு முருகர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலுார் மாவட்டம், நெய்வேலி வேலுடையான்பட்டு (வில்லுடையான்பட்டு) முருகர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான உத்திர விழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காவடி சுமந்து சென்று, நேர்த்திக் கடனைச் செலுத்தினர். வட்டம் 18ல் உள்ள காவடி விநாயகர் கோவில் உள்ளிட்ட நெய்வேலி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி எடுத்து வந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும்; தேர் இழுத்தும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். நெய்வேலி பிராமணர் சங்கம், புதுச்சேரி வின்னர் மில்க் நிறுவனம் ‘ருசி’ பாலகம் இணைந்து, பக்தர்களுக்கு மோர் பந்தல் அமைத்து, மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பங்குனி உத்திர விழாவில் இன்று (24ம் தேதி) தெப்பல் உற்சவமும், நாளை (25ம் தேதி) விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.