பதிவு செய்த நாள்
26
மார்
2016
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது. இயேசு சிலுவையில் அறைந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். மூன்று நாள் பின் உயிர்த்தெழுந்த தினத்தை மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும், இந்நாளையொட்டி அவர்கள், 40 நாட்களாக விரதமிருந்து நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் விரதமிருந்தனர். புனித வெள்ளி மற்றும் புனித வாரத்தையொட்டி முதல் நிகழ்வான திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி நடந்தது. குருத்து ஓலைகள் ஏந்தியபடி பவனியாக சென்றனர். தொடர்ந்து, நேற்றுமுன்தினம் பெரிய வியாழனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று, புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள், இயேசுபிரான் உருவச்சிலையுடன், சிலுவையை ஏந்தியபடி சிலுவைப்பாதையாக சென்றனர். புனித வெள்ளிக்கிழமையொட்டி, நேற்று தேவாலயங்களில் வழிபாடு நடத்தினர். பொள்ளாச்சி பாலக்காடு ரோடு, பஸ்ஸ்டாண்ட், இந்திரா நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.