பதிவு செய்த நாள்
29
மார்
2016
11:03
கூடலூர்: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில், பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தீர விசாரிக்காமல் அநியாயமாக கோவலனைக் கொன்ற குற்றத்திற்காக நீதி கேட்டு, சீறி எழுந்து மதுரையை எரித்த கண்ணகி, பெரியாற்றின் கரை வழியாக 14 நாட்கள் நடந்து சென்று, திருச் செங்குன்றம் என்னும் மலை மீது ஏறி நின்று, வானத்தை நோக்கி கைநீட்டியவாறு கோவலனை நோக்கி குமுறினாள். வானத்தில் இருந்து புஷ்ப பல்லக்கில் அங்கு வந்து இறங்கிய கோவலன், சித்ரா பவுர்ணமியன்று கண்ணகியை அதில் ஏற்றி தன்னுடன் வானுலகம் அழைத்துச் சென்றான் என சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. மதுரையில் இருந்து கூடலூர் வரை கண்ணகி நடந்து சென்றதற்கு சான்று கூறும் பல இடங்கள் இன்றும் உள்ளன. கண்ணகி கடைசியாக நின்றிருந்த திருச்செங்குன்றம் மலை இன்றளவும்கண்ணகி கோட்டமாக அழைக்கப்படுகிறது.
சர்வே: இங்கு அமைக்கப்பட்ட கண்ணகி கோயிலின் முகப்பு வாயில் தமிழகத்தை, குறிப்பாக மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேதான் மிகவும் பழமையானது. இதில் கண்ணகி கோயில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதனையே வலியுறுத்துவதாக உள்ளன. 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல் தமிழக- கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோயில், கேரள எல்லையில் இருந்து 40 அடி துõரம் தள்ளி, தமிழகப்பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
கிடப்பில் ரோடு பணி: கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக் குழு துவக்கப்பட்டு, கோயிலை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இக் குழு அப்போதய தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, கண்ணகி கோயிலுக்குச் செல்ல ரோடு அமைக்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகப்பகுதி வழியாக இக் கோயிலுக்கு ரோடு அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணி பாதி நடந்து கொண்டிருந்த போது தி.மு.க.,ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதே சமயம் கேரள அரசு திடீரென விழித்துக் கொண்டு செயலில் இறங்கியது. 1976ல் கேரள வனப்பகுதி வழியாக தேக்கடியில் இருந்து கண்ணகி கோயிலுக்கு அவசர அவசரமாக ரோட்டை அமைத்தது. இந்த ரோட்டின் வழியாகத்தான் தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பெயரளவுக்கு அமைக்கப்பட்ட இந்த ரோட்டை வைத்துதான், கேரள அரசு இன்று வரை கண்ணகி கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுகிறது. இது தொடர்பாக வேறு எவ்வித ஆதாரங்களும், நிரூபணங்களும் கேரள அரசிடம் இல்லை. ரோடு அமைக்கப்பட்ட சில ஆண்டுகள் கழித்து, கண்ணகி கோயிலில் துர்க்கையம்மன் சிலையை புதியதாக கொண்டு போய் வைத்த பிறகு கேரள மக்களின் நடமாட்டம் அங்கு அதிகரித்தது.
கெடுபிடி: இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மங்கலதேவி கண்ணகி கோயிலில் கேரள அரசின் பலத்த கெடுபிடிகளுக்கு இடையே தமிழக பக்தர்கள், பொங்கலிட்டு வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் செல்லாததால், காலப்போக்கில் கோயில் பகுதி சிதைந்து வருகிறது. இன்னும் சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் அழிந்து போகும் நிலை உள்ளது. தமிழக வனப்பகுதியின் வழியாக கண்ணகி கோயிலுக்கு ரோடு அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். வரலாற்று சிறப்பு மிக்க கண்ணகி கோயில் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டு, கோயிலை புதுப்பிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனை தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறச் செய்து, ஆட்சிக்கு வந்தபின் அதை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.