பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பண்டிகை நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது. ஆடிப்பண்டிகையின் துவக்கமாக, பூப்போடும் நிகழ்ச்சி, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும். ஆனால், கோவில் புதுப்பிக்கும் பணி தற்போது மந்தகதியில் நடந்து வருகிறது. இதற்கு பக்தர்களை அனுசரிக்காமல், கோவில் நிர்வாகம் செயல்படுவது தான் காரணம் என, கூறப்படுகிறது. சூலத்துக்கு பதில் கத்தி வைத்தல், கருவறை அகற்றுவதில் சிக்கல் என தொடர்ந்து, இந்த பணி இழுபறியாக நடக்கிறது. வெளிப்புற மண்டபத்தில் பூப்போடும் நிகழ்ச்சி நடக்கும். அந்த மண்டபம், 25 சதவீதம் கூட கட்டி முடிக்கப்படவில்லை. ஆடிப்பண்டிகைக்கு இன்னும், நான்கு மாதமே உள்ள நிலையில், கட்டடம் கட்டி முடிக்க இயலாது. இதனால், சேலம் மாவட்டத்தில் ஆடிப்பண்டிகை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவில் அறக்கட்டளை நிறுவனர் செந்தில் கூறியதாவது: கோவில் கருவறையை அகற்ற, அதிகாரிகள் முன்வந்தனர். வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், குனிந்து சாமி கும்பிடும் வகையில், கருவறை உள்ளதால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தொல்லியல் துறை ஆய்வுப்படி பணியை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பணி தொடர்ந்து நடக்கிறது. வெளிப்புற மண்டபம் நான்கு மாதத்தில் கட்டவில்லை என்றால், பூப்போடும் பணியில் பாதிப்பு ஏற்படும். இதனால், மற்ற கோவில்களிலும் ஆடிப்பண்டிகை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.