ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சியில் துதிக்கை இல்லாத விநாயகர் கோயில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் வரம்தரும் விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் பொதுமக்கள் உதவியுடன் விநாயக பக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் சிறப்பம்சம் இங்குள்ள வரம்தரும் விநாயகருக்கு துதிக்கை கிடையாது. விநாயகருக்கு இருந்த துதிக்கையை பல ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் உடைத்துவிட்டனர். துதிக்கை உடைந்த பின்னர் தான் விநாயகருக்கு புதிய கட்டடம், கும்பாபிஷேகம், ஒவ்வொரு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மேலும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரை மேற்கொள்வது இந்த கோயிலில் தான் நடக்கிறது. ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு மண்டல பூஜையின் போதும் வரம்தரும் விநாயகர் கோயிலில் இருந்து பேட்டை துள்ளல் வைபவத்தை நடத்துகின்றனர். இந்த கோயிலில் கடந்த மாதம் அம்பை டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் முன்னிலையில் அரசமரம், வேப்ப மரம் திருமண நிகழ்ச்சி நடந்தது. துதிக்கை இல்லாமலேயே அருள்பாலிக்கும் வரம்தரும் விநாயகர் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயிலில் நாகர், முருகர், பாலதுர்க்கை, நவக்கிரகங்கள், அரசு, வேம்பு ஆகியன எழுந்தருளியுள்ளது. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.