பதிவு செய்த நாள்
29
ஆக
2011
11:08
திருநெல்வேலி : பாளை., ராமசாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் செப்.2ம்தேதி காலை 6மணிக்கு நடைபெறவுள்ளதாக கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன் மற்றும் கோவிந்தராஜ பட்டாச்சார் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது; பாளை., ராமசாமி கோயிலில் உள்ள விமான கோபுரங்கள், ராஜ கோபுரம், மடப்பள்ளி, தரை மற்றும் மேல் தளம் செப்பனிடுதல், தெப்பக்குளம் நீராழி மண்டபம் சீரமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நன்கொடையாளர்கள் உதவியுடன் சுமார் 12லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இக் கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 2ம்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வரும் 31ம்தேதி காலை 7 மணிக்கு தாமிரபரணியிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு திருவாராதனம், யாகசாலை ஹோமம் ஆரம்பமும், திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டியும் நடக்கிறது. வரும் செப்.1ம்தேதி காலை 8 மணிக்கு யாகசாலை புண்யாக வாசனம், திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டியும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை ஹோமம், யந்திரஸ்தாபனம், மகா சாந்தி ஹோம திருமஞ்சனமும் நடக்கிறது. 2ம்தேதி காலை 5.30மணிக்கு பிரதான ஹோமம், பூர்ணாஹூதி, புனிதநீர் புறப்பாடும், காலை 6 மணிக்கு ராமசாமி, சீதாதேவி, லட்சுமணர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. 8மணி முதல் பொதுமக்கள் தரிசனம் மற்றும் சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கருட சேவை திருவீதி உலாவும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 31 மற்றும் செப்.1 மற்றும் 2 ம்தேதிகளில் காலை 8 மணி மற்றும் மாலை 6மணிக்கு யாக சாலை பூஜைகளும், நாலாயிர திவ்ய பிரபந்தம், வேதபாராயணமும் நடக்கிறது. வரும் 31ம்தேதி இரவு சேரன்மகாதேவி வெங்கடேஸ்வர பாகவதர் குழுவின் சார்பில் சீதா கல்யாணம் என்ற தலைப்பில் பஜனையும், செப். 1ம்தேதி இரவு புகழூர் சாமுண்டீஸ்வரி குழுவினரின் கர்நாடக இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. இவ்வாறு கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன் மற்றும் கோவிந்தராஜ பட்டாச்சார் தெரிவித்தனர்.