பதிவு செய்த நாள்
29
ஆக
2011
11:08
நாகர்கோவில் : ஆவணி இரண்டாம் ஞாயிற்றுகிழமையை யொட்டி, நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் நேற்று இரண்டாவது ஆவணி ஞாயிற்றுகிழமை ஆகும். நாகராஜா கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்க பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடந்தது. மேலும் கோயில் சுற்று பிரகாரம் பகுதியில் உள்ள சிவன், பாலமுருகன், சாஸ்தா, உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில், பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளா பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருமணம் கைகூடவும், குடும்ப கஷ்டங்கள் தீரவும் காணிக்கை செலுத்தி நாகராஜாவை வணங்கி சென்றனர். மேலும் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் வார்த்தும், மஞ்சள், உப்பு போன்றவை வாங்கி தங்கள் நேர்ச்சை கடன் செய்தனர். காலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோயிலின் அருகே மஞ்சள், உப்பு, பால் வியாபாரம் அதிக அளவில் நடந்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடும் செய்ய பட்டு இருந்தது. பக்தர்கள் சிரமமின்றி இறைவனை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தது. மதியம் தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை நடை திறக்கப்பட்டு 6.30 மணியளவில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அத்தாளபூஜையும், ஆதிசேஷன் வாகனத்தில் அனந்தகிருஷ்ணன் எழுந்தருளி, கோயிலை மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், அலுவலக மேற்பார்வையாளர்ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வடசேரி பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்புற பணிகள் நடந்து வருவதால், திருöந்லவேலி, புதப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்கள் தற்போது ஒழுகினசேரியில் இருந்து நாகராஜாதிடல் வழியாக வடசேரி சென்று வருவதால் நாகராஜாகோயில் பகுதியில் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து போலீசாரும் அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்த வண்ணம் இருந்தனர்.