பதிவு செய்த நாள்
29
ஆக
2011
11:08
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 1ம் தேதி நடப்பதையொட்டி, பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஆவணி மாதம் சதுர்த்தசி திதி, விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. கோவில், வீடுகளில் மட்டுமே விநாயகர் வழிபாடு, முன்னர் நடந்து வந்தது. தற்போது, தெருவுக்குத் தெரு, அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, விநாயகர் சிலையை வைத்து, குறிப்பிட்ட நாட்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதன் பின், சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், ரசாயன சிலைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், களி மண், மரக்கூழ், கிழங்கு மாவில் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் முதல் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், முக்கிய இடங்களில் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஒரு அடி முதல் 11 அடி வரையான சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, சத்தி ரோடு, பவானி ரோடு, காவேரி ரோடு உள்பட முக்கிய இடங்களில், சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. களி மண்ணாலான சிலைகள் 50 ரூபாய்க்கும், கிழங்கு மாவு, மரக்கூழில் தயாரான சிலைகள் 10 ஆயிரம் ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு நடக்கிறது.