பதிவு செய்த நாள்
31
மார்
2016
12:03
புதுச்சேரி: புதுச்சேரி கோவிலில் திருடி, வடிகால் வாய்க்காலில் மறைத்து வைத்திருந்த பழமையான வெண்கல மணியை, நகராட்சி ஊழியர்கள் கண்டுபிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். நெல்லித்தோப்பு வினோபா வீதியில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் தேங்கியது. அதையொட்டி, நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை 7:30 மணியளவில் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வடிகாலில், சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. கனமாக இருந்த அந்த மூட்டையை ஊழியர்கள் மேலே துாக்கினர். அதில் வெண்கலத்தால் ஆன கோவில் மணி இருந்தது. பாதி உடைந்த நிலையில், 48 கிலோ எடையில் இருந்த அந்த மணியின் மீது, குயவர்பாளையம் முத்து விநாயக முத்து குமாரசாமி– 1927 என, எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. மணியில் குறிப்பிடப்பட்டிருந்த குயவர்பாளையம் முத்து வினாயக முத்து குமாரசாமி கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவில் திருப்பணிகள் நடந்துவருவதால், மணியை கழற்றி வைத்திருந்துள்ளனர். இதையறிந்த மர்ம நபர்கள், மணியை திருடி, வடிகால் வாய்க்காலில் மறைத்து வைத்திருக்கலாம் எனவும், உடைந்த மணியின் பாகம், முத்துகுமாரசாமி கோவில் இரு ப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வடிகாலில் கிடைத்த வெண்கல மணியை, உருளையன்பேட்டை போலீசில், நகராட்சி கமிஷனர் சந் திரசேகரன் ஒப்படைத்தார். கோவிலுக்கு சொந்தமான மணி என்பதால், அதை கோவிலில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கோவில் மணியை திருடி வடிகாலில் போட்டது யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.