பதிவு செய்த நாள்
31
மார்
2016
12:03
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியின்போது, மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஞானசேகரன் கூறினார். வரும் ஏப்ரல், 21ம் தேதி காலை, 9.54 முதல் மறுநாள் காலை, 11.53 வரை சித்ரா பவுர்ணமி உள்ளதால், கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பக்தர்களின் வசதி குறித்து அனைத்து துறை சார்பில், ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது. டி.ஆர். ஓ., பழனி, எஸ்.பி., பொன்னி, கோவில் இணை ஆணையர் வாசுநாதன் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கலெக்டர் ஞானசேகரன் பேசியதாவது: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 10 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரை சுற்றி, ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு, 2,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சித்ரா பவுர்ணமி அன்றே தீர்த்தவாரி நடப்பதால், திருவண்ணாமலையில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள குளங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் வரும் பக்தர்கள், எவ்வித காரணம் கொண்டும் மலை மீது ஏறக்கூடாது. மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.