அந்தியூர்: அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஏப்., 6ம் தேதி, நடைபெற உள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக போடும் விறகுகளை இப்போதே குண்டத்தில் குவித்து வைக்கின்றனர். இந்த விறகுகள் பிளாஸ்டிக் கயிறு கொண்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது. இவை குண்டத்தில் உருகி பக்தர்களின் கால்களை பதம் பார்க்கும் அபாய நிலை குறித்து கடந்த, 27ம் தேதி காலைக்கதிரில் செய்தி வெளியானது. இதையடுத்து, கோவில் குண்டத்திற்கு அருகில் விற்கப்படும் விறகுகளில் பிளாஸ்டிக் கயிறு பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எச்சரிக்கை அறிவிப்புடன், இரண்டு பிளக்ஸ்போர்டு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பிளாஸ்டிக்கயிறு கொண்டு, கட்டி போட்டுள்ள விறகுகளை பயன்படுத்தும் முன் கயிறுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் தெரிவித்தார்.