பதிவு செய்த நாள்
29
ஆக
2011
05:08
சபரிமலையை ஐயப்பன் கோயிலைப் போலவே சென்னை அம்பத்தூரிலும் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத்தில் கணபதி, பாலமுருகன், நாகர், மாளிகைபுரத்து அம்மன், கடுத்த சுவாமி, கருப்பண்ணசாமி ஆகியோருக்கு தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. வருடந்தோறும் கொடியேற்றத்துடன் துவங்குகிற விழாவில், பள்ளிவேட்டை, ஆராட்டு விழா, உத்ஸவருக்குப் புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியன சிறப்புற நடைபெறும். இங்குள்ள ஐயப்பனை தரிசிக்க தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் இங்கு வந்து மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வார்கள். கார்த்திகை மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும், மற்ற மாதங்களில் முதல் மற்றும் கடைசி ஞாயிறுகளிலும் அன்னதானம் நடைபெறுகிறது. ஜனவரி 14 -ஆம் தேதியன்று, சுற்றியுள்ள பல கோயில்களுக்குத் திருவாபரணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மாலையில் ஐயப்ப ஸ்வாமிக்கு திருவாபாரணம் சாற்றி, கற்பூர ஜோதி தரிசனம் நடைபெறும். இதேபோல், மாளிகைபுரத்து அம்மனும் சக்தி வாய்ந்த தேவியாகப் பெண்களால் போற்றப்படுகிறாள். சன்னதியின் வெளிச் சுற்றில் உள்ள கம்பியில் மூன்று தேங்காய்களைக் கட்டிவிட்டு, தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையில் தரிசித்துப் பிரார்த்திக்க, திருமணத் தடை அகலும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேலும் தட்டு ஒன்றில், பச்சரிசியைப் பரப்பி, இரண்டு தேங்காய்மூடிகள் வைத்து, அவற்றில் நெய் தீபமேற்றி சாஸ்தாவை வழிபட... இளைஞர்களுக்கு நல்ல வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாதவர்கள் இங்குள்ள ஐயப்பனை மனதார வழிபட்டுச் செல்கின்றனர்.