பதிவு செய்த நாள்
29
ஆக
2011
05:08
சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீதி திருக்கோயிலில், ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியன்று மாலையில், வேல் மாறல் கூட்டுப் பிரார்த்தனை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பழமுதிர்சோலை சன்னதியில், வேலில் பராசக்தி திருவுருவம் அமைந்துள்ள சக்தி சொரூப வேலுக்கு அப்போது விசேஷ பூஜை நடைபெறும். குன்றக்குடி அருகில் உள்ள மயிலாடும்பாறை என்ற தலத்திலும் சக்தி சொரூப வேல் கோயில் அமைத்துள்ளார்கள். சூரபத்மன் முதலான கொடிய அரக்கர் சேனையை வெற்றிக் கொள்ள, முருகப் பெருமானுக்கு பதினொரு ருத்ரர்களை முறையே கொடி, வாள், குலிசம், வில், அம்பு, அங்குசம், மழு, தோமரம் (உலக்கை), மணி, தாமரை, தண்டம் ஆகிய படைக்கலங்கலாக சிவபெருமான் அளித்தார். ஐந்து பூதங்களையும் ஒருசேர வெல்லக்கூடியதும், யார்மேல் விடுத்தாலும், அவருடைய ஆற்றலையும் வரங்களையும் அழித்து உயிரைப் போக்கக் கூடியதான வேல் ஆயுதத்தைப் படைத்து அளித்தார். இதுவே அனைத்து படைக்கலங்களுக்கும் தலைமையானதும் முதன்மையானதும் ஆகும். வெல் என்றால் வெல்லுதல், வெற்றிபெறுதல் என்று பொருள். இதுவே வேல் என்றாயிற்று. வடமொழி ஸ்காந்தத்திலும், தமிழில் கந்த புராணம் மற்றும் வேறு சில புராணங்களிலும் சிவபெருமானே முருகனுக்கு வேல் கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதனை சிவபுரம் திருப்புகழில் அருணகிரிநாதர் காட்டுகிறார். அதேசமயம் பார்வதிதேவி முருகப் பெருமானை அழைத்து, எம் புதல்வா வாழி வாழி எனும்படி வீறான வேல்தர என்று திருச்செந்தூர் திருப்புகழில் அம்பிகையே வேல் கொடுத்ததாகப் போற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
வேல் என்பது ஞானத்தின் சொரூபம். ஞானம் என்னும் அறிவு, கூர்மையாகவும் அகலமாகவும் ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதை வேல் நமக்கு அறிவுறுத்துகின்றது. வேலாயுதத்தின் அடிப்பகுதி ஆழமாகவும், நடுப்பகுதி விசாலமாகவும் நுனி கூர்மையாகவும் திகழ்கின்றது. முருகன் உருவ வழிபாடு தொடங்குமுன், நம் நாட்டில் வேலை வைத்தே பூஜித்து வந்தனர். தமிழ், இலக்கியத்தில் வேற் கோட்டம் (வேல் கோயில்) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகக் காணப்படுகிறது. மஹா கந்த சஷ்டி விழாவில் ஐந்தாம் நாள், பார்வதிதேவியிடம் முருகப்பெருமான் வேல் பெற்று சூரசம்ஹாரத்துக்குப் புறப்படும் ஐதீக விழா நாகை அருகில் உள்ள சிக்கல், சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி ஆகிய தலங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அரக்கோணம் அருகில் பாகசாலை என்ற திருப்புகழ்த் தலத்தில் ஆனி மாத குமார சஷ்டியன்று வேல் பூஜை நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள ஞானமலை என்ற திருப்புகழ்த் தலத்தில், குமார சஷ்டி மற்றும்கார்த்திகை மாத சுப்ரமண்ய சஷ்டி ஆகிய இரண்டு நாட்களிலும் வேலுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சத்ரு சம்ஹார திரிசதி போன்ற பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள மேற்சுனை முருகன் வேலினால் உண்டாக்கியது. வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டால்-ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வளம் பெறலாம், வாழ்வில் ஒளி பெறலாம், இன்பமயமான இல்லறமும் பெறலாம்.