பதிவு செய்த நாள்
29
ஆக
2011
05:08
தருமபுரி-சேலம் சாலையில் உள்ளது நல்லம்பள்ளி. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. பயணித்தால் லளிகம் எனும் கிராமத்தை அடையலாம். இந்த ஊருக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஏழு வருடங்களுக்கு ஒருமுறை, ஆடி மாதத்தில் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவுக்கு 22 நாட்களுக்கு முன்பே, நோன்பு சாட்டுதல் நடைபெறுகிறது. இதை யாரும் பார்க்கக் கூடாது. பிறகு, நள்ளிரவு 12 மணிக்கு பொன்னிக்கும் பொன்னனுக்கும் திருமணம் நடைபெறுவதை அனைவரும் தரிசிப்பார்கள். கிட்டதட்ட இதையே நோன்பு சாட்டுதல் வைபவமாக்கிக் கொண்டனர். 16ம் நாளில் மிட்ராரெட்டி ஹள்ளி எனும் ஊரில் உள்ள ஆகாசப்பெருமாள் கோயிலில் பூ மிதித் திருவிழா நடைபெறும். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக பூ மிதிக்கின்றனர். மறுநாள் பெண் ஏர் கட்டுதல் எனும் நிகழ்ச்சி நடைபெறும். இதுதான் கோயிலின் மிக முக்கியமான வைபவம்.
பெண் கரக வீடு எனும் குடிசை அமைத்து, திருவிழா நிறைவுறும்வரை பெண் அங்கே விரதமிருப்பார். இதே போல், ஆண் கரக வீடு எனும் குடிசையில் ஆண் ஒருவர் விரதமிருப்பார். இந்த நாளில் ஊர் நாட்டாமை, தர்மகர்த்தாக்கள், கிராம மக்கள் என அனைவரும் திரண்டு, மேளதாளத்துடன் வந்து அழைப்பார்கள். குடிசையில் உள்ள பெண் எடுத்து வரும் கரகத்துக்கு பூஜைகள் நடைபெறும். இரண்டு பேர் வெப்பாலைக் கொம்பினைத் தலையில் கொம்புபோல் கட்டிக்கொண்டு மாடுகள் போல் வேடமிட்டு நிற்க, அந்தப் பெண் அவர்களை இழுக்க, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கலப்பையை பிடிக்க, இன்னொருவர் விதை தானியங்களை விதைப்பது போல் தூவியபடியே வருவார். அப்போது அவர் வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊர்மக்கள் விதை தானியங்களை நிரப்பியப் படியே இருப்பார்கள். கீழே விதைத்த தானியங்களை எடுத்து நிலத்தில் விதைத்தால், அந்த முறை விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.