திருப்பதி: திருமலையில் ’யுகாதி’ எனப்படும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நேற்று ஆஸ்தானம் நிகழ்ச்சி நடைபெற்றது.திருமலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நேற்று காலை ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ள தங்க வாசல் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினார். உற்சவ மூர்த்திகளுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப் பட்டது. துர்முகி ஆண்டு பஞ்சாங்கத்தை உற்சவ மூர்த்திகள் முன் அர்ச்சகர்கள் படித்தனர்.
நேற்று நடக்க இருந்த அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஏழுமலையான் கோவில், பல வித மலர், பழம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. விரைவு தரிசன வரிசைதிருமலையில் ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ’ஆழ்வார் டேங்க் காட்டேஜ்’ எனப்படும் ஏ.டி.சி., வாகன நிறுத்தம் அருகில் 1.95 கோடி ரூபாய் செலவில் புதியதாக ஏற்படுத்தப்பட்ட 300 ரூபாய் விரைவு தரிசன வரிசையை, நேற்று காலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயல்அதிகாரி சாம்பசிவ ராவ் துவங்கி வைத்தனர். இனி இந்த வரிசை வாயிலாக விரைவு தரிசன பக்தர்கள்; 50 ரூபாய் சுதர்சன தரிசன பக்தர்கள், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவர். இதனால் 1.5 கி.மீ., துாரம் குறைக்கப்பட்டுள்ளது.