பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
12:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில், 10 நாள் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்சி தீர்த்தம் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள, ருத்திரகோட்டி மற்றும் பட்சி தீர்த்தம் என, அழைக்கப்படும் திரிபுரசுந்தரி அம்மன், வேதகிரீஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலம். சைவக் குரவர்களான மாணிக்கவாசகர், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டின் சித்திரை திருவிழா நேற்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் சுவாமி சன்னிதானம் முன் அமைந்துள்ள கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டு துவங்கியது.
பஞ்ச மூர்த்திகள்: யாகசாலை அமைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் பல்லக்கில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தனர்; இது தினமும் தொடரும். இன்று இரண்டாம் நாள் உற்சவமான பவழக்கால் சப்பரம், பூத வாகன உற்சவமும் நடைபெறுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு வெள்ளி அதிகார நந்தி மலைவலம் மற்றும் 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவமும் நடைபெறும்.