திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்திரை வசந்த விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2016 12:04
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்திரை வசந்த விழா நேற்று துவங்கியது. 10 நாட்கள் விழா நடக்கவுள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்திரை வசந்த விழா நேற்று காலை துவங்கியது. கோயிலில் உச்சிக்கால தீபாரதனை பகல் 12 மணிக்கு நடந்தது. அதன் பின்பு ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு உபயதாரர்கள் சார்பில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. வசந்த மண்டபத்தை ஜெயந்திநாதர் 11 முறை வலம் வந்தார். பின் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து இரவில் கோயில் வந்து சேர்ந்தார். ஏப்.,21 ம் தேதி வரை வசந்த விழாவில், தினமும் இதே நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. தமிழ்புத்தாண்டு: நாளை (ஏப்.,14) தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 10 மணிக்கு மூலவருக்கு உச்சிக்கால தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திரு விளக்கு பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.