பெற்றோருக்கு திருமணம் நடத்தும் மகன் பிள்ளைகள் தங்களது பெற்றோரின் திருமணத்தைக் கண்டிருக்க முடியாது. அந்த பாக்கியம் வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு அறுபதாம் திருமணமான சஷ்டியப்த பூர்த்தி செய்து வைத்து ஆசியும் பெறுவார்கள். முருகப்பெருமானும் இதற்கு விதிவிலக்கல்ல. மதுரையில் நடக்கும் தன் தாய் மீனாட்சியின் திருமணத்தை நடத்தி வைக்க, அவர் அருகிலுள்ள முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு வருவார். மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆட்சிக்கு பிறகு, அவரது மகனான உக்கிரபாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அதன் பின் சொக்கலிங்கத்திற்குள் மறைந்தனர். முருகப்பெருமானே உக்கிரபாண்டியன் என்னும் பெயரில் மீனாட்சியின் மகனாக பிறந்ததாக சொல்வர். மீனாட்சி, மலையத்துவஜ பாண்டியனின் மகளாக பிறந்தவள். ஆகவே, அவளது திருமணத்தை பாண்டிய வம்சத்தை சேர்ந்த ஒருவர் நடத்தித் தர வேண்டும் என்பதற்காக, பாண்டிய மன்னராக பதவி வகித்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் (உக்கிரபாண்டியன்) வந்து, தன் பெற்றோரின் திருமணத்தை முன்னின்று நடத்தித் தருவதாக ஐதீகம்.