பதிவு செய்த நாள்
31
ஆக
2011
10:08
மாதங்களில் சிறந்த ரம்ஜான் மாதத்தில், கடுங்குளிர் இரவில் ஒருநாள், ஜபலுந்நூர் எனும் மலையில் உள்ள ஹிரா குகையில், அண்ணல் நபிகளார் இறை தியானத்தில் இருந்தபோது, பொழுது புலரும் வேளையில் வரையிலா உருவம் தாங்கி வானவர் கோமான் ஜிப்ரீல், இறைவனின் கட்டளையை ஏந்தி வந்து "ஓதுவீராக எனக் கூறி திருக்குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை ஓதிக் காட்டினார். அது ரஸூலேகரீம் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனதினிலே கல்லினில், எழுத்தாய்ப் பதிந்தது. தொடர்ந்து 23 ஆண்டுகள் இறைவசனங்களை இறக்கி திருக்குர்ஆனை இறைவன் முழுமையாக்கினான். அருள் வளம் மிக்க குர்ஆன் இறங்கிய நிகழ்வு ரம்ஜான் மாதத்தில் நடைபெற்றதால் இம்மாதம் புனிதமும் கண்ணியமும் பெறுகிறது.அது மட்டுமல்ல, இதே ரம்ஜான் மாதத்தில் தான் இப்ராஹீம் நபி(அலை) அவர்களுக்கு கஹ்ஃபுகள் எனும் வேத ஏடுகளும், தாவூத் நபி(அலை) அவர்களுக்கு ஜபூர் வேதமும், மூஸாநபி அவர்களுக்கு தவ்ராத் வேதமும், ஈஸாநபி(அலை) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும் இறைவனால் அருளப்பட்டது. ஆகையால், புனிதமும் இருக்கிறது. திருக்குர்ஆன் எனும் சத்திய வேதத்தை இறக்கியதற்காக இறைவனுக்கு நன்றி கூறவே ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறோம். இந்த மகத்துவம் பொருந்திய மாதத்தில் தான், லைலத்துல் கத்ர் என்ற அருள்வளம் பொருந்திய இரவு வருகிறது. இந்த இரவின் சிறப்பை விளக்கவே இறைவன் குர்ஆனிலே தனியொரு அத்தியாயத்தை இறக்கியருளினான். அதில், ""நிச்சயமாக நாம் இந்த புனித குர்ஆனை கத்ரு இரவில் இறக்கி வைத்தோம். லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அந்த இரவில் வானவர்கள் இறங்கி வருகின்றனர். வானவர்களின் தலைவர் ஜிப்ரீலும் இறங்கி வருகிறார். தங்களுடைய அதிபதியின் கட்டளைப்படி நன்மையான விஷயங்கள் அனைத்தையும் கொண்டு இந்தப் பூமியின் மீது இறங்குகின்றனர். இந்த இரவு முழுவதும் சாந்தி நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரவு அதனுடைய நன்மைகளுடன் அதிகாலை உதயமாகும் வரை(திருக்குர்ஆன்91:1-5) என்று கத்ர் இரவின் சிறப்பை இறைவன் கூறுகின்றான். அந்த இரவு ரமஜான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் வருகிறதென அண்ணல் நபி(ஸல்) நவின்றுள்ளார்கள். இந்த இரவிலே தொழுது பிரார்த்தனை செய்யும் இறையச்சமுடையவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.