பிள்ளையார்பட்டியில் இன்று சந்தனக்காப்பில் கற்பகவிநாயகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2011 10:08
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு இன்று சந்தனகாப்பில் கற்பகவிநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் மூலவரான கற்பக விநாயகர்அர்த்த பத்மாசனத்தில் யோக நிலையில் உள்ளார். வலம்புரி விநாயகரான இவர் தேசி விநாயகர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. மூலவர் ஆண்டு முழுவதும் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் சந்தனக் காப்பில் அருள்பாலிக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் திருவிழாவின் 9ம் திருநாளன்று நடைபெறும் தேரோட்டத்தன்று இந்த சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனக் காப்பில் பக்தர்களுக்கு அலங்கார தரிசனம் அளிப்பார்.முன்னதாக காலை 9.20 மணிக்கு கற்பகவிநாயகர் தேரில் எழுந்தருளுவார். மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அத்துடன் சண்டிகேஸ்வரர் வலம் வரும் சப்பரத்தை பெண்களே இழுத்து செல்வது சிறப்பாகும்.இரவில் யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். நாளை காலை தீர்த்தவாரியும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறும்.