உத்தமசோழபுரம்: சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சேர, சோழ , பாண்டிய மன்னர்கள் வழிபாடு செய்த பெருமைமிக்க உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலின், முக்கிய திருவிழாவான சித்ரா பவுர்ணமி தேரோட்ட விழாவுக்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. காலையில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சோமாஸ்கந்தரை எழுந்தருளச்செய்து யாக பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் பிரதோஷத்தையொட்டி, பெரியநாயகி உடனுறை பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ரிஷப வாகனத்தில் திருவீதி வலம் வந்தார். இன்று காலை பிச்சாண்டனார் திருக்கோலத்தில் கரபுரநாதர் தரிசனம் அளிப்பார். மாலையில் கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஏப். 21) மாலை, 4 மணிக்கு நடக்கிறது.