பதிவு செய்த நாள்
21
ஏப்
2016
12:04
உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை பெருவிழா, 5ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. மும்பை, டில்லி, கோல்கட்டா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கையர், பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.இதைத் தொடர்ந்து, காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது; குமரகுரு எம்.எல்.ஏ., வடம் பிடித்து, துவக்கி வைத்தார். திருநங்கையர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தேர் இழுத்தனர். பந்தலடிக்கு தேர் சென்றதும், திருநங்கையர் அழுகளம் நிகழ்ச்சியில், தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து, விதவை கோலம் பூண்டு, ஒப்பாரி வைத்தனர். பின், அப்பகுதி யிலுள்ள கிணற்றில் குளித்து, தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டனர். மாலை, 5:00 மணிக்கு, உறுமை சோறு (பலி சாதம்) படையல் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, காளி கோவிலில், அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை, மஞ்சள் நீர் மற்றும் தர்மர் பட்டாபிஷேகத்துடன், சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.