புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி வீட்டில் நேற்றிரவு துவங்கிய சிறப்பு யாகம் விடிய விடிய நடந்தது. சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வந்தார். பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதுாரில் உள்ள அழுக்கு சாமி சித்தர் கோவிலில் வேட்பாளர் பட்டியலை வைத்து பூஜை நடத்தினார். என்.ஆர்.காங்., வேட்பாளர் பட்டியலை, நேற்று மாலை, கட்சி அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வைத்து, திலாசுபேட்டையில் உள்ள தனது வீட்டில் யாக குண்டம் அமைத்து சிறப்பு யாகம் நடத்தினார். இந்த சிறப்பு யாகத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். நேற்றிரவு கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. தொடர்ந்து, சுதர்சன ஹோமம், மகா சண்டி ஹோமம் மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியவை விடிய விடிய நடந்தது.