பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
12:04
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வீரப்பாண்டியில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் தங்களது தோளில் தேரை சுமந்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த வீரப்பாண்டியில் தேர் துாக்கும் திருவிழா நடந்தது. கடந்த 24ம் தேதி இரவு, 42 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கிருஷ்ணர்‚ திரவுபதி சமேத அர்ச்சுணன் எழுந்தருளினர். மொத்தம் 7 டன் எடையுள்ள இந்த தேரை, வேண்டுதல் உள்ள 400க்கும் மேற்பட்ட பக்தர்கள், தோளில் சுமந்தபடி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மறுநாள் (25ம் தேதி) காலை 11:00 மணிக்கு, தேர் கோவில் அமைந்துள்ள குளக்கரையை அடைந்தது. சிறப்பு வழிபாட்டிற்கு பின், மாடுவிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. தேர் மீண்டும் புறப்பட்டு கிராமத்தை வலம் வந்தது. தொடர்ந்து நரகாசூரன் வதம் உள்ளிட்ட மகாபாரத நிகழ்வுகள் நடத்தப்பட்டது. தேர், கிராமத்தை மூன்றாவது சுற்று சுற்றி முடிந்த பின், இரவு 7:00 மணிக்கு, தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.