இன்று அட்சய திரிதியை.. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2016 10:05
சித்திரை மாத அமாவாசையை அடுத்த வளர்பிறை திரிதியை திதி, அட்சய திரிதியை நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வது மிகவும் முக்கியம். அதிலும் அன்னதானம் மிக முக்கியம். ஒரு காலத்தில் இந்நாளில் தயிர்ச்சாதம் தானம் செய்வது பிரதானமாக இருந்தது. ஜைனர்கள் இந்த நாளில் சாப்பிடாமலே விரதமிருக்கிறார்கள். ஆதிநாதர் என்ற ரிஷபதேவர் ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் (துறவி) ஆவார். பசித்தால் பிச்சை எடுப்பார். ஒருமுறை கடும் பசியுடன் பிச்சைக்கு சென்றார். இவரைக் கண்ட அப்பகுதி மக்கள், இவர் மீது கொண்ட மரியாதை காரணமாக பொன்னும், மணியும் தானமாக தந்தார்கள். யாரும் பசிக்கு சாப்பாடு தரவில்லை.
இவரும் யாராவது உணவு கொடுங்களேன் என்று கேட்கவும் இல்லை. ஒரு முடிவுக்கு வந்தவராக உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். ஒருவருடமாக சாப்பிடாமலே கழிந்து விட்டது. ஒருநாள், ஆதிநாதரின் பேரனான ஸ்ரேயன்சா குமாரா ஒரு கோப்பைக் கரும்புச்சாற்றை அவருக்கு கொடுத்தார். அதை அருந்தி தன் விரதத்தை பூர்த்தி செய்தார். அந்த நாள் அட்சய திரிதியை நன்னாள். இன்றும் ஜைனர்கள் இந்நாளில் உண்ணாநோன்பு இருந்து கரும்புச்சாறு பருகி நிறைவு செய்கிறார்கள். இதிலிருந்து இந்த நன்னாளில் பசித்தவர்க்கு உணவளிக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. இந்நாளில் லட்சுமி தாயாருக்கும், குபேரருக்கும் பூஜை செய்யுங்கள். தங்கம், வெள்ளி நகைகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அரிசி, உப்பு இன்னும் உங்களுக்கு விருப்பமான பொருள் எதுவோ அதை வாங்குங்கள். உங்கள் உழைப்பை பயனுள்ள சேமிப்பாக மாற்ற உகந்த நாள் இது. அட்சய திரிதியை நாள் எல்லாருக்கும் எல்லா வளத்தையும் தரட்டும்.