பதிவு செய்த நாள்
09
மே
2016
10:05
உத்திரமேரூர்:ஆலஞ்சேரியில் அவ்வையார் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.ஆலஞ்சேரியில் அவ்வையாருக்கு கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூழ்வார்த்தல் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதன்படி இந்த ஆண்டு, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சனிக்கிழமை காலை ஆலஞ்சேரியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அபிஷேகம் நடந்தது. நேற்று மலரால் அலங்கரிக்கப்பட்ட அவ்வையார் வீதிகளில் ஊர்வலமாக வந்த போது, தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். பிறகு, மாலை, 3:00 மணிக்கு அவ்வையார் கோவிலில் கூழ் வார்த்தல் விழா நடந்தது. ஆலஞ்சேரி மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள நுாற்றுக் கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பசி போக்கிய கிராமம்:உத்திரமேரூர் அடுத்துள்ள ஆலஞ்சேரி கிராமத்தில் அவ்வையார் கோவில் உள்ளது. அவ்வையார் வாழ்ந்த காலத்தின்போது, அவர் ஒரு முறை மதுரையில் இருந்து, காஞ்சியை நோக்கி சிவனின் புகழ் பாடி வந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம், ஆலஞ்சேரி கிராமத்தை அவ்வை கடந்த போது, தண்ணீர் தாகத்தால் தவித்ததாகவும், அவ்வையை அரவணைத்து, கூழ் கொடுத்து, அவர் பசியை சிலர் போக்கியதாகவும் நம்பப்படுகிறது. தன் பசியை போக்கிய மக்களை அவ்வையார் வாழ்த்தி பாடியதாகவும், இதனால் அவ்வையாரின் ஆசி பெற்ற ஊராக ஆலஞ்சேரி என, விளங்குவதாகவும் அப்பகுதி வாசிகள் நம்புகின்றனர்.