பதிவு செய்த நாள்
03
செப்
2011
11:09
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் இருந்து நாளை(4ம் தேதி) கரூர் சித்தர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மூலத்திருநாள் விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மூலத்திருநாள் விழா கொடியேற்றம் கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இந்நிலையில் நாளை(4ம் தேதி) நெல்லையப்பர் கோயிலில் இருந்து கரூர் சித்தர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணியளவில் கரூர் சித்தர் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா சென்று, பின்னர் சங்கரன்கோவில் ரோடு வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு போய்ச் சேருகிறது.10ம் நாளான்று 5ம் தேதி நள்ளிரவு இரவு ஒரு மணியளவில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து, சந்திரசேகரர், பவாணி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குனியகலிய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா நடக்கிறது. பின்னர் ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூருக்கு காலை 5 மணிக்கு போய்ச் சேரும்.அன்றயை தினம் அம்பலவாண சுவாமி கோயிலில் கரூர் சித்தருக்கு சாபவிமோசனம் நிர்வர்த்தி செய்து வைக்கும் வரலாற்று புகழ் மிக்க புராணப்பாடல்கள் பாடப்பெற்று, ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி அம்பாள் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.ஆண்டு தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மானூர், ரஸ்தா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.