பதிவு செய்த நாள்
11
மே
2016
11:05
எருமாபாளையம்: சேலம் எருமாபாளையத்தில் கட்டப்பட்டு வரும், ஸ்ரீமத் ராமானுஜர் மணிமண்டபத்தில், 999வது திருநட்சத்திர வைபவம் நடந்தது. ராமானுஜரின், 999வது திருஅவதார தினத்தையொட்டி, காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் பக்தி பாடல்கள், பஜனைகள் நடந்தது. அவரின் அவதார தினமான நேற்று ராமானுஜரின் பஞ்சலோக உற்சவர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை, 6 மணிக்கு திருவேங்கமுடையான் விஸ்வரூபம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு ஆகியவை பாராயணம் செய்யப்பட்டது. காலை, 8.30 மணிக்கு திருப்பாவை, திருவாராதனையும், தொடர்ந்து கோவில் திருவாய்மொழியும், ஸ்ரீ ராமனுஜ நூற்றந்தாதி பாராயணமும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்ய வேண்டி, ஆழி மலைக்கண்ணா என்ற பாசுரத்தை கூட்டுப்பிரார்த்தனையுடன் பாராயணம் செய்யப்பட்டது. காலை, 10.30 மணிக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ஸ்ரீமத் ராமானுஜரின் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு, 7 மணிக்கு திருவேங்கடமுடையானுக்கு ஏகாந்த சேவையுடன் ராமானுஜரின், 999வது திருநட்சத்திர விழா நிறைவு பெற்றது.