பதிவு செய்த நாள்
12
மே
2016
10:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், வரும் 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், வரும் 19ம் தேதி வியாழக்கிழமை, அதிகாலை 2:30 மணி முதல், 3:50 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. அதற்கு முன், புதன் கிழமை, மாலை 6:00 மணியளவில், சேனை முதன்மையார் பெருமாள் செல்லும் வழியில் சுற்றி வருவார். இந்த திருவிழாவில் முதல் நாள் காலை, தங்க சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வருவார்.
இதை தொடர்ந்து, மூன்றாம் நாள் காலை, கருடசேவை உற்சவத்தில், அதிகாலை 4:00 மணியளவில் கோபுர தரிசனம் நடைபெறும். விளக்கொளி பெருமாள் கோவிலில் மரியாதை அளிக்கப்பட்ட பின், குரு கோவில் வழியாக, பிள்ளையார்பாளையம், புத்தேரி தெரு வழியாக சென்று ராஜவீதியில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏழாம் நாள் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக தற்போது தேர் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வரும் 28ம் தேதி காலை, தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.