பதிவு செய்த நாள்
05
செப்
2011
10:09
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை நடக்கும் பரியாக்கிய லீலையில், உயிருள்ள நரியைப் பயன்படுத்த வனத்துறை தடை விதித்துள்ளதால், பரியை(குதிரையை) மட்டும் வைத்து லீலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மீனாட்சி கோவிலில், ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. தினமும், சுவாமி சுந்தரேஸ்வரரின் லீலைகள் நடத்திக் காண்பிக்கப்படுகின்றன. நாளை, நரியைப் பரியாக்கிய லீலை நடக்கிறது. இதற்காக, ஆண்டுதோறும் அனுப்பானடியில் இருந்து, ராமசுப்பிரமணியன் என்பவரின் குடும்பத்தினர், உயிருள்ள நரியை கோவிலுக்குக் கொண்டு வருவர். லீலை முடிந்ததும், நரியை மீண்டும் காட்டிற்குள் விடுவர்.வன விலங்கு பட்டியலில் இடம் பெற்ற நரியை, இந்தாண்டு முதல் பயன்படுத்த வனத்துறை தடை விதித்ததுடன், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதனால், உயிருள்ள நரி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமசுப்பிரமணியன் கூறுகையில், ""நரி பொம்மையை வைத்து, லீலை நடத்தலாம் என, கடைகளில் தேடினோம். ஒரு பொம்மை கூட கிடைக்கவில்லை. "ஆர்டர் கொடுத்தும் செய்ய நேரமில்லை. உயிருள்ள நரி கிடைக்காத போது, குதிரையை மட்டும் வைத்து லீலை நடந்தது உண்டு. அதேபோல், இந்தாண்டும் நடக்க உள்ளது என்றார்.