கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை முதல் கொட்டும் மழையிலும் கம்பத்திற்கு நீர் ஊற்றுவதற்காக, பல்வேறு பகுதிகளில் வந்த பக்தர்கள் அரை கிலோமீட்டர் தூரம் வரை, வரிசையில் நின்றிருந்தனர். கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கோவிலில் உள்ள கம்பத்துக்கு, 15 நாள் விரதம் இருந்து புனித நீர் எடுத்து வந்து ஊற்றுவது வழக்கம். அதன்படி, பக்தர்கள் நாள்தோறும் நீர் ஊற்றினர். நேற்று தேர்தலில் ஓட்டுப்போடக்கூடிய நாளாக இருந்தும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற கொட்டும் மழையில் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இருந்து அம்மன் கோவில் வரை இரண்டு வரிசையாக பலர் நின்றிருந்தனர். இப்பகுதியில், ஓட்டுச்சாவடி இருந்ததால் மனிதாபிமானத்துடன், தேர்தல் பாதுகாப்பு படையில் ஈடுபட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். நேற்று காலை, 6 மணி முதல் பக்தர்கள் அதிகளவில் திரண்டதால் கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.