Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல் திருமுறையில் பாடிய பாடல் ... முதல் திருமுறையில் பாடிய பாடல்(பகுதி-3) | தேவாரம் முதல் திருமுறையில் பாடிய ...
முதல் பக்கம் » முதல் திருமுறை
முதல் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 செப்
2011
05:09

47. திருச்சிரபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

504. பல்லடைந்த வெண்தலையில்
பலிகொள்வது அன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள்
மேனியில் வைத்தல்என்னே
சொல்லடைந்த தொல்மறையோடு
அங்கம்க லைகள்எல்லாம்
செல்லடைந்த செல்வர்வாழும்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : திரண்ட மேன்மையான சொற்களும், அதன் பொருள்களும், பழமையான வேதம் மற்றும் அதன் அங்கம் ஆகியவற்றில் சொல்லப்பட்ட கலைகள் யாவும் அருள்வயத்தால் சென்று அடையப் பெற்ற செல்வப் பெருமக்கள் வாழும் சிரபுர நகரில் விளங்கும் பெருமானே ! மண்டை ஓட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்திப் பிச்சை கொள்வதும், வில்லைப் போன்ற வளைந்த புருவத்தை உடைய பெண்ணின் நல்லாளாகிய உமையைத் திரு மேனியில் பாகமாக வைத்திருப்பதும் ஏன் ? என்னே என வியந்தவாறு.

505. கொல்லை முல்லை நகையினாள் ஓர்
கூறுஅது அன்றியும்போய்
அல்லல் வாழ்க்கைப் பலிகொண்டு உண்ணும்
ஆதரவு என்னைகொலாம்
சொல்ல நீண்ட பெருமையாளர்
தொல்கலை கற்றுவல்லார்
செல்ல நீண்ட செல்வமல்கு
சிரபுர மேயவனே.

தெளிவுரை : சொல்லற்கு அரிய பெருமை மிக்கவர்கள், பழைமையான கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள், அளவற்ற பெரும் பொருட் செல்வங்களும் கொண்டு விளங்கும் சிரபுரத்தில் மேவும் ஈசனே ! முல்லை மலர் போன்ற இனிய பற்களை உடைய தேவியை ஒப்பற்ற பாகமாகக் கொண்டும், இரத்தல் தொழிலை ஏற்றுப் பிச்சை எடுத்து உண்ணும்படி ஆசை கொண்டது ஏன் ?

506. நீர் அடைந்த சடையின்மேலோர்
நிகழ்மதி அன்றியும்போய்
ஊர் அடைந்த ஏறது ஏறி
உண்பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து
காமரம் வண்டிசைப்பர்
சீர் அடைந்த செல்வம்ஓங்கு
சிரபுர மேயவனே.

தெளிவுரை : மேகம் தவழும் சோலை சூழ்ந்து, வண்டுகள காமரம் என்னும் பண்ணிசை எழப்பி, யாங்கணும் பரவச் செல்வம் ஓங்கும் சிரபுர நகரில் விளங்கும் ஈசனே ! கங்கை தங்கிய சடையில் சந்திரனைச் சூடியதும் அன்றி, இடப வாகனத்தில் ஏறி ஊர்தோறும் பலியேற்றதும் ஏன் ?என்னே என வியந்தவாறு.

507. கைஅடைந்த மானினோடு
கார்அரவு அன்றியும்போய்
மெய்அடைந்த வேட்கையோடு
மெல்லியல் வைத்தல்என்னே
கைஅடைந்த களைகளாகச்
செங்கழு நீர்மலர்கள்
செய்அடைந்த வயல்கள் சூழ்ந்த
சிரபுர மேயவனே.

தெளிவுரை : களைகள் பறித்துச் செம்மையுடைய வயல்களும், செங்கழுநீர் மலர்கள் உடைய நிலைகளும் கொண்ட சிரபுரத்தில் விளங்கும் ஈசனே ! மானைக் கரத்தில் கொண்டு விடம் கொண்ட அரவும் வைத்ததும் அன்றித் திருமேனியில் மெல்லியளாகிய உமாதேவியைப் பாகமாக வைத்து இருப்பது ஏன் ? என்னே என வியந்தவாறு.

508. புரம் எரித்த பெற்றியோடும்
போர்மத யானைதன்னைக்
கரம் எடுத்துத் தோல்உரித்த
காரணம் ஆவதென்னே
மரம்உரித்த தோல்எடுத்த
மாதவர் தேவரோடும்
சிரம்எடுத்த கைகள்கூப்பும்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : மரவுரியை ஆடையாகக் கொண்டுள்ள மாமுனிவர்களும் தேவர்களும், சிரத்தின் மேலாகக் கைகளைக் கூப்பி வணங்கும் சிரபுரத்தில் விளங்கும் ஈசனே ! முப்புரத்தை எரித்து வெற்றி கொண்டு பின்னர், போர்க்கோலம் பூண்டு வந்த மத யானையின் தோலை உரித்த காரணம் என்ன ? என்னே என வியந்தவாறு.

509. கண்ணுமூன்றும் உடையதுஅன்றிக்
கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு
பாம்புடன் வைத்தல்என்னே
எண்ணுமூன்று கனலும்ஓம்பி
எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : ஆகவனீயம், காருக பத்தியம், தட்சிணாக்கினி ஆகிய மூவகையான கனலை ஓம்பி, எழுவகையான பிறப்பு வகையான தேவ, ரிஷி, பித்ரு வேள்விகளைப் புரிய விளங்கும் சிரபுர நகரில் மேவிய ஈசனே ! சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்களை உடையதும் அல்லாமல், கரத்தில் வெண்மழுவும் ஏந்தி, ஆதாரம், கீழ், உச்சம் என மூன்று வகையான சுருதிகளுடைய வீணையும், பாம்பும் வைத்திருப்பது என்னே !

510. குறைபடாத வேட்கையோடு
கோல்வளை யாள்ஒருபால்
பொறைபடாத இன்பமோடு
புணர்தரு மெய்ம்மை என்னே
இறைபடாத மென்முலையார்
மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடல்ஓங்கு
சிரபுர மேயவனே.

தெளிவுரை : கன்னிப் பெண்கள் மாளிகையின் மேலிருந்து குற்றமற்ற பாடல்களை இசைக்க ஓங்கும் சிரபுரத்தில் விளங்கும் ஈசனே ! உமையவன் குறைவில்லாத நிறைவான விருப்பத்துடன் இணைந்து மகிழ்வதற்கு உரிய மெய்ம்மை நும்மிடம் உள்ளது. அது என்னே !

511. மலை எடுத்த வாளரக்கன்
அஞ்சஒ ருவிரலால்
நிலைஎடுத்த கொள்கையானே
நின்மல னேநினைவார்
துலைஎடுத்த சொல்பயில்வார்
மேதகு வீதிதோறும்
சிலைஎடுத்த தோளினானே
சிரபுர மேயவனே.

தெளிவுரை : நடுநிலை தவறாது துலாக்கோல் போன்ற துல்லியமாக மொழியும் பெருமக்கள் திகழும் சிரபுர நகரில் விளங்கும் ஈசன், மøயை எடுத்த இராவணன் அஞ்சும்படி ஒரு விரலால் அடர்த்த கொள்கையினால் சிறப்புற்று, மேரு மலையை வில்லாக எடுத்த தோளையுடையவன்.

512. மாலினோடு மலரினானும்
வந்துஅவர் காணாது
சாலும்அஞ்சப் பண்ணிநீண்ட
தத்துவ மேயதுஎன்னே
நாலுவேதம் ஓதலார்கள்
நம்துணை என்றுஇறைஞ்சம்
சேலுமேயும் கழனிசூழ்ந்த
சிரபுர மேயவனே.

தெளிவுரை : நான்கு வேதங்களையும் ஓதும் வேத விற்பன்னர்கள் என்று போற்றவும், சேல் விளங்கும் நீர் வளத்துடன் வயல்கள் செறிந்தும் திகழும் சிரபுர நகரில் மேவும் ஈசனே ! திருமாலும், பிரமனும் வந்து காண முடியாது மிகவும் அச்சம் கொள்ளுமாறு செய்து பின்னர். தீப்பிழம்பாக எல்லையில்லாது நீண்டு வளர்ந்து ஓங்கிய தத்துவம் யாது ! என்னே !

513. புத்தரோடு சமணர்சொற்கள்
புறன்உரை என்று இருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
பான்மையது என்னை கொலாம்
மத்தயானை உரியும்போர்த்து
மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியும்செல்வச்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்து, உமாதேவியுடன் விளங்கிச் சித்தர்கள் வந்து பணிகின்ற செல்வச் சிரபுர நகரில் மேவும் ஈசனே ! புத்தர்களும் சமணர்களும் நின்னை வணங்காது விலகி நின்றும், பக்தர்கள் வந்து பணியுமாறு செய்த பாங்கு என்னே !

514. தெங்குநீண்ட சோலை சூழ்ந்த
சிரபுர மேயவனே
அங்க நீண்ட மறைகள்வல்ல
அணிகொள்சம் பந்தன்உரை
பங்கநீங்கப் பாடவல்ல
பக்தர்கள் பாரிதன்மேல்
சங்கமோடு நீடிவாழ்வர்
தன்மையி னால்அவரே.

தெளிவுரை : தென்னை மரங்களும், சோலைகளும் சூழ்ந்த சிரபுரத்தில் விளங்கும ஈசனை, நான்கு வேதங்களிலும், அதன் நெடிய அங்கங்களிலும் வல்ல ஞானசம்பந்தன் உரை செய்த  இத் திருப்பதிகத்தைக் குறைவு இல்லாமல் பாடவல்ல பக்தர்கள் , இவ் உலகில் தம் மக்கள் புடைசூழ நெடிது வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

48. திருச்சேய்ஞலூர் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

515. நூலடைந்த கொள்கையாலே
நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி
அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச்
சேய்ஞலுஆர் மேயவனே.

தெளிவுரை : சேல் விளங்கும் குளிர்ந்த வயல்சூழ் சேய்ஞலூரில் மேவும் பெருமானே ! பல நூல்களைக் கற்ற பெருமக்களாக விளங்கிய சனகாதி முனிவர்கள் உண்மைப் பொருளைக் காணமாட்டாதவர்களாய் நும் அடி வணங்கி விண்ணப்பிக்க, ஆல் நிழலில் அமர்ந்து சொன்ன அருமறை யாது ?

516. நீறடைந்த மேனியின்கண்
நேரிழை யாள்ஒருபால்
கூறடைந்த கொள்கையன்றிக்
கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி
அரவம் அணிந்ததென்னே
சேறணிந்த தண்கழனிச்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : சேறு குழையப்பெற்ற வளமான கழனிகளையுடைய சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! ஒருபுறம் நீறு விளங்கும் திருமேனியில் உமாதேவி பாகமாகக் கொண்டு விளங்கி நிற்க, சடைமுடியில் கங்கை என்னும் தேவியைக் கொண்டும், திங்களும் அரவமும் தரித்தும் இருப்பது என்னே !

517. ஊனடைந்த வெண்தலையின்
ஓடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு
பூதம் கலந்துடனே
மான்அடைந்த நோக்கிகாண
மகிழ்ந்துஎரி ஆடல்என்னே
தேனடைந்த சோலைமல்கு
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : தேன்மல்கு சோலைசூழ் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! பிரமகபாலம் ஏந்திப் பலியேற்றுப் பிட்சாடன மூர்த்தியாகத் திரிந்து, இடுகாட்டில் பேய்க்கணங்களுடன் பூத கணங்கள் சூழக் கலந்து மான் போன்ற நோக்குடைய உமாதேவி கண்டு மகிழுமாறு கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடல் புரிந்தது என்னே !

518. வீண்அடைந்த மும்மதிலும்
வில்மலையா அரவின்
நாண்அடைந்த வெஞ்சரத்தால்
நல்லெரி யூட்டல்என்னே
பாண்அடைந்த வண்டுபாடும்
பைம்பொழில் சூழ்ந்துஅழகார்
சேண்அடைந்த மாடமல்கு
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : வண்டுகள் இசைக்கப் பைம்பொழில் சூழ்ந்தும், வானத்தைத் தொடும் உயர்ந்த மாட மாளிகைகள் கொண்டும் விளங்கும் சேய்ஞலூரில் சேவும் ஈசனே ! மேருமலையை வில்லாகவும், அரவத்தை நாணாகவும் வெம்மையான நெருப்புக் கணையால் பயனற்றனவாக இருந்த முப்புரத்தை நன்றாக எரிந்து சாம்பலாகுமாறு செய்த அற்புதம்தான் என்னே !

519. பேய்அடைந்த காடுஇடமாப்
பேணுவது அன்றியும்போய்
வேய்அடைந்த தோளிஅஞ்ச
வேழம் உரித்ததென்னே
வாய்அடைந்த நான்மறைஆறு
அங்கமோடு ஐவேள்வித்
தீஅடைந்த செங்கையாளர்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் வாய் மணக்க ஓதி மேன்மையான ஐவகை வேள்வித் தீயை வளர்க்கும் செம்மையான கரத்தினர் விளங்கும் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! பேய்கள் உறையும் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பேணுவதுடன் மூங்கிலையொத்த மெலிந்த தோளையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்தது என்னே ! விந்தை !

520. காடுஅடைந்த ஏனம்ஒன்றின்
காரணம் ஆகிவந்து
வேடுஅடைந்த வேடனாகி
விசயனொடு எய்த்துஎன்னே
கோடுஅடைந்த மால்களிற்றுக்
கோச்செங்க ணாற்குஅருள்செய்
சேருஅடைந்த செல்வர்வாழும்
சேய்ஞலூர் மேயவனே

தெளிவுரை : தந்தங்களை உடைய, பெருமை மிக்க கோச்செங்கட சோழ மன்னருக்கு அருள் செய்தவரும், பெருமை மிக்க செலர்வர்களும் வாழும் சேய்ஞலூரில் விளங்குபவரும் ஆகிய ஈசனே ! காட்டிற்குச் சென்ற ஒரு பன்றியைக் காரணமாகக் கொண்டு வேட்டுவத் திருக்கோலம் பூண்டு விசயனோடு போரிட்டது என்னே ! விந்தை !

521. பீரடைந்த பாலது ஆட்டப்
பேணாத வன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை
வேர்த்தடிந் தான்தனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித்
தலைமைவ குத்ததுஎன்னே
சீரடைந்த கோயில்மல்கு
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : சீரும் சிறப்பும் கொண்டு திகழும் சேய்ஞலூரில் திருக்கோயில் கொண்டு விளங்கும் ஈசனே ! சுரப்புற்ற ஆவின் பாலைச் சிவலிங்கத் திருமேனிக்கு பாலகன் அபிடேகம் செய்ய, அதன் மெய்ம்மையை உணராது, சினந்த அப் பாலகனின் தந்தையின் கால் தடியப் பெற்றது; பக்தி மிகுந்த அப் பாலகனின் செயலைக் கண்டு மகிழந்து, மாலை சூட்டிச் சண்டேசப்பதம் நல்கியதுடன் தலைமைப் பதவியும் வகுத்துத் தந்தது என்னே !

522. மாவடைந்த தேர்அரக்கன்
வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு
நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போல்
பூசுரர் போற்றிசெய்யும்
சேவடைந்த ஊர்த்தியானே
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : தாமரை மலரில் உறையும் பிரமனைப் போன்று தேவர்கள் எல்லாம் போற்றவும், இடப வாகனத்தில் விளங்கியும் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! குதிரைகளைப் பூட்டிய தேரில் சென்ற அரக்கனுடைய வலிமையை அழித்துப் பின்னர் அவன் அமுது இசைத்த பாடல் கேட்டு இரக்கம் கொண்டு அருள் செய்த தன்மை என்னே !

523. காரடைந்த வண்ணனோடு
கனகம் அனையானும்
பாரடைந்தும் விண்பறந்தும்
பாதமுடி காணார்
சீரடைந்து வந்துபோற்றச்
சென்றுஅருள் செய்தது என்னே
தேரடைந்த மாமறுகில்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : தேர் செல்லும் சிறப்பான வீதிகளையுடைய சேய்ஞலூரில் மேவும் பெருமானே ! கரிய வண்ணனாகிய திருமாலும் பொன் வண்ணத்தவனான் பிரமனும் முறையே பூமிக்குள்ளும், விண்ணில் பறந்து சென்று பாதமோ அல்லது முடியோ காணாதவர் ஆயினர். பின்னர் அவ் இருவரும் சீர்மையுற்றுத் தத்தம் ஆற்றலை உணர்ந்து போற்ற, சோதி வடிவத்தில் விளங்கி அருள் செய்த தன்மை என்னே !

524. மாசடைந்த மேனியாரு
மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரு
நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட
விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடும்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : வீசும் இயல்புடைய மயில் தோகை விரித்து ஆட, மணம் வீசும் பொழிகளில் ஒளிமிக்க வண்டுகள் பாடும் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! மாசு அடைந்த தேகமும் ஊணில் நேசம் உடையவரும் ஆகிய புறச் சமயத்தினர் நின்பால் நேசமில்லாமல் இருத்தல் என்னே !

525. சேயடைந்த சேய்ஞலூரில்
செல்வன சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ்
தோணிபு ரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு
சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார்
வானுலகு ஆள்பவரே.

தெளிவுரை : முருகப் பெருமான் பூசித்த சேய்ஞலூரில் எழுந்தருளியுள்ள ஈசன் சீர்பரவி, வளம் திகழ் வயல்சூழ் தோணிபுர நாதன்; புகழும், ஞானமும் மல்கும் ஞானசம்பந்தன் மொழிந்த இத் திருப்பதிகத்தை வாய் மணக்கப் பாடவல்லவர்கள் வானுலகு ஆள்பவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

49. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

526. போகம்ஆர்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகம்ஆர்த்த பைங்கண்வெளள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகம்ஆர்த்த தோலுடையன்
கோவண ஆடையின்மேல்
நாகம்ஆர்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : ஈசன், போகம் ஆர்த்த பூண் முலையாள் என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியை உடனாகக் கொண்டு வேறாகவும், இடப வாகனத்தை உடையவராய் விளஙகுபவர். அவர் தன்னுடைய கூறாகவும் பெருமாட்டியை உடையவர். தோலுடையும், கோவண ஆடையும், நாகமும் கொண்டுள்ள அப்பெருமான் பொருந்தி இருப்பது நள்ளாறு.

527. தோடுடைய காதுடையன்
தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன்
பெண்ணும்ஓர் பால்உடையன்
ஏடுடைய மேல்உலகோடு
ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : ஈசன், தோடு அணிந்து காது உடையவன். தோலை ஆடையாக உடையவன். எக்காலத்திலும் குறையாத சிறப்புடைய போர்த் தன்மையுடைய இடபத்தை வாகனமாக உடையவன். உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ளவன். ஒன்றின்மேல் ஒன்றாக மலரிதழ் போன்று, விளங்கும் ஏழு உலகங்களும் கடல்களும் சூழ்ந்த நாடுகளில் விளங்கும் நம் பெருமான் பொருந்தி விளங்குவது நள்ளாறே.

528. ஆன்முறையால் ஆற்றவெண்ணீறு
ஆடிஅ ணிஇழையோர்
பால்முறையால் வைத்தபாதம்
பத்தர்ப ணிந்துஏத்த
மான்மறியும் வெண்மழுவும்
சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : பசுவிலிருந்து முறையா விதிப்படி தயாரிக்கப்பெற்ற திருவெண்ணீறு புனைந்து, இழைத்த ஆபரணங்களைப் பூண்ட உமையை ஒரு பக்கம் முறையாக வைத்தவர் ஈசன். அவருடைய திருப்பாதத்தைப் பத்தர்கள் பணிந்து ஏத்துகின்றனர். மானும், மழுவும், சூலமும் கரத்தில் பற்றி நிற்கும் நான்மறையாளனாகிய நம் பெருமான் மேயது நள்ளாறே.

529. புல்க வல்ல வார்சடைமேல்
பூம்புனல் பெய்துஅயலே
மல்கவல்ல கொன்றைமாலை
மதியோடு உடன்சூழப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற்
பாதநி ழல்சேர
நல்கவல்ல நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : வரிசையாகச் சேர்ந்து பொருந்தும் சடைமேல் கங்கையை வைத்து, அடுத்துக் கொன்றை மாலை, சந்திரன் சூடி விளங்குப் பல்கிப் பெருகும் திருத் தொண்டர்கள் பொற்பாத நிழலில் சேர்ந்து பக்தியுடன் இருக்க, நல்லவை நல்கும் நம்பெருமான் மேவி இருப்பது நள்ளாறே.

530. ஏறுதாங்கி ஊர்திபேணி
ஏர்கொள்இ ளமதியம்
ஆறு தாங்கும் சென்னி மேல்ருஓர்
ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த
மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கு நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : இடபக் கொடி தாங்கி, வாகனமாகவும் அவ் இடபத்தை ஏற்றுக் காத்து, அழகிய இளஞ் சந்திரனையும் கங்கையையும் தரித்து, ஆடிக் கொண்டிருக்கும் அரவத்தைச் சூடி, திருநீறு தரித்து, முப்புரிநூல் திகழும் மார்பில் கொன்றை மலரின் மணம் வீச, நம் பெருமான் மேவி விளங்குவது நள்ளாறே.

531. திங்கள் உச்சி மேல்விளங்கும்
தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம்மிறைவன்
என்றுஅடி யேஇறைஞ்சத்
தங்கள் உச்சி யால்வணங்கும்
தன்னடி யார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : ஈசன், சந்திரனை உயர்ந்த இடத்தில் வைத்தவன். தேவர்கள் எல்லோரும், எங்களுக்கு மேலான இறைவன் அவனே என்று திருவடியை வணங்கிப் போற்றுகின்றனர். தலையால் வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், மேன்மையாவது நம் பெருமான், அவர் மேவி விளங்குவது நள்ளாறே.

532. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி
விண்கொள்மு ழவுஅதிர
அஞ்சிடத்துஓர் ஆடல்பாடல்
பேணுவது அன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித்
திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : வெம்மையான சுடர்மிகும் தீயை அழகிய கையில் ஏந்தி, விண்ணையும் அதிரச் செய்யும் முழவு ஒலிக்க, அஞ்சும் இடமாகிய இடு காட்டில் ஒப்பற்றி ஆடலும் பாடலும் நடைபெறுமாறு விரும்பி மகிழ்வதும் அல்லாமல், சிவந்த சடைக்கு ஒருகலைப் பிறைச் சந்திரனைச் சூடி, நஞ்சினைக் கண்டத்திலே திகழுமாறு வைத்துள்ள நம் பெருமான் மேவி விளங்குவது நள்ளாறே.

533. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும்
சிலைவரைத் தீஅம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீறு
ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னி மேலோர்
பால்ம தியம்சூடி
நட்டம் ஆடு நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை :  வலிமையின் சிறப்புப் பெருந்திய மூன்று மதில்களையும், மேரு மலையை வில்லாகவும் தீயை அம்பாகவும் கொண்டு, சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கித் திருவெண்ணீறு பூசுவதும் அல்லாமல், நெற்றிப்பட்டம் உடைய தலையின்மேல் வெண்மதியைச் சூடி நடனம் ஆடுகின்ற நம் பெருமான் மேவி விளங்குவது நள்ளாறே.

534. உண்ணலாகா நஞ்சுகண்டத்து
உண்டுஉட னேஒடுக்கி
அண்ணலாகா வண்ணநீழல்
ஆரழல் போல்உருவம்
எண்ணலாகா உள்வினைஎன்று
எள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : யாரும் உட்கொள்வதற்குப் பொருந்தாத நஞ்சை உட்கொண்டு, கண்டத்தில் தேக்கி ஒடுக்கி நிறுத்தியவர் ஈசன். அவர், யாரும் அண்டி நெருங்க முடியாதவாறு வண்ணமிகு ஒளி பொருந்திய நெருப்புப் போன்ற உருவம் கொண்டவர். அப்பெருமான், எண்ணுவதற்கு அரிதாகிய வினையால் உண்மையை உணராது நிற்கும் பிரமனும் திருமாலும் வலிந்து சென்று நண்ணவேண்டும் என முயன்றும் நண்ண முடியாதவராய் மேவி விளங்குவது நள்ளாறே.

535. மாசு மெய்யர் மண்டைத்தேரர்
குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்று எண்ணி
அந்நெறி செல்லன்மின்
மூசு வண்டார் கொன்றைசூடி
மும்மதி ளும் முடனே
நாசம் செய்த நம் பெருமான்
மேய்து நள்ளாறே.

தெளிவுரை : மாசுடைய தேகத்தையுடைய பௌத்தர் மற்றும் குணமற்றவர்களும் பேசுவனவற்றை மெய்ம்மை எனக் கருதி அவ்வழியில் செல்ல வேண்டாம். கொன்றை மலர் சூடி, மும்மதில்களையுடைய முப்புரத்தை உடனே அழியுமாறு செய்த நம் பெருமான், மேவி விளங்குவது நள்ளாறே.

536. தண்புனலும் வெண்பிறையும்
தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்கு காழி
ஞானசம் பந்தனல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல்
பத்தும்இ வைவல்லார்
உண்பு நீங்கி வானவரோடு
உலகில் உறைவாறே.

தெளிவுரை : குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறைச் சந்திரனையும் தரித்திருப்பவர் ஈசன். அப்பெருமானைப் போற்றி, நட்பின் மிக்க நல்லோர்கள் பெருகி வாழும் காழியின் ஞானசம்பந்தன், நற்பண்பின் சிகரமாக நள்ளாற்றில் மேவி நிற்கப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இப் பிறவியில் அடைவதற்கு உரிய வினைப் பயன் நீங்கப் பெற்று வானவர்களுடன் அவ்வுலகில் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

50. திருவலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

537. ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக்
கள்ளம் ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து
காமவினை அகற்றி
நல்லவாறே உன்றன்நாம
நாவில் நவின்று ஏத்த
வல்லவாறே வந்து நல்காய்
வலிவலமே யவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவி விளங்கும் ஈசனே ! உலகப் பொருள்களின்மேல் பற்றுக் கொண்டு பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச் சாந்தப் படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய். வஞ்சனை அற்றி நிலையும் பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும் தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின்மேல் செய்யப்படும் செயல்களை அகற்றுக. உன்னுடைய திருநாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அநத நன்னெறியில் நவிலுமாறு அருள்புரிவாய். என்னுடைய தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் யான் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து எனக்கு நல்கி அருள்புரிக.

538. இயங்குகின்ற இரவிதிங்கள்
மற்றுநல் தேவரெல்லாம்
பயங்களாலே பற்றி நின்பால்
சித்தம்தெ ளிகின்றிலர்
தயங்கு சோதீ சாமவேதா
காமனைக் காய்தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் பெருமானே ! எக்காலத்திலும் சூரியன், சந்திரன் முதலான தேவர்கள் யாவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவும், நின்பால் சித்தம் வைக்கத் தெளிவற்றவர் களாகவும் உள்ளனர். ஒளிமிகும் சோதியாய்ச் சாம வேதப் பிரியனாய் விளங்குபவனே ! மன்மதனை எரித்தவனே ! உலக மாயையில் மயங்கும் என்முன் வந்து யான் ஈடேறுமாறு நல்குக.

539. பெண்டர் மக்கள் சுற்றும் என்னும்
பேதைப் பெருங் கடலை
விண்டு பண்டே வாழமாட்டேன்
வேதனை நோய் நலியக்
கண்டு கண்டே உன்றன் நாமம்
காதலிக்கின்றது உள்ளம்
வண்டு கிண்டிப் பாடும் சோலை
வலிவல மேயவனே.

தெளிவுரை : வண்டுகள் பூக்களைக் கிண்டி இசைக்கும் வலிவல ஈசனே ! பெண்டிர், புதல்வர், சுற்றத்தார் என்னும் பேதைப் பெருக்கத்தில் சூழ்ந்து திளைத்து, முந்தைக் காலங்களிலும் கிடந்து, நன்மை தருகின்ற நெறியான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளாதவனாயினேன். அதன் பயனாக வேதனையான பிறவி முதலான தீராத நோய்கள் உற்று நலிவடைந்தேன். இப்போது நின் நாம மகிமையின் சிறப்பினை எண்ணி மகிழ்கின்றது என் மனம். அருள் புரிக.

540. மெய்யர்ஆகிப் பொய்யைநீக்கி
வேதனையைத் துறந்து
செய்யர் ஆனார் சிந்தையானே
தேவர் இலக் கொழுந்தே
நைவன் நாயேன் உன்றன்நாம
நாளும் நவிற்று கின்றேன்
வையமுன்னே வந்து நல்காய்
வலிவல மேயவனே

தெளிவுரை : வலிவல நகரில் மேவும் பெருமானே ! பொய்யான, நிலையற்ற பொருள்களை ஒதுக்கித் தள்ளி, மெய்யான பொருமையே பற்றி, அதன் பயனாகத் துன்பத்தை ஒழித்துச் செம்மையாளர்களாய் விளங்குபவர்களின் சிந்தையில் விளங்குபவனே ! நாளும் உன் திருநாமத்தை உரைக்கின்றேன். நாய் போன்று கீழ்மையனாக இருந்து சீரழியும் என்பால் போந்து இவ்வுலகில் நல்லருள் புரிவாய்.

541.துஞ்சும் போதும் துற்றும் போதும்
சொல்லுவன் உன் திறமே
தஞ்சம் இல்லாத் தேவர் வந்துஉன்
தாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சை உண்டாய்க்கு என்செய்கேனோ
நாளு நினைந்து அடியேன்
வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவல நகரில் மேவும் பெருமானே ! துயிலும்போதும், உண்பது முதலாக உலகப் பொருள்களை ஏற்று நுகரும்போதும், உன்னுடைய பெருமையையே நினைத்துப் பாரட்டுபவனாய் யான் இருப்பவன். வேறு யாரிடத்திலும் தஞ்சம் அடையும் நிலையில்லாத தேவர்கள், நின் தாள் பணிந்து நிற்க, அவர்கள் உய்ய வேண்டும் என்பதற்காக நஞ்சினை உட்கொண்டாய், அத்தகைய கருணையுடைய ஈசனே ! நினக்கு நான் எவ்வøயில் ஆற்றிப் போற்றுவதற்கு இயலும் ! நின்னை, நாள்தோறும் போற்றி வணங்குகின்றேன். உலக மாயை என்னைப் பற்றி நின்னைவணங்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்தி வஞ்சித்து வணங்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்தி வஞ்சித்து விடுமோ என்று அஞ்சிகின்றேன். என் அச்சம் நீக்கி அருள்புரிவாயாக.

542. புரிசடையாய் புண்ணியனே
நண்ணலார்மூ வெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான்
என்று இமையோர் பரவும்
கரி உரியாய் காலகாலா
நீல மணி மிடற்று
வரி அரவா வந்து நல்காய்
வலிவல மேயவனே.

தெளிவுரை : சுருண்டு நீண்ட சடையை உடைய புண்ணியனே ! வலி வலத்தில் மேவும் ஈசனே ! முப்புரங்களை எரியுமாறு செய்தனை என்று தேவர்கள் போற்ற விளங்குபவனே ! யானையின் தோலை உரித்தவனே ! காலனுக்குக் காலனாக இருப்பவனே ! நீலகண்டத்தை உடையவனே ! அழகிய ஒளிமிக்க அரவம் தரித்தவனே ! அடியேற்கு நல்லருள் புரிக !

543. தாயு நீயே தந்தை நீயே
சங்கரனே அடியேன்
ஆயு நின்பால் அன்பு செய்வான்
ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயந்தன்னுள்
ஐவர் நின்றுஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவல நகரில் மேவும் பெருமானே ! யான் நோக்காத காலத்திலும் எனது நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு பேணும் தாயும் நீயே ! என்னைப் பக்குவப் படுத்தி மேலானவர்க்கும் பொறுப்பினை ஏற்றுப் பிரியமுடன் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்யும் தந்தையும் நீயே ! சங்கரனே ! எல்லாவற்றையும் ஆய்ந்து செய்யும் நின்பால், அடியேன் அன்பு செய்தலையே விரும்புகின்றது என் உள்ளம். ஐந்து புலன்கள் இந்த உடம்பில் பொருந்தி நின்று நின்னை நினைய ஒட்டாமல் செய்ய, மனம் மாயையின் வசம் உற்றதோ என அச்சம் கொள்கின்றேன். அடியேற்கு நல்லருள் புரிவாயாக.

544. நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்
நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தலுற்ற
வேந்தன் இரா வணனைத்
தேரொடும் போய் வீழ்ந்தலறத்
திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கைபங்கா
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் ஈசனே ! உமாதேவியைப் பாகமாக உடையவனே ! கங்கையைச் செஞ்சடையில் தரித்தவனே ! நின்னுடைய பொன் மலையாகிய கயிலையைப் பெயர்த்த இராவணனைத் திருவிரலால் தண்டித்து, அவனை அலறுமாறு செய்தவனே ! அருள் புரிக !

545. ஆதியாய நான்முகனும்
மாலும்அறி வரிய
சோதியானே நீதியில்லேன்
சொல்லுவன் நின் திறமே
ஓதிநாளும் நின்னையேத்தும்
என்னை வினை அவலம்
வாதி யாமே வந்து நல்காய்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் பெருமானே ! நான்முகனும் திருமாலும் அறிய முடியாத ஆதியாகவும் விளங்கிச் சோதியாகக் காட்சி நல்கிய ஈசனே ! நின்னுடைய சிறப்புக்களைக் கூறும் தகுதி இல்லாதவன் ஆயினும், உன் திருநாமத்தை ஓதி நாள்தோறும் போற்றி வழிபடும் என்னை வினையின் தாக்கத்தால் நேரும் இடையூறு துன்புறுத்தாதபடி
எனக்குக் காட்சி தந்து அருள்புரிக.

546. பொதியிலானே பூவணத்தாய்
பொன்திகழும் கயிலைப்
பதியிலானே பத்தர் சித்தம்
பற்று விடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியர் என்று இவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் ஈசனே, பொதிய மலையிலும் பூவணத்திலும், பொன் திகழும் கயிலைப் பதியிலும், பக்தர் நெஞ்சத்திலும் பற்றுக் கொண்டு விளங்குபவன். விதியைப் பற்றி நினையாத சமணர் மற்றும் சாக்கியர்கள், ஈசனைக் கருதி வணங்காதவர்களாய் இருக்க என் செய்வார்களோ !

547. வன்னி கொன்றை மத்தம்சூடும்
வலிவல மே யவனைப்
பொன்னி நாடன் புகலி வேந்தன்
ஞானசம் பந் தன்சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார்
மெய்த்தவத் தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே
மன்னி இருப் பாரே.

தெளிவுரை : வன்னி, கொன்றை மலர், ஊமத்தம் மலர் ஆகியன சூடி, வலிவல நகரில் மேவி விளங்கும் ஈசனைப் போற்றிக் காவிரி பாயும் நாட்டினை உடைய புகலியின் தோன்றலாகிய ஞானசம்பந்தர் சொன்ன புகழ் விளங்கும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உண்மையான தவவேந்தர்கள் விரும்புகின்ற சோதி வடிவினராகத் திகழும் ஈசனோடு, பொருந்தி மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

51. திருச்சோபுரம் (அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

548. வெங்கண்ஆனை ஈர்உரியை
போர்த்து விளங் குமொழி
மங்கை பாகம் வைத்துகந்த
மாண்பது என் னைகொலாம்
கங்கையோடு திங்கள் சூடிக்
கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய்
சோபுர மேயவனே.

தெளிவுரை : கங்கையுடன், சந்திரனையும் தரித்து மணம் பெருகும் கொன்றை மலர் மாலை சூடித் தூய வெண்ணீறு அணிந்த ஈசனே ! சோபுரத்தில் மேய பெருமானே ! கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்தி, இனிய மொயியாளாகிய உமாதேவியைப் பாகம் கொண்ட மாண்பு என்னே !

549. விடை அமர்ந்து வெண் மழு ஒன்று
ஏந்தி விரிந்து இலங்கு
சடை ஒடுங்கத் தண்புனலைத்
தாங்கியது என் னைகொலாம்
கடை உயர்ந்த மும்மதிலும்
காய்ந்து அனலுள் ளழுந்தத்
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : உயரமாக நீண்ட மதில்களையுடைய முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்யும் சரங்களைத் தொடுக்கும் வலிமையான வில்லையுடையவனே ! சோபுரத்தில் மேவும் பெருமானே ! இடப வாகனத்தில் அமர்ந்து, வெண் மழுப் படையைக் கரத்தில் ஏந்தி, விளங்குகின்ற சடை முடியில் ஒடுங்குமாறு, குளிர்ந்த புனலாகிய கங்கையைத் தாங்கியது என்னே !

550. தீயராய வல்லரக்கர்
செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து வானவரைத்
தாங்கியது என் னைகொலாம்
பாயும் வெள்ளை ஏற்றை ஏறிப்
பாய்புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே
சோபுரமே யவனே.

தெளிவுரை : பாய்து செல்லும் வெள் விடையை வாகனமாகக் கொண்டு ஏறிப் பாய்ந்து தாக்கும் புலியின் தோலை உடுத்தித் தூய்மையான திருவெண்ணீற்றைத் தரித்துச் சோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! தீயவர்களாகிய கொடிய முப்புரத்து அசுரர்களைத் தீக்கு இரையாக்கி, வானவரை ஆதரித்துக் காத்தது என்னே !

551. பல்இல்ஒடு கையில் ஏந்திப்
பல்கடையும் பலிதேர்ந்து
அல்லல் வாழ்க்கை மேலதான
ஆதரவு என் னைகொலாம்
வில்லை வென்ற நுண்புருவ
வேல்நெடுங்கண் ணியொடும்
தொல்லைஊழி யாகிநின்றாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : வில்லினையும், வெல்லும் ஆற்றலுடைய நுண்புருவமும், வேலைப் போன்ற நெடிய கூர்மையான நோக்குடைய விழியும் உடைய உமாதேவியைப் பாகமாக கொண்டு, மிகப்பழைய ஊழிக்காலம் முதற்கொண்டு சோபுரத்தில் மேவிய பெருமானே ! பற்கள் உதிர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிந்தனை, துன்பத்தைத் தரக்கூடிய இச் செயலை ஏற்க விழைந்தது என்னே !

552. நாற்றமிக்க கொன்றைதுன்று
செஞ்சடை மேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த
காரணம் என் னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை
ஒல்க உதைத்து அருளி
தோற்றம் ஈறும் ஆகிநின்றாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : வலிமையில் மிக்கவனான காலனைத் திருப்பாதத்தால் உதைத்து, அவனுடைய ஆற்றலை ஒடுக்கி, எல்லாவற்றுக்கும் தோற்றமும், முடிவும் தானேயாகிச் சோபுரத்தில் விளங்கும் பெருமானே ! மணம் மிகுந்த கொன்றை மலர் பொருந்த விளங்கும் சிவந்த சடையின் மேல் சந்திரனை ஏற்றம் கொள்ளுமாறு வைத்த காரணமே என்னே !

553. கொன்நவின்ற மூவிலைவேல்
கூர் மழுவாள் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை
சூடும் பொற்புஎன் னைகொலாம்
அன்னம் அன்ன மென் நடையாள்
பாகம் அமர்ந்து அரைசேர்
துன்ன வண்ண ஆடையினாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : அன்னப் பறடையைப் போன்று மென்மையான நடையுடையவளாகிய உமையைப் பாகமாகக் கொண்டு அமர்ந்து, அரையில் பொருந்திய வண்ணமிகு ஆடையும் அணிந்து, சோபுரத்தில் மேவும் பெருமானே ! மூன்று இலைகளையுடைய வேல் என்று சொல்லப்படுகின்ற பெருமை கொண்ட சூலமும், கூரிய மழுவாளும் படையாகக் கொண்டு, பொன்னை வென்ற சிறப்புமிக்க கொன்றை மாலை சூடும் பொற்பு என்னே !

554. குற்றம் இன்மை உண்மை நீஎன்று
உன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான
காரணம் என் னைகொலாம்
வற்றல் ஆமை வாளரவம்
பூண்டு அயன்வெண் தலையில்
துற்றல்ஆன கொள்கையானை
சோபுரமே யவனே.

தெளிவுரை : ஆமையின் ஓடும் அரவமும் பூண்டு, பிரம கபாலத்தை ஏந்திப் பலிகொண்டு சோபுரத்தில் மேவி இருப்பவனே, நின்பால் விருப்பும் பக்தியும் கொண்டு குற்றம் இல்லாதவர் நீவிர், உண்மைப் பொருளாக விளங்குபவரும் நீரே என்று நின் அடியவர்கள் பணிவார்கள். இவர்கள் கற்ற கல்வியானது பெரு ஞானமாகத் திகழ்ந்து விளங்குவதற்குக் காரணம்
என்னே !

555. விலங்கல்ஒன்று வெஞ்சிலையாக்
கொண்டு விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த
கொள்கை இது என் னைகொலாம்
இலங்கை மன்னு வாள் அவுணர்
கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றி வைத்துகந்தாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணன், மலையைப் பெயர்க்கும்போது, தன் விரலால் ஊன்றி உகந்து, சோபுரத்தில் மேவும் பெருமானே ! மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்து அழித்ததன் நோக்கம் என்னே !

556. விடங்கொள் நாக மால்வரையைச்
கற்றிவிரி திரைநீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த
காரணம் என் னைகொலாம்
இடந்து மண்ணை உண்ட மாலும்
இன் மலர்மேல் அயனும்
தொடர்ந்து முன்னம் காண மாட்டாச்
சோபுரமே யவனே.

தெளிவுரை : மண்ணை உண்ட திருமாலும், தாமரை மலர்மீது உறையும் பிரமனும் நின்னைக் காண வேண்டும் என்று தொடர்ந்து சென்றும் காணற்கு அரியவனாய்ச் சோபுரத்தில் விளங்கும பெருமானே ! மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடையும்போது தோன்றிய நஞ்சினை உண்டு உகந்த காரணம் என்னே !

557. புத்தரோடு புன்சமணர்
பொய் உரையே உரைத்துப்
பித்தராகக் கண்டுஉகந்த
பெற்றிமைஎன் னைகொலாம்
மத்த யானை ஈருரிவை
போர்த்து வளர் சடைமேல்
துத்தி நாகம் சூடினானே
சோபுரமே யவனே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்துச் சடையில் நாகத்தைச் சூடி சோபுரத்தில் விளங்கும் பெருமானே ! புத்தரும், சமணரும் பொய்ம்மை கூறினும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் பெருமைதான் என்னே !

558. சோலைமிக்க தண்வயல்சூழ்
சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார்
சிரபுரக்கோ நலத்தான்
ஞாலமிக்க தண்தமிழால்
ஞானசம்பந் தன்சொன்ன
கோல மிக்க மாலைவல்லார்
கூடுவர்வான் உலகே.

தெளிவுரை : சோலைகளும் குளிர்ச்சியான வயல்களும் சூழ் சோபுரத்தில் மேவும் ஈசனைச் சீலமிக்க புகழுடைய சிரபுரத்தின் கோனாக விளங்கும் தலைவனாகிய ஞானசம்பந்தன் ஞாலம் நலத்தில் மிகுந்து விளங்குமாறு சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர் வானுலகத்தைச் சென்றடைந்து மகிழ்வர்.

திருச்சிற்றம்பலம்

52. திருநெடுங்களம் (அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

559. மறையுடையாய் தோல் உடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
என்று உனைப்பே சின்அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய்
கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய்
நெடுங்களமே யவனே.

தெளிவுரை : நெடுங்களம் என்னும் பதியில் விளங்கும் பெருமானே ! உன்னதமாகப் போற்றப்படும் வேதத்தை உடையவராகிய நீவிர் தோலை உடையாகக் கொண்டர், நீண்ட அழகிய சடையின்மேல் வளர்ந்து ஒளிரும் பிறைச் சந்திரனையும் கொண்டுள்ளீர் பிஞ்ஞகனே ! என்று உம்மைப் பேசிப் புகழ்வதையன்றி யாம் வேறு ஆற்றுவது ஒன்றும் இல்லை. குறைகளை உடையவர்களாயினும், அவர்கள் புரிந்த குற்றங்களைக் கருதாது, உயர்ந்து விளங்கும் கருணைத் திறந்தால் அருள் புரிபவராகிய நீவிர், உம்மை வணங்கிப் போற்றும் கொள்கையால் நிறையுடையவராக விளங்கும் அடியவர்களின் இடரைக் களைந்து, அருள்புரிவீராக.

560. கனைத்துஎழுந்த வெண்திரைசூழ்
கடலிடை நஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த
திருந்திய தே வநின்னை
மனத்தகத் தோர் பாடல்ஆடல்
பேணிஇராப் பகலும்
நினைத் தொழுவார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : ஆரவாரித்து எழும் வெண்மையான நுரைகளையுடைய அலைகள் கொண்ட கடலில் தோன்றிய நஞ்சினைத் தினைத்தனையாகக் குறைவு படுத்திக் கண்டத்தில் இருத்திக்கொண்ட தேவனே ! நெடுங்களத்தில் விளங்கும் பெருமானே ! நின்னை மனத்தால் நினைந்து, பாடிப் பக்திப் பரவசம் கொண்டு, ஆடிப் பணியும் அடியவர்களின் இடரைக்களைவீராக.

561. நின்னடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல்
என்று அடற் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும்
பூ வொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் விளங்கும் பெருமானே ! நின்னடியையே வணங்கிப் போற்றும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச்சென்ற கூற்றுவனை, என்னுடைய அடியவன் அவன்; அவன் உயிரைக் கொண்டு செல்லற்க ! என்று தெளிவித்து, அடர்த்து, உதைத்த திருவடியைப் பரவி, நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து போற்றும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

562. மலைபுரிந்த மன்னவன்றன்
மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும்
அவிர்சடையா ரூரா
தலை புரிந்த பலிமகிழ்வாய்
தலைவ நின்தாள் நிழல்கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய்
நெடுங்களமே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் ஈசனே ! மலையரசன் மகளாகிய பார்வதியை ஒரு பாகத்தில் கொண்டு மகிழ்ந்து, கங்கையைச சடை முடியில் தங்குமாறு செய்தவனே ! பிரம கபாலம் ஏற்று ஊர்தொறும் பலி கொண்டவனே ! தலைவனாக விளங்குபவனே ! நின் திருவடியைத் தியானம் செய்யும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

563. பாங்கின் நல்லார் படிமம் செய்வார்
பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு
தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும்
தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் ஈசனே ! நற்பண்பின் மிக்க நின் பக்தர்கள் விரதம் பூண்டு தோற்க, பூத கணங்கள் நின்பால் அடைக்கலமாகி ஒன்றிப் பொருந்தி நன்மையானவற்றைத் தரவல்ல தோத்திரப் பாடல்களைப் பாடி, யாவராலும் தொழப்படும் நின் திருக்கழலை வணங்குகின்றன. அளவற்ற அன்பு செய்து பெருக்கெடுத்தோடும் தன்மையில் நின் திருவடி நிழலில் அல்லாது வேறு கதி அறியாவதவர்களின் இடரைக் களைவீராக.

564. விருத்தனாகிப் பாலனாகி
வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக்
கமழ்சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன்
அடி இணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய்
நெடுங்களமே யவனே

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! வயது முதிர்ந்த கோலத்திலும், இளமையான வேதங்கள் உணரும் கருத்தனாகிக் கங்கையைச் சடையில் ஏற்று, யாவற்றுக்கும் பொருளாக விளங்கும் ஆதி தேவனே ! நின்னை ஆனந்தத்தால் ஆடிப்பாடிப் போற்றும் அடியவரின் இடரைக் களைவீராக.

565. கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக்
கூட்டியோர் வெங் கணையால்
மாறு கொண்டார் புரமெரித்த
மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈதென்று
எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! உமாதேவியை ஒரு பாகத்தில் கூறாகக் கொண்டாய் ! நெருப்பு, காற்று, திருமால் ஆகிய மூன்றும் இணைத்து ஓர் அம்பு ஆக்கி, அதனைச் செலுத்தி முப்புரங்களை எரியுண்ணச் செய்தாய் ! இடபத்தைக் கொடியாகக் கொண்டாய் ! திருவெண்ணீறு ஒன்றே சாந்தம் தருவது என்னும் கொள்கையில், எம்பெருமான் அணிந்து பெருமையைப் புகல, அதனைச் செல்வமாகக் கொண்டு தரிக்கும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

566. குன்றின் உச்சி மேல் விளங்கும்
கொடிமதில்சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை
அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால்
ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர்களையாய்
நெடுங்கள மேயவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! குன்றின் உச்சியில் விளங்கும் கொடியும் மதிலும் சூழ் இலங்கையின் அரக்கர் கோனாகிய இராவணன் மாறுபட்டு நின்று, மலையைப் பெயர்த்து எடுத்தபோது அவனை அடர்த்து வலிமையை இழக்கச் செய்தவனே ! நின் பெருமைகளாக இச் செயலுடன் மற்றும் பிறவும் உரைத்துப் போற்றி மனங்கசிந்து உருகும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

567. வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும்
விளங்கிய நான் முகனும்
சூழ எங்கு நேடஆங் கோர்
சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்
கேடிலாப் பொன் னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையார்
நெடுங்களளே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! கம்சனுடைய பட்டத்து யானையின் கொம்பினை ஒடித்த திருமாலும், விளங்கும் புகழ்மிகு பிரமனும் எல்லா இடங்களிலும் சூழந்து தேடச் சோதி வடிவாக மேவிய பொருளே! பன்றியின் கொம்பினை வீரம் செறிய அணிந்துள்ள பெருமானே ! கெடுதல் இல்லாப் பொன்னடிகளையுடைய நின் நிழற்கண் வாழ்பவர்களின் இடரைக் களைவீராக.

568. வெஞ்சொல் தம்சொல் ஆக்கிநின்ற
வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும்
தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல்இல்லா வாய்மொழியால்
தோத்திர நின் னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! கொடிய சொற்களைக் கூறும் சமணரும் நின்னைத் தஞ்சம் அடையாத சாக்கியரும் உண்மையின் தத்துவத்தை அறியாதவர்கள். அழிதல் இல்லாத வேதத்தாலும் தோத்திரங்களாலும் நின்னையே சரணாக அடைந்து நினைத்து வாழ்பவர்களின் இடரைக் களைவீராக.

569. நீடவல்ல வார்சடையான்
மேய நெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகில்
சிரபுரக் கோ நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை
ஞானசம் பந் தன்சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார்
பாவம்ப றையுமே.

தெளிவுரை : நீண்ட சடையையுடைய ஈசன் மேவிய நெடுங்களத்தைச் சிறப்பின் மிக்க பெருமக்கள் வாழும் சிரபுரத்தில் கோவாகிய ஞானசம்பந்தன், நலங்கள் நாடப் பாடிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் பாவமற்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

53. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

570. தேவராயும் அசுரராயும்
சித்தர் செழு மறைசேர்
நாவராயு நண்ணுபாரும்
னிண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமல ரோன்
செங்கண் மால்ஈசன் என்னும்
மூவராய முதல் ஒருவன்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : தேவர், அசுரர், சித்தர், வேதம் ஓதும் அந்தணர், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என ஐந்தும் பிரமன், திருமால், ஈசன் என மும்மூர்த்திகளாயும்  விளங்கும் முழு முதல் கடவுளாகும் ஒருவன் விளங்கி இருப்பது முதுகுன்றம் என்னும் பதி.

571. பற்றுமாகி வானுளோர்க்குப்
பல்கதிரோன் மதிபார்
எற்று நீர் தீக் காலுமேலை
விண்ணியமா னனோடு
மற்று மாதோர் பல்லுயிராய்
மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : வானவர்களுக்குப் பற்றாக இருப்பவன் ஈசன். வானவர்கள் பற்றிப் போற்றும் பரம் பொருளும் அவன். சூரியன், சந்திரன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயமானன் (புருவன்) என ஆகிப் பல உயிர்களும் ஆகித் திருமால், பிரமன், வேதங்கள் என ஆகி இவை அனைத்தும் சேர்ந்த முற்றும் ஆகி, வேறாகவும் திகழும் முழு முதலான பரமன் விளங்குவது முதுகுன்றம்.

572. வார்மாகம் வைகுதிங்கள்
வாளரவம் சூடி
நாரிபாக நயந்துபூமேல்
நான்முகன்றன் தலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன்
செற்றலும் தோன் றியதோர்
மூரி நாகத்து உரிவைபோர்த்தான்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : கங்கை, வானத்தில் இருக்கும் சந்திரன், ஒளிமிக்க அரவம், இவற்றைச் சூடி, உமா தேவிய ஒரு பாகத்தில் விரும்பித் தாமரை மலரில் விளங்கும் நான்முகனுடைய சிரத்தை ஓடாகக் கரத்தில் ஏந்திப் பிச்சை யேற்ற செல்வனாகிய ஈசன், வலிமையான யானையின் தோலை உரித்துப் போர்த்தியவன். அவன் மேவி இருப்பது முதுகுன்றம்.

573. பாடுவார்க்கு அருளும் எந்தை
பனிமுதுபௌ வமுந்தீர்
நீடு பாரு முழுதும் ஓடி
அண்டர் நிலை கெடலும்
நாடுதானும் ஊடும் ஓடி
ஞாலமு நான் முகனும்
ஊடு காண மூடும் வெள்ளத்து
உயர்ந்தது மு துகுன்றே.

தெளிவுரை : தன்னைப் போற்றித் துதிப்பவர்களுக்கு அருள் புருடபவன், எந்தையாகிய பரமன். கடல் நீரானது பெருகி, உலகம் முழுவதும் பரவி, தேவர்கள் நிலையும் கெடுமாறு சூழும் பிரளய காலத்திலும் உயர்ந்து அழியாமல் இருக்கும் முதுகுன்றில், அப்பெருமான் விளங்கி இருப்பவர்.

574. வழங்கு திங்கள் வன்னிமத்த
மாகணமீ தணவிச்
செழுங் கல்வேந்தன் செல்விகாணத்
தேவர்திசை வணங்கத்
தழங்கு மொந்தை தக்கைமிக்க
பேய்க்கணம் பூ தம்சூழ
முழங்கு செந்தீ ஏந்தியாடி
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : கலைகளை வழங்கும் அமுத தாரைகள் கொண்ட சந்திரனும், வன்னி, ஊமத்த மலர், பாம்பு இவற்றையும் கலந்து பொருந்த வைத்து, முலையரசன் மகளாகிய உமாதேவி கண்டு மகிழவும், தேவர்கள் தொழுது வணங்கவும், மொந்தை, தக்கை ஆகிய கருவிகள் ஒலிக்கப் பூதகணங்களும் பேய்க் கணங்களும் சூழ, நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரியும் ஈசன், விளங்குவது முதுகுன்றம்.

575. சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள்
தொல்லரா நல் லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம்
தாளிணைந்து ஐம் புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள்இன் பம்வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : சுழிகளை உடைய கங்கையும், தொய்ந்து சிதைந்த சந்திரனும், இயல்பான விடத்தைத் தன்னகத்தே உடைய தொன்மையான அரவத்தையும், நல்ல மணம் கமழும் கொன்றை மலரையும் நெருக்கமாகக் கலந்து பொருந்துமாறு சென்னியின் வைத்தவன் ஈசன். சனகாதி முனிவர்கள், சைவத் திருக்கோலம் பூண்டவர்களாய், கால்களைப் பத்மாசனத்தில் பாங்கில் பொருத்தி ஐம்புலன்களை அடக்கித் திரியும் மனத்தைத் தடுத்து நிறுத்தி, ஒருமுகப் படுத்தி இருக்க, அவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு எனும் பொருள்களை உணர்த்தியவனாகிய முக்கண்ணுடைய ஆதி முதல்வன், மேவி இருப்பது முதுகுன்றம்.

576. மயங்குமாயம் வல்லராகி
வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனாய
இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன்
புணர்முலை மாது உமையாள்
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : மயக்கத்தை உண்டாக்கும் மாயையில் வல்லவர்களாய், ஆகாயத்திலும் நீரிலும் இயங்கும் தோளைப் புழங்க நடனத்தின் வாயிலாக நெரித்து, உமா தேவியோடு விளங்கும் ஈசன், முனிவர் பெருமக்கள் போற்றித் துதிக்க விளங்குவது முதுகுன்றம்.

577. ஞாலம் உண்ட மாலுமற்றை
நான்முகனும் மறியாக்
கோலம் அண்டர் சிந்தை மலரால்
ஆயினும்கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம்
இøச்ய எப்போ தும்ஏத்தும்
மூலமுண்ட நீற்றர் வாயாள்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : உலகத்தை உண்டு பாதுகாத்து வெளியே உமிழ்ந்த திருமாலும், மற்றும் பிரமனும் தேடியும் அவர்களுக்குப் புலப்படாதவாறு ஈசன் இருந்தனர். ஆயினும், அடியவர்கள், கொய்த நறுமணம் கமழும் தாமரை மலர்களால் மாலை தொடுத்துத் திருவைந்தெழுத்து ஓதி மனம் பொருந்துமாறு ஏத்தித் திருநீறு தரித்தவர்தம் திருவாயிலிருந்து எழும் மந்திர வடிவாக விளங்குபவன் பரமன். அப் பெருமான் மேவி விளங்குவது முதுகுன்றம்.

578. உறிகொள் கையர் சீவரத்தர்
உண்டு உமல்மிண் டர்சொல்லை
நெறிகள் என்ன நினைவுறாதே
நித்தலும் கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப்
பொங்குவிடத் தையுண்ட
முறிகொள் மேனி மங்கைபங்கன்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : குண்டிகையைக் கையில் கொண்டவராயும், காவியுடையை உடையவராகவும், உடல்வன்மைய ராயும் உடையவர்கள் சொல்லை நன்னெறி பயப்பனவாகக் கொள்ளாது, ஈசனை நாள்தோறும் தொழுது போற்றுமின். மரக்கலம் செலுத்தப்படும் கடலில் தோன்றிய நஞ்சை உண்ட தளீர் போன்ற திருமேனியுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டவனும், மானை ஏந்தும் கரத்தை உடையவனும் ஆகிய அப்பெருமான் மேவி இருப்பது முதுகுன்றம்.

579. மொய்த்து வானோர் பல்கணங்கள்
வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமை என்னும்
பிரமபுரத் தலைவன்

தெளிவுரை : வானோர்கள் மற்றும் பல கணத்தவர்களும் வணங்கும் பெருமை மிக்கது முதுகுன்றம். பித்தர் போன்று சிவபோதம் வயப்படும் திருக்கோலம் பெருமையைத் தர வல்லது. (இறுதி இரு வரிகள் கிடைக்கவில்லை.)

திருச்சிற்றம்பலம்

54. திருவோத்தூர் (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

580. பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தா தார்இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளிமழு வாள்அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே.

தெளிவுரை : பூசைக்கு ஏற்ற மலர்களைத் தேர்ந்து அதனைக் கொண்டு உம்முடைய பொன் போன்ற திருவடியைப் போற்றி வணங்காதவர் யாண்டும் இல்லை. ஒளிமிக்க கூர்மையான மழுப் படையை, அழகிய கரத்திந் ஏந்தி, ஓத்தூரில் விளங்கி நடம் புரியும் கூத்தப் பெருமானே ! உமது அருள் குணத்தை நினைக்குந்தோறும் மனம் மகிழும்.

581. இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மான்உரி
உடையீ ரேஉம்மை ஏத்ததும் ஓத்தூர்ச்
சடையீ ரேஉம் தாளே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு, புள்ளிமான் தோலை உடையாகத் தரித்து, விளங்கும் சடையை உடையவரே ! ஓத்தூரில் உமது திருவடியை ஏத்துதும்.

582. உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீர் அல்குல்ஓர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி ஓத்தூர்க்
கள்வீ ரேஉம காதலே.

தெளிவுரை : அடிவேரைப் போன்று நெஞ்சில் பழிப்புடையவர்களின் திறனையும் அறியக் கூடியவர், அரையில் கோவணம் கொண்டு, வாழைக் கனியில் தேன் சொரியும் ஓத்தூரில் விளங்கும் ஈசர், கள்ளர்க்குக் கள்ளர் ஆதலை வியந்தவாறு.

583. தோட்டீ ரேதுத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீ ரேஅடி யார்வினை
ஓட்டீ ரேஉம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேஅருள் நல்குமே.

தெளிவுரை : கட்டழகு உடையவரே ! படம் கொண்ட ஐந்து தலை நாகத்தை ஆட்டுவிப்பவரே ! அடியவர்களுடைய வினைகளை ஓட்டுவிப்பவரே ! ஓத்தூர் என்னும் நகரில் விளங்குபவரே ! உம்மை ஏத்துதும் ! அருள் நல்குவீராக !

584. குழையார் காதீர் கொடுமழு வாள்படை
உழைஆள் வீர்திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவார்
அழையா மேஅருள் நல்குமே.

தெளிவுரை : குழையை ஆபரணமாக உடைய செவியை உடையீர் ! கொடுமையான மழு வெனும் கூர்மையான வாள்படையும் பக்கத்தில் கொண்டு இருப்பீர் ! திருவோத்தூரில் விளங்கி அருளாட்சி புரிவீர் ! குற்றங்கள் இன்றி உம்மைப் போற்றிப் பாடும் பெருமக்களுக்கும், பக்திப் பெருக்கால் மனங்கசிந்து உருகித் தம் நிலை மறந்து ஆடும் பேரன்பர்களுக்கும், அவர்கள் அழைக்காமலே அவர்களுக்கு முன்னின்று அருள் புரிவீராக.

585. மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீர்என்று
உட்கா தார்உள ரோதிரு ஓத்தூர்
நக்கீ ரேஅருள் நல்குமே.

தெளிவுரை : திருஓத்தூரில் மேவி மகிழ்ந்திருக்கும் பெருமானே ! நீவிர், பிரம கபாலம் ஏந்திப் பலியேற்ற காலத்தில், நும் அடியவர்கள் அச்ச உணர்வைப் பெறாதவர்களாய் உளரோ ! அருள் நல்குவீராக !

586. தாதுஆர் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழந்து
ஓதா தார்உள ரோதிரு ஓத்தூர்
ஆதீரே அருள் நல்குமே.

தெளிவுரை : மகரந்தத் தாதுகள் கொண்ட கொன்றை மலரை ஒளியுடைய முடியில் சூடிய நாதனே என்று தும்மைப் புகழ்ந்து போற்றாதவர்களும் உளரோ ! திருவோத்தூரில் விளங்கும் ஆதிப் பொருளே, அருள் நல்குவீராக !

587. என்றான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல்வினை ஏகுமே.

தெளிவுரை : கயிலை மலையை எளிமையாகவும், தன் ஆற்றலுக்குக் குறைந்ததாகவும் கருதிய இராவணனை விரலால் வென்றவர் பரமன். இறைவன் திருவடியை ஒன்றி வணங்காத  மூன்று அசுரர்களையும், கோட்டை மதில்களையும் எய்தவன் விளங்குவது ஓத்தூர் என்று மொழிந்தவர்பால் மேவிய வினை தீரும்.

588. நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலும் திசையெலாம்
ஒன்றாய் ஒள்ளெரி யாய்மிக ஓத்தூர்
நின்றீ ரேஉமை நேடியே.

தெளிவுரை : ஓத்தூரின்கண் ஒருங்கு திரண்ட சோதி வடிவாக நின்று விளங்கிய உம்மைத் தேடி, நான் மறையாளனாகிய பிரமனும், திருமாலும் திசையெலாம் சென்றார் போலும் ! நான்முகனும், திருமாலும் திசையெலாம் சென்று தேடியும் காண்கிலர் என்றவாறு.

589. கார்அ மண்கலிங் கத்துவர் ஆடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓர்அம் பால்எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீர்அ வன்கழல் சேர்மினே.

தெளிவுரை : சமணர், சாக்கியர்தம் சொற்களைப் பொருட்டாகக் கொள்ளன்மின். ஒரே அம்பைச் செலுத்தி முப்புரம் எரித்தவன் உறையும் ஓத்தூரில் மேவும் பெருமானுடைய சீர்மை மிகும் கழல் பணிந்து மகிழ்வீராக.

590. குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

தெளிவுரை : திருவோத்தூரில் ஆண் பனை, காய்களை ஈன்று பெண் பனையாயின. ஆங்கு, கொன்றை மலர் சூடிய அடிகளைப் பெருமை கெழுமிய புகலியின் ஞானசம்பந்தன் போற்றிச் செல்லிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதுபவர்கள் வினை நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

55. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

591. ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டுஉமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றியின்
மாறி லாமணி கண்டரே.

தெளிவுரை : கடலில் நன்றாக ஊறிக் கிளம்பிய நஞ்சினை உட்கொண்டு உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு திருநீற்றைத் திருமேனியில் திகழப் பூசியணிந்து, வயல்களில் வளம் பெருக்கும் அழகிய திருமாற்பேற்றில், இவருக்கு ஒப்பாக வேறு யாரையும் கூற முடியாதவாறு தனிப்பெரும் தலைவராக விளங்குபவர் மணிகண்டர். (மணிகண்டர்  திருத்தலத்தில் மேவும் ஈசனார் திருநாமம்).

592. தொடைஆர் மாமலர் கொண்டுஇரு போதுஉம்மை
அடைவா ராம்அடி கள்ளென
மடைஆர் நீர்மல்கு மன்னிய மாற்பேறு
உடையீ ரேஉமை உள்கியே.

தெளிவுரை : வயல்களின் மடைகளில் நீர் மல்கும் மாற்பேற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! உம்மை நெஞ்சார நினைத்து, மலர் மாலைகள் கொண்டு அடியவர்கள் இரு வேளைகளிலும் சாற்றி வழிபடுகின்றனர்.

593. பைஆ ரும்அர வம்கொடு வாட்டிய
கையான் என்று வணங்குவர்
மைஆர் நஞ்சுண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.

தெளிவுரை : திருமாற்பேற்றில் இருக்கின்ற ஐயனே ! படத்தைப் பொருந்திய அரவத்தை ஆட்டும் கரத்தை உடையவன் என்றும் நின்னை நஞ்சு உண்ட பெருமான் என்றும், நின் அடியார்கள் வணங்குவர்.

594. மால மாமலர் கொண்டு சரண்என்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.

தெளிவுரை : நீலகண்டர் என்னும் திருநாமம் தாங்கிய பெருமானே ! மாற்பேற்றில் விளங்குபவனே ! திருமால் நின்னை வழிபாடு செய்ததைத் தொடர்ந்து மேலானவர்கள் மிகுதியான சிறந்த மலர்களைக் கொண்டு சரணம் அடைந்து வழிபடுவார்கள்.

595. மாறி லாமணி யேஎன்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வும்திரு மாற்பேற்றின்
நீற னேஎன்று நின்னையே.

தெளிவுரை : அன்பு நிலவும் திருமாற்பேற்றின் அங்கமாக உடையவனே என்றும், திருநீற்றினை உடையவனே என்றும், ஒப்புமை இல்லாத சோதியாக ஒளிவிடும் மணியே என்றும், தாம் நற்கதி அடைய வேண்டும் என்றும் வானவர்கள் நின்னை ஏத்தி மகிழ்வார்கள்.

596. உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்
திரை ஆர்பாலியின் தென்கரை மாற்பேற்று
அரையா னேஅருள் நல்கிடே.

தெளிவுரை : பாலாற்றின் தென்கரையில் விளங்கும் மாற்பேற்றின் அரசனே ! எல்லா நாட்களிலும் அடியவர்கள் நின்னைப் போற்றிப் புகழ்ந்து மனம் ஒன்றி வணங்குகினறனர். அருள் நல்குக.

597. அரசு அளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தஎம் மாற்பேற்று அடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனின் புகழ் கெடுமாறு அவனை விரலால் தண்டித்துப் பின்னர் அவனுக்கு, மனம் அடங்கித் துதி செய்ய வரம் கொடுத்த மாற்பேற்று அடிகளை வணங்கிப் போற்றிடப் பாவம் தீரும்.

598. இருவர் தேவரும் தேடித் திரிந்துஇனி
ஒருவ ரால்அறி வொண்ணிலன்
மருபு நீளகடில் மாற்பேற்று அடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் எங்குத் தேடியும் காண்கிலராய், இனி யாராலும் அறியவொண்ணாதவன் எனத் தெளிவுற்று மாற்பேற்றில் விளங்கும் அடிகளின் திருவடியை மருவி வணங்கினர். அப்பெருமானைப் பரவுபவர் வினை நீங்கும்.

599. தூசு போர்த்துஉழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈசன் என்றுஎடுத்து ஏத்துமே.

தெளிவுரை : ஆடையைப் போர்த்தும், உணவைக் கையில் ஏந்தியும், உழலும் நீசர்களாகிய கீழ்மக்களின் சொற்களைக் கொள்ளன்மின். புகழ் மிக்க திருமாற்பேற்றின் ஈசனைப் போற்றித் துதிப்பீராக.

600. மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வே வினை பாறுமே.

தெளிவுரை : திருமாலுடன், சந்திரனும் சிறப்பாக வழிபட்ட மாற்பேற்று அடிகளப் போற்றி ஞான சம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினை நீங்கப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

56. திருப்பாற்றுறை (அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

601. காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரார் ஆதி முதல்வரே.

தெளிவுரை : உலகத்தவர்கள் நாள்தோறும் வணங்கிப் பரவும் ஆதிமூலநாதராகிய பாற்றுறையார் கார்காலத்தில் விளங்கும் கொன்றை மலரைத் திருமுடியில் தரித்தவர். அவர் அடியவரின் சிறப்பான சிந்தையைத் தம்பால் சென்று பதியுமாறு செய்தவர்.

602. நல்லா ரும்மவர் தீயர் எனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்தலைச் செல்வர்எம் பாற்றுறை
எல்லா ரும்தொழும் ஈசரே.

தெளிவுரை : பற்கள் கொண்ட வெண்மையான தலையோட்டை (பிரம கபாலம்) உடைய செல்வராகிய எம்பாற்றுறை ஈசர் தேவர், முனிவர், ஞானிகள், சித்தர்கள் முதலான் எல்லா சீவர்களும் தொழ வல்லவர். அவர் தீயைக் கரத்தில் ஏந்தியவர். இவர் நல்லவராய் அடியவர்தம் உள்ளத்தில் திகழந்து மகிழ்வினை நல்கிப் பக்திப் பெருக்கால் மொழியப்படும் தோத்திரச் சொல் மலர்களைச் சூடியவர் ஆயினார்.

603. விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்துஎன் எழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளும் உறைவரே.

தெளிவுரை : எண்ணத்தில் புகுந்து என் எழிலைக் கவர்ந்து செல்லலானார். அவர், வண்டுகள் இசைப் பாடல்களை ஓதும் பாற்றுறையுள் நாள்தோறும் உறைபவரே.

604. பூவும் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லார் எழில்எய்தார்
பாவம் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓ என் சிந்தை ஒருவரே.

தெளிவுரை : பூவும் திங்களும் முடியில் புனைந்த ஈசர், பகைவர்களின் முப்புரங்களை அம்பினால் எய்து அழத்தார். அப்பெருமான், பாவங்கள் தீர்க்கும், தீர்த்த மகிமையுடைய பாற்றுறையில் விளங்குபவர். என் சிந்தை அவர் ஒருவரையே பற்றி நிற்கும் ஓ வினாவிளி.

605. மாகம் தோய்மதி சூடி மகிழ்ந்துஎனது
ஆகம் பொன்னிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

தெளிவுரை : வானத்தில் தோய்ந்து விளங்கும் சந்திரனைச் சூடி மகிழ்ந்து, எனது உடலைப் பசலை கொள்ளுமாறு பொன் வண்ணம் ஆக்கிய ஈசனார், ஒர பாகத்தில் பெண்ணை உடையவராய், நாகத்தை அணியாகப் பூண்டவராய் பாற்றுறை மேவிய நலத்தினர்.

606. போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்துஎன் நலங்கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.

தெளிவுரை : பொன் போன்று விளங்குகின்ற கொன்றை மலரை முடியில் புனைந்த நாதர், என் உள்ளத்தைக் கவர்ந்து, எனது மேனியைத் தளர்ச்சியுறுமாறு செய்தார். அவர் பாதத்தைத் திருத்தொண்டர்கள் தொழுது போற்ற, வேதப் பொருளை உணர்த்தும் விகிர்தராய்ப் பாற்றுறையில் விளங்குபவர்.

607. வாடல் வெண்தலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆட நாகம் அசைத்தாரே.

தெளிவுரை : ஈசர், மண்டை ஓடுகளை மாலையாகச் சூடி, பெரிய இடபத்தை வாகனமாகக் கொண்டு, வண்டுகள் பண்ணிசைக்கும் பாற்றுறையில் ஆடுகின்ற நாகத்தைப் பூண்டு என் மனத்தை அசைத்தவர்.

608. வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்துஎன் எழில்கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டர்எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

தெளிவுரை : வெம்மை தரும் நெருப்பை ஒத்த சிவந்த மேனியர்; வெண்மையான திருநீற்றை அணிந்தவர்; கடல் நஞ்சைக் கண்டத்தில் வைத்தவர்; முல்லை சூடிப் பாற்றுறை மேவியவர் ஈசர். அவர் என் உள்ளத்தைக் கவர்ந்து என் எழிலைக் கொண்டவராவர்.

609. ஏனம் அன்னமும் ஆனவ ருக்குஎரி
ஆன வண்ணத்துஎம் அண்ணலார்
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

தெளிவுரை : பன்றியும் அன்னமும் ஆக வடிவம் கொண்டு தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்குத் தீப்பிழம்பாகத் தேன்றி, காட்சி நல்கிய அண்ணலார், உயர்ந்த வெண்பிறை சூடிய மைந்தராய்ப் பானல் என்னும் மலர்கள் நிறைந்த பாற்றுறையில் விளங்குபவர்.

610. வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்துஎன் நன்னலம் வெளவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாம்ஓர் மணாளரே.

தெளிவுரை : திருநீறு புனைந்தவர்; சூலப்படையுடையவர்; மார்பில் முப்புரீநூல் திகழ விளங்குபவர்; பசுமையான மாதவி மலர்கள் சூழும் பாற்றுறையில் மேவும் அழகர். அவரே யான் ஓர்ந்து கொண்ட மணாளர். அவர் என் நெஞ்சுள் புகுந்து என் நலத்தைக் கவர்ந்து கொண்டார்.

611. பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தனது இன்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

தெளிவுரை : பத்தர்கள் விளங்கும் பாற்றுறை மேவிய ஆயிரம் திருநாமம் கொண்ட ஈசனைப் போற்றிப் பக்திப் பெருக்கில் திகழும் ஞானசம்பந்தர் பாடிய இனிய தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை, அனைவரும் பாடி, பரமனைத் துதிக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

57. திருவேற்காடு (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

612. ஒள்ளிது உள்ளக் கதிக்காம் இவன்ஒளி
வெள்ளி யான்உறை வேற்காடு
உள்ளி யார்உய்ந் தார்இல் உலகினில்
தெள்ளி யார்அவர் தேவரே.

தெளிவுரை : உயர்ந்த பொருளை நினைப்பவர்களுக்கு நல்ல கதியைத் தரும் ஈசன், வெள்ளியங்கிரியில் ஒளி வடிவாக உயர்ந்து இருப்பவன். அப்பெருமான் உறைவது வேற்காடு. அவனை நினைந்த பெரியோர்கள் உயர்ந்தார்கள். அன்னோர் உலகில் தெளிந்தவர்கள் ஆவர். அவர்கள் தேவர்கள்.

613. ஆடல்நாகம் அசைத்து அளவு இல்லதோர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தார்இல் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

தெளிவுரை : தானாகவே ஆடும் நாகத்தைத் தன் இச்சைக்கேற்ப அசைத்து, அளவற்ற வடிவங்களைக் கொண்டுள்ளவன் வேற்காட்டில் மேவும் பரமன். இவ் உலகில் அப் பெருமானைப் பாடித் துதித்துப் பணிபவர்கள், பெருமை மிக்க செல்வம் உற்றவர் ஆவர்.

614. பூதம் பாடப் புறங்காட்டு இடைஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

தெளிவுரை : பூத கணங்கள் பாடவும், அதற்கு ஏற்ப இடுகாட்டின் இடையில் ஆடுபவனாகிய ஈசன், வேதத்தில் வல்லவன். அப் பெருமான் வேற்காட்டில்  விளங்க, மலரும் சந்தனமும் அகிலும் கொண்டு வழிபடுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

615. ஆழ்க டல்எனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தால்பணிந்து ஏத்திடப்
பாழ்ப டும்மவர் பாவமே.

தெளிவுரை : நதிகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொள்ளும் ஆழ்கடலைப் போன்று, கங்கையைத் தன் சடையில் கரந்து கொண்டவன் ஈசன். நீண்டு வீழும் சடையையுடைய அப்பெருமான், வேற்காட்டில் வீற்றிருக்கச் செருக்கு அற்ற மனத்தினராய்ப் பணிந்து ஏத்தும் அடியவர்களின் பாவமானது விலகும்.

616. காட்டி னாலும் அயர்த்திட அக் காலனை
வீட்டி னான்உறை வேற்காடு
பாட்டி னால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஓல்லையே.

தெளிவுரை : மார்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற காலத்தில், ஈசன் முழு முதல்வன் எனப் புகலும் பாங்கில், பலவாறு செயல்கள் வாயிலாகப் புலப்புடுத்தியும் அதனை ஏற்காது, வன்மை நிகழ்த்திய காலனை வீழ்த்தியவனான் ஈசன் உறைவது வேற்காடு. ஆங்கு மேவிய அப்பெருமானைத் துதிப் பாடல்களால் பாடிப் பணிந்து வழிபடுபவர்களுடைய வினை விரைவில் விலகும்.

617. தோலி னால்உடை மேவவல் லான்சுடர்
வேலி னால்உறை வேற்காடு
நூலி னாற் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.

தெளிவுரை :  தோலை உடையாகக் கொண்டு சுடர் வேல் பொருந்த உறையும் வேற்காட்டில் மேவும் வேற்காட்டு நாதர், அம்பிகை வேற்கண்ணி அம்மை, தல விருட்சம் வேல மரம் ஆகிய சிறப்புக்களும் சுடர் வேலினால் உறைவேற்காடு என உணர்த்தப்பெற்றது.

618. மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னான்உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
சொல்ல வல்லவர் தீர்க்கமே.

தெளிவுரை : வலிமை பொருந்திய மூன்று மதில்கள் மாயுமாறு எய்த ஒப்பற்ற மேருமலையை வில்லாகக் கொண்டவன் உறைவது வேற்காடு. அப்பெருமானைக் குறைவில்லாத மனத்தினராய்ப் போற்றித் துதிப்பவர்களும், கண்டு தரிசிப்பவர்களும், அறிவும் தெளிவும் கொண்டு நீடு வாழ்வார்கள்.

619. மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.

தெளிவுரை : இளநகை புரியும் தன்மையில் மெல்லிய கீற்றுடைய வெண்மையான சந்திரனைச் சூடும் முடியுடைய வீரம் பொருந்திய ஈசன், மேவி விளங்கும் வேற்காட்டில் அன்புடன் வழிபாடு செய்பவர்கள் அப்பெருமான் கழலைச் சேர்வது திண்ணம்.

620. பரக்கி னார்படு வெண்தலை யில்பலி
விரக்கி னான்உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட் டான்இறை
நெருக்கி னானை நினைமினே.

தெளிவுரை : ஈசன் கபாலம் ஏந்திப் பலி கொண்டார். அப் பெருமான் உறையும் ஊர் வேற்காடு. கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய ஆண்மை கெடுமாறு ஈசனை நினைத்துப் போற்றுமின்.

621. மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லான் உறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாஎழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.

தெளிவுரை : மாற்றம் இல்லாத பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவனாய், வாகையாய் நின்ற ஈசன் உறைகின்ற வேற்காட்டில், ஈறிலா மொழியாக விளங்கும் தோத்திரங்களை மொழிபவர்களுக்கு எவ்விதமான குற்றஙகளும் உண்டாகாது.

622. விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

தெளிவுரை : திருவேற்காட்டில் ஈசனைக் கண்டு தொழுது திருவடியைப் போற்றி ஞானசம்பந்தர் பாடிய இத் திருப்பதிகத்தை மனத்திற் கொண்டு மகிழ்ந்து பாட எல்லா மேன்மைகளும் விளையும்

திருச்சிற்றம்பலம்

58. திருக்கரவீரம் (அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

623. அரியு நம்வினை உள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டம்
கரிய வன்திக ழும்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.

தெளிவுரை : அழகிய சுடர்விடும் மணியைப் போன்று கரிய கண்டத்தையுடையவனாகிய ஈசன், திகழந்து ஓங்கும் கரவீரத்தில் விளங்குகின்றான். பெரியோனாகிய அப்பெருமான் திருக்கழலைப் போற்றித் துதிக்க, வினைகள் யாவும் சிதைந் அழியும்; குற்றங்களும் அறுந்து ஒழியும்.

624. தங்கு மோவிளை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுஉடன் சூடிய
கங்கை யான்திக ழும்கர வீரத்துஎம்
சங்க ரன்கழல் சாரவே.

தெளிவுரை : தாழ்ந்து விளங்கும் சடையின்மேல் திங்களோடு கங்கையைத் தரித்தவனாகிய ஈசன் திகழும் கரவீரத்தில், எம் சங்கரனின் திருக்கழலைச் சார்ந்திருக்கு, வினையானது தங்கித் துன்புறுத்துமோ. (வினையானது நீங்கும் என்பது குறிப்பு).

625. ஏதம் வந்தடை யாஇனி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லால்திக ழும்கர வீரத்துஎம்
நாதன் பாத நணுகவே.

தெளிவுரை : பூத கணங்களைப் படையாகக் கொண்ட விருப்பத்தால் திகழும் கரவீரத்தில் விளங்கும் நாதன் பாதத்தை நண்ணி வணங்கக் குற்றங்கள் எதுவும் சாராது; இனிமேல் நடப்பது நல்லனவாகவே விளங்கும்.

626. பறையு நம்வினை உள்ளன பாழ்பட
மறையு மாமணி போல் கண்டம்
கறைய வன்திக ழும்கர வீரத்துஎம்
இறைய வன்கழல் ஏத்தவே.

தெளிவுரை : ஒளிபொருந்திய மணியைப் போன்ற கறையை உடைய கண்டத்தினனாகிய ஈசன் திகழும் கரவீரத்தில், எமது இறைவனின் திருக்கழலை ஏத்தி வழிபட, முன் செய்த வினையும் கெடும். உள்ள வினையும் பாழ்பட்டு மறையும்.

627. பண்ணின்ஆர்மறை பாடலன் ஆடலன்
விண்ணில் ஆர்மதில் எய்தமுக்
கண்ணி னாள்உறை யும்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.

தெளிவுரை : பண்களில் சிறந்து விளங்குகின்ற சுருதி மேவும், வேதத்தில் திளைத்து, ஆடலிலும் பாடலிலும் மேலானவனாகிய ஈசன்; ஆகாயத்தில் ஆரவாரித்து எழுந்த முப்புரங்களை எரித்துப் பொடிபடுத்திய முக்கண்ணுடைய செல்வன் உறையும் கரவீரத்தை நண்ணி, அப் பெருமானை வணங்குபவர்களின் வினையானது அழியும்.

628. நிழலின் ஆர்மதி சூடிய நீள்சடை
அழலின் ஆரழல் ஏந்திய
கழலி னார்உறை யும்கர வீரத்தை
தொழவல் லார்க்குஇல்லை துக்கமே.

தெளிவுரை : ஒளி பொருந்திய சந்திரனைச் சிவந்த நீண்ட நெருப்பை ஒத்த சடையில் சூடிக் கரத்தில் நெருப்பை ஏந்தி, வீரக்கழல் ஒலிக்க விளங்கும் பெருமான், கரவீரத்தில் வீற்றிருக்கின்றார். அப் பெருமானைத் தொழ வல்லவர்களுக்குத் துயரம் இல்லை.

629. வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்ட னார்அழல் போல்ஒளிர்
கண்ட னார்உறை யும்கர வீரத்துத்
தொண்டர் மேல்துயர் தூரமே.

தெளிவுரை : தீயவர்களாகிய முப்புராரிகளின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய கடவுள், நெருப்பைப் போல் சுயம் பிரகாசம் உடைய கழுத்தை உடையவராய், உறைகின்ற கரவீரத்தில் தொண்டு செய்து போற்றி வாழும் அடியவர்களுக்குத் துயரம் இல்லை.

630. புனல்இ லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவல் ஆண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்குஇடர் இல்லையே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த இலங்கையர் கோனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளின் வலிமையை அழித்து, அவ் அரக்கனுடைய சினத்தால் எழுந்த செருக்கினையும் ஒழித்து விளங்குபவன் ஈசன். அப்பெருமான், தன்னைச் சினந்தவர்களுக்குக் கனலாக விளங்குபவன். அவன் உறையும் இடமாகிய கரவீரத்தினை, நினைத்து ஏத்த வல்லார்க்கு, இடர் இல்லை.

631. வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திரள் ஆகிய
கள்ளத் தான்உறை யும்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே.

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தெளிவடைந்து ஏத்துமாறு, தீப்பிழம்பாகிய ஈசன் உறையும் கரவீரத்தை நினைத்து ஏத்து, வினை செயலற்று ஒடுங்கி நலியும்.

632. செடிஅ மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்து
அடிய வர்க்கில்லை அல்லவே.

தெளிவுரை : சமணர்களும் பிறரும் கூறும் கொடிய உரைகளைக் கொள்ள வேண்டாம். சிறப்பும் நறுமணமும் கமழும் ஈசன் உறைகின்ற கரவீரத்தில் மேவும் திருத்தொண்டர்களுக்கு அல்லல் என்பது இல்லை.

633. வீடி லான்விளங் கும்கர வீரத்துஎம்
சேடன் மேல்கசி வால்தமிழ்
நாடு ஞானசம் பந்தன் சொல்லிலை
பாடு வார்க்குஇல்லை பாவமே.

தெளிவுரை : எக்காலத்திலும் வீழ்ச்சியோடும், அழிதலும் அற்றவனாய், விளங்கும் கரவீரத்தில் பெருமையோடு வீற்றிருக்கும் எம் ஈசன் மேல், அன்பு மீதூரத் தமிழைப் போற்றும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்களுக்குப் பாவம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

59. திருத்தூங்கானை மடம் (பெண்ணாகடம்) (அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

634. ஒடுங்கும் பிணிபிறவி கேடென்று இவை
உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீர் எல்லாம்
அடிகள் அடிநிழற்கீழ் ஆளாம்வண்ணம்
கிடங்கும் மதிலும் கலாவிஎங்கும்
கெழுமனை கள்தோறு மறையின்னொலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : உடலை ஒடுக்கும் பிணி, பிறவி, கேடுகள் என உடைய அவலம் பொருந்திய வாழ்க்கையி லிருந்து விடுபவ வேண்டும் என்று கருதி, அதற்குரிய மார்க்கமாவது தவம் புரிதலே என்று தீர்மானித்து, அவ் இடத்தைத் தேடிச் செல்பவர்களே ! ஈசன் திருவடிக்கீழ் அடியவர் ஆகும் வண்ணம், அகழியும் மதில்களும் சூழ்மனைகள் தோறும் வேதத்தின் ஒலியானது எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும் கடந்தை என்னும் பதியில் விளங்கும் தூங்கானை மாடத்தில் மேவியருளும் ஈசனைத் தோழுமின்கள்.

635. பிணிதீர சாதல் பிறத்தல்இவை
பிரியப் பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேலுல கம்எய்தலுறில்
அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணி நீல கண்டம் உடையபிரான்
மலைமக ளும் தானு மகிழ்ந்து வாயும்
துணிநீர்க் கடந்தைத் தடங் கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பிணிக்கப்படும் நோய் எனப்படும் இறத்தலும் பிறத்தலும் ஆகியவற்றை ஒழித்து எக்காலத்தும் பிரியாத பேரின்பத்தோடு அழகு பொருந்திய உயர்ந்த உலகத்தை அடைய வேண்டும் எனக் கருதுவீராயின், அதற்கு யாதொரு குறைபாடும் இல்லை. அறிவீராக ! இடப வாகனத்தில் விளங்கும் நீலகண்டப் பெருமான். மலை மகளாகிய உமாதேவியும் தானும் மகிழந்து வீற்றிருக்கும் தெளிந்த பாங்குடைய கடந்தை நகரின் பெரிய கோயிலாக விளங்கும் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்.

636. சாநாளும் வாழ்நாளும் தோற்றம்இவை
சலிப்பாய் வாழ்க்கை ஒழியத்தவம்
ஆமாறு அறியாது அலமந்து நீர்
அயர்ந்தும் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்கு கொன்றை
புனல்பொ திந்தபுன் சடையினான் உறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : இறக்கின்ற நாள், வாழ்கின்ற நாள், பிறக்கின்ற தன்மை இவைகளால் சலிப்புற்ற வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்குரிய தவமானது எவ்வகையில் கைகூடும் என அறியாது வருத்தித் தளர்வுறல் வேண்டாம். அதற்கு யாதொரு குறையும் இல்லை. இடப வாகனத்தை உடையவனும், மாட்சிமை மிக்க கொன்றை மாலை சூடியவனும், கங்கை தரித்த சடையுடையவனும் உறையும் தூய்மையான மாண்பின் மிக்க கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் நாடித் தொழுமின்கள்.

637. ஊன்றும் பிணிபிறவி கேடென்றுஇவை
உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லா
மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர்
மூன்று மதில்எய்த மூவாச் சிலை
முதல்வர்க்கு இடம்போலு மதில்தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பிணியை நிலைப்படுத்தும் பிறவியானது கேடென்று கருதி, அதனை உடைய வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டும் எனக் கொண்டு, தவத்தை மேற்கொள்ள வேண்டும் என்னும் நெஞ்சினராய், மயக்கத்தில் நிற்பவர்களே ! நீவிர் அனைவரும் மனத்தில் மாறுபாடு கொண்டு உலகில் மயங்காது, மூன்று மதிலகளை எரித்து அழித்த மூப்படையாத மேருமலையை வில்லாகக் கொண்ட முதல்வர்க்கு உரிய இடம் என்று, மேகங்கள் தொழும் கொடிகளையுடைய கடந்தை நகரில், தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள், ஆங்கு வீற்றிருக்கும் இறைவன் நீங்கள் கருதியதைக் கைகூடுமாறு நல்குவர்.

638. மயல்தீர்மை இல்லாத தோற்றம்மிவை
மரணத்தொடு ஒத்துஅழிவு மாறாதலால்
வியல்தீர மேலுலகம் எய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர ஓங்கிய நாமங்களால்
ஓவாது நாளும்அடி பரவல்செய்
துயர்நீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : மயக்கம் தீர்வதற்கான உபாயம் யாது எனக் கருத வேண்டாம். மரணத்துடன் இம் மாயை நிலைகள் யாவும்  ஒத்து அழிந்து விடும் தன்மை உடையன. ஆதலால், உயர்ந்த உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று, பலவிதமான திறத்தில் முனைப்படுதலைப் பற்றி, வேறொன்றும் கொள்ள வேண்டாம். ஈசனுடைய திருநாமங்கள் உயர்ந்த தன்மை உடையவை. அவற்றை இடைவிடாது துதித்து, உச்சரித்து, அவ் விமலனுடைய திருவடியைப் பரவி, அவன் இடமாகிய கடந்தைத் தடங்கோயில் சேர்தூங்கானை மாடம் தொழுமின்கள். அச்செயல் உமது துயரைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

639. பல் நீர்மை குன்றிச் செவி கேட்பிலா
படர்நோக் கில்கண் பவளந் நிற
நல்நீர்மை குன்றித் திரை தோலொடு
நரை தோன்றும்கால நமக்காதன்முன்
பொன்நீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
புனல்பொ திந்தபுன் சடையினான் உறையும்
தொல்நீர்க் கடந்தைத் தடங் கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பலவிதமான சிறப்புக்கள் குறைவுபடத் தோன்றுமாறு, செவிகளின் கேட்கும் திறம் குறையவும். கண்கள் மங்கிப் பார்க்கும் திறன் தளர்ச்சி கொண்டும் உடல் வலிமை குன்ற நரையும் திரையும் தோன்றவும், ஆகியன யாவும் மூப்பின் வலிமையால் நிகழ்கின்றது. இந்நிலைக்கு நாம் ஆளாகும் முன்னர், பொன் மயமாய்ப் பொருந்தி காட்சி நல்கும், கங்கை நீர்மல்கு கடந்தை நகரில் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.

640. இறை யூண் துகளோடு இடுக்கண் எய்தி
இழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
நிறை யூண் நெறிகருதி நின் றீர்எல்லா
நீள்கழ லேநாளு நினைமின் சென்னிப்
பிறைசூழ் அலங்கல் இலங்கு கொன்றை
பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : சிறிதமவாகிய புன்மையான உணவு கொண்டு துயரம் அடைந்து இழிவாக இருக்கும் வாழ்க்கையை ஒழித்துவிட வேண்டும் என்று முனைப்புக் கொண்டு, தவம் என்று சொல்லப்படும் பெருமை தரும் நிறைவான உணவைக் கருதி நாடும் அன்பர்காள் ! எல்லோரும் ஈசனுடைய நெடிய திருவடியை நினைமின் ! சென்னியில் பிறைச் சந்திரன் விளங்கவும், கொன்றை மலர் மாலை திகழவும், வைத்துள்ள பெருமான் பிரியாது வீற்றிருக்கும் நீர்த்துறை சூழ்ந்த கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.

641. பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
பழிப்பாய் வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூழ் இடங்கருதி நின்றீர்எல்லாம்
இறையே பிரியாது எழுந்தபோதும்
கல்சூழ் அரக்கன் கதறச் செய்தான்
காதலியும் தானும் கருதி வாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : மூப்பு, பிணி உற்ற தன்மையால் பற்கள் வீழ்ந்தும், நாவானது தளர்ச்சியுற்று வாய்ச் சொற்கள் குழறியும், மெய்யானது (தேகம்) சுருங்கி வாட்டம் கொண்டும், பிறரால் கிழம் என்று பழிக்கப்படுகின்ற இல்வாழ்க்கை ஒழிய வேண்டும் என்றும், அதற்காகத் தவம் மேற்கொள்ள வேண்டும் என்று கருதி, அதனை ஒட்டிப் பொருத்தமற்ற இடங்களில் நிற்பவர்களே ! எல்லோரும் வாருங்கள் ! சிறிதும் தாமதியாது வாருங்கள் ! ஈசன் மலையைப் பெயர்த்த அரக்கனை வதைத்து, உமா தேவியும், தானும் கருதி வாழும் பழைமையான சீரினைக் கொண்ட கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்கள் ! அது நற்கதியை அளிக்கும் என்பது குறிப்பு.

642. நோயும் பிணியும் அருந்துயரமு(ம்)
நுகருடைய வாழ்க்கை ஒழியத்தவம்
வாயு மனங்கருதி நின்றீர்எல்லா
மலர்மிசைய நான்முகனு மண்ணும் விண்ணும்
தாய அடிஅளந்தான் காணமாட்டாத்
தலைவர்க்கு இடம் போலும் தண்சோலை விண்
தோயும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : நோயும், துயரமும் மற்றும் மனத்தைப் பிடித்துள்ள அச்சம் முதலானவைகளும் நுகரும் தன்மையுடைய இவ்வாழ்க்கை ஒழியத் தவ வழியே நன்றெனக் கருதி நிற்பவர்களே ! மலர்மிசை உடையவனாகிய நான்முகனும், பூவுலகத்தையும் தேவருலகத்தையும் உரிமையாக அளந்தவனாகிய திருமாலும், காணற்கு அரியவனாகிய தலைவர் ஈசன். அவர் விண்ணளவு ஓங்கி வளர்ந்த சோலைகளையுடைய கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடத்தில் வீற்றிருக்க எல்லோரும் தொழுமின்கள். அவர் உமக்கு நற்கதி அளிப்பவர் என்பது குறிப்பு.

643. பகடூர் பசிநலிய நோய்வருதலால்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரு
மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
திருந்திழை யும்தானும் பொருந்திவாழும்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பசி மிக்க அடைந்து நலிய, நோய் தாக்கி வருதலால் பழியும் கொள்ளும் இவ்வாழ்க்கை ஒழிய வேண்டும் என்று எண்ணி, அதற்காகச் சிகை நீக்கியும், துவராடையும் கொண்டவர்கள் சொல்பவை பொய்ம் மொழிகளாகும். அவற்றை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டாம். உமாதேவியோடு தானும் பொருந்தி குற்றங்களைத் தீர்க்கும் கடந்தைத் தடங்கோயில் சேர்தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் ஈசனைத் தொழுமின்கள். அதுவே நற்கதி தரவல்லது.

644. மண்ணார் முழவதிரு மாடவீதி
வயற்காழி ஞானசம் பந்தனல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
பிறை உரிஞ்சும் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்தும்
கருத்துணரக் கற்றாரும் கேட்டாரும் போய்
விண்ணோர் உலகத்து மேவிவாழும்
விதியது வேஆகும் வினை மாயுமே.

தெளிவுரை : வீதிகள்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதால் உண்டாகும் முழவம் அதிருமாறு ஒலிக்க, வயல்கள் பெருகும் காழியின் ஞானசம்பந்தன், நல்லருளும் வளப்பமும் மிகுந்த பெண்ணாடகத்துப் பெருங்கோயில் சேர் வானத்தை எட்டும் அளவு உயர்ந்து ஓங்கிய தூங்கானை மாடத்தில் மேவிய ஈசனைப் போற்றி உரைத்த, கண்ணுக்கினிய காட்சியைப் பரவும் பாடல்கள் பத்தினையும் கருத்துணரக் கற்றவர்களும், பாடக் கேட்டவர்களும், விண்ணோர் உலகத்தில் பொருந்தி வாழ்வார்கள். அது விதியாகி விளங்கும். அவர்கள் வினை மாயும்.

திருச்சிற்றம்பலம்

60. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

645. வண் தரங்கப் புனற்கமல
மதுமாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசைபாடும்
அளி யரசே ஒளிமதியத்
துண்டர் அங்கப் பூண்மார்பர்
திருத் தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை
பரிந்து ஒருகால்பகராயே.

தெளிவுரை : வளப்பம் பெருகிய அலைகள் மோதும் நீரில் விளங்கும் தாமரை மலரில் உள்ள தேனைச் சுவைத்துப் பருகி இன்புற்று, பெடையினொடும் ஒளி பொருந்திய வெண்மையான அலையோசை போன்று இசை பாடும் வண்டரசே ! ஒளிசேர் சந்திரனின் பிறையைத் தரித்து உள்ளவரும், உடலின் அங்கமாகும் எலும்பை மாலையாகக் கொண்ட மார்பினரும், பழைமையான நடனம் புரிந்து திருத்தோணிபுரத்தில் உறைபவரும் ஆகிய அப் பெருமானுக்கு என் நிலையை நன்கு அறிந்து பரிவோடு ஒருமுறை பகர்வாயாக.

646. எறி கறவம் கழிக்கானல்
இளங்குருகே என்பயலை
அறிவுறாது ஒழிவதுவும்
அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதம் ஓதும்
திருத்தோணி புரத்துஉறையும்
வெறி நிறார் மலர்க்கண்ணி
வேதியர்க்கு விளம்பாயே.

தெளிவுரை : துள்ளும் சுறா மீன்கள் விளங்கும் உப்பங்கழியின் கானலில் நிலவுடும் இளங்குருகே ! நான் கொண்டுள்ள பசலை நோயை, இறைவனிடம் அறிவிக்காது விடுவதும் வினைப் பயன் ஆகும் தரத்ததோ ! மிகுந்த பயனை அடையும் தன்மையில் சிறுவர்கள் திருவைந்தெழுத்து ஓதும் பெருமைமிக்க தோணிபுரத்தில், மணமும் வண்ணமும் பொருந்திய மலரைச் சூடியுள்ள வேதநாயகராகிய ஈசனிடம் எனது நிலையை விளம்புவாயாக.

647. பண்பழனக் கோட்டகத்து
வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே
கடுவினையேன் உறுபயலை
செண்பகம்சேர் பொழில்புடைசூழ்
திருத் தோணி புரத்துறையும்
பண்பனுக்குஎன் பரிசுரைத்தால்
பழியாமோ மொழியாயே.

தெளிவுரை : நன்றாகப் பண்படுத்தப்பெற்ற வயல்களின் கரைகளில் வாடுதல் கொள்ளாத சிவந்த கொண்டையுடன் சண்பங் கோரையின் இடையே விளங்கும் வாரணமே ! தலைவனாகிய ஈசனைப் பிரிந்து ஆற்றாது கொடிய வினையுடைய யான் பசலையுற்றேன். செண்பக மலர்ப்பொழில்சூழ் திருத்தோணிபுரத்தில் உறையும் பண்பின் மிக்கு விளங்கும் தலைவனுக்கு எனது நிலையை எடுத்து ஓதினால் நினக்கு எவ்விதப் பழியும் நேராது. எனவே மொழிவாயாக.

648. காண்தகைய செங்கால்ஒண்
கழி நாராய் காதலால்
பூண் தகைய முலை மெலிந்து
பொன் பயந்தாள் என்றுவளர்
சேண்தகைய மணிமாடத்
திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற்கு இன்றே சென்று
அடியறிய உணர்த்தாயே.

தெளிவுரை : ஒப்பற்ற உப்பங்கழியில் காண்பதற்கு அழகிய செங்காலகளையுடைய நாராய் ! அன்பின் மேலீட்டால், அணிகள் பூணப்பெற்ற மார்பகங்கள் மெலிவுறவும், பொன் நிறத்தின் பசலையுறவும், ஆயினாள் என்று, விண்ணை நெருங்கும் உயர்ந்த மணிமாடத் திருத்தோணிபுரத்து உறையும் ஆண்தகையாற்கு, இன்றே சென்று எனது உள்ளத்தின் வேட்கையை உணர்த்துவாயாக.

649. பாராரே எனை ஒருகால்
தொழுகின்றேன் பாங்கமைந்த
காராரும் செழு நிறத்துப்
பவளக்காற் கபோதங்காள்
தேராரு நெடுவீதித்
திருத்தோணி புரத்துறையும்
நீராரும் சடையாருக்கு
என்நிலைமை நிகழ்த்தீரே.

தெளிவுரை : செழுமை கூடிய நிறத்துடைய பவளம் போன்ற சிவந்த கால்களையுடைய கார்வண்ண மாடப் புறாக்களே ! இதற்கு முன்னதாகத் தூதாக அனுப்பிய வண்ரசு, இளங்குருகு, சேவல், நாரை ஆகியவர்கள் திரும்பி வந்து என்னைப் பாராது உள்ளனர். உம்மைத் தொழுகின்றேன். தேர் செல்லும் நெடிய வீதிகளையுடைய தோணிபுரத்தில் உறையும் கங்கை தரித்த சடையுடைய நாதருக்கு எனது நிலைமையை இயம்புவீர்.

650. சேற்றெழுந்த மலர்க்கமலச்
செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள்
விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி
புரத்தீசன் துளங்காத
கூற்று தைத்த திருவடியே
கூடுமா கூறீரே.

தெளிவுரை : தாமரை மலர்களும் செஞ்சாலிக் கதிர்களின் நெல் மணிகளும் திகழ வீற்றிருக்கும் அன்னப் பறவைகளே ! திருத்தோணிபுரத்தில் விளங்கும் ஈசன், வித்தவன். யாராலும் அசைக்க முடியாத கூற்றுவனை உதைத்த வல்லமையுடையவன், அப்பெருமான். அவனுடைய செல்வப் பெருங்கழலை யான் கூடி மகிழுமாறு அவனிடம் சென்று மொழிவீரே. ஏகாரம் விண்ணப்பத்தின் மாண்பினை மொழிவதாயிற்று.

651. முன்றில் வாய் மடல் பெண்ணைக்
குரம்பை வாழ் முயங்கு சிறை
அன்றில் காள் பிரிவுறுநோய்
அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவும்
திருத்தோணி புரத்துறையும்
கொன்றை வார் சடையார்க்கு என்
கூர்பயலை கூறீரே.

தெளிவுரை : முற்றங்களிலும், மட்டைகள் விளங்கும் பனை மரங்களிலும் கூடுகளை அமைத்து, நெருங்கிய சிறகுகளை உடைய அன்றில் பறவைகாள் ! நீங்கள் எக்காலத்தும் இணையோடு கூடி ஒருமித்து விளங்குவதால், யான் படும் பிரிவுத் துன்பத்தை உங்களால் அறிய முடியாது. ஆயினும் இணைந்து வாழ்வதில் வல்லவர்களாகிய நீவிர் தூது உரைப்பதற்கு ஏற்றவர்கள் ஆவீர். இனிமையான தென்றல் புகுந்து எல்லா இடங்களில் பரவி விளங்கும் திருத்தோணிபுரத்தில் உறையும் மணங்கமழும் கொன்றை மாலை சூடிய செஞ்சடையராகிய ஈசற்கு, என்னை வாட்டும் பசலை நோய் பற்றிக் கூறுவீர்.

652. பானாறு மலர்ச் சூதப்
பல்லவங்கள் அவை கேதி
ஏனோர்க்கும் இனிதாக
மொழியும்எழில் இளங்குயிலே
தேன்ஆரும் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடைக்கே
வர ஒருகால் கூவாயே.

தெளிவுரை : சாறும், மணமும் மிக்க மலர்களையும் மாந்தளிர்களையும் விரும்பி ஏனோர்க்கும் இனிதாக மொயியும் எழிலை உடைய இளங்குயிலே ! தேன் சொரியும் பொழில்களைப் பக்கத்தில் சூழத் திகழும் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும், தேவர்களுக் கெல்லாம் தலைவராக விளங்கும் ஈசனை, என் இடத்திற்கே வருமாறு ஒருமுறை கூவுவாயே.

653. நற்பதங்கண் மிக அறிவாய்
நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாய்அலகில்
பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதம்சேர் மறையாளர்
திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்குஎன்
மெய்பயலை விளம்பாயே.

தெளிவுரை : அழகான அலகினையுடைய நாகணவாய்ப் பறவையே ! நல்ல மொழிகளை மிக நன்றாக அறிவாய் ! நீயே நல்லாய். உன்னைப் போற்றுகின்றேன். உன்னை வேண்டிக் கொள்கின்றேன். பக்திச் சொற்களின் பதப் பொருளாகவும், வேதத்தின் நாயகனாகவும், திருத்தோணிபுரத்தில் உறையும், மேருமலையை வில்லாகக் கொண்ட தோளினையுடைய விகிர்தனுக்கு, என்னுடைய மெய்யான பசலையை விளம்புவாய்.

654. சிறையாரு மடக்கிளியே
இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத் தருவன்
மொய்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடல்தோணி
புரத்தீசன் துளங்கும் இளம்
பிறை யாளன் திருநாமம்
எனக்கு ஒருகால் பேசாயே.

தெளிவுரை : தலைவன்பால் கொண்ட மேலான விருப்பத்தால், அரச வண்டு, இளங்குருகு, சேவல், நாரை, கபோதங்கள்(புறா), அன்னங்கள், அன்றில் பறவை, இளங்குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றைத் தூது விடுத்தும் பயன் விளையாத நிலையைக் கண்டாள் தலைவி. அவள் மனம் ஆற்றொணாத் துயரில் மூழ்குகின்றது. தான் வளர்த்த கிளி நினைவிற்கு வருகின்றது. தான், தலைவனுடைய திருநாமங்களை மொழிந்து மகிழ்ந்த நிலையில், கிளியானது தலைவனுடைய திருநாமத்தைச் செவி மடுத்திருக்கும் என நம்புகின்றாள். இறைவன் திருநாமத்தை தான் வளர்த்த கிளியின் வாயிலாகக் கேட்டு மகிழ்வடைய வேண்டும் எனக் கருதுகின்றாள். மகிழ்ச்சியைத் தருகின்ற ஈசன் திருநாமத்தைக் கூறும் கிளிக்குத் தேனும் பாலும் தருவதற்கு இசைகின்றாள். இந்நிலையில் அவள் கூற்று எழுகின்றது.

கூண்டில் மகிழ்ச்சியுடன் விளங்கும் கிளியே ! இங்கே வா !தேனும் பாலும் நீ உட்கொள்ளும் முறைப்படியே தருவன். முத்தும் பவளமும் பெருகும் கடல் துறையாகிய தோணிபுரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன். அவனுடைய திருநாமத்தை என்னிடம் பேசி மொழிவாய்.

655. போர்மிகுத்த வயல் தோணி
புரத்துறையும் புரிசடைஎம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து
இறையவனை வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்
சம்பந்தன் உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ்வல்லார்
சிவ லோகம் சேர்வாரே.

தெளிவுரை : வைக்கோற் போர் மிகுந்து தோன்ற நிலவளத்தை உடைய தோணிபுரத்தில் உறையும் சடையும், நீலகண்டமும் உடைய எம் இறைவனைத் தாமரை மலர் மாலை அணிந்த ஞானசம்பந்தன் ஏத்தி உரை செய்த சிறப்புகள் மிகுந்த இத் திருப்பதிகத்தை ஓதி உரைப்பவர்கள், சிவலோகம் சேர்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

61. திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

656. நறைகொண்ட மலர்தூவி
விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார்
முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும்
செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான்
கண்பதீச் சரத்தானே.

தெளிவுரை : சிறகுகளையுடைய வண்டுகள் பறக்கும் செங்காட்டங்குடியில் கரிய கண்டத்தையுடைய கணபதீச்சரத்தானைத் தொண்டர்கள் தேன் நிறைந்த மலர்களால் தூவிப் போற்றி, மணம் அளிக்க நாள்தோறும் குறைவின்றி, விதிப்படி பணி செய்கின்றனர்.

657. வாரேற்ற பறையொலியும்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோடு
ஓங்கியசீர் விழவுஓவாச்
சீரேற்றம் உடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : தோல் வாரினால் கட்டப்பெற்ற பறையின் ஒலியும், முழங்கும் சங்கின் ஒலியும் திகழ, ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து செல்வச் செழிப்பு தோன்றுமாறு சிறப்பான திருவிழாக்கள் ஓய்வில்லாமல் ஆற்றப் பெருமையின் ஏற்றத்தைக் கொண்டுள்ள செங்காட்டங் குடியில் கார்காலத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர் சூடிய கணபதீச்சரத்தான் விளங்குகின்றான்.

658. வரந்தையான் சோபுரத்தான்
மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான்
கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : ஈசன் வரந்தை, சோபுரம் ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவன்; வேதமும் ஆகமும் ஆகி அதன் எழுத்தாகவும் ஒலியாகவும் விளங்குபவன்; கோவண ஆடையுடையவன்; கிண்கிணிச் சலங்கையுடையவன்; கரத்தில் பிரம கபாலம் ஏந்திச் செங்காட்டங்குடியில் உள்ளவன்; செஞ்சடையில் கங்கை நீரைக் கரந்து சேமித்தவன்; திருவெண்ணீறு தரித்தவன். அவன் கண்பதீச்சரத்தில் வீற்றிருப்பவன்.

659. தொங்கலும் கமழ்சாந்தும்
அகிற்புகையும் தொண்டர்கொண்டு
அங்கையால் தொழுதுஏத்த
அருச்சனைக்குஅன்று அருள்செய்தான்
செங்கயல்பாய் வயல்உடுத்த
செங்காட்டாங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : மலர் மாலை சாற்றிக் கமழ்கின்ற சந்தனம், அகிற்புகை கொண்டு தொண்டர்கள் கைகளால் கூப்பித் தொழுது வணங்கி அருச்சனை புரிய அருள் புரிந்தவன். கயல் பாயும் வயல் சூழ்ந்த செங்காட்டங்குடியில், கங்கை தரித்த நீண்ட சடையுடையவனாகிய கணபதீச்சரத்தில் மேய பரமன்.

660. பாலினால் நறுநெய்யால்
பழத்தினால் பயின்றுஆட்டி
நூலினால் மணமாலை
கொணர்ந்துஅடியார் புரிந்துஏத்தச்
சேலினார் வயல்புடைசூழ்
செங்காட்டங் குடியதனுள்
காலினால் கூற்றுதைத்தான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : நெய், பால் ஆகியவற்றைக் கொண்டு பழங்கள் முதலான பஞ்சாமிர்தமும் கொண்டு அபிடேகம் செய்து, வேதாகம விதிப்படி மணங் கமழும் மாலைகள் கொணர்ந்து, அடியவர்கள் மகிழந்து ஏத்தச் சேல்கள் திகழும் வயல்கள் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருப்பாதத்தால் கூற்றுதைத்த கணபதீச்சரத்தான் வீற்றிருக்கின்றான்.

661. நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : மிக நுண்ணிய பொருளாகவும், மிகப் பெரியவனாகவும், மனங்கசிந்து உருகும் அடியவர்தம் வாயிலிருந்து மலரும் சொல்லாகவும், தண்மையும் வெம்மையும் உடையவனாகவும், தலையின் மேலாகவும் மனத்தகத்தும் இருப்பவன், ஈசன். திண்ணியனாக விளங்கும் அப் பரமன் செங்காட்டங்குடியில் உள்ளவனாகவும், செஞ்சடையில் சந்திரனைத் தரித்துள்ளவனாகவும், நெற்றிக் கண்ணையுடையவனாகவும் இருப்பவன். அவன் கணபதீச்சரத்தான்.

662. மையினார் மலர்நெடுங்கண்
மலைமகள்ஓர் பாகமாம்
மெய்யினான் பையரவம்
அரைக்கசைத்தான் மீன்பிறழ்அச்
செய்யின்ஆர் அகல்கழனிச்
செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூர்எரியான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : மை பொலிந்து குளிர்ந்த மலர் போன்ற நெடுங்கண்களையுடைய மலைமகளை, ஒப்பற்ற பாகமாக உடைய திருமேனியில், படத்துடன் கூடிய நாகத்தை அரையில் அசைத்து, மீன்கள் துள்ளிக் களிக்கும் வயல்களும், அகன்ற கழனிகளும் உள்ள செங்காட்டங்குடியில், கூர்மையான சுடர்விட்டு எரியும் நெருப்பை ஏந்திய ஈசன், கணபதீச்சரத்தான்.

663. தோடுடையான் குழையுடையான்
அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான்
பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங்
குடியடையான் சேர்ந்தாடும்
காடுடையான் ஆடுடையான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : ஒரு காதில் தோடும், மற்றொன்றில் குழையும் உடைய ஈசன், அரக்கன் தோளை நெரித்தவன்; பெருமையுடையவன். போர்த்தன்மையுடைய வீரம் மிக்க இடபத்தை உடையவன், பெண்ணைப் பாகமாக உடையவன், அழகும் இளமையும் உடையவன். பூத கணங்களுடன் சேர்ந்து ஆடும் இடுகாட்டினன், வெற்றியுடையவன். அவன் செங்காட்டாங்குடியுடைய கணபதீச்சரத்தானே.

664. ஆனூரா உழி தருவான்
அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான்
வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டங்
குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : ஈசன், இடபத்தில் மீதேறி வருவான், பிரமன் திருமால் ஆகியோர்களுக்கு உணர முடியாதவாறு விண்ணில் உயர்ந்தான், வையகத்தில் வாழ்த்துவார்தம் மனத்தில் உள்ளான், அவர்தம் உள்ளத்தில் ஊறி நின்று தேன் போன்று இனிப்பவன். அவன் சிற்றம்பலம், கானூர், கழுமலம் ஆகிய தலங்களிலும் விளங்கி, செங்காட்டங்குடியில் மேவும் கணபதீச்சரத்தானே.

665. செடிநுகரும் சமணர்களும்
சீவரத்த சாக்கியரும்
படிநுகராது அயர்உழப்பார்க்கு
அருளாத பண்பினான்
பொடிநுகரும் சிறுத்தொண்டர்க்கு
அருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும், உலகத்தில் நன்மை தீமைகளை நுகராது துன்பத்தில் நெஞ்சைப் பதித்துக் கொள்ள, அன்னார்களுக்கு அருள் புரியாதவன் ஈசன். திருநீற்றை விரும்பி அணியும் சிறுத்தொண்டருக்கு அருள் செய்யும் பொருட்டுக் காவல்பதியாக வீற்றிருந்தான், கணபதீச்சரத்தான்.

666. கறை இலங்கு மலர்க்குவளை
கண்காட்டக் கடிபொழிலின்
நறைஇலங்கு வயல்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
சிறைஇலங்கு புனல்படப்பைச்
செங்காட்டங் குடிசேர்த்தும்
மறைஇலங்கு தமிழ்வல்லார்
வானுலகத்து இருப்பாரே.

தெளிவுரை : விளங்கும் குவளை மலர்களும் மணம் பொருந்திய பொழிலில் தேன் பெருகவும் வயல்கள் சிறக்கும் காழியின் தமிழ் ஞானசம்பந்தன் நீர் வயல்களும் தோட்டங்களும் உடைய செங்காட்டங்குடியை இணைத்துப் பாடிய மறை விளங்கும் இத் திருப்பதிகத்தைக் கூற வல்லவர், வானுலகில் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

62. திருக்கோளிலி (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

667. நாளாய போகாமே
நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
அடல்நெஞ்சே அரநாமம்
கேளாய்நம் கிளைகிளைக்கும்
கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்கும்அவன்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல், நஞ்சையுடைய நீலகண்டனாக விளங்கும் ஈசனுக்கே உரிய ஆளாகி, அன்பு செய்வோமாக. பேதைமை உடைய நெஞ்சே ! அரனுடைய திருநாமத்தைச் செவிகுளிரக் கேட்பாயாக. அது நம் வழி வழியாக வரும் தலைமுறையினருக்கும் கெட்டுப் போகாத உயர்ந்த தரத்தில் நிலைத்த பொருளாய் இருந்து, இடையூற்றை நீக்கும். அத்தகைய பெருமான் கோளிலியில் உள்ளவனே.

668. ஆடரவத்து அழகுஆமை
அணிகேழல் கொம்புஆர்த்த
தோடரவத்து ஒருகாதன்
துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத்து இசைபயின்று
பணிந்துஎழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்கும் அவன்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : ஆடிக்கொண்டிருக்கும் அரவத்தில் அழகிய ஆசை ஓடும் பன்றியின் கொம்பும் கட்டி அணிபவன் ஈசன். அரவத்தைக் காதில் தோடாக உடையவன். திருவடியில் மலர்களைத் தூவிப் பாடல்களை இசையுடன் பயின்று பணிபவர் மனத்தின் துன்பத்தைத் தீர்க்கும் பரமன், கோளிலியில் வீற்றிருப்பவன்.

669. நன்றுநகு நாண்மலரால்
நல்லிருக்கு மந்திரங்கொண்டு
ஒன்றிவழி பாடுசெயல்
உற்றவன்றன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலன்உயிர்
கண்டுஅவனுக்கு அன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : நன்று மலர்ந்து மலர்கள் தூவி, இருக்கு வேத மந்திரங்களை ஓதி, மனம் ஒருமித்த வழிபாடு செய்த மார்க்கண்டேயரின் உன்னதமாக ஓங்கும் உயிரைக் கவரச் சினந்து வரும் காலனின் உயிரைப் போக்கிக் காத்தவன், பொன் போன்ற கொன்றை மலர் சூடும் கோளிலியில் வீற்றிருக்கும் பெருமான்.

670. வந்தமண லால்இலிங்க
மண்ணியன்கண் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமம்
தேர்ந்துசிதைப் பான்வரும்அத்
தந்தைதனைச் சாடுதலும்
சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : மண்ணியாற்றின் கரையில் மணலால் இலிங்கத் திருமேனி அமைத்துப் பால் அபிடேகம் செய்த பாலனுடைய செயலை விரும்பாத தந்தையைச் சாடிய அம் மகனுக்குச் சண்டீசன் எனும் சிறப்பினைத் தந்தருளி, மலர்களைக் கொடுத்தவன் கோளிலிப் பெருமான்.

671. வஞ்சமனத்து அஞ்சுஒடுக்கி
வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளு
நம்பியென வேநினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப்
பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சுஅணவும்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : வஞ்சனை பெருந்திய மனத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வழி செல்லாது ஒடுக்கி, நாள்தோறும் நல்ல மெய்ப்பாடு கொள்ளும் பூசனையால், நஞ்சினை அமுது கொண்ட ஈசனையே கருதும் பார்த்தனுக்குப் பாசுபத அத்திரம் ஈந்து மகிழ்ந்தவன் கோளிலிப் பெருமான்.

672. தாவியவன் உடனிருந்தும்
காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சொடுக்கி
அங்கணன்என்று ஆதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி
அடிகளுக்கு நல்கும்அவன்
கோவியலும் பூவெழுகோற்
கோளிலியெம் பெருமானே.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும் ஈசன் தன்னிடத்தும் உள்ளவன் என உணராதவனாகி உலகத்தைத் தாவி நின்று அளந்த திருமாலும் காண முடியாத தற்பரன், ஐம்புலன்களை ஒடுக்கி விரும்பிப் போற்றி வழிபடும் நமி நந்தி அடிகளுக்குப் பெருமையும் புகழும் நல்கிய கோளிலிப் பெருமான்.

673. கல்நவிலு மால்வரையான்
கார்திகழு மாமிடற்றான்
சொல்நவிலு மாமறையான்
தோத்திரம்செய் வாயின்உளான்
மின்நவிலும் செஞ்சடையான்
வெண்பெடியான் அங்கையினில்
கொல்நவிலும் சூலத்தான்
கோளிலியெம் பெருமானே.

தெளிவுரை : உறுதியான பெருமைமிக்க கயிலை மலையை உடையவன், கரிய கண்டத்தையுடையவன், வேதங்களையுடையவன், தோத்திரம் செய்பவர் வாய்ச் சொல்லில் உறைபவன், மின்னலைப் போன்ற ஒளி மயமான சிவந்த சடையுடையவன், திருநீற்று மேனியன், அழகிய கரத்தில் பெருமையான சூலத்தை உடையவன், கோளிலிப் பெருமான்.

674. அந்தரத்தில் தேர்ஊரும்
அரக்கன்மலை அன்றுஎடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால்
ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்தை மறைபாட
வாள்அவனுக்கு ஈந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : வானத்தின்கண் தேர் ஊர்ந்து சென்ற இராவணன் கயிலை மலையை எடுத்தபோது ஈசன் அழகிய தன் திருப்பாத விரலால் ஊன்ற, உடல் நெரிந்து துன்புற்று சாம கீதத்தை ஓதினான். அதனைக் கேட்டு மகிழ்ந்து, மந்திரவாளை அவ்வரக்கனுக்கு வழங்கியவன் பிறைசூடிய கோளிலிப் பெருமான்.

675. நாணமுடை வேதியனு
நாரணனு நண்ணவொணாத்
தாணுஎனை ஆளுடையான்
தன்னடியார்க்கு அன்புடைமை
பாணன்இசை பத்திமையால்
பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக்
கோளிலியெம் பெருமானே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் நண்ணமுடியாத ஈசன், என்னை ஆளுடையவன், அடியவர்பால் அன்புடைய பாணம் யாழ் மீட்டிப் பக்திப் பெருக்கால் இசைத்துப் பாட அருள் புரிபவன், வளைந்த இளம் பிறையைச் சென்னியில் தரித்த கோளிலிப் பெருமான்.

676. தடுக்குஅமரும் சமணரொடு
தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளாது
ஈசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம்
நண்ணலும்ஆம் அண்ணல்கழல்
கொடுக்கிலா வரங்கொடுக்கும்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : தடுக்கில் அமரும் சமணர்களும், மற்றும் தர்க்க சாத்திரத்தில் வல்லவர்களும் சொல்பவை துன்பத்தைத் தருவதாகும். அவற்றை ஏற்காது ஈசனை வழிபடுமின். அப்பெருமான் அரிய வரங்களைத் தருபவர். அவன் அருள் அச்சமற்ற வானுலகத்தில் அடியவர்களை மகிழ்ந்திருக்கச் செய்யும். அத்தகைய அண்ணல் எம் கோளிலியில் வீற்றிருக்கும் பெருமானே.

677. நம்பனைநல் லடியார்கள்
நாம்உடைமாடு என்றிருக்கும்
கொம்பனையாள் பாகன்எழில்
கோளிலிஎம் பெருமானை
வம்புஅமரும் தண்காழிச்
சம்பந்தன் வண்தமிழ்கொண்டு
இன்புஅமர வல்லார்கள்
எய்துவர்கள் ஈசனையே.

தெளிவுரை : ஈசனை, நன்மையே உற்ற அடியவர்கள் தமது செல்வம் எனக் கருதும் உமையவளைப் பாகமாக உடைய கோளிலிப் பெருமானைப் போற்றி மணங்கமழும் குளிர்ச்சி பொருந்திய காழிச்சம்பந்தன் வளப்பம் மிக்க உரைத்த இத் திருப்பதிகத்தை இன்பம் பெருக ஓத வல்லவர்கள் ஈசன்பால் எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

63. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

678. எரியார்மழுவொன்று ஏந்திஅங்கை
இடுதலையே கலனா
வரியார் வளையார் ஐயம்வல்லாய்
மாநலம் வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன்
தாமரைநான் முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட
பிரமபுரத் தானே.

தெளிவுரை : நெருப்பைப் போன்ற மழுப்படையைக் கரத்தில் ஏந்திக் கபாலம் ஒரு கரத்தில் ஏந்திப் பிச்சை ஏற்று அழகிய வளையலை அணிந்த நங்கையரிடம் அவர்தம் நலத்தையும் கவர்ந்தவன் பிரமபுரத்து மேவிய பெருமான் ! தவறுதல் இல்லாது வேதங்களை ஓதும் தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகத்தனாகிய பிரமன் பூசிக்க ஆட்கொண்டவன்.

679. பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப்
பெய்பலிக்குஎன்று அயலே
கயலார்தடங்கண் அஞ்சொல் நல்லார்
கண்துயில் வவ் வுதியே
இயலான் நடாவி இன்பம்எய்தி
இந்திரன்ஆள் மண்மேல்
வியலார் முரசம் ஓங்குசெம்மை
வேணுபுரத் தானே.

தெளிவுரை : இந்திரன் மூங்கில் (வேணு) வடிவத்தில் பூசிக்க அருள் புரிந்த வேணு புரத்தானே, கங்கை பொருந்திய சடையில் சந்திரனைச் சூடி பலியேற்க வேண்டும் என்று கயல் போன்ற அகன்ற கண்களையுடைய மாதர்கள்பால் சென்று, அவர்கள் நின்னைக் கண்டு நின்னையே நினைத்துத் துயில் துறக்க வவ்வுதல் செய்தனை !

680. நகலார் தலையும் வெண்பிறையு
நளிசடைமாட்டு அயலே
பகலாப் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய்
பாய்கலை வவ் வுதியே
அகலா துறையும் மாநிலத்தில்
அயலின்மை யால் அமரர்
புகலான் மலிந்த பூம்புகலி
மேவிய புண்ணியனே.

தெளிவுரை : தலையோடும், வெண் பிறையும் சடையில் விளங்கப் பலியேற்கும் தன்மையனே ! அமரர்கள் அடைக்கலம் புகுந்து இருந்தமையால் பூம்புகலி எனப்படுமாறு விளங்கும் ஈசனே, பலியேற்கப் பரந்த ஆடையைக் கவர்ந்தது ஏன் ?

681. சங்கோடு இலங்கத் தோடுபெய்து
காதிலொர்தாழ் குழையன்
அங்கோல் வளையார் ஐயம்வல்லா
யானலம்வவ் வுதியே
செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும்
செய்வினை மெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட
வெங்குரு மேயவனே.

தெளிவுரை : வெங்குரு மேவும் பெருமானே ! சங்குடன் தோடும் குழையும் காதில் அணிந்து, அழகிய வளையலை அணிந்த மாதர்களிடம் பிச்சை கொள்ளாது, அவர்தம் நலனை வவ்விக் கொள்வையோ ! செங்கோல் சிறப்புற நடைபெறும் முகத்தான் செய்கின்ற தம் பணி சிறப்புறுமாறு குருபகவான் போற்ற அருள் புரிந்தனை !

682. தணிநீர் மதியம் சூடி நீடு
தாங்கிய தாழ் சடையன்
பிணி நீர் மடவார் ஐயம்வவ்வாய்
பெய்கலை வவ்வுதியே
அணிநீர் உலகம் ஆகி எங்கும்
ஆழ்கடலால் அழுங்கத்
துணி நீர் பணியத் தான்மிதந்த
தோணி புரத் தானே.

தெளிவுரை : நீரானது உலகெங்கும் விரிந்து சூழ்கடலால் ஆழ்ந்த காலத்து தான் மட்டும் மிதந்து மேல் நிற்கும் தோணிபுரத்து ஈசனே ! தணிந்த நீர் போன்ற குளிர்ந்த வெண் மதியைச் சூடித் தாழ்ந்த சடையுடன் விரகதாகம் உடைய பெண்களிடம் பிச்சை யேற்காது அவர்களுடைய ஆடைகளை வவ்வியது ஏனோ !

683. கவர்பூம் புனலும் தண்மதியும்
கமழ்சடைமாட்டு அயலே
அவர்பூம் பலியோடு ஐயம்வவ்வா
யானலம் வவ்வுதியே
அவர் பூண் அரையர்க்கு ஆதியாய
அடல் மன்னன் ஆள் மண்மேல்
தவர்பூம் பதிகள் எங்கும் எங்கும்
தங்குதரா யவனே.

தெளிவுரை : மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக விளங்கிக் காக்கும் தொழிலை மேவும் திருமால் மண்மேல் பூக்களால் (பூர்தராய்) திகழ வழிபடும் பூந்தராய் மேவும் பெருமானே ! கங்கையும் சந்திரனும் கமழ்சடையில் திகழ மாதர்களிடம் பிச்சை யேற்காது அவர்தம் நலத்தை வவ்வியது ஏன் ?

684. முலையாழ் கெழுவ மொந்தை கொட்ட
முன்கடை மாட்டு அயலே
நிலையாப் பலிதேர்ந்து ஐயம் வவ்வாய்
நீ நலம் வவ்வுதியே
தலையாய்க் கிடந்து அவ் வையம் எல்லாம்
தன்னதொரு ஆணை நடாய்ச்
சிலையான் மலிந்த சீர்சிலம்பன்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : திருமால், மோகினி அவதாரம் தாங்கத் தேவர்களுக்கு அமுதம் வழங்கிய ஞான்று, சிலம்பன் என்னும் அசுரன் அவ்வரிசையில் நிற்கக் கண்டு சிரத்தை அறுத்தார். அந்த சிரம் மண்மிசை கிடந்து தன் ஆணை நடத்தும் வண்ணம் பூசிக்க, விளங்கும் சிரபுரம் மேவும் பெருமானே ! முல்லை யாழும் மொந்தை என்னும் ஒலியும் பொருந்தி ஒலிக்க, வாயிலின் முன் மாதர்கள் இடும் பிச்சை ஏற்பதை விடுத்து அவர்கள் நலத்தினை வவ்வினையே !

685. எருதே கொணர்க என்று எறிஅங்கை
இடுதலையே கலனாக்
கருதேர் மடவார் ஐயம் வவ்வாய்
கண்துயில் வவ்வுதியே
ஒருதேர் கடாவி ஆர்அமருள்
ஒருபது தேர் தொலையப்
பெருதேர் வலவன் மேவிஆண்ட
புறமவர் புண்ணியனே.

தெளிவுரை : புறாவின் எடைக்குத் தன் தசையை அறுத்துக் கொடுக்குமாறு புறா வடிவத்தில் போந்த அக்கினிக் கடவுள், ஒரு தேரினைத் தன்னகத்தே கொண்டு பத்துத் தேர்களை வெல்லும் போர் வல்லமையுடைய சிபிச் சக்கரவர்த்தியின்பால் போந்து நற்கதியடையச் செய்த புறவம் நகர் மேவும் புண்ணியனே ! எருது வாகனத்தில் அமர்ந்து அழகிய கையில் கபாலம் ஏந்தி நினைக் கருதியிருக்கும் மடவார் இடும் பிச்சையைக் கொள்ளாமல் அவர்கள் நினைத்து வாடுமாறு துயிலை வவ்வினையே !

686. துவர்சேர் கலிங்கப் போர்வையாரும்
தூய்மையிலாச் சமணும்
கவர்செய்து உழலக் கண்டவண்ணம்
காரிகைவார் குழலார்
அவர்பூம் பலியோடு ஐயம்வவ்வா
யானலம் வவ்வுதியே
தவர்செய் நெடுவேல் சண்டன்ஆளச்
சண்பை அமர்ந்தவனே.

தெளிவுரை : சண்பை என்னும் கோரைப்புல்லால் தனது குலம் அழிதலுக்குண்டான பாவம் அணுகாதவாறு திருமால் (கண்ணபிரான்) பூசித்த சண்பை நகரில் நெடுவேலுடைய சண்டன் எனும் காலனை உதைத்து ஆளும் பெருமானே ! துவாரடையையுடைய சாக்கியரும், சமணரும் மனம் தேராது உழலுதலைப் போலத் தாருகவனத்து மாதர்களும் தேராது உழன்று திகைக்க, அவர்கள் இடும் பிச்சையை வவ்வாது, நலங்கள் யாவினையும் வவ்வுதல் செய்தனையே !

687. நிழலால் மலிந்த கொன்றைசூடி
நீறுமெய் பூசி நல்ல
குழலார் மடவார் ஐயம் வவ்வாய்
கோல்வளை வவ்வுதியே
அழலாய் உலகம் கவ்வைதீர
ஐந்தலை நீள்முடிய
கழல் நாகஅரையன் காவலாக
காழி அமர்ந்தவனே.

தெளிவுரை : உலகத்தின் துன்பம் தீரும் பொருட்டு ஐந்து தலைகளையுடைய நாகராசன் காவலாக விளங்கக் காழி நகரில் அமர்ந்த பெருமானே ! ஒளிரும் கொன்றை மலர் சூடித் திருநீறு மெய்யில் விளங்க நீண்டு வளர்ந்த குழலையுடைய மடவார் இடும் பிச்சை கொள்ளாது வளையல்களை வவ்வினை !

688. கட்டார் துழாயன் தாமரையான் என்று
இவர்காண் பரிய
சிட்டார் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய்
செய்கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தன் ஆள
நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல்சூழ்
கொச்சை அமர்ந்தவனே.

தெளிவுரை : மேன்மையில் விளங்கும் பிரமன் புதல்வனாகிய பராசரன் படகோட்டியின் மகளான மச்சகந்தியை மணந்ததால் கருதப்பட்ட இழிவு நீங்கும் பொருட்டுக் கொச்சை நீங்க அமர்ந்து, விளங்கும் வயல்சூழ் கொச்சைவயம் அமர்ந்தவனே ! துளசி மாலை அணிந்த திருமாலும், தாமரை மலரனாகிய பிரமனும் காணற்கு அரியவனாய்ப் பலி தேர்ந்து பிச்சை கொள்ளாது ஆடைகளை வவ்வினை !

689. கடையார் கொடிநன் மாடவீதிக்
கழுமலவூர்க் கவுணி
நடையார் பனுவல் மாலையாக
ஞானசம்பந்த னல்ல
படையார் மழுவன் மேல்மொழிந்த
பல்பெயர் பத்தும் வல்லார்கும்
அடையா வினைகள் உலகில் நாளும்
அமர்உலகு ஆள்பவரே.

தெளிவுரை : வாயில்கள்தோறும் தோரணங்களைக் கொண்ட நல்ல மாடவீதிகள் உடைய கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் உதித்த ஞானசம்பந்தர் நன்னடை மிகும் சந்தப் பாடல் மாலையாக மழுப்படையுடைய ஈசன் மேல் மொழிந்த பல பெயர்களைச் சிறப்பாகப் பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாட வல்லவர்களுக்கு, உலகில் எந்நாளும் வினைகள் சாராது. பிற்றைக் காலங்களில் தேவர் உலகில் விளங்கித் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

64. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

690. அறையார்புனலு மாமலரும்
ஆடரவார் சடைமேல்
குறையார் மதியும் சூடிமாதோர்
கூறுடையான் இடமாம்
முறையார் முடிசேர் தென்னர்சேரர்
சோழர்கள் தாம் வணங்கும்
திறையார் ஒளிசேர் செய்மை ஓங்கும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பரம்பரையாக வந்துதித்த முடி மன்னர்களாய பாண்டிய வேந்தர்கள், சேர சோழ மன்னர்கள் அனைவரும் வணங்க, கப்பம் செலுத்தும் பொருள்களும் நிலவளமிக்க வயல்களும் பெருகும் தென் திருப்பூவணமானது, கங்கையும் மாமலரும் ஆடும் அரவமும் சடைமேல் திகழ, பிறைச் சந்திரனைச் சூடி மாதொரு பாகனாக விளங்கும் ஈசனார் இடமாகும்.

691. மருவார் மதில்மூன்று ஒன்ற எய்து
மாமலையான் மடந்தை
ஒருபால் பாகிமாகச் செய்த
உம்பர்பிரான் அவர்ஊர்
கருவார்சாலி ஆலை மல்கிக்
கழல் மன்னர் காத்தளித்த
திருவான் மலிந்த சேடர்வாழும்
தென் திருப் பூவணமே.

தெளிவுரை : சாலி நெல்மணிகள் வளமாகத் திகழுமாறு வீரக் கழல் அணிந்த மன்னர்கள் பாதுகாத்து வரவும், திருத்தக்க செல்வம் மலிந்த பெருமை மிக்கவர்கள் வாழும் தென் திருப்பூவணமானது, பகைவரின் மூன்று மதில்களையும் ஒரே நேரத்தில் எரித்து, மலையரசன் மகளாகிய பார்வதியை ஒரு பாகமாகச் செய்த தேவர் தலைவனுடைய ஊராகும்.

692. போரார் மதமா உரிவை போர்த்துப்
பொடியணி மேனியனாய்க்
காரார்கடலின் நஞ்சம் உண்ட
கண்ணுதல் விண்ணவன்ஊர்
பாரார்வைகைப் புனல்வாய் பரப்பிப்
பன்மணி பொன் கொழித்துச்
சீரார் வாரி சேரநின்ற
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பூமியில் பொலியும் வைகைக் கரையில் பொன்னும் மணிகளும் கொழிக்கச் செம்மையான நீர்வளம் பொருந்தி விளங்கும் தென் திருப்பூவணமானது, போர்முகத்து மத யானையின் தோலை உரித்துப் போர்த்துத் திருநீற்று மேனியனாய்க் கடல் நஞ்சுண்ட கண்ணுதல் மேவும், தேவனுடைய ஊர் ஆகும்.

693. கடியார் அலங்கல் கொன்றைசூடிக்
காதிலொர் வார் குழையன்
கொடியார் வெள்ளை ஏறுஉகந்த
கோவணவன் னிடமாம்
படியார்கூடி நீடி யோங்கும்
பல்புக ழாற் பரவச்
செடியார் வைகை சூழநின்ற
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : உலகத்தவர் ஒருங்குகூடி நிலைத்து, ஓங்கி நிற்கும் புகழ் விளங்கப் புதர்கள் போன்று செடிகள் மண்டிக் கிடக்கும் வைகைக் கரையில் இருக்கும் தென் திருப்பூவணமானது, மணம் கமழும் கொன்றை மாலை சூடிக் காதில் வெண்குழை அணிந்து வெண்மையான இடபக் கொடி விரும்பிய, கோவணம் அணிந்த ஈசன் இடமாகும்.

694. கூரார் வாளி சிலையில் கோத்துக்
கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாள் ஓர்
பால்மகிழ்ந் தான்இடமாம்
ஆராஅன்பில் தென்னர்சேரர்
சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார் வீதி மாடநீடும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பெருகி வளரும் பக்திப் பெருக்குடன் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போற்றி வணங்குகின்ற தேர்கள் செல்லும் மாடவீதிகள் கொண்ட திருப்பூவணமானது, கூர்மையான அம்பினை வில்லில் கோத்து வாங்கி, மூன்று கொடிய மதில்களையுடைய புரங்களின் கூட்டை அழித்த, போர் செய்வதிற் சிறந்த வில்வீரராகிய ஈசர், மென்மையான இயல்பினை உடையவளாகிய உமாதேவியை ஒரு பக்கம் இருத்தி மகிழும் இடமாகும்.

695. நன்று தீதுஎன்று ஒன்று இலாத
நான் மறையோன் கழலே
சென்று பேணி யேத்த நின்ற
தேவர்பிரான் இடமாம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு
குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும்
தென் திருப் பூவணமே.

தெளிவுரை : குன்றுகளில் தவழ்ந்தும் ஓங்கிப் பெருகும் குளிர்ச் சோலைகளில் விளங்கும் மலர்கள் மீதும் பொருந்தி, மருந்தும் மணமும் பெருக வரும் தென்றல் காற்று வீசும் முற்றங்களையுடைய பூவணமாவது, எதனாலும் நன்மையோ அன்றித் தீமையோ, அடையாதவனாய், நான்மறையோனாய்த் தேவர் தலைவனாய், அவன் கழலையே யாவரும் ஏத்தக் கூடியதாய் உள்ள இடம் ஆகும்.

696. பைவாய் அரவம் அரையில்சாத்திப்
பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய் மேனி நீறுபூசி
ஏறுகந்தான் இடமாம்
கைவாழ் வளையார் மைந்தரோடும்
கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல்ஓவாத்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : கை வளையல்கள் அணிந்த மகளிர் தம் கணவன்மார்களுடன் மகிழ்வு எய்தியும், செய்யும் தொழிலின் நாட்டத்தால் பாடல் இசைத்துப் பணி செய்யும் தன்மை குறையாது, எப்போதும் மேவும் திருப்பூவணமானது, படம் எடுத்து ஆடும் அரவத்தை அரையில் கட்டிப், பூதங்கள் போற்றிப் பாட, மெய்ம்மை வழியாய் விளங்கும் திருமேனியில் நீறு பூசி, ஏற்றினை வாகனமாகக் கொண்டவன் இடமாகும்.

697. மாட வீதி மன்னிலங்கை
மன்னனை மாண் பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள்
கொள்கையினார்க்கு இடமாம்
பாடலோடும் ஆடல் ஓங்கிப்
பன்மணி பொன்கொழித்து
ஓடி நீரால் வைகை சூழும்
உயர்திருப் பூவணமே.

தெளிவுரை : பக்திப் பெருக்குடன் கூடிய பாடலும் ஆடலும் விளங்கவும், பலவிதமான உயர்ந்த மணிகளும் பொன்னும் கொழித்துப் பெருகி, வைகையின் நீரால் சூழ்ந்த திருப்பூவணமானது, மாட வீதிகளையுடைய இலங்கையின் மன்னனுடைய மாண்பினை அழித்துப் பின்னர் அவன் மனம் பொருந்திக் கூட , வெற்றி தரும் வாளைக் கொடுத்த பண்புடைய ஈசனார்க்கு இடமாகும்.

698. பொய்யாவேத நாவினானும்
பூமகள் காதலனும்
கையால் தொழுது கழல்கள் போற்றக்
கனல்எரி யானவன்ஊர்
மையார் பொழிலின் வண்டுபாட
வைகை மணிகொழித்துச்
செய்யார் கமலம் தேனரும்பும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பசுமையான பொழிலில் வண்டுகள் இசைத்து ரீங்காரம் செய்ய, வைகை நதியானது மணிகளைக் கொழிக்கச் சிறப்பான நீர்வளம் நிறைந்த வயல்களில் தாமரை மலரில் தேன் துளிர்க்கும் பூவணமானது, பொய்ம்மை யடையாத வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும், கையால் தொழுது போற்றித் துதிக்கச் சோதிப் பிழம்பாகத் தோன்றிக் காட்சி நல்கிய ஈசனார் ஊராகும்.

699. அலையார்புனலை நீத்தவரும்
தேரரும் அன்பு செய்யா
நிலையா வண்ண மாயம் வைத்த
நின்மலன்றன் னிடமாம்
மலைபோல் துன்னி வெற்றியோங்கு
மாளிகை சூழ்ந்து அயலே
சிலை ஆர்புரிசை பரிசு பண்ணும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : மலை போன்று உயர்ந்த மாட மாளிகைகள் வெற்றிவாகை சூடியதைப் போன்று பொலிவடைந்து இருக்க, உறுதியான மலை போன்று மதில்கள் சூழ்ந்த பயன்தரும் பூவணமானது, நீராடலை விடுத்தவரும், பௌத்தரும், அன்பு செய்யாதவாறு மாயையைத் தோற்றுவித்த நின்மலனாகிய ஈசனின் இடமாகும்.

700. திண்ணார் புரிசை மாடம் ஓங்கும்
தென்திருப் பூவணத்துப்
பெண்ணார் மேனி எம்மிறையைப்
பேரியலின் தமிழால்
நண்ணார் உட்கக் காழிமல்கு
ஞானசம் பந்தன் சொன்ன
பண்ணார் பாடல் பத்தும் வல்லார்
பயில்வது வாளிடையே

தெளிவுரை : வலிமையான மதில்களும் மாட மாளிகைகளும் ஓங்கும் பூவணத்தில், உமா தேவியைப் பாகமாக உடைய எம் இறையைப் பெருமைமிக்க இயல்பினதாகிய தமிழ் மொழியால், பகைவர்கள் அச்சம் பெறும் காழியில் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானுலகில் விரும்பித் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

65. காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் (அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

701. அடையார்தம் புரங்கள் மூன்றும்
ஆரழலில் அழந்த
விடையார் மேனி யராய்ச் சீறும்
வித்தகர் மேய இடம்
கடைஆர் மாட நீடிஎங்கும்
கங்குல் புறம்தடவப்
படைஆர் புரிசைப் பட்டினஞ்சேர்ப்
பல்லவ னீச் சரமே.

தெளிவுரை : அடைக்கலம் புகுந்து, பணியாத முப்புரத்து அசுரர்களை நெருப்பால் அழித்துத் தீக்கு இரையாக்கி, சீற்றம் மிக்க இடபத்தை வாகனமாக உடைய திருமேனியராய், எல்லாம் வல்ல வித்தகராய் விளங்கும் ஈசன் மேவும் இடமானது, மதில்களையுடைய மாட மாளிகைகள் வானத்தைத் தொடும் அளவு உயர்ந்து பொலியும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்வனீச்சரம் ஆகும்.

702. எண்ணார் எயில்கண் மூன்றும் சீறும்
எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற
கண்ணுதல் நண்ணும் இடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு
வைகலும் தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : நன்மையை எண்ணிப் பாராத பகைவர்களின் மூன்று கோட்டைகளையும் சீற்றங் கொண்டு அழித்த எந்தை பிரான், தேவர்களைக் கண் போன்று காக்கின்ற கண்ணுதல். அப்பெருமான் நண்ணி விளங்கும் இடமானது, மண்ணுலகில் உள்ள சோலைகளில் வண்டுகள் தேன் அருந்தி எஞ்ஞானறும் மகிழ்ந்து பண் இசைக்கும் காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

703. மங்கை அங்கோர் பாகமாக
வாள்நிலவு ஆர் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த
கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம்சேர் புணரிஓத
மீதுயர் பொய் கையின்மேல்
பங்கயம்சேர் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : உமாதேவி ஒரு பாகத்தில் பொருந்தி விளங்க, ஒளி பொருந்திய நிலவு நீண்ட சடையில் இருக்க, அதன்மேல் கங்கையை எப்போதும் திகழுமாறு வைத்த கள்வனாகிய ஈசன் இருக்கும் இடம், ஆழ்கடலின் நீர் ஓதம் கொள்ளவும், பொய்கையில் தாமரை மலர்கள் விளங்கவும் உள்ள காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

704. தார்ஆர் கொன்றை பொன்தயங்கச்
சாத்திய மார்பகலம்
நீர்ஆர் நீறு சாந்தம் வைத்த
நின்மலன் மன்னும் இடம்
போர்ஆர் வேற்கண் மாதர்மைந்தர்
புக்கிசை பாடலினால்
பார்ஆர்கின்ற பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : கொன்றை மலர்மாலை மார்பில் தவழ்ந்து பொன்னொளியை நல்க, இனிமை பொருந்திய திருவெண்ணீறு, சந்தனம் ஆகியன உடன் பொருந்தக் கமழ வைத்துள்ள நின்மலனாகிய ஈசன் விளங்கும் இடமாவது, பகைவரை அழிக்கும் வேல் போன்ற கண்களையுடைய மாதர்கள் தம் கணவருடன் சேர்ந்து இசைப் பாடல்களைப் பார் மணக்கப் பாடும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் ஆகும்.

705. மைசேர்கண்டர் அண்டவாணர்
வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியன் அடியார்ஏத்த
மேவி இருந் தஇடம்
கைசேர் வளையார் விழைவினோடு
காதன்மை யால் கழலே
பைசேர் அரவார் அல்குலார்சேர்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : கரிய வண்ணமுடைய நஞ்சினைக் கொண்ட கண்டத்தை உடையவராய், அண்டங்கள் யாவற்றிலும் விளங்குபராய், வானவர்கள் துதித்துப் போற்றத் திருமேனியில் திருவெண்ணீற்றைத் தரித்தவராய், அடியவர்கள் ஏத்தி வணங்க, மேவும் ஈசன் விளங்கும் இடமாவது, கைகளில் வளையல் அணிந்த மகளிர் விருப்பத்தோடு இறைவன் கழல் பணிந்து வாழும் பல்லவனீச்சரம் ஆகும்.

706. குழலினோசை வீணை மொந்தை
கொட்ட முழவதிரக்
கழலினோசை ஆர்க்க ஆடும்
கடவுள் இருந்த இடம்
சுழியில்ஆரும் கடலில்ஓதம்
தெண் திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரின்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : புல்லாங்குழல், வீணை ஆகிய இசைக் கருவிகளும், மொந்தை, கொட்டு வாத்தியம், முழவு ஆகிய வாத்தியங்களும் இயம்ப, காலில் சலங்கை அணிந்து, அவ்வொலிகள் யாவும் இணைந்து பொருந்த, நடம் புரியும் கடவுளாகிய ஈசன் விளங்கும் இடமாவது நீர்ச்சுழிகளையுடைய கடலின் ஓதம் அலைகளை வாரி எறியவும், பழிப்பு அற்ற நற்குணத்தை உடையவர்கள் விளங்கவும் திகழும் பூம்புகாரின் பல்லவனீச்சரமே.

707. வெந்தலாய வேந்தன் வேள்வி
வேர்அறச் சாடி விண்ணோர்
வந்துஎலாமுன் பேண நின்ற
மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும்
புன்னை வளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : தெய்வத்தன்மை வெந்து மாயுமாறு நிகழ்த்திய தக்கன் வேள்வியை மூவரோடு அழித்துத் தேவர்கள் எல்லாம் தொழுமாறு நின்று விளங்கும் இடமாவது, மலர்ந்து விரிந்து மயலைத் தரவல்ல மல்லிகையும் புன்னை மற்றும் குரவமும், பந்தல் போன்று படரும் காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் ஆகும்.

708. தேர்அரக்கன் மால்வரையைத்
தெற்றி எடுக்க அவன்
தார்அரக்கும் திண்முடிகள்
ஊன்றிய சங்கரன்ஊர்
கார்அரக்கும் கடல்கிளர்ந்த
கால மெலாம் உணரப்
பார்அரக்கம் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : தேரை உடைய அரக்கன் பெருமை பொருந்திய கயிலையைத் தான் செல்லும் பாதைக்குத் தடையாக உள்ளதென எண்ணிப் பெயர்த்து எடுக்க, அவனுடைய மாலை பதிந்த திண்மையான முடிகள் அழுந்துமாறு ஊன்றிய சங்கரனுடைய ஊரானது, கடலானது கிளர்ந்து எழுந்த காலத்திலும் விளங்கி, உலக மக்கள் உருத்திராக்கம் அணிந்து நல்லொழுக்கம் பயிலும் நெறியுடைய புகாரின் பல்லவனீச்சரமே ஆகும்.

709. அங்கம்ஆறும் வேத நான்கும்
ஓதும் அயன் நெடுமால்
தம்கணாலும் நேடநின்ற
சங்கரன் தங்கு மிடம்
வங்கும்ஆரும் முத்தம்இப்பி
வார்கடல் ஊடு அலைப்பப்
பங்கம்இல்லார் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : நான்கு வேதங்களும் அதனுடைய ஆறு அங்கங்களும் ஓதும் அயனும், திருமாலும், தமது கண்களாலும் தேட நின்ற சங்கரன் தங்கி இருக்கும் இடமாவது, மரக்கலங்கள் செல்லும் கடலில் உள்ள சிப்பிகள் முத்துக்களை நல்க, பங்கம் இல்லாத பெருமக்கள் பயிலும் பூம்புகாரின் பல்லவனீச்சரமே யாகும்.

710. உண்டு உடுக்கை இன்றியே நின்று
ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார்
கண்டு அறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை
சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : உடுக்கை இன்றி உணவினைப் பெரிதாகக் கருதுபவர்களும், உடுக்கையை மெய்யில் போர்த்து அணிந்தவர்களும் ஆகிய புறநெறியாளர், ஈசனையும் அவன் அருளையும் கண்டு மகிழ்ந்து தரிசிக்க இயலாத இடமானது, தண்டும், உடுக்கை என்னும் வாத்தியமும், தாளம், தாக்கை முதலான வாத்தியங்களும் பயில, முன் வினைப் பயனால் உண்டாகும் துன்பம் தீர அருள் நல்கும் பல்லவனீச்சரம் ஆகும்.

711. பத்தர் ஏத்தும் பட்டினத்துப்
பல்லவனீச்சரத்து எம்
அத்தன் தன்னை அணி கொள்காழி
ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேரச் செப்பு மாந்தர்
தீவினை நோய் இலராய்
ஒத்துஅமைந்த உம்பர்வானில்
உயர்வினொடு ஓங்குவரே.

தெளிவுரை : பக்தர்கள் எல்லோரும் தொழுது ஏத்தும் காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் மேவும் எம் அன்பிற்குரிய ஈசனைப் போற்றிக் காழியின் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தைச் சித்தத்தில் பதித்துச் சொல்ல வல்லவர்கள், தீவினையாகிய நோய் அற்றவராய், தேவர் உலகில் ஒத்த உரிமை பூண்டு உயர்வுடன் ஓங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

66. திருச்சண்பை நகர் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

712. பங்கம் ஏறு மதிசேர் சடையார்
விடையார் பல வேதம்
அங்கம் ஆறு மறை நான்கவையும்
ஆளார் மீன்ஆரும்
வங்க மேவு கடல்வாழ் பரதர்
மனைக்கே நுனைமூக்கின்
சங்கம்ஏறி முத்தம் ஈனும்
சண்பை நகராரே.

தெளிவுரை : குறைவு உடைய சந்திரனைத் தரித்துச் சடைமுடியும் இடப வாகனமும் உடையவராய், நான் மறையாகவும் அதன் ஆறு அங்கமும் ஆகியவராய் விளங்கும் ஈசன், பல் வண்ணங்களை உடைய மீன்கள் திகழ, தோணிகள் மேவ, கடற்புரத்தில் வாழும் பரதர்கள் மனைக்குக் கூரிய மூக்குகளை உடைய சங்குப் பூச்சிகள் ஏறி முத்துக்களை ஈனுகின்ற சண்பை நகரத்திற்கு உரியவராவர்.

713. சூதகம் சேர் கொங்கையாள் ஓர்
பங்கர் சுடர்க் கமலப்
போதகம் சேர் புண்ணியனார்
பூத கண நாதர்
மேதகம் சேர் மேகம் அந்தண்
சோலையில் விண்ணார்ந்த
சாதகம் சேர் பானை நீர்சேர்
சண்பை நகராரே.

தெளிவுரை : தீண்டரிய தனங்கள் கொண்ட உமாதேவியை ஒரு பங்குடைய ஈசனார், ஒளிர்விடும் கமல மலரில் விளங்கும் புண்ணியனார்; பூத கணங்களுக்கெல்லாம் நாதனார். அவர், மேன்மையான மேகம் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க சோலை விண்ணார்ந்து விளங்கத் தேன், கமுகு முதலான மரங்களின் பாளைகளில் தேன் சொரியும் சண்பை நகரினர்.

714. மகரத்துஆடு கொடியோன்உடலம்
பொடிசெய்தவ னுடைய
நிகர்ஒப்பில்லாத தேவிக்குஅருள்செய்
நீலகண் டனார்
பகரத் தாரா அன்னம் பகன்றில்
பாதம் பணிந்து ஏத்தத்
தகரப் புன்னை தாழைப்பொழில்சேர்
சண்பை நகராரே.

தெளிவுரை : மன்மதனை எரித்துச் சாம்பலாக்கி, அவனுடைய தேவியாகிய இரதிக்கு மட்டும் தெரியுமாறு, அருள் செய்த நீலகண்டனாராகிய ஈசன், தாரா, அன்னும் முதலான பறவைகள் ஏத்திப் பணியப், புன்னை, தாழைப் பொழில்கள் சேர் சண்பை நகருடையவர்.

715. மொய்வல்லசுரர் தேவர்கடைந்த
முழுநஞ்சது உண்ட
தெய்வர்செய்ய உருவர்கரிய
கண்டர்திகழ் சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின்
உருடயர் காதலால்
சைவர்பாசு பதர்கள் வணங்கும்
சண்பை நகராரே.

தெளிவுரை : வலிமையான அசுரர்களும், தேவர்களும் பாற்கடலில் அமுதம் நாடிக் கடைந்தபோது, முதற்கண் தோன்றிய நஞ்சு முழுவதும் உண்ட தெய்வநாயகர், சிவந்த வடிவினர்; கரிய கண்டத்தை உடையவர்; திகழும் மழுப்படையைக் கரத்தில் உடையவர்; வாள் படை உடையவர்; யானையின் தோலை உரித்தவர்; அன்புடன் பழகுவதில் சைவர்; பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகரார் ஆவர்.

716. கலம்ஆர் கடலுள் விடம்உண்டு அமரர்க்கு
அமுதம் அருள் செய்த
குலம்ஆர் கயிலைக் குன்றது உடைய
கொல்லை எருது ஏறி
நலமார் வெள்ளை நாளி கேரம்
விரியா நறும்பானை
சலம்ஆர் கரியின் மருப்புக்காட்டும்
சண்பை நகராரே.

தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் ஏற்று உண்டு, தேவர்கள் அமுதம் அருந்துமாறு அருள் செய்த, கயிலைமலை நாயகர் இடபவாகனத்தில் அமரும் ஈசர், அப்பெருமான், தென்னை மரத்தின், விரியாத பாளையானது, யானையின் வெண்மையான கொம்பினை ஒத்து விளங்கும் எழில் கொண்ட சண்பை நகரத்தினர்.

717. மாகரம்சேர் அத்தியின் தோல்
போர்த்து மெய்ம் மாலான்
சூகரம்சேர் எயிறு பூண்ட
சோதியன் மேதக்க
ஆகரமகசேர் இப்பி முத்தை
அந்தண் வயலுக்கே
சாகரம்சேர் திரைகள் உந்தும்
சண்பை நகராரே.

தெளிவுரை : சிறப்பான நீண்ட துதிக்கையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருமால் பன்றி அவதாரம் மேற்கொண்ட ஞான்று, வெற்றிக் களிப்பில் திரிய, அவ்வாற்றலை அடக்கும் விதத்தில் அதன் பல்லை உகுத்து அணியாகப் பூண்ட சோதி வடிவினராய் விளங்குபவர் ஈசன். அவர், முத்துக்களின் பிறப்பிடமாகிய, கடலில் விளங்கும் சிப்பிகளைத், தம் அலைகளால் அழகிய வயலுக்கு உந்திச் செலுத்தும் சிறப்பினையுடைய சண்பை நகரினர் ஆவர்.

718. இருளைப் புரையு நிறத்தில் அரக்கன்
தனைஈடு அழிவித்து
அருளைச் செய்யும் அம்மான் ஏரார்
அந்தண் கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி அளக்கர்
வரையார் திரைக்கையால்
தரளத் தோடு பவளம் ஈனும்
சண்பை நகராரே.

தெளிவுரை : இருள் போன்ற கரிய நிறத்தினனாகிய இராவணனுடைய பெருமையைக் குலைத்துப் பின்னர் அவ் அரக்கன் பணிந்து வேண்ட அருள் செய்த அழகிய தலைவன், ஈசன். அப்பெருமான், வாசனை பொருந்திய மலர்களில் மருள் எனும் இசையை வண்டுகள் பாடவும், கடல் தனது உயர்ந்து விளங்கும் அலைகளாகிய கைகளால் முத்தும் பவளமும் வழங்கும் சண்பை நகரத்தினர்.

719. மண்தான் முழுதும் உண்டமாலும்
மலர்மிசை மேல்அயனும்
எண்தான் அறியா வண்ணநின்ற
இறைவன் மறையோதி
தண்டுஆர் குவளைக் கள்ளருந்தித்
தாமரைத் தாதின்மேல்
பண்தான் கொண்டு வண்டு பாடும்
சண்பை நகராரே.

தெளிவுரை : உலகத்தை முழுதும் உண்டு பாதுகாத்துப் பின்னர் வெளியே விடுத்த திருமாலும், மலர்மேல் உறைபவனாகிய பிரமனும், என்னளவும் அறியாதவாறு விளங்கி நின்ற இறைவன், ஈசன். வேதங்களால் போற்றிப் புகழப்பெற்றும் அப்பெருமான், வண்டானது குவளை மலரில் உள்ள தேனை அருந்தித் தாமரை மலரின்மேல் வட்டமிட்டு இசை பாடும் சண்பை நகரத்தவர் ஆவார்.

720.போதியாரும் பிண்டியாரும்
புகழ்அல சொன்னாலும்
நீதியாகக் கொண்டு அங்கு அருளு(ம்)
நின்மலன் இருநான்கின்
மாதிசித்தர் மாமறையின்
மன்னிய தொல்நூலர்
சாதிகீத வர்த்தமானர்
சண்பை நகராரே.

தெளிவுரை : பௌத்தர்களும், சமணர்களும் புகழற்ற சொற்களைக் கூறினாலும், அவற்றைப் புகழ்ச் சொல்லாக ஏற்று நடுநிலை பேணி அருள் நல்குபவர் ஈசன். அப்பெருமான், அட்டமாசித்திகளில் வல்லவர்; வேத விற்பன்னர்; சாதகம் செய்யப்படும் இசைக் கீதங்களில் மிக்கவர்; சண்பை நகரில் விளங்குபவர்.

721. வந்தியோடு பூசையல்லாப்
போழ்தின் மறைபேசிச்
சந்திபோதிற் சமாதி செய்யும்
சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னைஅழகார்
ஞானம் பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார்
சிவகதி சேர்வாரே.

தெளிவுரை : வந்தனை செய்து வழிபட்டுப் பூசனை ஆற்றும் உமாதேவியுடன் வேதத்தின் சாரங்களை உபதேசித்து, ஏனைய காலை, மாலை முதலான சந்திக் காலத்தில் சமாதி நிலை கொண்டு அடியவர்களின் பக்த கோடிகளின் பூசைகளை ஏற்று விளங்கும் சண்பை நகர் மேய செவ்வண்ணனாகிய ஈசனை, ஞானசம்பந்தன் ஏத்திப்பாடிய அழகு பொருந்திய இச்சொல் மாலையைச் சிந்தித்துப் போற்றிப் பாடவல்லவர்கள் சிவகதி அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

67. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

722. வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு
வெள்ளை எருதேறிப்
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரி தோலார்
நாதா எனவு(ம்) நக்கா எனவு(ம்)
நம்பா எம் நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார்
பழன நகராரே.

தெளிவுரை : வேதத்தை ஓதி, முப்புரி நூல் தரித்து வெண்மையான இடபத்தில் அமர்ந்து, பூத கணங்கள் புடை சூழ, புலியின் தோலை ஆடையாக உடுத்தி, பொலியும் சிறப்புடன் காட்சி நல்கும் ஈசன், நாதா ! தொழுபவர்களின் பாவம் தீர்ப்பவர். அவர் பழன நகரில் விளங்குபவர்.

723. கண்மேல் கண்ணும் சடைமேல் பிறையும்
உடையார் காலனைப்
புண்ணாறுதிரம் எதிர்ஆறுஓடப்
பொன்றப்புறம் தாளால்
எண்ணாதுஉதைத்த எந்தை பெருமான்
இமவான் மகளோடும்
பண்ணார் களிவண்டு அறைபூஞ்சோலைப்
பழன நகராரே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணும் சடையின்மேல் பிறைச் சந்திரனும் உடைய ஈசன், மார்க்கண்டேயருக்கு உதவும் வகையில், காலனைப் புண்படுத்தி உதிரம் வெளிப்பட்டு ஆறாக ஓடுமாறு, புறந்தாளால், அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் உதைத்தவர். அப்பெருமான், உமாதேவியோடு, வண்டுகள் மகிழ்வுடன் பண்ணிசைக்கும் பழன நகரில் விளங்குபவர்.

724. பிறையும் புனலும் சடைமேல் உடையார்
பறைபோல் விழிகட்பேய்
உறையு மயானம் இடமா உடையார்
உலகர் தலைமகன்
அறையு மலர்கொண்டு அடியார் பரவி
ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப்
பழன நகராரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும், கங்கையும் சடைமேல் உடையவர்; பறை போன்ற அகன்ற விழிகள் உடைய போய் உறையும் மயானத்தை இடமாக உடையவர்; உலகில் தேன் துளிர்க்கும் மேலான மலர்கள் கொண்டு தூவி, அடியவர்கள் பாடியும் ஆடியும் மகிழ, ஒலிக்கும் சங்கும், நைவேத்தியப் பிரசாதங்களும் எஞ்ஞான்றும் மல்கிப் பெருகும் பழன நகரில் விளங்குபவர், ஈசன்.

725. உரமன்னுயர் கோட்டு உலறுகூகை
அலறு மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி
எழிலார் அவர் மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற
பெம்மான் எமையாளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன்
பழன நகராரே.

தெளிவுரை : வலிமையான உலர்ந்து போன் கிளைகளில் கோட்டான்கள் அலறும் மயனாத்தில், இரவில் பூத கணங்கள்  பாடியும் ஆடியும் களிக்க, பிரம கபாலம் ஏந்தி உணவு கொண்ட பெருமான், எமை ஆள்கின்ற பரமன்; கடவுள்; பரமேஸ்வரன். அவர் பழன நகரில் வீற்றிருப்பவர்.

726. குலவெஞ்சிலையான் மதில் மூன்றெரித்த
கொல் ஏறுடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும்
கடல்போல் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள்
குதிகொண்டு எதிர் உந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும்
பழன நகராரே.

தெளிவுரை : மலைகளில் சிறப்புடைய மேருவை வில்லாக உடையவன், மூன்று மதில்களை எதிர்த்து அழித்தவன், இடபவாகனம் உடைய அண்ணலாகிய ஈசன். அவர், தோகையுடைய மயிலும் குயிலும் விளங்கும் நீர்வளம் மிக்க விரிந்த காவிரியின் கரைகளில், மேலான அழகிய மாங்கனிகளும், பலாப்பழங்களும் அலைகளால் கொண்டு சேர்க்கும் பழன நகரில் விளங்குபவர்.

727. வீளைக்குரலும் விளிச் சங்கொலியும்
விழவின்னொலி ஓவா
மூளைத்தலை கொண்டு அடியார் ஏத்தப்
பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலைஆர் தெங்கில்
குலை ஆர் வாழையின்
பாளைக் கமுகின் பழம்வீழ்சோலைப்
பழன நகராரே.

தெளிவுரை : பேரிரைச்சலும், சங்கின் ஒலியும், திருவிழாக்களின் ஆராவாரமும் ஓயாத வகையில், சேறுகள் ஈரம் பொருந்தி ஈளை கொண்டு விளங்கும் ஆற்றுப் படுகையில், தென்னை, வாழை, கமுகு ஆகியவற்றின் குலைகள் வீழும் சோலைகள் உடையது பழனநகர். ஆங்குப் பிரம கபாலம் ஏந்தி, அடியவர்கள் போற்றி நிற்க, யாராலும் வெல்ல முடியாத மதில்களை எரித்த ஈசன் விளங்குகின்றார்.

728. பொய்யமொழியார் முறையால் ஏத்திப்
புகழ்வார் திருமேனி
செய்யார்கரிய மிடற்றார் வெண்ணூல்
சேர்ந்த அகலத்தார்
கைஆடலினார் புனலாய்மல்கு
சடைமேல் பிறை யோடும்
பையாடு அரவம் உடனே வைத்தார்
பழன நகராரே.

தெளிவுரை : பொய்ம்மை நயவாதவர்களாகிய அடியவர்கள் பூசா விதிப்படி ஈசனை ஏத்திப் புகழவும், சிவந்த திருமேனியில் கரிய கண்டத்தவராகிய அவர், முப்புரிநூல் விரிந்த மார்பில் விளங்க, கைகளை வீசி ஆட, கங்கை சடையில் மல்க, அதன் மீது பிறைச் சந்திரன் திகழ, படம் திகழும் அரவத்தை உடன் வைத்தவர் ஆவார். அவர் பழன நகரில் வீற்றிருப்பவர்.

729. மஞ்சோங்குஉயரம் உடையான் மலையை
மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறுநான்கும்
அடர ஊன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறு அணிந்த
நம்பால் வம்பு ஆரும்
பைந்தா மரைகள் கழனிசூழ்ந்த
பழன நகராரே.

தெளிவுரை : ஆகாயத்தை ஓங்கி உயரமாய் விளங்கும் கயிலை மலையை இயல்பிற்கு மாறாக எடுத்தவனுடைய இருபது தோள்கள் அழியுமாறு விரலால் ஊன்றிய ஈசனார், திருநீறு அணிந்து மணம் மிக்க தாமரைகள், கழனிகள் சூழ்ந்த பழன நகரில் வீற்றிருப்பவர். (அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும் (5+5+6+4=20) இருபது).

730. கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை
கமழ்புன் சடையார் விண்
முடியாப் படிமூ வடியால் உலக
முழுதும் தாவிய
நெடியான் நீள்தா மரைமேல் அயனு(ம்)
நேடிக் காணாத
படியார் பொடியாடு அகலம்உடையார்
பழன நகராரே.

தெளிவுரை : வண்டுகள் சூழும் மணம் பொருந்திய கொன்றை மாலை கமழ் புன்சடை யுடைய ஈசன், வானத்தை உச்சியாகக் கொண்ட உலகத்தை மூவடியால் தாவி அளந்த திருமால் மற்றும் தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமன் ஆகியோர் தேடியும் காணாதபடி திருநீறு பூசியவராய், விரிந்து பெரிதாய் நீண்டார். அவர் பழன நகரில் வீற்றிருப்பவர்.

731. கண்தான் கழுவா முன்னே ஓடிக்
கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும்சிறுசொல்
ஓரார் பாராட்ட
வண்தா மரையில் மலர்மேல் நறவ
மதுவாய் மிகவுண்டு
பண்தான் கெழும வண்டியாழ் செய்யும்
பழன நகராரே.

தெளிவுரை : உடல் தூய்மை முதலான புறத் தூய்மை செய்து கொள்ளாதவர்களாய் உணவைக் கொள்பவர்களுடைய உரைகள் சிறுமையானவை யாகும். அவற்றை ஏற்காது, அடியவர்கள் பாராட்டுமாறு, தாமரை மலரில் உள்ள தேனை வண்டுகள் மாந்தி யாழின் இசைபாடும் பழனநகரில் ஈசன் வீற்றிருக்கின்றார்.

732. வேய்முத்து ஓங்கி விரைமுன் பரக்கும்
வேணுபுரம் தன்னுள்
நாஉய்த்து அனைய திறலான்மிக்க
ஞானசம் பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும்
பெருமான் பழனத்தை
வாயிற் பொலிந்த மாலை பத்தும்
வல்லார் நல்லாரே.

தெளிவுரை : மூங்கில் முதிர்ந்து முத்துக்கள் பெருகிச் சேரும் வேணுபுரத்தில், உய்யும்படியான உறுதிபயக்கும் சொல்திறன் மிக்க ஞானசம்பந்தன், பேசற்கு இனிய பாடலாய்ப் பழனத்தில் வீற்றிருக்கும் பெருமானைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லார்கள் நல்லவராய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

68. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

733. பொடியகாள் உருவர் புலியின்அதளர்
புரிநூல் திகழ் மார்பில்
கடிகொள் கொன்றை கலந்த நீற்றர்
கறைசேர் கண்டத்தர்
இடயகுரலால் இரியுமடங்கல்
தொடங்கு முனைச்சாரல்
கடிய விடைமேல் கொடியொன்றுடையார்
கயிலை மலையாரே.

தெளிவுரை : ஈசன் திருநீற்று மேனியர்; புலியின் தோலை உடையாகக் கொண்டவர்; முப்புரிநூல் அணிந்த மார்பில் மணம் பொருந்திய கொன்றை மலர் சூடித் திருநீறு தரித்தவர்; கறை பதிந்த கண்டத்தை உடையவர்; இடி முழக்கத்தைக் கேட்ட சிங்கம் அஞ்சி நடுங்கும் சாரலில் இடபக் கொடியுடையவர். அவர் கயிலை மலை நாயகர்.

734. புரிகொள் சடையர் அடியர்க்கு எளியார்
கிளிசேர்மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த
தேவர்பெரு மானார்
பரிய களிற்றை அரவு விழுங்கி
மழுங்க இருள்கூர்ந்த
கரிய மிடற்றர் செய்யமேனிக்
கயிலை மலையாரே.

தெளிவுரை : சடையுடைய ஈசன், அடியவர்க்கு எளிமையானவர்; உமாதேவியை, யாவரும் காணுமாறு ஒரு பாகத்தில் வைத்து மகிழந்த தேவர் பெருமான்; பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்க இருள் பரவுதலைப் போன்ற கரிய கண்டத்தை உடையவர். அவர் சிவந்த திருமேனியுடைய கயிலைமலை நாதர்.

735. மாவின் உரிவை மங்கைவெருவ
மூடிமுடி தன்மேல்
மேவு மதியு(ம்) நதியம் வைத்த
இறைவர் கழல் உன்னும்
தேவர் தேவர் திரிசூ லத்தர்
திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் கனைசூழ்
கயிலை மலையாரே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துச் சடைமுடியில், பிறைச் சந்திரனும், கங்கை நதியும் வைத்த இறைவர், எல்லோரும் அவர் திருவடியைத் தியானிக்க விளங்கும் திரிசூலத்தினர். அவர் வானரங்கள் சேர் சோலைகளும், அஞ்சத்தக்க கற்சுனைகளும் சூழ் கயிலைமலையார்.

736. முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட
முதல்வர் மதனன்றன்
தென்நீர்உருவம் அழியத்திருக்கண்
சிவந்த நுதலினார்
மன்னீர் மடுவும் படுகல் லறையின்
உழுவை சினம் கொண்டு
கல்நீர் வரைமேல் இரைமுன் தேடும்
கயிலை மலையாரே.

தெளிவுரை : கடலில் சூழ்ந்த நஞ்சினை உண்ட முதல்வராகிய ஈசன், மன்மதனுடைய அழகிய உருவத்தை அழித்த திருவிழியை உடைய நெற்றியினர். நிலைத்த நீர் நிலையுடைய சுனைகளும் ஆங்கு நிறைந்து உள்ளன. கற் குகைகளில் உள்ள புலி சினம் கொண்டு எழுந்து கல்லூற்றுக் கரையில் நின்று இரைதேடும் அமைப்புடைய கயிலையின் நாதர், ஈசனார்.

737. ஒன்றும் பலவு மாய வேடத்து
ஒருவர் கழல் சேர்வார்
நன்று நினைத்து நாடற்கு உரியார்
கூடித் திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரிதன்
சாரல் நெறி யோடிக்
கன்றும் பிடியும் அடிவாரம் சேர்
கயிலை மலை யாரே.

தெளிவுரை : ஒருவனாகியும் பலவாகியும் விளங்கும் வடிவத்தை யுடைய ஒப்பற்றவராகிய ஈசன், கழலை வணங்குபவர்களும்  பக்தர்களும், பேரின்பத்தை முத்திப்பேற்றை விரும்பும் ஞானிகளும் கூடித்திரண்டு விளங்க, திகைத்த களிறு தன் கன்றுடன் அடிவாரம் சேரும் சிறப்புடைய கயிலை மலையார்.

738. தாதார் கொன்றை தயங்கு முடியர்
முயங்கு மடவாளைப்
போதார் பாக மாகவைத்த
புனிதர் பனிமல்கும்
மூதார் உலகின் முனிவர் உடனாய்
அறநான்கு அருள்செய்த
காதார் குழையர் வேதத்திரளர்
கயிலை மலையாரே.

தெளிவுரை : மகரந்தம் விளங்கும் கொன்றை மலரும், ஒளிரும் சடைமுடியும் கொண்டு, பொருந்திய உமாதேவியை மெல்லிய இடப் பாகத்தில் வைத்த புனிதராகிய ஈசன், முதிர்ச்சி யடைந்த சனகாதி முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனப் பெறும் நான்கு அறங்களையும் அருளிச் செய்த, காதில் குழையும், நாவில் வேதத் திரட்சியும் உடைய கயிலை மலையார் ஆவார்.

739. தொடுத்தார் புரமூன்று எரியச்சிலைமேல்
எரிஒண் பகழியார்
எடுத்தான் திரள்தோள் முடிகள் பத்தும்
இடிய விரல்வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளாக்
குறுகி வரும் கூற்றைக்
கடுத்து ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார்
கயிலை மலையாரே.

தெளிவுரை : முப்புரங்கள் எரியுண்ணுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு, நெருப்பை அம்பாகத் தொடுத்த இறைவன், மலையைப் பெயர்த்த அரக்கனுடைய முடிகளும் திரட்சியான தோள்களும் நொறுங்குமாறு தமது திருப்பாத விரலால் அழுத்தினார். பின்னர், அவ்வரக்கன் இசைத்துப் போற்ற, தெய்வப் படைகளை வழங்கி அருள்புரிய, தன்பால் நண்ணிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் பொருட்டுக் குறுகிவந்த கூற்றுவனை வெகுண்டு, திருப்பாதத்தால் உதைத்தவர் கயிலைமலையார்.

740. ஊணாப் பலிகொண்டு உலகில் ஏற்றார்
இலகு மணி நாகம்
பூண் நாண் ஆரமாகப் பூண்டார்
புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேடஎங்கும்
பிறங்கும் எரியாகிக்
காணா வண்ணம் உயர்ந்தார்போலும்
கயிலை மலையாரே.

தெளிவுரை : பிரம கபாலத்தை ஏந்தி உணவுக்காக, உலகில் பிச்சையேற்ற ஈசன், மாணிக்கக் கற்களையுடைய நாகத்தைப் பூணும் மாலையாகப் பூண்டவர். திருமாலும் பிரமனும் போற்றித் துதிக்காது தேடித் திரியக் காண இயலாது ஒளித்து, பின்னர்ப் பேரொளிப் பிழம்பாகி உயர்ந்தவர் கயிலை மலையாரே.

741. விருதுபகரும் வெஞ்சொல் சமணர்
வஞ்சச் சாக்கியர்
பொருது பகரு(ம்) மொழியைக் கொள்ளார்ஃ
புகழ்வார்க்கு அணியராய்
எருதுஒன்று உகைத்துஇங்கு இடுவார்தம்பால்
இரந்து உண்டு இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார்போலும்
கயிலை மலையாரே.

தெளிவுரை : பட்டங்கள் கொண்டு பெருமை பேசி நிலவும் சமணர் மற்றும் சாக்கியர்கள், விவாதம் செய்து தர்க்கித்துக் கூறும் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர், ஈசன். அப்பெருமான், புகழ்ந்து போற்றும் அன்பர்களுக்கு அண்மையில் இருப்பவராய், இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, பிச்சை இடுபவர்களிடம் இனிதுடன் ஏற்று, உண்டு, தன்னை இச் செயல் குறித்து இகழ்ந்து பேசினாலும் அவற்றை விரும்பி ஏற்று கயிலைமலையில் இருப்பவர்.

742. போர்ஆர் கடலில் புலைசூழ்காழிப்
புகழார் சம்பந்தன்
கார்ஆர் மேகம் குடிகொள் சாரல்
கயிலை மலையார் மேல்
தேரா உரைத்த செஞ்சொல் மாலை
செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள் வானோர் உலகில்
மருவு மனத்தாரே.

தெளிவுரை : அலைகள் மோதுகின்ற கடலின் நீர் சூழ் காழியின் புகழ் மிக்க ஞானசம்பந்தன், கரிய குளிர்ந்த மேகங்கள் தங்கும் சாரலை யுடைய கயிலை மலையார் மேல் தேர்ந்து உரைத்த செஞ்சொல் மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் சொல்கின்ற அடியவர் மேல் பிணிகள் வாரா. வானோர், உலகத்தவர் எவ்வகையில் மகிழ்வுடன் விளங்குகின்றனரோ அவ்வகையில் இன்பம் மருவும் மனத்தினராய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

69. திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)

திருச்சிற்றம்பலம்

743. பூவார் மலர்கொண்டு அடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கு அருள்செய்தார்
தூமா மழைநின்று அதிரவெருவித்
தொறுவின் நிரையோடும்
ஆமா(ம்) பிணைவந்து அணையும் சாரல்
அண்ணாமலை யாரே.

தெளிவுரை : பூவுலகத்தில் உள்ள அடியவர்கள் மலர் கொண்டு தூவித் தொழவும், வானவர்கள் புகழ்ந்து ஏத்தவும், ஈசனார் முப்புரங்களை எரித்த காலத்தில் மூவர்க்கு அருள் செய்தார். இருள் போன்ற புகை சூழ்ந்த மேகம் குமுற மழை பொழிய, வெருவிய ஊர்ப் பசுக் கூட்டங்களும், காட்டுப் பசுக்களும் தமது பிணையுடன் வந்து சேரும் மலைச் சாரலை உடையது அண்ணாமலை. ஆங்கு வீற்றிருப்பவர் அண்ணாமலை நாதர்.

744. மஞ்சைப் போழ்ந்த மதியம்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்கும் அதுவும்
நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார்
இதணம் அது ஏறி
அஞ்சொற் கிளிகள் ஆயோஎன்னும்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : மேகத்தைக் கிழித்து ஊடுருவிச் செல்லும் சந்திரனைச் சூடும் வானோர் பெருமான், நஞ்சினைக் கண்டத்தில் அடக்கிய செயலும் ஒரு தன்மையை ஈட்டது போலும் ! கொடுமைக் குணம் பதிந்த விலங்குகளை வேட்டையாடும் வேடர்கள் வாயிலிருந்து, வெட்டு, குத்து போன்ற சொற்கள் வெளிவருதலை விடுத்துத் தினைப்புனம் காத்தல் பொருட்டு அமைக்கப் பெற்ற காவற் பரணியில் உள்ள மகளிர், அழகாகச் சொற்பயிலும் கிளிகளை விரட்ட, ஆயோ என்று கூறலானார். இச்சொற்கள் ஈசன் நஞ்சு அருந்திய செயல். அமையப் பெற்றது எனும் நயம் தோன்றலாயிற்று. இத்தகைய தன்மையுடையது அண்ணாமலை. அவ் அண்ணாமலைக்கு உரியவர் ஈசன்.

745. ஞானத்திரளாய் நின்ற பெருமான்
நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்கும் அதுவும்
உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரனோடு இனமான் கரடி
இழியும் இரவின் கண்
ஆனைத் திரள்வந்து அணையும்சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : ஈசன் ஞானத்திரட்சியாக விளங்கித் தன்னை வணங்கும் அடியவர்கள்பால் உள்ள அஞ்ஞானமாகிய ஊனத் திரட்சியைத் தீர்க்கின்றார். அவர், பன்றிக் கூட்டங்கள் மான் கரடிகள் மற்றும் யானைக் கூட்டங்கள் சாரும் அண்ணாமலைக்கு உரியவர்.

746. இழைத்த இடையாள் உமையாள் பங்கர்
இமையோõ பெருமானார்
தழைத்த சடையார் விடையொன்று ஏறித்
தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப்
பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து அங்கு உறங்கும் சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : நூலிழை போன்ற மெல்லிய இடையை உடைய உமாதேவியைப் பங்குடைய, தேவர் தலைவராகிய ஈசன், தழைத்து விரிந்த சடையுடையவர், இடப வாகனம் ஏறி முப்புரத்தை எரித்தவர். அவர், பெண் யானையைத் தேடிய ஆண் யானையானது திரிந்து களைத்து உறங்கும் சாரலையுடைய அண்ணமலையில் வீற்றிருப்பவர்.

747. உருவில் திகழும் உமையாள் பங்கர்
இமையோர் பெருமானார்
செருவில் லொருகால் வளையஊன்றிச்
செந்தீ எழுவித்தார்
பருவில் குறவர் புனத்தில்குவித்த
பருமாமணி முத்தம்
அருவித் திரளோடு இழியும் சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : ஒரே உருவாக உமையவள் இடப்பாகமும் ஈசன் வலப்பாகமுமாக, அர்த்தநாரியாய், தேவர் பெருமானாய், போர் செய்தற்குரியதாக மேருமலையை வில்லாக்கி வளைத்து, முப்புரத்தை எரிக்கு இரையாக்கியவர், இறைவன். அவர், வில்லை உடைய குறவர்கள் புனத்தில் குவித்த மணிகளும் முத்துக்களும் அருவிகளில் கலந்து செல்லும் சாரலையுடைய அண்ணாமலையார் ஆவார்.

748. எனைத்துஓர் ஊழி அடியார் ஏத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவம்தீர்க்கு(ம்)
நிமலர்உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன்
கைம்மேல் குழலூத
அனைத்தும் சென்று திரளும்சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : எத்தகைய ஊழிக்காலத்திலும் அடியவர்களால் வணங்கப் பெறும் ஒரே கடவுளாகிய தேவர்பெருமான், நினைத்து வணங்கும் அன்பர்களுடைய பாவங்களைத் தீர்க்கும் நிமலர். அப்பெருமான் உறையும் இடமாவது, எருமைகளைத் தமது கையில் உள்ள வேய்ங்குழலால் ஆயர்கள் இசை எழுப்பச் சேரும் மலைச்சாரலையுடைய அண்ணாமலை ஆகும்.

749. வந்தித்திருக்கும் அடியார் தங்கள்
வருமேல் வினையோடு
பந்தித் திருந்த பாவம்தீர்க்கும்
பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை
முதுகல்வரை கண்மேல்
அந்திப் பிறைவந்து அணையும்சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : வணங்கிப் போற்றும் அடியவர்களின் மேல், பற்றியிருக்கும் வினையோடு பாவத்தையும் தீர்க்கின்ற பரமன் உறையும் இடமாவது, முழவின் ஓசை ஒலிக்கப் பிறைச் சந்திரன் சாரும் அண்ணா மலையாகும்.

750. மறந்தான் கருதி வலியை  நினைந்து
மாறாய் எடுத்தான் தோள்
நிறந்தான் முரிய நெரிய ஊன்றி
நிறைய அருள் செய்தார்.
திறந்தான் காட்டி அருளாய் என்று
தேவர் அவர் வேண்ட
அறந்தான் காட்டி அருளிச் செய்தார்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : அறநெறியை விட்டு நீங்கி மறநெறியாகிய வன்மையை மனத்தில் தேக்கித் தன் வலிமையான ஆற்றலை நினைத்துக் கொண்டு, இயல்பிற்கு விரோதமாக மலையைப் பெயர்த்த இராவணன் தோளின் அழகு அழியுமாறும், துன்புற்று வருந்துமாறும், தன் திருப்பாத விரலால் ஊன்றிய ஈசனார், பின்னர் அருள் புரியுமாறு அவ்வரக்கன் வேண்டிப் போற்றித் தொழ அறத்தின் வழி நின்று அருள் செய்தார். அவர் தேவர் பெருமானாகிய அண்ணாமலையார் ஆவார்.

751. தேடிக் காணார் திருமால் பிரமன்
தேவர் பெரு மானை
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த
முத்தம் பலகொண்டு
கூடிக் குறவர் மடவார் குவித்துக்
கொள்ள வம்மின் என்று
ஆடிப்பாடி அளக்கும் சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவராய் விளங்கியவர் தேவர் பெருமானாகிய ஈசர். அவர், மூங்கில்களிலிருந்து உண்டான முத்துக்களைக் குறமகளிர் குவித்து இவற்றைப் பெற்றுக் கொள்ள வம்மின் என் அழைக்குமாறு விளங்கும் சாரலை உடைய அண்ணாமலையார் ஆவார்.

752. தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழி மின்கள்
வட்ட மலையாள் உமையாள் பங்கர்
மன்னி உறை கோயில்
அட்டம் ஆளித் திரள்வந்தணையும்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : சமணர் மற்றும் பிறர் தூற்றிக் கூறும் சொற்களை மனத்தில் கொள்ளாது, ஈசனைப் போற்றித் தொழுமின்கள். அப்பெருமான் உமாதேவியோடு உறையும் இடம் சிங்கங்கள் திரளாகச் சேர்ந்து பக்கம் சாரும் அண்ணாமலை ஆகும்.

753. அல்லாடு அரவம் இயங்கும் சாரல்
அண்ணாமலை யாரை
நல்லார் பரவப் படுவான் காழி
ஞான சம் பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான
பத்தும் இவை கற்று
வல்லார்எல்லாம் வானோர் வணங்க
மன்னி வாழ்வாரே.

தெளிவுரை : அரவம் இயங்கும் சாரலையுடைய அண்ணாமலையாரை, நல்லோர்களால் போற்றி மதிக்கப்படும் காழியின் ஞானசம்பந்தன் பாடிய, மந்திரம் போன்ற உயர்ந்த சொற்கள் மலிந்த இத் திருப்பதிகத்தை நன்கு கற்றுத் தேர்ந்து பாட வல்லார்கள், வானவர்களால் போற்றி வணங்கத் தக்கவர்களாய்ச் சிறப்புடன் வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

70. திருஈங்கோய்மலை (அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

754. வானத்துயர்தண் மதிதோய் சடைமேல்
மத்த மலர் சூடித்
தேனொத்தனமென் மொழிமான் விழியாள்
தேவி பாகமாக்
கானத்து இரவில் எரிகொண்டாடும்
கடவுள் உலகேத்த
ஏனத் திரள்வந்து இழியும் சாரல்
ஈங்கோய் மலை யாரே.

தெளிவுரை : ஆகாயத்தில் உயர்ந்து இருக்கும் குளிர்ந்த சந்திரனை வைத்த சடையின்மீது, ஊமத்த மலர் சூடி, தேன்போன்ற இனிமையான மொழியும், மான் விழியும் உடைய உமாதேவியை பாகமாகக் கொண்டு, மயானத்தில், இரவில் அனல் ஏந்தி ஆடும் கடவுள், உலகத்தவர் போற்றித் தொழுமாறு விளங்கும், பன்றியின் கூட்டங்கள் சாரும் ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர் ஆவர்.

755. சூலப்படையொன்று ஏந்திஇரவில்
கடுகாடு இடமாகக்
கோலச் சடைகள் தாழக்குழல்யாழ்
மொந்தை கொட்டவே
பாலொத் தனைய மொழியாள்காண
ஆடும் பரமனார்
ஏலந்தொடு நல் லிலவம்கமழும்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : சூலப்படையைக் கரத்தில் ஏந்தி சுடுகாட்டினை இடமாகக் கொண்டு, அழகிய சடைகள் தாழ்ந்து பரவ, இரவில், யாழிசையும் மொந்தை என்னும் ஒலிக்கருவியும் அதிர்ந்து கொட்ட பால் போன்ற இனிய மொழியுடைய உமாதேவி மகிழுமாறு நடனம் புரியும் பரமனார், ஏலமும், இலவங்கமும் கமழும் ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

756. கண்கொள் நுதலார் கறைகொள் மிடற்றார்
கரியின் உரிதோலார்
விண்கொள் மதிசேர் சடையார் விடையார்
கொடியார் வெண்ணீறு
பெண்கொள் திருமார் பதனிற் பூசும்
பெம்மான் எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல்
ஈங்கோய் மலை யாரே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் கண்ணுடையவர்; கறையுடைய கண்டத்தை உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தி யிருப்பவர்; வானத்தில் விளங்கும் சந்திரனைச் சடையில் சேர்த்தவர்; இடபக் கொடி உடையவர்; தேகத்தில் ஒரு பெண்ணைப் பாகத்தில் கொண்டிருந்து மார்பல் திருவெண்ணீறு பூசுபவர் இத்தகைய பெருமான் எம்மை ஆள்பவர். அவர் கரடியும் சிங்கமும் திரியும் சாரலைக் கொண்ட ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

757. மறையின் னிசையார் நெறிமென் கூந்தல்
மலையான் மகளோடும்
குறைவெண் பிறையும் புனலும் நிலவும்
குளிர்புன்சடை தாழப்
பறையும் குழலும் கழலும் ஆர்ப்பப்
படுகாட்டு எரியாடும்
இறைவர் சிறைவண்டு அறைபூஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : வளைந்து சுருண்ட மெல்லிய கூந்தலையுடைய வேதத்தின் இசை பொருந்திய உமாதேவியோடு சடையில் வெண்மையான பிறைச் சந்திரனும் கங்கையும் நிலவ, பறை முழங்கவும் குழல் இசைக்கவும் வீரக்கழல் ஆர்க்கவும் சுடுகாட்டில் நெருப்பை ஏந்தி ஆடும் இறைவர், சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் பூஞ்சாரலைக் கொண்ட ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

758. நொந்த சுடலைப் பொடிநீறு அணிவார்
நுதல்சேர் கண்ணினார்
கந்த மலர்கள் பலவும் நிலவு
கமழ்புன் சடைதாழப்
பந்தண் விரலான் பாகமாகப்
படுகாட்டு எரியாடும்
எந்தம் மடிகள் கடிகொள் சாரல்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : ஈசன், வெந்த  சுடலையின் சாம்பலாகிய திருநீற்றை அணிபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; மணம் வீசும் மலர்கள் பலவும் நிலவி நிற்கக் கமழும் சடை விரவ, உமாதேவியைப் பாகமாக உடையவர், சுடுகாட்டில் நெருப்பு ஏந்தி ஆடும் எம் அடிகள்; மணம் கமழும் சாரலையுடைய ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

759. நீறுஆர் அகலம் உடையார் நிரையார்
கொன்றை அரவோடும்
ஆறுஆர் சடையார் அயில் வெங்கணையால்
அவுணர் புர மூன்றும்
சீறா எரிசெய் தேவர் பெருமான்
செங்கண் அடல் வெள்ளை
ஏறுஆர் கொடியார் உமையா ளோடும்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : திருவெண்ணீறு தரித்தவரும், கொன்றை மலரும், அரவும் கங்கையும் சடையில் கொண்டவரும், கூர்மையான கொடிய கணை தொடுத்து முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவருமாகிய தேவர் பெருமான், வெண்மையான இடபக் கொடியேந்தி உமாதேவியுடன், ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

760. வினையாயின் தீர்த்து அருளே புரியும்
விகிர்தன விரிகொன்றை
நனைஆர் முடிமேல் மதியம்சூடு
நம்பான் நல மல்கு
தனையார் கமல மலர்மேல் உறைவான்
தலையோடு அனல் ஏந்தும்
எனையாள் உடையான் உமையாளோடும்
ஈங்கோய் மலை யாரே.

தெளிவுரை : வினைகளால் உண்டாகும் தீயவற்றைத் தீர்த்து நல்லவற்றைப் புரியும் விகிர்தன், விரிந்த கொன்றை யரும்பும் மலரும் பொருந்திய சடைமுடிமேல் வெண்மதியைச் சூடி நன் நலத்தைப் பெருகச் செய்பவன். அப்பெருமான் மலர்களில் சிறந்த தாமரையில் உறையும் பிரமனின் தலையோட்டினைக் கொண்டும், அங்கையில் அனல் ஏந்தியும் என்னை ஆட் கொள்பவர், உமாதேவியோடு ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

761. பரக்கும் பெருமை இலங்கை என்னும்
பதியிற் பொலிவாய
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும்
அணி ஆர் விரல் தன்னால்
பெருக்கி அடர்த்து நிமலா போற்றி
என்று நின்றேத்த
இரக்கம் புரிந்தார் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : பரந்த பெருமையுடைய இலங்கையின் வேந்தனான இராவணன் முடியும் தோளும் தன் அழகிய விரலால் அடர்த்துப் பின்னர் அவ்வரக்கன் வணங்கித் தொழுது ஏத்த இரங்கி அருள் புரிந்தவர், உமா தேவியுடன் வீற்றிருக்கும் ஈங்கோய் மலை ஈசர்.

762. வரியார் புலியின் உரிதோலுடையான்
மலையான் மகளோடும்
பிரியாது உடனாய் ஆடல் பேணும்
பெம்மான் திருமேனி
அரியோடு அயனும் அறியாவண்ணம்
அளவில் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : வரிகளையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டு, மலையான் மகளாகிய உமாதேவியோடு பிரியாது எப்போதும் உடனாய் விளங்கி, ஆடலை விரும்பும் பெருமான் திருமேனியை அரியோடு அயனும் அறியாத வண்ணம் பெரிய சோதிப் பிழம்பாய் நிமிர்ந்து ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

763. பிண்டி ஏன்று பெயரா நிற்கும்
பிணங்கு சமணரும்
மண்டை கலனாக் கொண்டு திரியு(ம்)
மதியில் தோரரும்
உண்டி வயிறுஆர் உரைகள் கொள்ளாது
உமையோடு உடனாகி
இண்டைச் சடையான் இமையோ பெருமான்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : சமணரும் பௌத்தரும் கூறும் உரைகளைப் பெருட்டாக மதியாது, உமையோடு உடனாய் விளங்கும் இண்டை மாலையும் சடையும் உடையவராய் தேவர் தலைவராய் ஈங்கோய் மலையில் விளங்கும் நாதன், ஈசன்.

764. விழவார் ஒலியு(ம்) முழவும் ஓவா
வேணு புரந் தன்னுள்
அழலார் வண்ணத்து அடிகள் அருள்சேர்
அணிகொள் சம்பந்தன்
எழிலார் கனையும் பொழிலும் புடைசூழ்
ஈங்கோய் மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார்
கவலை களை வாரே.

தெளிவுரை : விழாக்களின் ஒலியும் முழவின் ஒலியும் ஓயாது விளங்கும் வேணுபுரத்தில் விளங்கும் அழல் போன்ற சிவந்த வண்ணம் உடைய அடிகளாகிய ஈசன் திருவருளைப் பெற்ற அழகு மிக்க ஞானசம்பந்தன், எழில் பொருந்திய சுனையும், பொழிலும் புடைசூழ விளங்கும் ஈங்கோய் மலையில் வீற்றிருக்கும் ஈசனார் திருவடிக்குச் சேர்ப்பித்த இத் திருப்பதிகத்தை உரைக்க வல்லவர்கள், கவலைகள் யாவும் நீங்கப் பெற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

71. திருநறையூர்ச் சித்தீச்சரம் (அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

765. பிறைகொள் சடையர் புலியின் உரியர்
பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும்
கையர் கங்காளர்
மறைகொள் கீதம் பாடச் சேடர்
மனையின் மகிழ் வெய்திச்
சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், பிறையைச் சூடிய சடையினர்; புலியின் தோலை உடையவர்; பிளந்த வாயையுடைய நாகத்தைப் பூண்டவர்; நீல கண்டத்தினர்; கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; எலும்பு மாலை கொண்டவர். அவர் வேத கீதங்கள் இசைக்கப் பெறும் பெருமை மிக்க இல்லங்களும், மகிழ்ச்சியுடன் தேன் உண்ணும் வண்டுகள் மிக்க விளங்கும் நறையூர் சித்தீச் சரத்தில் விளங்கும் ஈசனாரே !

766. பொங்கார் சடையர் புனலர் அனலர்
பூதம் பாடவே
தம்கா தலியும் தாமும் உடனாய்த்
தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னிமத்தம்
சூடிக் குளிர் பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், நீண்டு வளரும் சடையினர்; கங்கையும், நெருப்பும் உடையவர். அவர் பூதகணங்கள் பாட்டு இசைக்கத் தம் காதலியாகிய உமா தேவியுடன் இடப வாகனத்தில் ஏறித் தேன் சொரியும் கொன்றை மலர், வன்னி, ஊமத்தம் சூடி, குளிர்ந்த பொய்கையில் அன்னம் தம் பெடையுடன் விளங்கும் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

767. முடிகொள் சடையர் முளைவெண் மதியர்
மூவா மேனி மேல்
பொடிகொள் நூலர் புலியின் அதளர்
புரிபுன் சடை தாழக்
கடிகொள் சோலை வயல்சூழ் மடுவில்
கயலார் இனம் பாயக்
கொடிகொள் மாடக் குழாம்ஆர் நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், சடைமுடியுடையவர், இளமையான பிறைமதி சூடியவர், மூப்பு அடையாத திருமேனி உடையவர், திருநீறு தரித்து, முப்புரிநூல் அணிந்து புலியின் தோலை உடுத்தியவர். அவர், சடைகள் தொங்க, மணம் மிகுந்த சோலையும் வயலும், கயல் விளங்கும் நீர் நிலைகளும் விளங்கும் தோரணங்கள் கொண்ட மாடங்களும் உடைய நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவர்.

768.  பின்தாழ் சடைமேல் நகுவெண் தலையர்
பிரமன் தலை யேந்தி
மின்தாழ் உருவில் சங்குஆர் குழைதான்
மிளிரும் ஒரு காதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை
பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார் நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : தாழ்ந்து விளங்கும் சடையின்மேல் தலைமாலை அணிந்து, கையில் பிரம கபாலம் ஏந்தி, மின்னலை விஞ்சிய ஒளி பொருந்திய சங்கால் ஆன குழையை ஒரு காதில் அணிந்து, பொன்னையும் விஞ்சிய கொன்றையும், செவ்வந்தி, புன்னனை, செண்பகம் ஆகிய மலர்களைச் சூடித் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவர் பரமன்.

769. நீரார் முடியர் கறைகொள் கண்டர்
மறைகள் நிறை நாவர்
பாரார் புகழால் பத்தர் சித்தர்
பாடி ஆடவே
தேரார் வீதி முழுவார்விழவின்
ஒலியும் திசைசெல்லச்
சீரார் கோலம் பொலியு(ம்) நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், கங்கையை முடியில் கொண்டவர்; நீலகண்டர்; வேதங்களாகிய உயர்ந்த சொற்களை மொழிபவர்; உலகத்தில் விளங்கும் புகழால் பக்தர்களும், சித்தர்களும் போற்றிப் பாடி ஆட, தேர் ஓடும் அகன்ற வீதிகளும், முழவு ஒலிக்கும் திருவிழாக்களின் ஒலி நான்கு திசைகளிலும் பரவப் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தினர். அவர் அழகிய வடிவில் வீற்றிருக்கின்றார்.

770. நீண்ட சடையர் நிரைகொள் கொன்றை
விரைகொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன்னொளி கொள் மேனிப்
பவ ளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம் எழிலார் சோலை
இலங்கு கோபுரம்
தீண்டு மதியம் திகழு நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், நீண்டு வளர்ந்த சடை யுடையவர்; சரம் போன்று நீண்டுள்ள மணம் மிக்க கொன்றை மலரை மாலையாக உடையவர்; பொன் போன்று ஒளியுடைய திருமேனி உடையவர். அவர், பவளம் போன்ற செம்மையான எழில் மிக்க திருத்தொண்டர்கள் வந்து வணங்க, மாட மாளிகைகளும், சோலைகளும், வானத்தில் உள்ள சந்திரனைத் தீண்டும் உயர்ந்த கோபுரத்தையும் உடைய திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கின்றார்.

771. குழலார் சடையர் கொக்கின் இறகர்
கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர்
சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடைமேல்
இசைத்து விடை யேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார்
சித்தீச் சராத்தாரே.

தெளிவுரை : ஈசன், கூந்தலும் சடையும் உடையவர்; கொக்கின் இறகைச் சூடியவர்; அழகிய நிறத்தையுடைய ஊமத்தம்பூ தரித்தவர்; தழல் போன்ற சிவந்த திருமேனியில் வெண்மையான நீற்றினை அணிபவர்; சரிந்த கோவணத்தையுடையவர். அவர், அழகிய நாகத்தைப் புலித்தோல் உடையின் மேல் இசையப்பூண்டு, இடப வாகனத்தில் ஏறித் திருப்பாதத்தில் சிலம்பு ஒலிக்கச் சித்தீச்சரத்தில் வீற்று இருக்கும் பரமன் ஆவார்.

772. கரைஆர் கடல்சூழ் இலங்கை மன்னன்
கயிலை மலை தன்னை
வரைஆர் தோலை எடுக்க முடிகள்
நெரித்து மனம் ஒன்றி
உரைஆர் கீதம் பாட நல்ல
உலப்பில் அருள் செய்தார்
திரைஆர் புனல்சூழ் செல்வ நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : இலங்கை மன்னனாகிய இராவணன், கயிலை மலையைத் தன் தோளால் எடுக்க, அவன் முடிகளை நெரித்துப் பின்னர் மனம் ஒன்றிக் கீதம் இசைத்து வணங்கி வேண்ட, தெவிட்டாத நல்லருளைப் புரிந்தவர், செல்வம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

773.நெடியான்பிரமன் நேக்காணார்
நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அருமா மறையும்
அண்டத்து அமரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி
முதல்வா அருள் என்னச்
செடியார் செந்நெல் திகழு நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : நெடியவனான திருமாலும், பிரமனும் தேடிக் காணாதவராய் விளங்கித் தன்னை நினைத்துப் போற்றும் மனத்திடை உறைபவராய் விளங்குபவர் ஈசன். அடியவர்களும், வேதங்களும், அமரர்களும் தாழ்ந்து வணங்கி, அருள் குணங்களைக் கூறிப் போற்றி, முதல்வனே ! அருள் புரிவாயாக என்று வாழ்த்த, செந் நெற் கதிர்கள் புதர்போல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவர் அவர்.

774. நின்றுஉண் சமணர் இருந்துஉண் தேரர்
நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர்வாயில்
உரைகேட்டு உழல்வீர்காள்
கன்றுஉண் பயப்பால் உண்ண முலையில்
கபாலம் அயல் பொழியச்
சென்று உண்டு ஆர்ந்துசேரு நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : சமணர்களும், தேரர்களும் நற்பொருள் ஒன்றினையும் உணராதவராய்ப் பொருளற்றவைகள் மொழிய, அதனைக் கேட்டு வாடும் மக்களே ! கன்று, உண்ணும் விருப்பால் பாலை உண்ணவும், பின்பு பாத்திரம் வழியுமாறு தாய்ப் பசு பால் பொழியவும், மீண்டும் கன்று பால் உண்ணும் வளப்பம் மிக்க நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனைச் சேர்ந்து வணங்குவீராக.

775. குயிலார் கோல மாதவிகள்
குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேருநறையூர்ச்
சித்தீச் சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்தகாழி
மல்குசம் பந்தன்
பயில்வார்க்கும் இனிய பாடல்வல்லார்
பாவ நாசமே.

தெளிவுரை : அழகிய குயில்களும், மாதவி, சுரபுன்னை போன்ற மரங்களும், வயல்களும் சூழ்ந்த நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமானை, மயில் விளங்கும் சோலை சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தன் ஏத்திப்பாடிய பாடல்களைச் சொல்பவர்களின் பாவம் நலிந்து அழியும்.

திருச்சிற்றம்பலம்

72. திருக்குடந்தைக் காரோணம் (அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

776. வாரார் கொங்கை மாதோர் பாகம்
ஆகவார் சடை
நீரார் கங்கை திங்கள்சூடி
நெற்றி ஒற்றைக்கண்
கூரார் மழுவொன்று ஏந்திஅந்தண்
குழகன் குடமூக்கில்
காரார் கண்டத்து எண்தோள் எந்தை
காரோணத் தாரே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, நீண்ட சடையில் கங்கை ஏற்றுத் திங்கள் சூடி, நெற்றியில் ஒரு கண்ணுடன், கூரிய மழுவைக் கரத்தில் ஏந்திய குழகன், குடமூக்கில் கரிய மேகம் போன்ற கருமையான கண்டத்தினராய் எட்டுத் தோள்களுடன் விளங்கும் எந்தை காரோணத்தார் ஆவார்.

777. முடியார் மன்னர் மடமான் விழியார்
மூவுலகும் ஏத்தும்
படியார் பவள வாயார் பலரும்
பரவிப் பணிந்தேத்தக்
கொடியார் விடையார் மாடவீதிக்
குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவமயிலார்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : முடியுடை வேந்தர்களும், மான் விழி மாதர்களும், மற்றும் மூவுலகத்தவரும் ஏத்தும் உலகத்தில் பவளம் போன்ற செம்மையான சொற்கள் கூறும் பலரும், பணிந்து போற்ற இடபக் கொடியுடையவராகி ஈசர், மாட வீதிகளை யுடைய குடந்தைக் குழகரும், நறுமணம் கமழும் சோலையில் மயில்விரித்தாடும் எழில்மிக்க காரோணத்தார் ஆவார்.

778. மலையார் மங்கை பங்கர் அங்கை
அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள்வாழை
அழகார் குடமூக்கில்
முலையார் அணிபொன் முளைவெண் நகையார்
மூளா மதியினார்
கலையார் மொழியார் காதல்செய்யும்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : மலை மங்கையாகிய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு, அழகிய கையில் நெருப்பை ஏந்தியவர் ஈசர், அவர், வாழையும் தென்னையும் பெருகும் குடமூக்கில், இளமை தவழும் முகம் உடையவராய் விளங்கும் வெண் நகை உடையவராய். ஞான மொழியினராய் விளங்குபவர், பெருமக்களால் மிகவும் விரும்பப் படுகின்றவர், அப்பெருமான், காரோணத்தாரே ஆவார்.

779. போதார் புனல்சேர் கந்தம் உந்திப்
பொலிஅவ் அழகாரும்
தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில்
அந்தண குடமூக்கில்
மாதார் மங்கை பாகமாக
மனைகள் பலி தேர்வார்
காதார் குழையர் காளகண்டர்
காரோணத் தாரே.

தெளிவுரை : தாமரை முதலான மலர்கள் நீரில் சேர்ந்து மணம் பரப்ப, அவ்வழகு தவழ் பொழில் சூழ்ந்து எழில் மிக்க காடுகள் போல் குளிர்ச்சியாக விளங்கும் குடந்தையில், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மனைகள்தோறும் பிச்சை நாடுபவர், காதில் குழையணிந்த நீலகண்டராய்க் காரோணத்தில் விளங்குபவர்.

780. பூவார் பொய்கை அலர்தாமரை செங்
கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்தணாளர்
சீரால் அடி போற்றக்
கூவார் குயில்கள் ஆலு மயில்கள்
இன்சொற் கிளிப்பிள்ளை
காவார் பொழில் சூழ்ந்து அழகார் குடந்தைக்
காரோணத் தாரே.

தெளிவுரை : தாமரை முதலான மலர்களால், தெய்வ சிந்தனை உடைய அடியவர்கள் எல்லாம் சிறப்பு மிக்க ஈசன் அடி போற்றுகின்றனர். குயில்கள் கூவ, மயில்கள் அகவ, கிளிகள் இன்சொல் பயில, காவார் பொழில்சூழ் அழகு மிக்க குடந்தைக் காரோணத்தார் வீற்றிருப்பர்.

781. மூப்பூர் நலிய நெதியார் விதியாய்
முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண்டு அருளும்
குழகர் குட மூக்கில்
தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம்
வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா வண்ணம்
காரோணத் தாரே.

தெளிவுரை : தேகத்தில் முதுமை அடைவதால் உண்டாகும் நலிவைத் தீர்பவரும், முப்புரங்களை எரிப்பதற்கு நெறிமுறையாக அனல் அம்பைக் கோர்த்தும், பார்த்தன் தவநிலை கண்டு அருளியவரும் ஆகிய குழகர் குடமூக்கில் விளங்குபவர். அவர் நோயினால் மெலியாதவாறும், வினைகளால் துன்பம் நேராதவாறும் காப்பவர். காலன் நம்மைக் குறுகாத வண்ணம் பாதுகாப்பவர் காரோணத்தாரே.

782. ஊனார் தலைகை ஏந்தி உலகம்
பலிதேர்ந்து உழல்வாழ்க்கை
மானார் தோலார் புலியின் உடையார்
கரியின் னுரி போர்வை
தேனார் மொழியார் திளைந்து அங்குஆடித்
திகழும் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார் செல்வக்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : பிரம கபாலம் கையில் ஏந்தி, உலகத்தில் பிச்சை எடுத்து உழலும் வாழ்க்கையை உடையவர், மான் தோலையும், புலித் தோலையும் உடையாகக் கொள்பவர், அப் பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டு கொண்டு, உமாதேவி மகிழுமாறு ஆடித் திகழ்கின்ற குடமூக்கி, மயானத்திலும் நடனம் புரிபவர். அவர், செல்வம் தழைக்கும் காரோணத்தில் வீற்றிருப்பவரே.

783. வரைஆர் திரள்தோள் மதவாள் அரக்கன்
எடுப்ப மலைசேரும்
விரைஆர் பாத நுதியால் ஊன்ற
நெரிந்து சிரம் பத்தும்
உரைஆர் கீதம் பாடக் கேட்டுஅங்கு
ஒளிவாள் கொடுத்தாரும்
கரைஆர் பொன்னி சூழ்தண குடந்தைக்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : மலை போன்ற திரட்சியான தோளையுடைய ஆணவத்தை வாளாக உடைய, அரக்கனாகிய இராவணன் பெயர்த்த மலையானது, அவனையே சேர்ந்து தாக்குமாறு தனது திருவிரலால் ஊன்ற, அவற்றால் நெரிந்து துன்புற்ற பத்துத் தலைகளும் சாமகானம் இசைக்கவும், அவற்றைக் கேட்டு ஒளிமிக்க வாளைக் கொடுத்து அருள் புரிந்தவர் ஈசன். அப்பெருமான் காவிரிக் கரையில் விளங்கும் குடந்தைக் காரோணத்தில் வீற்றிருப்பவர்.

784. கரிய மாலும் செய்ய பூமேல்
அயனும் கழறிப் போய்
அரிய அண்டம் தேடிப்புக்கும்
அளக்க ஒண்கிலார்
தெரிய அரிய தேவர் செல்வம்
திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும், தமக்குள் தர்க்கம் செய்துகொண்டு அண்டங்கள் எல்லாம் தேடியும் அறி வொண்ணாதவராகிய தேவர், குடமூக்கில் காலகாலராய்க் கரிய கண்டத்தராய்க் காரோணத்தில் வீற்றிருப்பவர்.

785. நாணார் அமணர் நல்லது அறியார்
நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை மாசுகழியார்
பேசேல் அவரோடும்
சேணார் மதிதோழ் மாடமங்கு
செல்வ நெடு வீதிக்
கோணா கரம் ஒன்று உடையார்குடந்தைக்
காரோணத் தாரே.

தெளிவுரை : நன்மை அறியாதவராய்க் குரலை உயர்த்திப் பேசும் தன்மையுடைய சமணர் தம் உரைகளை ஏற்காது, உயர்ந்த மாட மாளிகைகளும் நீண்ட வீதிகளும் உடைய குடந்தையில் வரையாது அருள்பவர் காரோணத்தில் எழுந்தருளியுள்ள ஈசனார்.

786. கருவார் பொழில்சூழ்ந்து அழகார் செல்வக்
காரோணத் தாரைத்
திருவார் செல்வ மல்குசண்பைத்
திகழும் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலை இவைபத்து
உரைப்பார் உலகத்துக்
கருவார் இடும்பைப் பிறப்பதுஅறுத்துக்
கவலை கழிவாரே.

தெளிவுரை : வளம் மிக்க அடர்த்தியான பொழில் சூழ்ந்து அழகுடன் விளங்கும் செல்வம் திகழும் காரோணத்தில் விளங்கும் ஈசனைத் திருநலம் பொருந்திய செல்வச் செழிப்புடன் விளங்கும் சண்பை நகரின் ஞானசம்பந்தன் செஞ்சொல் மாலையாக உருவாக்கிய இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள், உலகத்தில் கருப்பையில் நேரும் பிறப்பாகிய துன்பத்தை அறுத்து மனக் கவலையும் நீங்கப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

73. திருக்கானூர் (அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

787. வானார் சோதி மன்னு சென்னி
வன்னி புனங் கொன்றைத்
தேனார் போது தானார் கங்கை
திங்களொடு சூடி
மாஜேர் நோக்கி கண்டங்கு உவப்ப
மாலை ஆடுவார்
கானூர் மேய கண்ணார் நெற்றி
யானூர் செல்வரே.

தெளிவுரை : வானத்தில் ஒளிரும் சோதியாகிய சூரியனும் சந்திரனும் முறையே வலக் கண்ணும் இடுக் கண்ணும் ஆகி விளங்க, சென்னியில் வன்னியும் கொன்றை மலரும், கங்கையும், மதியும் சூடி, உமாதேவி கண்டு மகிழுமாறு பெருமையாக ஆடுபவர், நெற்றியில் கண்ணுடைய கானூர் மேய செல்வராகிய ஈசர்.

788.நீந்தலாகா வெள்ளமூழ்கு
நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு
கொன்றை எழிலாரப்
போந்த மென்சொல் இன்பம் பயந்த
மைந்தர் அவர்போலாம்
காந்தள் விம்மு கானூர் மேய
சாந்த நீற்றாரே.

தெளிவுரை : பெருக்கெடுத்து ஓடிய கங்கை, சிறிதளவும் வெறியேறாதபடி சடையில் ஏற்றுக் கொண்டு, அதன் மேல் வளைந்த பிறைமதியும், அரவம், கொன்றை மலரும் தரித்து, இனிய சொற்களால் இன்பம் நல்கும் அழகர் போன்று, சாந்தம் மலரும் திருநீற்றைப் பூசி கானூர் மேவி விளங்குபவர் ஈசன்.

789. சிறையார் வண்டும் தேனும் விம்மு
செய்ய மலர்க் கொன்றை
மறையார் பாடல் ஆடலோடு
மால்விடை மேல்வருவார்
இறையார் வந்தென் இல்புகுந்தென்
னெழில் நலமுங் கொண்டார்
கறையார் சோலைக் கானூர் மேய
பிறையார் சடையாரே.

தெளிவுரை : சிறகுகள் உடைய வண்டும் தேனும் விளங்கும் கொன்றை மலர் சூடி, வேதங்கள் ஓதிப் பாடவும், ஆடவும், பெருமை மிகுந்த இடப வாகனத்தில் வரும் இறைவராகிய தலைவர், என்னிடம் வந்தார், வந்த அவ் இறைவர், என் இல்லம் புகுந்து என் உள்ளத்தையும் கவர்ந்து கொண்டார். அவர் அடர்த்தியான சோலைகளை யுடைய கானூரில் மேவும் பிறைச்சந்திரனும் சடை முடியும் கொண்டுள்ள ஈசரே.

790. விண்ணார் திங்கள் கண்ணி வெள்ளை
மாலை யதுசூடித்
தண்ணார் அக்கோடு ஆமை பூண்டு
தாழ்புன் சடைதாழ
எண்ணா வந்தென் இல்புகுந்துஅங்கு
எவ்வ நோய் செய்தான்
கண்ணார் சோலைக் கானூர் மேய
விண்ணோர் பெருமானே.

தெளிவுரை : ஈசன், விண்ணில் திகழும் சந்திரனைத் தரித்து, வெள்ளெருக்க மாலை சூடி, குளிர்ந்த எலும்பும் ஆமையோடும் பூண்டு, நீண்ட சடைகள் விரிந்து பரவ, என்பால் எண்ணம் கொண்டு நாடி வந்து, என் இல்லத்தில் புகுந்து பிற பொருள்கள் மீது யான் வெறுப்பு அடையுமாறு என்னை ஆக்கினான். அத்தகைய தலைவன் (ஈசன்) சோலைகள் விளங்கும் கானூரில் மேவும் விண்ணோர் பெருமான்.

791. தார்கொள் கொன்றைக் கண்ணியோடும்
தண் மதியம்சூடி
சீர்கொள் பாடல் ஆடலோடு
சேடராய் வந்து
ஊர்கொள் தோறும் ஐயம் ஏற்றுஎன்
னுள்வெந் நோய் செய்தார்
கார்கொள் சோலைக் கானூர்மேய்
கறைக் கண்டத்தாரே.

தெளிவுரை : கொன்றை மாலையும் குளிர்ந்த சந்திரனும் சூடி, புகழ் விளங்கும் ஆடல் பாடல்களுடன், பெருமையுடையவராய் வந்து, ஊர்கள்தோறும் பிச்சை ஏற்கும் செயல் புரிந்து, என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டவர், கானூர் மேவும் நீலகண்டத்தவரே.

792. முளிவெள் ளெலும்பு நீறுநாலு
மூழ்கு மார்பராய்
எறிவந்தார் போல் ஐயம் என்றென்
இல்லே புகுந்து உள்ளத்
தெளிவு நாணும் கொண்ட கள்வர்
தேறல் ஆர் பூவில்
களிவண்டு யாழ்செய் கானூர்மேய
ஒளிவெண் பிறை யாரே.

தெளிவுரை : உலர்ந்த எலும்பும், முப்புரிநூலும், திருநீறும் மார்பில் விளங்க, எளிமையான திருக்கோலத்தில் பிச்சை என்று கேட்டு என் இல்லம் புகுந்து, என் உள்ளத்தையும் , தெளிவினையும், தன்மானத்தையும் கவர்ந்து கொண்ட கள்வர், தேன் சொரியும் பூவில் வண்டு களிப்புடன் யாழ்போன்று இசை யெழுப்பும் கானூரில் மேவும், வெண்பிறை சூடிய தலைவரே.

793. மூவா வண்ணர் முளைவெண் பிறையர்
முறுவல் செய்து இங்கே
பூவார் கொன்றை புனைந்து வந்தார்
பொக்கம் பல பேசிப்
போவார் போல மால்செய்து உள்ளம்
புக்க புரி நூலர்
தேவார் சோலைக் கானூர்மேய
தேவ தேவ ரே.

தெளிவுரை : ஈசனார், மூப்பு அடையாத எழில் வண்ணமான இளமையுடையவர்; முளைத்தெழும் இளமையான வெண்பிறைச் சந்திரனைச் சூடியுள்ளவர்; இளமுறுவல் செய்து, கொன்றை மாலை புனைந்து என்பால் வந்து, வஞ்சனையாகப் பேசிப் போவார் போல, மயக்கத்தை உண்டாக்கி, என் உள்ளத்தில் புகுந்தவர், முப்புரி நூலணிந்தவராகிய, சிறப்பான சோலையுடைய கானூரில் மேவும் அவர் தேவதேவரே.

794. தமிழின் நீர்மை பேசித் தாளம்
வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல்
செய்கை இடம் ஓவார்
குமிழின் மேனி தந்து கோல
நீர்மை யது கொண்டார்
கமழும் சோலைக் கானூர்மேய
பவள வண்ணரே.

தெளிவுரை : தமிழ் போன்ற இனிமையாகப் பேசியும், தாளம், வீணை, முழவம், மொந்தை ஆகிய இசைக் கருவிகளுடன் விளங்கும் பாடல்களைப் பாடியும், அப் பாடல்களுக்கு ஏற்ற அசைவுகளைப் புரிவித்தும், என்னுள்ளத்தில் மகிழ்ச்சியைத் தந்து, என்னை அவனையே நினைக்கச் செய்து, என் மேனியில் குமிழம் பூ வண்ணத்தை உண்டாக்கிக் கவர்ந்து கொண்டவர். சோலை கமழும் கானூர் மேய பவளவண்ணரே.

795. அந்தம்ஆதி ஆயனுமாலும்
ஆர்க்கும் அறிவரியான்
சிந்தையுள்ளு நாவின்மேலும்
சென்னியு மன்னினான்
வந்துஎன் னுள்ளம் புகுந்துமாலை
காலை ஆடுவான்
சுந்த மல்கு கானூர்மேய
எந்தை பெம்மானே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறிவரியவனாகிய ஈசன், என் சிந்தையில் புகுந்தும் நாவின் உறைந்தும் சென்னியிலும் விளங்குகின்றான்; என் உள்ளத்தில் புகுந்து காலையிலும் மாலையிலும் ஆடுகின்றான். அவ் ஈசன் மணம் மல்கும் கானூர் மேய எந்தை பெருமான்.

796. ஆமைஅரவோடு ஏனவெண்கொம்பு
அக்குமாலை பூண்டு
ஆமோர்கள் வர் வெள்ளர்போல
உள்வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும்
கோண் நாகணை யானும்
சேமமாய செல்வர் கானூர்
மேய சேடரே.

தெளிவுரை : ஆமையோடு, அரவம், பன்றியின் வெண்கொம்பு, எலும்புமாலை பூண்டு உள்ள கள்வராகிய ஈசன், தூய்மையாக உள்ளவர் போல் எனது உள்ளத்தில் புகுந்து நோய் உறுமாறு செய்தார். வேத நெறியில் வேள்வியாற்றும் நான்முகனும், வளைந்த நாகத்தைப் படுக்கையாக உடையவனும் ஆகிய திருமாலும் பாதுகாப்பாக நலம் கொள்ளப் புரியும் அச்செல்வர், கானூரில் மேவும் கடவுள்.

797. கழுது துஞ்சும் கங்குல் ஆடும்
கானூர் மேயானைப்
பழுதுஇல் ஞான சம்பந்தன்சொல்
பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள்
சொல்லித் துதித்து நின்று
அழுது நக்கும் அன்புசெய்வார்
அல்லல் அறுப்பாரே.

தெளிவுரை : பேயும் உறங்கும் இருளில் நின்று நடனம் பயிலும் ஈசனை, கானூரில் விளங்கும் பெருமானைப் போற்றிப் பழுதில்லாத சொல் புகலும் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை பாடியும் ஈசனைப் போற்றித் தொழுதும், தோத்திரங்களைச் சொல்லி வணங்கி நின்று, கசிந்து கண்ணீர் மல்கி அன்பு செய்பவர்கள் துன்பங்கள் அற்றவர்களாய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

74. திருப்புறவம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

798. நறவ நிறைவண்டு அறைதார்க் கொன்றை
நயந்து நயனத்தால்
கறவம் செறி வண் கொடியோன் உடலம்
பொடியா விழி செய்தான்
புறவம் உறைவண் பதியா மதியார்
புறமூன்று எரிசெய்த
இறைவன தவன் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : தேன் அருந்திய வண்டு நயந்து மேவும் கொன்றை மாலை சூடிய பரமன். மகரக் கொடியுடைய மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் உறையும் அப்பெருமான் மதியாத முப்புரங்களை எரியாக்கிய இறைவனாய், தேவர்கள் போற்ற, உமாதேவியோடு வீற்றிருந்தான்.

799. உரவன் புலியின் உரிதோலாடை
உடைமேற் படநாகும்
விரவி விரிபூங் கச்சா அசைத்த
விகிர்தன் உகிர் தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்துப்
புறவம் பதியாக
இரவும் பகலும் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : வலிமையான புலியின் தோலை உரித்து ஆடையாகக் கொண்டு, அதன் மீது படம் விரித்தாடும் நாகத்தைக் கச்சாகக் கட்டிய ஈசன், நகத்தினால் யானையின் தோலை உரித்து, புறவம் பதியாகக் கொண்டு, இரவும் பகலும் இமையவர்கள் ஏத்த, உமா தேவியுடன் வீற்றிருந்தான்.

800. பந்தம் உடைய பூதம் பாடப்
பாதம் சிலம்பார்க்கக்
கந்த மல்கு குழலிகாணக்
கரிகாட்டு எரியாடி
அந்தண் கடல்சூழ்ந்து அழகார் புறவம்
பதியா அமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : இரவில் தீப்பந்தங்களை ஏந்திய பூத கணங்கள் பாட, சிலம்பு ஒலித்து, கந்தம் கமழும் தேவி காணுமாறு சுடுகாட்டில் நெருப்பைக் கையில் கொண்டு நடனம் ஆடி, கடல் சூழ்ந்த அழகிய புறவத்தைப் பதியாகக் கொண்டு, எம் பெருமான் தேவர்கள் போற்ற உமாதேவியுடன் வீற்றிருந்தான்.

801. நினைவார் நினைய இனியான் பனியார்
மலர்தூய் நித்தலும்
கனையார் விடையொன்று உடையான் கங்கை
திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான்கடல்சூழ்
புறவம் பதியாக
எனைஆளுடையான் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : அன்று மலர்ந்த மலர்களைத் தூவி நினைத்துப் போற்றும் அடியவர்தம் நெஞ்சில் இனிமை தருபவனாகி, கனைத்து ஒலி முழக்கும் விடையை (இடபம்) வாகனமாகவும், சடையில் கங்கை, சந்திரன், கொன்றை மலர் தரித்து புறவத்தைப் பதியாகக் கொண்டும், என்னை ஆளுடையவனாகிய பெருமான், தேவர்கள் எல்லோரும் போற்றுமாறு உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

802. செங்கண் அரவு நகுவெண் தலையு(ம்)
முகிழ்வெண் திங்களும்
தங்கு சடையன் விடையன் உடையன்
சரிகோவண ஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்து அழகார்
புறவம் பதியாக
எங்கும் பரவி இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : அரவம், மண்டையோடு, இளஞ் சந்திரன் ஆகியவற்றைத் தன் சடை முடியில் வைத்த இடப வாகனன், கோவண ஆடை கொண்டு, கடல் சூழ்ந்த புறவம் என்னும் பதியை இடமாகக் கொண்டு, தேவர்கள் ஏத்த, உமாதேவியோடு வீற்றிருந்தனன்.

803. பின்னு சடைகள் தாழக் கேழல்
எயிறு பிறழப் போய்
அன்ன நடையார் மனைகள் தோறும்
அழகார் பலி தேர்ந்து
புன்னை மடலின் பொழில்சூழ்ந்து அழகார்
புறவம் பதியாக
என்னை உடையான் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : பின்னப்பட்டு முறுக்கு ஏறிய சடைகள் தாழ்ந்து விரிந்து விளங்க, பன்றியின் பல்லைக் கழற்றி, தாருக வனத்தில் உறையும் முனிவர்களின் மனைகள் தோறும், முனிபத்தினிகள் விருப்பத்துடன் முன் வந்து அளிக்குமாறு உடைய அழகிய பலியைத் தேர்ந்து செய்து, புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய புறவம் என்னும் பதியில், என்னை ஆளாக உடையவனாகிய ஈசன், தேவர்கள் ஏத்த உமாதேவியோடு வீற்றிருந்தான்.

804. உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு
ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த
விடைசேர் கொடி அண்ணல்
பண்ணில் சிறை வண்டு அறைபூஞ் சோலைப்
புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : உண்பதற்கு அரியதான் நஞ்சினை உண்டு, தேவர்கள் விண்ணுலகத்தில் சிறந்து விளங்குமாறு புரிந்து, அமுதம் அளித்த இடபக் கொடியுடைய அண்ணல், சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை எழுப்பும் பூஞ்சோலையுடைய புறவம் எனும் பதியில், தேவர்கள் ஏத்துமாறு உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

805. விண்தான்அதிர வியனார் கயிலை
வேரோடு எடுத்தான்றன்
திண்டோள் உடலு(ம்) முடியு(ம்) நெரியச்
சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான்
புறவம் பதியாக
எண்டோள் உடையான் இமையோ ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : விண்ணுலகம் அதிருமாறு, பெருமை பொருந்திய கயிலையை எடுத்த இராவணனுடைய வலிமையான தோளும், உடலும், தலையும் நெரியுமாறு சிறிது ஊன்றி, அதனால் ஏற்பட்ட புண் நீங்குமாறு அருள் செய்த பெருமான், புறவம் எனும் பதியில் எட்டுத் தோள்களுடன் இமையவர்கள் ஏத்த உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

806. நெடியான்நீள்தா மரைமேல் அயனு(ம்)
நேடிக் காண்கில்லாப்
படியா மேனி உடையான் பவள
வரைபோல் திருமார்பில்
பொடியார் கோலம் உடையான்கடல் சூழ்
புறவம் பதியாக
இடியார் முழவார் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : நெடியவனாகிய திருமாலும், தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் காண முடியாதவாறு, எதிலும் படியாதபடி திருமேனி உடைய ஈசன், பவளம் போன்ற சிவந்த திருமார்பில் திருவெண்ணீறு அணிந்து, புறவம் பதியெனக் கொண்டு, இடிபோன்ற முழவம் அதிர, தேவர்கள் ஏத்த, உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

807. ஆலும் மலியின் பீலி அமணர்
அறிவில் சிறுதேரர்
கோலும் மொழிகள் ஒழியக் குழுவும்
தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான் கடல்சூழ்
புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : அகவுகின்ற மயிலின் இறகுடைய சமணர்களும் பௌத்தர்களும் கூறுகின்ற மொழிகளை ஒதுக்கி வைத்து, திரண்ட தீப் பிழம்பு போன்று வானம் முழுமையும் எழில் பெறச் செய்யும் வடிவினனாகிய ஈசன், புறவம் என்னும் பதியில் பொருந்தி அருள் புரிபவனாக இமையோர்கள் ஏத்த உமாதேவியுடன் வீற்றிருந்தான்.

808. பொன்னார் மாட நீடும் செல்வப்
புறவம் பதியாக
மின்னார் இடையாள் உமையாளோடும்
இருந்த விமல னைத்
தன்ஆர்வம் செய் தமிழின் விரகன்
உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடி ஆடப் பிரியார்
பரலோகம் தானே.

தெளிவுரை : பொன்போன்றும் திகழும் மாட மாளிகைகளும், நீண்டு வளரும் செல்வச் செழிப்பும் உள்ள புறவம் என்னும் நகரினை இடமாகக் கொண்டு, மின்னலைப் போன்ற இடையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கின்ற விமலனாகிய ஈசனை, தானாக, உள்ளுணர்வால் எழும் அன்பின் காரணமாக  நன்மைகளைச் செய்யும் தமிழின் மீது பற்றுக் கொண்டவராகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தைப் பல நாட்கள் பாடி, மனங்கசிந்து பக்தியினால் ஆட, பரனுடைய உலகமாக விளங்கும் இனிய உலகத்தில் எக்காலத்திலும் பிரியாதவராய் மகிழ்ந்திருப்பர்.

திருச்சிற்றம்பலம்

75. திருவெங்குரு (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

809. காலைநன் மாமலர் கொண்டு அடிபரவிக்
கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்
ஓலமது இடமுன் னுயிரொடு மாள
உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான்
மாலை வந்துஅணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவள(ம்)முன் உந்தி
வேலைவந்து அணையும் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவிஉள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : காலை நேரத்தில், சிறப்பான மலர்கள் தூவித் திருவடியைப் பரவித் தொழுத மார்க்கண்டேயர்பால் சினங்கொண்டு உயிரைக் கவரவந்த கூற்றுவன், ஓலம் இட்டு அலறுமாறு உதைத்து, அவன் உயிரைக் கவர்ந்தவனாகிய ஈசன், உமாதேவிக்கு மிக விருப்பமானவன்; எம் தலைவன். மாலை நேரத்தில் கடல் அலைகள் சுருளாகக் கரையை அணுகி, சங்கும் பவளமும் உந்திச் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு எனும் பதியில் மேவி அப் பெருமான் வீற்றிருந்தனர்.

810. பெண்ணினைப் பாகம் அமர்ந்து செஞ்சடைமேல்
பிறையொடும் அரவினை அணிந்து அழகாகப்
பண்ணினைப் பாடி ஆடிமுன் பலிகொள்
பரமர் எம்மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினைமூடி வான்முகடு ஏறி
மறிதிரை கடல்முகந்து எடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாக மகிழந்து, சிவந்த சடையின் மீது பிறைச் சந்திரனும் அரவமும் அணிந்து, அழகிய வடிவம் தாங்கி, பாடியும் ஆடியும் பிச்சையேற்ற எம் அடிகள் ஆகிய ஈசனார், நன்மைகள் பேணி, உயர்ந்த அலைகள் பரப்பி, தேவலோகத்தில் உள்ள செல்வங்களையும் முகந்து பெறும், கடல் சிறப்புடைய வெங்குரு என்னும் பதியில் இடமாகக் கொண்டு வீற்றிருந்தனர்.

811. ஓர்இயல்பு இல்லா உருவமது ஆகி
ஒண்திறல் வேடனது உருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக்
கறுத்து அவற்கு அளித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசை யாக அறுபதமுரன்று
நிரைமலர்த் தாதுகண் மூசவிண் டுதிர்ந்து
வேரிகள் எங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : இத்தகைய உருவம்தான் உடையவன் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத வடிவத்தை உடையவனாய்த் திறல்மிக்க வேடன் உருவத்தைத் தாங்கி, உமாதேவி காணுமாறு அர்ச்சுனனுடன் சினந்து வழக்கிட்டுப் போர் செய்து, பின்னர் வரம் நல்கி அன்பு சொரியும் ஈசன், வண்டு நேரிசை என்னும் பண் எழுப்பி, மகரந்தம் உதிர்ந்து கண்ணை மறைக்கத் தேன் சொரியும் சோலைகள் உடைய வெங்குரு எனும் பதியில் வீற்றிருந்தனர்.

812.வண்டுஅணை கொன்றை வன்னியு மத்த
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதம்
கொடுகொட்டி குடமுழாக் கூடியுமுழவப்
பண் திகழ்வாகப் பாடியொர் வேதம்
பயில்வர்முன் பாய்புனல் கங்கையைச்சடைமேல்
வெண்பிறை சூடி உமையவளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : வண்டுகள் மொய்த்துச் சேரும் கொன்றை வன்னி, ஊமத்தம், வில்வம், எருக்கு ஆகியவற்றைச் சடையில் உடைய இடப வாகனர், கொடி கொட்டி முழவு முதலியவை பூதங்கள் முழங்கவும், பாடவும் வேதங்கள் பயில, கங்கையும் வெண்பிறையும் தரித்து உமாதேவியோடு வெங்குருமேவி வீற்றிருந்தனர்.

813. சடையினர் மேனி நீறதுபூசித்
தக்கைகொள் பொக்கணம் இட்டுடனாகக்
கடை தொறும்வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந்தழகாகப்
படையது ஏந்திப் பைங்கயற்கண்ணி
உமையவள் பாகமும் அமர்ந்தருள்செய்து
விடையொடு பூதம் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : சடையை உடைய ஈசன், திருமேனியில் வெண்ணீறு பூசி, தக்கை என்கிற வாத்தியத்தை ஒரு பையில் இட்டு, வாயிற்படிதோறும் வந்து பிச்சையேற்று, இவரைக் கண்ணுற்றவர் மனத்தைக் கவர்ந்து, அழகிய தோற்றப் பொலிவுடன் விளங்கி, கரத்தில் மழு, சூலம் முதலான படைகளை ஏந்தி, உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்து அமர்ந்து அருள் செய்து இடப வாகனமும், பூத கணங்களும் சூழ வெங்குருவில் மேவி வீற்றிருந்தனர்.

814. கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரையடை முத்த மணலிடை வைகி
ஓங்கு வான் இருள்அறத் துரப்பஎண் திசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள் ஆகுதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : கடலலைகள் கரையில் மோதிச் செல்ல, அந்த ஓதத்தில் கரையை அடைந்த சங்குகளும், முத்துக்கள் ஈனும் சிப்பிகளும் மணலில் விளங்கி, இரவில் இருளை அகற்றி ஒளியை உமிழ், எட்டுத் திசைகளும் சிறந்து விளங்கும், வேதம் ஓதுகின்ற  பூவுலகின் தேவர்களாகிய அந்தணர்கள், நலத்தை நாடிப் புரியும் வேள்வித் தீயிலிருந்து தோன்றும் புகையானது விசும்பினில் சென்று, அவ்வொளியை மறையச் செய்யும் சிறப்புடைய தெய்வீக மணம் கமழும் இடமாகிய வெங்குரு மேவி, ஈசன் வீற்றிருந்தனர்.

815. வல்லி நுண்ணிடையாள் உமையவள்தன்னை
மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லை யில்பிடித்தங்கு உரித்து அவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில்மிகு திருஆலில்
நல்லறம் உரைத்து ஞானமோடு இருப்ப
நலிந்திடல்உற்று வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமாதேவியைக் கலங்கச் செய்யுமாறு வந்த மதயானையை விரைவில் பிடித்துத் தாக்கி அழித்து, அவள் அச்சத்தைப் போக்கிய ஈசர், கல்லால நிழலில் சனகாதி முனிவர்களுக்கு நல்லறப் பொருள்களை உரைத்துத் தட்சிணாமூர்த்தியாக ஞானமுத்திரை காட்டி இருக்க, அவரை அந்நெறியிலிருந்து வழுவுதல் செய்யும் பொருட்டு வந்த கரும்பு வில்லையுடைய மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் பொடியாக்கியவர், விருப்பத்துடன் வெங்குரு எனும் பதியில் மேவி வீற்றிருந்தனர்.

816. பாங்கிலா அரக்கன் கயிலை அன்று எடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத்து அழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன் மலரார் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : நற்குணம் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலையை எடுக்க, அவன் பத்துத் தலைகளும் தோளும் நொறுங்கி வதைபடுமாறு, பெருமை மிக்க திருப்பாத விரலால் ஊன்றி, அவ்வரக்கனுக்கு ஒளி திகழ் வாளும் கொடுத்து, அழகாக விளங்கும் கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்தம், கொன்றை மலர்கள் விரவிய சிவந்த சடையுடைய செல்வராகிய ஈசன் மலைபோன்ற ஏற்றம் பொருந்திய வெங்குருவில், மணம் மல்கும் கோயிலில் வீற்றிருந்தனர்.

817.ஆறுசடைச் சடைஎம் மடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற்காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்கும்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
ணீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த
வேறுஎமை ஆள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : கங்கை தரித்த சøயுடைய எம் அடிகளைக் காண்பதற்குத் திருமாலும், பிரமனும் அளவிடுவதற்கு என, பூமிக்குக் கீழேயும், வானத்திடையிலும் புகுந்து செல்ல, காண்பதற்கு இயலாமல் அச்செயலைத் தவிர்த்தனர், அவர், எழில் திகழும் திருவெண்ணீறு பூசிய கோலம் உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; விண்ணுலகத்தவர் தொழுது ஏத்தி நிற்க எம்மை ஆட்கொள்ள விரும்பிய விகிர்தர்; வெங்குரு மேவி வீற்றிருந்தனர்.

818. பாடுடைக்குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டுஅழகாக
ஏடுடை மலரான் பொருட்டு வன்தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்து அருள்செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெளிவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : துன்பத்தில் ஆழும் சாக்கியர் மற்றும் சமணர் உரைசெய்யும், மறம் தோயும் புன் சொற்களை ஒதுக்கி, உமாதேவியுடன் பொருட்டு கொடிய தக்கன் வளர்த்த வேள்வியைத் தகர்த்து அழித்துப் பின்னர் அருள் செய்து, சுடுகாட்டில் வேட்டை நாய்கள் சூழவும், காண்கின்றவர்கள் கீழ்மையறிவினன் எனக் கருதுமாறும் வேட்டுவக்கோலம் விரும்பிய விகிர்தர், வெங்குரு மேவி வீற்றிருந்தனர்.

819. விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணிய நூலன் ஞானசம்பந்த(ன்)
நவின்ற இவ் வாய்மொழி நலமிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியும் ஆடியும் பயிலவல் லோர்கள்
விண்ணவர் விமானம் கொடுவரவு ஏறி
வியன் உலகுஆண்டு  வீற்று இருப்பவர்தாமே.

தெளிவுரை : உயர்ந்த நிலையுடைய விமானத்தை விரும்பிய ஈசன், வெங்குருமேவி வீற்றிருந்த பெருமான். அவரை ஏத்தி ஞான நூல் வல்லவனாகிய உரைத்த இத்திருப்பதிகத்தை, பண்ணிசையாகவும், பக்தியாகவும், பாடி, மனங்கசிந்து உள் மகிழ்ந்து நெக்குருகி ஆடி ஓத வல்லவர்கள், தேவர்கள் விமானத்தைக் கொண்டு வந்து அதில் ஏற்றிச் சென்று பெருமையான உலகத்தில் சேர்க்க, அதில் திளைத்து இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

76. திருஇலம்பையங்கோட்டூர் (அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன் கோட்டூர்,காஞ்சிபுரம் மாவட்டம்)

820. மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுஉரை தனதுஉரை யாக
நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடும்துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயில்ஆலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கைøயாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : பருப்பத மலையை (ஸ்ரீசைலம்) உடையவர், திருத்துருத்தி, திருமாற்பேறு, திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய திருத்தலங்களில் நிலைத்து விளங்குபவர், ஈசன். அவர், என்னுடைய உரையைத் தன்னுடைய உரையாக ஏற்றுத் திருநீறு அணிந்து, இடப வாகனம் விரும்பிய நிமலன். கலைமான் தன் துணையாகிய பெண் மானுடன் துயிலவும், சோலையில், ஆண் மயில் கூட்டங்கள் பெண் மயில்களுடன் சேர்ந்து மகிழ்ந்து விளங்கவும், சோலைகள் பொலியும் இலம்பையம் கோட்டூரை இடமாகக் கொண்டுள்ள இடர், என் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளை கொண்டு, என் எழிலையும் கவர்ந்து, என்பால் நாடி மகிழ்விக்காமல் இருப்பது நல் இயல்பு ஆகுமோ !

821. திருமலர்க்கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை
நிருமலன் எனதுஉரை தனதுஉரை யாக
நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலன்
கருமலர்க் கமழ்கனை நீண்மலர்க்குவளை
கதிர்முலை இளையவர் மதிமுகத்து உலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன்னெழில்கொள்வது இயல்பே.

தெளிவுரை : சிறப்பான கொன்றை மலர் சூடிய பரமன், திருநின்றியூரில் மேயவன்; தேவர்களுள் முதலாமவன்; திருக்கழிப்பாலையில் விளங்கும் நின்மலன். அவன் எனது உரையைத் தனது உரையாக ஏற்றுக்கொண்டு திருநீறு தரித்து, இடப வாகனத்தை விரும்பி அமர்ந்த நிமலன், நீலவண்ணமலர் கமழ் சுனைகளும், நீண்ட குவளை மலர் போன்ற மதிமுகத்து மாதர்களும், பெரிய தாமரை மலர் சூழ்ந்து பொய்கையும், விளங்கும் இலம்பையங்க கோட்டூரில் வீற்றிருக்கும் ஈசன், என் எழிலைக் கவர்ந்து என்னை வாடுமாறு புரிவது நல்லியல்பு ஆகுமோ !

822. பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டுவெங் கூற்றுதைத்து அடியவர்க்கு அருளும்
காலனாம் எனதுஉரை தனதுஉரை யாகக்
கனல்எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமாமலர்சினை வண்டுப ண்செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்
ஏலநாறும் பொழில் இலம்பையம் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : ஈசன், பாலனாகவும், விருத்தனாகவும், பசுபதியாகவும் வந்தவன். ஒரு காலத்தில், கொடுமையான கூற்றுவனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்தவன், காலனுக்குக் காலனாகிய பரமன். அப்பெருமான், எனது உரையைத் தனது உரையாக ஏற்றுக் கொண்டு, எரியும் அனலைக் கையில் ஏந்திய கடவுள். நீல மலர்களை உடைய சுனைகளில் வண்டு இரைக்கவும், நீரில் திகழும் குவளை மலர்கள் மகரத்தைப் பொழிய, மணம்கமழும் பொழில் உடைய இலம்பையங் கோட்டூரில் வீற்றிருக்கும் அப்பெருமான் என் எழிலைக் கவர்ந்து செல்வது நல்லியல்பு ஆகுமோ !

823. உளங்கொள்வார் உச்சியார் கச்சியேகம் பன்
ஒற்றியூர் உறையும்அண் ணாமலை அண்ணல்
விளம்புவான் எனதுஉரை தனது உரையாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக்கலை துள மலைகளும் சிலம்ப
கொழுங்கொடி எழுந்தெங்கும் கூவிளம்கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன் னெழில்கொள்வ தியல்பே.

தெளிவுரை : தன்னைத் தியானம் செய்பவர்களுடைய உள்ளத்தில் உயர்வாக உறைபவர் திருக்கச்சியேகம்பன். அவர் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உறைபவராகிய அண்ணாமலை அண்ணல்; எனது உரையைத் தான் உரைக்கும் உரையாகக் கொண்டு விளம்புபவர்; கங்கையை, விரித்த சடையில் ஏற்றுத் தாங்கிய விமலன். கலைமான் குளம்பு பதியத் துள்ள மலைகளிலும் ஓசைகள் நிலவ, பூங்கொடிகள் தாவி வில்வமரங்களைப் பற்றிப் படர்ந்திருக்கும், பிறைதிகழ் பொழில் உடைய இலம்பையங் கோட்டூரில் இருக்கையாகக் கொண்டு அவர் வீற்றிருக்கும், என்னுடைய எழிலைக் கவர்ந்து என்னை வாடுமாறு செய்வது நல்லியல்பு ஆகுமோ !

824. தேனுமாய்அமுதமுமாய்த்  தெய்வமும் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாம் தெரியில்
வானுமாம் எனதுரை தனதுரையாக
வரிஅராஅரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிரல் ஊகம்
கடுவனோடு உகளும்ஊர் கற்கடும்சாரல்
ஏலநாறும் பொழில் இலம்பையம் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : தேனாக இனிமை தருபவனாயும், அமுதமாய் விளங்கி நிலைத்த தன்மையை வழங்குபவனாயும், தெய்வமாக இருந்து முத்திப் பேற்றினை அருள்பவனாகவும் திகழ்ந்து, ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகிச் சூழ்ந்து, நான் சொல்லும் உரையைத் தான் சொல்லும் உரையாகக் கொண்டு மெய்ம்மைப்படுத்தி அழகிய அரவத்தை இடையில் பொருத்திக் காட்சி தரும் அழகனாகிய ஈசன், சோலைகளில் உள்ள மான்கள் மருட்சியடைந்து அச்சம் கொள்ள, குரங்குகள் தாவித் திரிய, கற்கள் மிகுந்த சாரலில், பன்றிகளும் பசுக் கூட்டங்களும் திரியவும் விளங்கும் இலம்பையங் கோட்டூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து என்னைப் பாதுகாத்து என் எழிலைக் கவர்ந்தது அவன் நல்லியல்பு ஆகுமோ !

825. மனம்உலாம் அடியவர்க்கு அருள்புரிகின்ற
வகையலால் பலிதிரிந்து உண்பிலான் மற்றோர்
தனம்இலான் எனதுரை தனதுரையாகத்
தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்
புனம்எலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித்து ஈண்டிவந்தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : தன்னை எக்காலத்திலும் நினைத்துக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு அருள்புரிகின்ற தன்மையினால் அல்லாது, தான் பிச்சையேற்று உண்ணும் தன்மை இல்லாதவன், ஈசன். அவன் என்னுரையைத் தன்னுரையாகப் பொறுப்பு ஏற்று மெய்ம்மை புரிபவன். அவன் தாழ்ந்த சடை முடியும், இளமையான சந்திரனையும் உடையவன். அத்தகைய தலைவன், தினைப்புனத்தில் உள்ள அருவிகளில் தினைத்தாள்களும், முத்தும் பொன்னும் கொழிக்கும் வண்ணம் செய்து, மற்றும் செல்வத்தின் இனங்கள்யாவும் அடையும் இலம்பையங் கோட்டூரில் வீற்றிருந்து, என் எழிலைக் கவர்ந்து கொள்வது நல்லியல்பு ஆகுமோ !

826. நீர்உளான்தீயுமான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊர்உளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறுஉகந்து ஏறிய ஒருவன்
பார்உளார் பாடலோரு ஆடல்அறாத
பண்முரன்று அஞ்சிறை வண்டினம் பாடும்
ஏர்உளார் பைம்பொடல் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : நீராகவும், நெருப்பாகவும், ஆகாயமாகவும் நினைத்து வழிபடும் அடியவர்களின் மனத்தின் உள்ளும் உறையும் ஈசன், தினந்தோறும் ஆகம விதிப்படி திருக்கோயில்களில் பூஜை செய்யும் ஊர்களிலும் உள்ளவன். அவன் என்னுடைய உரைகளை எல்லாம் தன்னுடைய உரையாகக் கொண்டு ஏற்று மெய்ம்மைப் படுத்தி அருள் புரிபவன். அவன், வெண்மையான இடபத்தில் மகிழ்ந்து ஏறி, வாகனமாகக் கொண்ட ஒப்பற்றவன். அப்பெருமான், பாடலும் ஆடலும் கொண்டு திகழும் பொழிலில் வண்டினம் பண் அமைத்துப் பாடவும் விளங்கும் இலம்பையங் கோட்டூரில் வீற்றிருந்து, என் எழிலைக் கவர்வதும் நல்லியல்பு ஆகுமோ !

827. வேருலாம் ஆழ்கடல் வருதிரை இலங்கை
வேந்தன் தடக்கைகள் அடர்த்தவன் உலகில்
ஆர்உலாம் எனதுறை தனதுரையாக
ஆகம்ஓர் அரவுஅணிந்து உழிதரும் அண்ணல்
வாருலா நல்லன மாக்களும் சார
வாரணம் உழிதரு மல்லல்அம் கானல்
ஏருலாம் பொழில்அணி இலம்பையங் கேட்டூர்
இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : கடலால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய வலிமையான கைகளை அடர்த்து, உலகில் யாவும் நிரம்பப் பெற்ற எனது உரையைத் தனது உரையாக ஏற்று மகிழ்ந்து, உடலில் அரவம் அணிந்து காட்சி தரும் அண்ணலாகிய ஈசன், சாந்தம் திகழும் நல்விலங்குகள் சாரவும், யானைகள் சாரும் வளம் பொருந்திய பொழில் சூழ் இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்து, பேணி, என்னுடைய எழிலைக் கவர்ந்து கொண்டது நல்லியல்பு ஆகுமா !

828. கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே

தெளிவுரை : கிளர்ந்து எழுந்து பெய்த மழையின் இடரைக் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து தாங்கிய திருமாலும், பிரமனும் பூமிக்கு அடியில் ஈசன் திருவடியையும், மேலே முடியையும் காணவேண்டும் என்று தேர்ந்தும், அதனை அடையாதவர்களாக இருந்தனர். அப்பெருமான், என் உள்ளம் விரும்பி அழைக்க எனது உரையைத் தனத உரையாக ஏற்றவன்; ஒளிபொருந்திய நெருப்பை அழகிய கரத்தில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழ் இலம்பையங்கோட்டூரில் அப்பெருமான் வீற்றிருந்து என் எழிலைக் கவர்ந்து கொள்வது நல்லியல்பு ஆகுமோ !

829. உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி
உழிதரு சமணரும் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரையாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞசுனை முல்லைநன் பொன்னடை வேங்கை
களிமுக வண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன் னெழில்கொள்வதியல்பே.

தெளிவுரை : உரித்த தன்மை கொண்ட ஆடைகள் கொண்டு உலவும் சமணரும் சாக்கியரும் ஒருபுறம் தனித்திருக்கின்ற நிலையில், பெருஞ் செல்வனாகிய ஈசன், எனதுரையைத் தனதுரையாய்க் கொண்டு பலியேற்கும் பெரியோன், சுனையும், முல்லை வேங்கை முதலான பூங்கெத்துக்களில் வண்டுகள் களித்துத் தேன் உண்ணும் பொழில்களும் உடைய இலம்பையின் கோட்டூரில் வீற்றிருக்கும் பெருமான், என் எழிலைக் கவர்ந்து கொள்வது நல்லியல்பு ஆகுமோ !

830. கந்தனை மலிகனை கடலொலியோதம்
கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியார் உறைபதி நான்மறை நாவன்
நற்றமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற்று இம்மையின் வீடெளிதாமே.

தெளிவுரை : நறுமணமும், திரண்டெழு ஒலியும் உடைய கடலின் ஓதம் மிகுந்து ஈசன் உறையும் கழுமலம் என்னும் நகரில் நான்மறை வல்ல நாவினையுடையவனும், நற்றமிழுக்கு இனிய துணையும் ஆகிய ஞானசம்பந்தன், எந்தை விளங்கும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரினைப் பற்றி இசையொடு உரைத்த இத் திருப்பதிகத்தை உரைக்க வல்லவர்கள். வெந்துயர் நீங்கப் பெற்றவராய் விளங்குவர். பின்னர் அவர் தேவர்களோடும் கூடி இருந்து மகிழ்ந்து, வீடுபேறு அடைவார்கள். இம்மையிலும் அவர்கள் வீடு பேற்றுக்குரிய மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

77. திருஅச்சிறுபாக்கம் (அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

831. பொன்திரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடல் பவளமொடு அழல்நிறம்புரையக்
குன்றுஇரண்டன்ன தோளுடை யகலம்
குலாயவெண் ணூலொடு கொழும் பொடியணிவர்
மின்திரண்டன்ன நுண்ணிடைஅரிவை
மெல்லியலாளையோர் பாகமாப் பேணி
அன்று இரண்டு உருவம் ஆயஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்ட கொண்டாரே.

தெளிவுரை : பொன் திரண்டாற் போன்ற சடைபுரளவும், கடலில் தோன்றும் பவளம் போன்ற அழல் நிறம் பொலியும் இரண்டு குன்றுகளைந் போன்ற தோள்களும், அகன்ற அதனிற் பொலிந்து தவழும் முப்புரி நூலும், வளம்மிக்க திருநீறும் விளங்க, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியைப் பாகமாகப் பேணி, இரு உருவமாக விளங்கும் எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ளார்.

832. தேனினும் இனியர் பாலன நீற்றர்
தீங்கரும்பு அனையர்தம் திருவடிதொழுவார்
ஊனயந்து உருக உவகைகள் தருவார்
உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க
வயங்கொள் நிற்பதோர் வடிவினை உடையார்
ஆனையின் உரிவை போர்த்தஎம்மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : தேனைவிட இனிமையனவர்; பால் போன்ற வெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவர்; இனிய கரும்பு போன்றவர்; தமது திருவடியைத் தொழும் அடியவர்கள் ஊன்நயந்து உருக, மகிழ்ச்சியைத் தருபவர்; உச்சியாகிய தலையின்மேல் உறைபவர்; இடப வாகனத்தையன்றி வேறு எதிலும் ஊர்ந்து செல்லாதவர்; போகத்தலமாகிய வானுலகத்தைக் கடந்து கர்மத்தலமாகிய பூவுலகத்தவர் வணங்கத், தன் வயப்படும் வடிவத்தை உடையவர்; ஆனையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவராவர் எம் அடிகள். அவர் அச்சிறுபாக்கத்தில் மேவி ஆட்சி கொண்டவர்.

833. காரிருள்உருவ மால்வரை புரையக்
களிற்றனது உருவுக்கொண்டு அரிவைமேல்ஓடி
நீர்உரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலர்
பேரருளாளர் பிறவியில் சேரார்
பிணியிலார் கேடிலர் பேயக்கணம்சூழ
ஆர்இருள் மாலை ஆடும்எம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : கன்னங்கரிய வடிவத்தை யுடைய பெண் யானையின் உருவைத் தாங்கிய உமாதேவியை நோக்கி, ஆண் யானையின் உருவத்தை சடையில் தாங்கி, நீறு அணிந்து இடபத்தில் உகந்து ஏறிய நிமலர். அவர் பேரருளாளர். எப் பிறவித் தொகையிலும் சேராதவராய், எதனாலும் கட்டுபடாதவராய், அழிவில்லாதவராய், பேய்க் கணங்கள் சூழ, அடர்த்தியான இருள் மயக்கம் நிறைந்த சுடுகாட்டில் நடனம் ஆடும் எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

834. மைம்மலர்க் கோதை மார்பினர் எனவு(ம்)
மலைமகளவளொடு மருவினர் எனவும்
செம்மலர்ப் பிறையும் சிறையணி புனலும்
சென்னிமேல் உடையர்எம் சென்னிமேல் உறைவார்
தம்மலர் அடியொன்று அடியவர்பரவத்
தமிழ்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை அணிந்தஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : மலர் மாலை சூடிய மார்பினர்; மலைமகளுடன் மருவி இருப்பவர்; மலர் போன்ற பிறைச் சந்திரனும், கட்டுப்படுத்தப்பட்ட நீராகிய கங்கையும் சென்னியில் சூடியவர்; என் சிரசின்மேல் உறைபவர், தமது மலர்போன்ற திருவடியை மனத்தில் பதித்து அடியவர் பரவவும் இனிய தமிழ்ச் சொல்லும் உயர்ந்த வடசொல்லும் திருத்தாள் நிழலில் சேர்ந்து பெருமை கொள்ள, அழகிய கொன்றை மலர் அணிந்த எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

835. விண்ணுலா மதியம் சூடினர் எனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீர் எனவும்
பண்ணுலா மறைகள் பாடினர் எனவும்
பலபுகழ் அல்லது பழியிலர் எனவும்
எண்ணலாகாத இமை யவர் நாளும்
ஏத்த வரங்களோடு எழில்பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும்எம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : வானத்தில் உலவும் சந்திரனைச் சூடியவர் எனவும் பெருக்கெடுத்தோடும் கங்கையைச் சடையில் தேக்கியவர் எனவும், பண்கள் விளங்கப்பெறும் வேதங்களைப் பாடி மொழிந்தவர் எனவும், எச்செயலைச் செய்தாலும் புகழேயன்றிப் பழியற்ற தன்மை யுடையவர் எனவும் உள்ளவர், ஈசன். திரிதரும் எண்ணங்கள் இல்லாத போகத் தலத்தில் உள்ள தேவர்கள், நாள்தோறும் ஏத்தி வழிபடவும் நல்ல வரங்களும் எழிலும்பெற்று விளங்க, அண்ணலாகிய இடபத்தை வாகனமாக ஏறும் எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டார்.

836. நீடுஇரும் சடைமேல் இளம் பிறை துலங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய்பூசித்
தோடு ஒருகாதினில் பெய்துவெய்தாய
சுடலையில் ஆடுவர் தோலுடையாகக்
காடு அரங்காகக் கங்குலும் பகலும்
கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த
ஆடுஅரடுஆட ஆடும் எம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : நீண்ட பெரிய சடைமுடிமீது இளம்பிறைச் சந்திரன் விளங்க, ஒளிதிகழ் மழுப்படை கொண்டு, திருநீறு செய்யில் பூசி, ஒரு காதில் தோடு அணிந்து, வெம்மை பொருந்திய சுடலையில் ஈசன் நடம்புரிவர். அப்பெருமான் புலித்தோலை உடுத்திச் சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு இரவும் பகலும், பேயும் பூதமும் கைதொழுது ஏத்த, ஆடுகின்ற அரவர் மேனியில் ஆடுமாறும், நடம் புரிகின்ற எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

837. ஏறும்ஒன்று ஏறி நீறு செய்பூசி
இளங்கிளை அரிவை யொடு ஒருங்குஉடனாகிக்
கூறும்ஒன்று அருளிக் கொன்றையந் தாரும்
குளிர்இள மதியமும் கூவிள மலரும்
நாறு மல்லிகையும் எருக்கொடுமுருக்கு
மகிழிளவன்னியும் இவைநலம்பகர
ஆறும் ஓர் சடைமேல் அணிந்தஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : இடபத்தில் ஏறி அமர்ந்து, திருவெண்ணீறு மெய்யில் பூசி, உமாதேவியுடன் வீற்றிருந்தும், தனது பாகத்தில் ஒரு கூறும் அருள் செய்து, கொன்றை மலர், இளம் பிறைச்சந்திரன், வில்வம், மல்லிகை, எருக்கம், முருக்கு, மகிழம்பூ, வன்னி ஆகியவற்றுடன், கங்கையும் சடைமேல் அணிந்த எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

838. கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங்காய
பிறை நுதலவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
பருவரை எடுத்ததிண் தோள்களை அடர்வித்து
அச்சமும் அருளும் கொடுத்தஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : கச்சையில் ஒளிமிக்க வாளைக் கட்டிய உடையைக் கொண்ட அரக்கனாகிய இராவணனை, பெண்கள், அழகன் என்றும், வீரம் மிக்கவன் என்றும் போற்றிப் பெருமை செய்து பேணியதைக் கொண்டு, வலிமை கொண்டவன் எனக் கருதி மலை எடுத்த தோள்களை அடர்த்து, மண்ணில் அழுத்தி அச்சத்தைக் கொடுத்தும், பின்னர் அருள்புரிந்து எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

839. நோற்றலாரேனும் வேட்டலாரேனு(ம்)
நுகர் புகர்சாந்தமொடு ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும் இன்னவாறு என்றும்
எய்தலாகாததொர் இயல்பினை உடையார்
தோற்றலார் மாலு(ம்) நான்முகம் உடைய
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணார் ஆயஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : நோன்பு, விரதம் முதலியவற்றால் தவம் செய்யாதவர்களும், வேத மந்திரங்கள் கூறி வேள்வி செய்யாதவர்களும், தூப, தீப, நைவேத்தியம் செய்து பூசனை ஆற்றி, மலர்கள் தூவிச் சாற்றிப் பக்திப் பாடல்களைக் கூறி வணங்காதவர்களும், ஈசனை அறியவும், அவன் திருவடியை எய்துதலும் ஆகாதவர்களாவர். அவதாரங்கள் கொண்ட திருமாலும், நான்முகத் தோன்றலாகிய பிரமனும், திருவடியையும் திருமுடியையும் தங்கள் ஆற்றலால் தேடியும் காணாதவராய் விளங்கிய எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

840. வாது செய்சமணும் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார்
உள்கலாகாததோர் இயல்பினை உடையார்
வேதமும் வேத நெறிகளும் ஆகி
விமல வேடத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : விவாதம் செய்கின்ற சமணரும், சாக்கியரும் நல்வினை நீக்கி வல்வினையாளர்களாய், நல்லுரைகள் ஓதியும் அதனைக் கேட்டும் உணர்வு கொள்ளாதவர்களாய், ஈசனை நெஞ்சில் நினைத்துப் போற்றாத இயல்பினை உடையவர்கள். அவர்களால் இறைவனை அணுக முடியாது. வேதமும், அவ்வேத நெறிகளும் ஆகி விளங்கி, மலமற்ற விமலராய்க், குளிர்ச்சி பொருந்திய அழகிய சந்திரனைப் போல் ஒளிர்ந்து ஆதியும் ஈறும் ஆகும் எம் அடிகள் அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

841. மைச்செறிகுவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய் கையில் புதுமலர் கிழியப்
பச்சு இறவுஎறிவயல் வெறிகமழ்காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன் தமிழ்கொண்டு
அச்சிறு பாக்கத்து அடிகளை யேத்தும்
அன்புடை அடியவர் அரவனை இலரே.

தெளிவுரை : நீலவண்ணக் குவளை மலரில் உள்ள தேன், பொய்கையில் உள்ள தவளையின் வாயில் நிறையவும். பசிய இறா மீன்கள் வயல்களில் துள்ள, புதுமலர் கிழியவும், மணம் கமழ் காழிப்பதியில் உள்ள பெருமான் கழலைத் தவிர வேறொன்றைக் கருதாத கருத்துடைய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தால், அச்சிறுபாக்கத்தில் வீற்றிருக்கும் அடிகளை, ஏத்திப் பணிந்து அன்பு செய்யும் அடியவர்கள், வினை நீங்கப் பெற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

78. திருவிடைச்சரம் (அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

842. வரிவளர்அவரிஒளி அரவுஅரைதாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வலன் ஏந்திக்
கனல்எரியாடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழில் இளமயில்ஆல
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவளர் இனமணி புனமணிசாரல்
இடைச்சுர மேவிய இவர் வணம்என்னே.

தெளிவுரை : வரிகளை உடைய ஒளிமிக்க அரவு அரையில் விளங்க சடைமுடியின்மேல் வளரும் பிறைச் சந்திரன் சூடி,யானையின் வடிவம் பொறித்த வீரக்கழல் வலக்காலில் ஒலிக்க, எரியும் கனலைக் கரத்தில் ஏந்தி சுடுகாட்டில் ஆடுகின்ற ஈசர், விரிந்த சோலையில் மயில்கள் அகவ, அருவிகள் திண்ணெனும் ஓசையை எழுப்பி வீழ, ஒளி பொருந்திய மணிகள் திகழும் மலைச் சாரலில் விளங்கும் இடைச்சுரத்தில் மேவிய இவர் அழகிய திருமேனியின் வண்ணம் தான் என்னே !

843. ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையைஉடையர்
நடுஇருள் ஆடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன் மிளிர்வன கயல்குள வாளை
செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், கங்கையைச் சடைமுடியில் ஏற்ற அழகு பொலிய அருள்புரிபவர்; இளமை பொருந்திய குழகர்; கூற்றுவனை உதைத்துக் கொடுமை செய்தவர்; நள்ளிரவில் இருளில் ஆடுபவர்; கொன்றை மாலை சூடியவர், சேற்றில் கயல்களும், வாளை மீன்களும் முட்டிக்கொண்டு போர் செய்வதைப் போன்று உள்ள காட்சியை பெண் குரங்கும் ஆண் குரங்கும் கூர்ந்து போக்கும் எழில்திகழ் சாரலில் இடைச்சுரத்தில் மேவிய இவர் வண்ணம்தான் என்னே !

844. கானமும் சுடலையும் கற்படு நிலனும்
காதலர் தீதிலர் கனல் மழுவாளர்
வானமு நிலமையும் இருமையும் ஆனார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடுகமழ
நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையாலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், காடும், சுடலையும், மலைப்பகுதியும் விரும்பி உறையும் பெற்றியுடையவர்; எவ்விதமான தீதும் இல்லாதவர்; நெருப்புப் போன்று மழுப்படையுடையவர்; வானுலகமாகிய மறுமையும், நிலவுலகமாகிய இவ்வுலகமும், இம்மை, மறுமை ஆகிய இரு உலகமும் ஆகியவர்; யாவராலும் வணங்கப்படுவர்; அன்பிற்கு இணங்குபவர். ஞானிகளால் வாழ்த்தப்படுபவர். கத்தூரி, அகில் முதலான நறுமணம் கமழ மென்மையான பூஞ்சோலையில் மயில்கள் சூழவும், மான்களும் பன்றிகளும் உடைய சாரலில், இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே !

845. கடமணி மார்பினர் கடல்தனில் உறைவார்
கதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மடறினர் மிளிர்வதோர் அரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடம்உலை அயலன கருங் குருந்து ஏறி
வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும்
இடமுலை அரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், மணி மார்பினர்; கடற்புறத்தில் உறைபவர், அன்புடையவர்; தீது இல்லாதவர்; கனல் போன்ற மழுப்படையாளர்; விடத்தை மணி போன்று மிடற்றில் கொண்டவர்; ஒளி மிக்க நாகத்தை உடையவர்; நன்னெறியும் தவ வேடமும் உடையவர்; ஆலின் அயலில் பொலியும் குருந்தையில் தேன் எடுக்கின்ற எழில் மகளிர் திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமான் வண்ணம் தான் என்னே !

846. கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடைஉயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புனல் அனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொடு எழில்திகழ்சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், கார்காலத்தில் கடிமணம் கமழ விரியும் கொன்றை மலரைச் சூடியவர்; ஒளிவிடும் சந்திரனும், கங்கை நீரும் கொண்ட சடையினர்; இடபக் கொடியுடையவர்; ஒளி திகழும் மழுப்படை உடையர்; நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவர்; சிறப்பான மெல்லிய சிறகுகளை யுடைய வண்டுகள் பண்ணிசைக்க, நீர்வளத்துடன், வாழை, பலா மரங்களின் சுவை மிக்க கனிகள் திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம் தான் என்னே !

847. தோடுஅணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையில் ஆடுவர் தோலுடையாகப்
பீடுஉயர் செய்ததோர் பெருமையை உடையர்
பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவதும்பி
குரவமும் அரவமு(ம்) மன்னியபாங்கர்
ஏடுஅவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், தோடு அணிந்த காது உடையவர்; திருவெண்ணீறு தரித்தவர்; மயானத்தில் ஆடுபவர்; தோலை உடையாகக் கொண்டு, பெருமையை உயர்த்திய பெருமை உடையவர்; பேய்க்கணங்களுடன் ஆடுபவர்; பெருமையுடையவர்களுக்கும் பெருமானாக விளங்குபவர்; கோட்டுப் பூக்கள் தேனைச் சொரிய வண்டுகள் அதில் முழுகித் திளைக்க புது மலர்களின் மணம் கமழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே !

848. கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கும் எரியொடு மணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங்கு உடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவ
மன்னிய கவட்டிடைப் புணர்குயில்ஆலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச் சுரமேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், வீரக் கழல் அணிந்த திருப்பாதம் உடையர்; சூலப் படை உடையவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; ஐந்தலை நாகமும், உருத்திராக்க மணியும் பூண்டவர்; நெருப்பினைக் கரத்தில் ஏந்தியவர்; ஒளிரும் மழுப்படை ஏந்தியவர்; நடம் புரிபவர்; வேதம் ஓதுபவர்; தெய்வத் தன்மை மிக்க உமாதேவியை உடையவர்; பொழில்களும், மராமரக் கிளைகளிலும் குயில்கள் கூவ, வண்டுகள் இசை பாட விளங்கும் இடைச்சரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே !

849. தேன்கமழ் கொன்றைஅம் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும்உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந்து அலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங்குஇடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ்சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலரைப் புனைபவர்; திகழ்ந்து விளங்கும் சடையின்மீது சந்திரனைச் சூடி, இறந்தவர்களின் சாம்பலைத் திருவெண்ணீறு எனக்கொண்டு பூசுபவர்; உலகத்தவர் பொதுவாகக் கருதும் தன்மையில் அல்லாது அவருக்கு எனத் தனியாக வேறு ஒழுக்க நெறியை உடையர்; பல வடிவங்களைக் கொண்டு விளங்குபவர்; சந்தனம், அகில் ஆகிய மரங்களும் உயர்ந்த நவமணிகள் முதலானவைகளும் அருவியின் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப் பெருமானின் வண்ணம் தான் என்னே !

850. பலஇலம் இடுபலி கையில் ஒன்று ஏற்பர்
பலபுகழ் அல்லது பழியிலர் தாமும்
தலைஇலங்கு அவர்ஒளி நெடுமுடி அரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை உடையர்
மலைஇலங்குஅருவிகள் மணமுழவு அதிர
மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசனார், பல வீடுகளில் இடுகின்ற பிச்சையைக் கையில் ஏற்பவர்; பலவகைப்பட்ட புகழேயல்லாது எவ்வகையான பழிப்பும் இல்லாதவர்; தலையில் ஒளி உமிழும் மணி முடியை உடைய அரக்கனான இராவணனுடைய வலிமையான கைகள் நலியுமாறு செயத தன்மையுடையவர். மலையிலிருந்து வேகமாக வீழும் அருவிகள் திருமண வாத்தியம் போன்று அதிருமாறு ஒலிக்க, மேகம் நோக்கி இனிமை கண்டு மயில்கள் தோகை விரிக்கும் சாரலில் ஏலம், இலவங்கம் ஆகிய வாசனைப் பொருள்களை வழங்கும் தருக்கள் திகழும் வண்ணம்தான் என்னே !

851. பெருமைகள் தருக்கியோர் பேதுறுகின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர் அடிநிழல் பரவிநின்று ஏத்தும்
அன்புடை அடியவர்க்கு அணியரும் ஆவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலின் வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசனார், பெருமைகளை நினைத்துத் தருக்கிப் பேசி மயக்கத்தில் ஆழ்ந்த திருமாலும், பிரமனும் ஓர்ந்து காணமுடியாத பெருமையை உடையவர்; திருவடியைப் போற்றிப் பரவி நின்று வணங்குகின்ற அன்புடைய திருத்தொண்டர்களுக்கு மிகவும் அண்மையில் இருப்பவர். நீர்ச் சுனைகளின் நீல வண்ணக் குவளை மலர்கள் விளங்க, கயல்களும், வயல்களில் உள்ள வாளை மீன்களும் அச்சம் கொண்டு விலகிச் செல்லுமாறு எருமைகள் படி, அன்னப் பறவைகள் அதிர்ந்து ஒலி எழுப்பும் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் இனிய வண்ணம்தான் என்னே !

852. மடைச்சுர மறிவன வாளையும் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனல்காழிச்
சடைச்சுரத்து உறைவதோர் பிறையுடை அண்ணல்
சரிதைகள் பரவி நின்று உருகுசம்பந்தன்
புடைச்சுரத்து அருவரைப் பூக்கமழ் சாரல்
புணர் மடநடையவர் புடைஇடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணிஇலர்தாமே.

தெளிவுரை : நீர்மடைகளில் வாளையும் கயலும் துள்ளி மகிழும் வளப்பம் உடைய வயல் வளம் மருவிய காழிப் பதியின்கண், சடைமுடியில், பிறையுடன் திகழும் அண்ணலாகிய ஈசனார் அருள் நிலைகளைப் பரவி நின்று உள்ளம் உருகும் ஞானசம்பந்தன், அருமையான மலைச்சாரலில், பூக்கள் கமழ அமர்ந்துள்ள இடைச்சுரத்தை ஏத்திய இத்திருப்பதிகத்தை இசையோ சொல்ல வல்லவர்கள், பிணியற்றவராய் விளங்கி மகிழ்ந்து இருப்பர்.

திருச்சிற்றம்பலம்

79. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

853. அயில்உறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயில்உறு சாயல வனமுலை ஒருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்உறு சரிதையர் எருதுஉகந்துஏறிப்
பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடம்என உடையார்
கழுமல நினையநம் வினைகரிக அறுமே.

தெளிவுரை : ஈசனார், கூர்மையான சூலமும், மழுவும் படையாக உடையவர்; இடப வாகனம் உடையவர்; சடைமடியில் பாம்பும், சந்திரனும் தரித்த அழகர்; மயில் போன்ற சாயலை உடைய உமாதேவியை ஒரு பாகம் ஏற்று மகிழ்பவர்; சிவந்த வானத்தில் கருமுகில் சேர்ந்ததைப் போன்ற மிடற்றை உடையவர்; நன்னெறியில் சஞ்சரிப்பவர்; இடபவாகனத்தில் ஏறிப்பாடியும் ஆடியும் பிச்சை ஏற்பவர்; வலிமை மிக்க திருக்கயிலையையும், பொதிய மலையையும் தமது இடமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் கழுமல நகரில் வீற்றிருந்து அருள் புரிய, அதனை நினைத்துப் போற்ற நம் வினையின் தீமை அறும்.

854. கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி உறைபவர் படுதலைக்கையர்
பண்டுஅவர்அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை அடிகளார் பதியதன்அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் கறவு
மறிகடல் திரை கொணர்ந்து எற்றியகரைமேல்
கண்டலும் கைதையு நெய்தலும் குலவும்
கழுமல நினையநம் வினை கரிசுஅறுமே.

தெளிவுரை : ஈசனார், மேகமும் நீலமும் பொருந்திய மிடறுடையவர்; கொடுமுடியில் உறைபவர்; மண்டை ஓட்டினைக் கையில உடையவர்; பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்து நான்முகனாகச் செய்தவர்; சடை முடி யுடையவர். அப்பெருமான், ஊருக்கு அயலாக, வண்டல் மண்ணும், தோணியும், சங்குகளும், சுறா மீன்களும் அலைகள் வாயிலாகச் சேர்க்கும் கடல் கரையில் நீர் முள்ளியும், தாழையும் நெய்தற் பூக்களும் சேரும் கழுமல நகரில் வீற்றிருக்கு, அதனை நினைத்து வணங்கிட வினையின் தீமைஅறும்.

855. எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின்று அடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமல நினையநம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : ஈசனார், எண்ணத்தில் ஒன்றாகக் கலந்திருந்து மகிழ்விப்பர்; உருவத் திருமேனி கொண்டு, உமாதேவியுடன் ஒரு பாகத்தை உடைய அர்த்தநாரியாகவும், வேறாகத் தனித்தும் ஆக இரண்டும் உடையவர்; எரியினில் சூட்டின் பரிசம், ஒளியின் வண்ணம் எரிகின்ற போது வினையும் ஓசை ஆக மூன்று தன்மையுடையவர்; நான்கு மறைகளையும் ஆள்பவர்; மண்ணிடையில் ஐந்து தன் மாத்திரைகள் கொண்டவர்; வேதத்தின் ஆறு அங்கம் ஆகியவர்; ஏழிசையாக விளங்கும் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் நிஷாரம் (ச, ரி, க, ம, ப, த, நி) என விளங்குபவர்; அட்டாவதானம் முதலான் எட்டு அரங்கலையானவர்; ஒன்பது வகையான பண்களும் ஆனவர்; பத்தர்கள் பாடி நின்று தொழுது போற்றி நிற்க, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரியுண்ணச் செய்தவர். அத்ததைய பெருமான் கருதிய கோயிலாகிய கழுமலத்தை நினைக்க நம்வினையானது அற்றொழியும்.

856. எரிஒரு கரத்தினர் இமையவர்க்கிறைவர்
ஏறுஉகந்துஏறுவர் நீறுமெய்பூசித்
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் மேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவரல்அஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக்கு இடமாம்
கழுமல நினையநம் வினைகரிசுஅறுமே.

தெளிவுரை : ஈசனார், நெருப்பினை ஒரு கரத்தில் உடையவர்; தேவர்களின் இறைவர்; இடப வாகனத்தை உகந்து ஏறுபவர்; திருநீற்றை மெய்யில் பூசித் திரியும் இயல்பினர்; முப்புரங்களை எரித்தவர்; உமாதேவி அஞ்சி நடுங்கமாறு வந்த கரிய யானையின் தோலை உரித்தவர். அத்தகை பெருமானுக்கு இடமாகிய கழு மலத்தை நினைக்க நம் வினையின் தீமை அறும்.

857. ஊர் எதிர்ந்திடு பலி தலைகலனாக
உண்பவர் விண்பொலிந்து இலங்கிய உருவர்
பார்எதிர்ந்து அடிதொ விரைதரு மார்பில்
படஅரவு ஆமைஅக்கு அணிந்தவர்க்கு இடமாம்
நீர்எதிர்ந்து இழிமணி நித்தில் முத்த
நிரைகரி சங்கமொடு ஒண்மணிவரன் றிக்
கார்எதிர்ந்து ஓதம் வன் திரைகரைக்கு எற்றும்
கழுமல நினையநம் வினகரிசு அறுமே.

தெளிவுரை : ஈசனார், பிரம கபாலம் ஏந்தி ஊர்களில் திரிந்து பிச்சை யேற்பவர்; ஆகாயம் பொலியுமாறு விரிந்த திருமேனி கொண்டவர்; உலகத்தவர் வணங்குமாறு மணம் திகழும் மார்பில் நாகம், ஆமையோடு, உருத்திராக்க மணி அணிந்தவர். அப் பெருமானுக்கு இடமாக உள்ள, முத்துக்களும் சங்குகளும் திரைகள் வாயிலாகக் கடற்கரைக்குக் கொண்டு சேர்க்கும் கழுமல நகரினை நினைக்க நம் வினையின் தீமை அறும்.

858. முன்னுயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி
முடியுடை அமரர்கள் அடிபணிந்து ஏத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரருளாளனார் பேணிய கோயில்
பொன்னியல் நறுமலர் புனலொடு தூபம்
சாந்தமும் ஏந்திய கையினர் ஆகிக்
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும்
கழுமல நினைய நம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : உலகம் தோன்றுவதற்கு முன்னர் தோன்றியும் பிரளய காலத்திலும் விளங்குதல் செய்து தேவர்கள் எல்லோரும் அடிபணிந்து ஏத்த, சடையின் மீது பிறை சூடிய பேரருளாளராகிய ஈசனார், பேணிய கோயிலானது, பொன்போன்ற உயர்ந்த மணம் பொருந்திய மலர்களும், தூபம், சந்தனம் ஆகியவற்றுடன் பூசனை செய்து, கன்னியர்கள் நாள்தோறும் வழிபாடு இயற்றும் தன்மையில், ஈசன் திருவடியையே போற்றுகின்ற கழுமல நகர் ஆகும். அந்நகரை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

859. கொலைக்கு அணித்தவாரு கூற்றுஉதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின்
நிலைக்கு அணித்தா வர நினையவல்லார்தம்
நெடுந்துயர் தவிர்த்த என் நிமலருக்கு இடமாம்
மலைக்கு அணித்தா வர வன்திரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும்
கழுமல நினையநம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : ஈசனார், மார்க்கண்டேயரின் உயிரைக் கவருவதற்கு என வந்த கூற்றுவனை, தன் திருப்பாதத்தால் உதைத்தார். கழல் பணிந்து போற்றுபவர்க்கு அண்மையாய் இருந்து அருள் செய்து, அவரவர்தம் நெடிய துயர்களைத் தவிர்ப்பவர் ஈசன். அத்தகைய நிமலருக்கு இடமாவது, அருகில் வரவேண்டும் எனக் கடலலைகள் ஒலி செய்ய, புன்னை மலர்கள் முத்துப் போன்று அரும்ப, கலை மான்கள் சோலைகளின் நிழலில் வாழும் கழுமல நகர் ஆகும். அதனை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

860. புயம் பலஉடைய தென் னிலங்கையர் வேந்தன்
பொருவரை எடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம்பல படஅடர்த்து அருளிய பெருமான்
பரிவொடும் இனிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினு(ம்) மண்ணினும் எங்கும்
வேறுவேறு உகங்களில் பெயருளதுஎன்னக்
கயம்பல படக்கடல் திரைகரைக்கு எற்றும்
கழுமல நினைய நம்வினை கரிசு அறுமே.

தெளிவுரை : பல தோள்களை யுடைய தென்னிலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய தலையையும் தோளையும் அச்சம் கொள்ளுமாறு அடர்த்துப் பின்னர் அருள் செய்த பெருமான், பரிவுடன் இனிது உறையும் கோயிலாவது, பல பெயர்களை யுகங்கள்தோறும் கொண்டுள்ள கழுமலம் என்னும் நகரில் உள்ளதாகும். இத் தலத்தை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

861. விலங்கல் ஒன்று ஏந்திவன் மழை தடுத்தோனும்
வெறிகமழ் தாமரை யோனும் என்று இவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரிதாய
பரிசினன் மருவி நின்று இனிதுறை கோயில்
மலங்கிவன் திரைவரை யெனப் பரந்தெங்கு
மறிகடல் ஓங்கிவெள் ளிப்பியும் சுமந்து
கலங்கள் தன் சரக்கொடு நிரக்கவந்துஏறும்
கழுமல நினைய நம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : கோவர்த்தன மலையை ஏந்திக் கொடிய மழையைத் தடுத்து உயிர்களைப் பாதுகாத்த திருமாலும், தாமரை மலரில் விளங்கும் பிரமனும் தமது பலத்தின் திறமை கொண்டு தேடியும் அறிய இயலாத பெருமையுடைய ஈசன், மருவி விளங்குகின்ற இனிய கோயிலான வன்மையான கடல் அலைகள் பரவி வெண்மையான இப்பிகளைச் சுமந்தும், மரக்கலங்களில் சரக்குகள் ஏறும் கழுமலத்தை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

862. ஆம்பலதவம் முயன்று அறவுரைசொல்லும்
அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்
நோம்பல தவம் அறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்
சாம்பலும் பூசி வெண் தலைகல னாகத்
தையலார் இடுபலி வையகத்து ஏற்றுக்
காம்பன தோளியொடு இனிதுறை கோயில்
கழுமல நினைய நம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : ஆகும் பல தவங்களை முயன்று அறவுரைகள் சொல்லும் சமணரும் பௌத்தரும், மெய்யாக நோற்றுச் செய்யும் தவம் அறியாதவராய் இருக்க அவ் உரைகளைக் கொள்ளாதவராகிய ஈசன், திருமேனியில் சாம்பலைப் பூசிக் கபாலத்தைக் கையில் ஏந்தி மாதர்கள் இடுகின்ற பிச்சையை உலகில் ஏற்று, உமாதேவியுடன் இனிது வீற்றிருக்கும் கோயிலாகிய கழுமலத்தை நினைக்க நம் வினையின் தீமை அறும்.

863. கலிகெழு பாரிடை ஊர்என உளதாம்
கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர்மேல்
வலிகெழு மனமிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலை என்று உரைசெய்த பத்தும்
உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார்மேல்
மெலிகெழு துயர்அடை யாவினை சிந்தும்
விண்ணவர் ஆற்றிலின் மிகப்பெறு வாரே.

தெளிவுரை : ஒலிமிக்க உலகில் ஊர் என எக்காலத்திலும் விளங்கும் கழுமலம் என்னும் நகரை விரும்பிக் கோயில் கொண்ட ஈசன்மேல், வலிமைமிக்க பற்றுக் கொண்டு, கலை ஞானத்திலும், வேதத்திலும் வல்ல ஞானசம்பந்தன், தமிழில் இசை மிக்க மாலையாய் உரை செய்த இத் திருப்பதிகத்தை உள்ளத் தூய்மையினால் நினைந்து பாடுபவர்கள் மீது, மெலிவைத் தருகின்ற துன்பம் அடையாது, அவர்களிடம் பற்றி இருக்கும் வினை அகலும் அவர்கள் தேவர்களுடைய ஆற்றலை விட மிகுதியான ஆற்றலைப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

80. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

864. கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

தெளிவுரை : வேதத்தை நன்கு கற்றுத் தேர்ந்து, உலகத்தில் துன்பத்தை நாடாதவாறு வேள்வி செய்யும் மறையவர்கள் வாழ்கின்ற தில்லையின், சிற்றம் பலத்தில் இளமையான சந்திரனைச் சூடி விளங்கும் முதல்வனாகிய ஈசன் பாதத்தைப் பற்றி வணங்குபவர்களுக்குப் பாவம் அணுகாது.

865. பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டு எரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.

தெளிவுரை : வேள்விச் சாலை அமைத்து, ஆன்மா மகிழ்ந்து விளங்குவதற்கு உரிய வேள்வி புரிந்து, ஓம்புதல் செய்யும் சிறப்பினை யுடைய மறையவர்கள் வாழ்கின்ற தில்லை நகரின் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் பிறப்பிலாப் பெருமானை, தாழ் சடையுடையவனை மறவாது, எஞ்ஞான்றும் நினைத்து, வழிபடுபவர்கள் உலக மாலையயிலிருந்து நீங்கியவராய்த் திகழ்வார்கள்.

866. மையார் ஒண்கண்ணார் மாடநெடுவீதிக்
கையால் பந்துஓச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகேத்தச்
செய்யாள் உறைகோயில் சிற்றம் பலம்தானே.

தெளிவுரை : மை பூசிய கண்களையுடைய மகளிர்பந்து வீசி விளையாடும் நெடிய வீதிகளைக் கொண்ட தில்லையுள், எக்காலத்திலும் பொய்ம்மையடையாத வேத பாடல்களை விரும்பி, உலகத்தோர் ஏத்தி வணங்குகின்ற செம்மையுடைய ஈசன், உறைகின்ற கோயில் சிற்றம்பலம்தான்.

867. நிறைவெண் கொடிமாட நெற்றிநேர் தீண்டப்
பிறைவந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறைவண்டு இறைஓவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

தெளிவுரை : வெண்மையான கொடிகளைக் கொண்ட மாடங்களில் முகப்பில், சந்திரன் ஒளி சாரும் பேரம்பலம் உடைய தில்லையில், சிறகுகள் உடைய, ஓய்வில்லாது ஒலித்து மகிழும் சிற்றம்பலம் மேவும் நடராசப் பெருமானின் திருக்கழலைப் போற்றி வணங்குதலே இன்பம் தரும்; மற்றவை இன்பம் ஆகாது என வெளிப்படுத்தப்பட்டது.

868. செல்வ நெடுமாடம் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே.

தெளிவுரை : செல்வ வளத்தைக் காட்டும் உயர்ந்த மாட மாளிகைகள் விளங்க, ஞானமாகிய செல்வம் தோய, அச் செல்வத்தில் மிக்க மறைஞானச் செல்வர்கள் வாழும் தில்லையில், சிற்றம்பல நாதனாகிய செல்வக் கழலை ஏத்துதல் நல்ல மாண்பு  உண்மையான செல்வம் ஆகும்.

869. வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுள் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்துஎம்
பெருமான் கழல்அல்லால் பேணாது உள்ளமே.

தெளிவுரை : மாந்தளிர்போல் வண்ணம் உடைய உமாதேவியை ஒரு பாகமாய்த், திருமகள் வாசம் புரியும் தில்லையுள் யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தும், நஞ்சு அருந்திய கண்டத்தை உடையவரும் ஆகிய சிற்றம்பலவன் கழலையன்றி என் உள்ளம் வேறு பொருளை நாடாது.

870. அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடு மகிழந்தான் உலகேத்தச்
சிலையால் எயில்எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.

தெளிவுரை : கங்கையைத் தலையில் சூடி, உடலின் ஒரு பாகத்தில் மலையான் மகளாகிய உமாதேவியை வைத்து மகிழந்தவன், உலகத்தோர் போற்றி வணங்குமாறு, மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரக் கோட்டைகளை எரித்து அழத்த, அப்பெருமானுடைய இடமாக விளங்கும் சிற்றம்பலத்தை தலையால் வணங்குபவர்கள், சிறப்பினை அடைந்தவர்கள் ஆவர்.

871. கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய்எல்லாம் தீர்தல் திண்ணமே.

தெளிவுரை : கூரிய வாளையுடைய அரக்கனான இராவணனின் வலிமையை அடக்கி, புகழ் பெருகும் சிற்றம்பலம் மேவும், கங்கை தரித்த சடையுடைய ஈசனை, நாள்தோறும் ஏத்துபவர்களுக்குத் தீர்க்க முடியாத எல்லா நோயும் தீரும். பிறவி நோயும் தீரும். இது உறுதி.

872. கோண்நா கஅணையானும் குளிர்தா மரையானும்
காணார் கழல்ஏத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

தெளிவுரை : வளைந்த நாகத்தைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரைமேல் உள்ள பிரமனும் காணாதவராய் நிற்க, பின்னர் திருவடியை ஏத்தத் தீப்பிழம்பாய் ஓங்கிக் காட்சி நல்கியவன் ஈசன். அப்பெருமான் விளங்கும், தேவர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்தை ஏத்த எல்லாவகையான நோய்களும் தாமாகவே மாயும்.

873. பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

தெளிவுரை : துவாராடையை அணிந்து, அறியாளையுடையவராய் உள்ளவர்கள் சொற்களைக் கேட்டு மயக்க கொள்ளது, ஒழுக்கம் மிக்க பெரியோர்கள் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் மேவி நடம்புரியும் பெருமானை, தினந்தோறும் தொழுவோமாக.

874. ஞாலத்து உயர்காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப்படை யானைச் சொன்ன தமிழ்மாலை
கோத் தால்பாட வல்லார் நல்லாரே.

தெளிவுரை : உலகத்தில் உயர்ந்து விளங்கும் காழிப் பதியில் ஞான சம்பந்தன், ஆசார ஒழுக்கத்தால் விளங்கும் சிற்றம்பலத்தில் சூலப் படையுடன் மேவும் ஈசனைப் போற்றிச் சொன்ன இத் தமிழ் மாலையை அழகுடன் பாட வல்லவர் நல்லவர்.

திருச்சிற்றம்பலம்

81. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

875. நல்லார் தீமேவும் தொழிலார் நால்வேதம்
சொல்லார் கேண் மையார் சுடர்பொன் கழலேத்த
வில்லால் புரஞ்செற்றாள் மேவும் பதிபோலும்
கல்லார் மதிழ்சூழ்ந்த காழிந் நகர்தானே.

தெளிவுரை : நன்மை தரும் வேள்வித் தீ வளர்த்துச் செயல் புரியும் நான்கு வேதத்தையும் கற்று, மந்திரச் சொற்களைக் கூறும் அந்தணர்கள் பொற்கழலைப் போற்றி இருக்க, முப்புரத்தை எரித்த ஈசன் மேவும் பதி, மதில் சூழ்ந்த காழிநகர்.

876. துனிவண் தேன்பாயும் இதழி தூமத்தம்
தெளிவெண் திங்கள் மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களிவண்டு யாழ்செய்யும் காழிந் நகர்தானே.

தெளிவுரை : வளமான தேன் துளி யுடைய கொன்றை மலர், ஊமத்தம், தெளிந்த வெண்மதி, நாகம், கங்கை ஆகியன திகழ்கின்ற சென்னியில் மண்டை ஓட்டு மாலையை உகந்த ஈசன் ஊரானது, வண்டு களிப்புடன் தேன் அருந்தி ரீங்காரம் செய்யும் காழி நகர்.

877. ஆலக் கோலத்தின் நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால்
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலன் காய்ந்தான் ஊர் காழிந் நகர்தானே.

தெளிவுரை : ஆலகால விடத்தைத் தான் உண்டு, அமுதத்தை வேதர்களுக்கு அளித்து அருள் புரிந்து தன்மையைப் போன்று, மார்கண்டேயருக்கு நன்றாகப் பரிந்து திருப்பாதத்தால் காலனை உதைத்து மாய்த்த ஈசனது, ஊர், காழி நகர்.

878. இரவில் திரிவோர்கட்கு இறைதோள் இணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தான் இடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீறு அணிவோர்க்கும்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.

தெளிவுரை : இரவில் திரிகின்ற அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனுடைய இருபது தோள்களும் அடங்குமாறு செய்தும், வானினை அளித்து துதிப்போர்க்கும், திருவெண்ணீறு அணிபவர்களுக்கும் வரையாது வழங்கும் வண்மைக் குணம் உடையவர்கள் வாழும் காழி நகர் ஆகும்.

879. மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறியாத மாட்சிமையுடையவன், தோலால் ஆகிய உடையும் அணிந்து மார்பில் முப்புரி நூல் பொருந்த விளங்கும் ஈசன் விளங்கும் பதியானது, இரந்து வருபவர்களுக்கு எல்லா நாட்களிலும் எல்லாக் காலங்களிலும் இல்லை என்று உரைக்காமல் வழங்கும் வள்ளல் தன்மையுடையவர் வாழும் காழி நகர் ஆகும்.

880. தம்கைஇட உண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை உணராதே பேணித் தொழு மின்கள்
மங்கை ஒரு பாக மகிழ்ந்தான் மலர்சென்னிக்
கங்கை தரித்தான்ஊர் காழிந் நகர்தானே.

தெளிவுரை : கையில் உணவு ஏந்தி உண்பவர், காவியுடை கொண்டவர் ஆகியோரின் தீயொழுக்கத்தைத் ஏற்றுக் கொள்ளாது, மங்கையைப் பாகம் கொண்டு மகிழ்ந்து, கொன்றை மலர் முதலானவைகளும், கங்கையும் சென்னியில் தரித்த ஈசனைத் தொழுமின்கள். அவனது ஊர் காழி நகர்.

881. வாசம் கமழ்காழி மதிசெஞ் சடை வைத்த
ஈசன் நகர்தன்னை இணைஇல் சம்பந்தன்
பேசும் தமிழ்வல்லோர் பெருநீர் உலகத்துப்
பாசம் தனைஅற்றுப் பழியில் புகழாரே.

தெளிவுரை : சந்திரனைச் செஞ்சடையில் வைத்த ஈசன் நகராகிய மண் கமழ் காழியின் இணையில்லாத ஞானசம்பந்தன் தமிழ்ப் பதிகத்தை உரைப்பவர்கள், கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில், பாசத்தை நீத்துப், பழியற்ற புகழை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

82. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

882. இரும்பொன் மலைவில்லா எரிஅம் பாநாணில்
திரிந்த புரமூன்றும் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

தெளிவுரை : பெரிய பொன்மலையாகிய மேருவை வில்லாகவும் அக்கினியை அம்பாகவும் கொண்டு வாசுகி என்கின்ற நாணில் ஏற்றிப் புரங்கள் மூன்றையும் எரித்து அழித்த ஈசன் உறையும் கோயில், அடியவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சிறப்புடைய வீழிமிழலையாகும்.

883. வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத் திசை யோடும் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலிஓரா வீழி மிழலையே.

தெளிவுரை : துன்பத்தால் வேதனையுற்ற வானோர்கள் துயர் தீரக் கடல் நஞ்சினை உண்ட ஈசனார் கோயிலானது, வேத பாடசாலையில் வேத பாராயண ஒலி ஓய்வில்லாது ஒலிக்கும் வீழிமிழலையாகும்.

884. பயிலும் மறையாளன் தலையில் பலிகொண்டு
துயிலும் பொழுதுஆடும் சோதி உறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் இளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

தெளிவுரை : மறையாளன் எனப்படும் பிரமாவின் சிரசினைக் (பிரமகபாலம்) கொண்டு பிச்சையேற்று எல்லோரும் துயிலும் காலமாகிய இரவில் ஆடும் சோதியாகிய ஈசன் உறையும் கோயிலாவது, மயில் சந்திரனைப் போன்ற முகமும், இள மூங்கிலைப் பொலிகின்ற மாதர்கள் திகழும் வீழிமிழலையாகும்.

885. இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு அருள்செய்த நிமலன் னுறைகோயில்
குரவம் சுரபுன்னை குளிர்கோங்கு இளவேங்கை
விரவும் பொழில்அந்தண் வீழி மிழலையே.

தெளிவுரை : சந்திரனும் சூரியனும் எஞ்சிய தேவர்களும் உரிய வழியில்  தக்கனது யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காகத் தண்டனை செய்து அருள் புரிந்த ஈசன் உறையும் கோயிலாவது, குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை மரங்கள் சூழும் பொழிலையுடைய வீழிமிழலையாகும்.

886. கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணில் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணில் புயல்காட்டும் வீழி மிழலையே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணால் மன்மதனைப் பொடியாக்கி, அவன் மனைவியாகிய இரதி பணிந்து வேண்டுதல் செய்ய அருள் புரிந்த ஈசன் உறையும் கோயிலானது, பூவுலகத்தில் பெரிய வேள்வியைப் புரிந்து அதன் புகை நாள்தோறும் வானத்தில் சென்று மேகம் போன்று காட்டும் வீழிமிழலையாகும்.

887. மால்ஆ யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலால் எரிகாட்டும் வீழி மிழலையே.

தெளிவுரை : திருமால் ஆயிரம் மலர்களுடன் தன் மலர் போன்ற கண்ணை இட்டுப்போற்ற, ஆழிப்படையாகிய வலயத்தைச்  சக்கரத்தைத் தந்த ஈசன் உறையும் கோயிலானது, பொய்கையில் சேல்கள் சூழ்ந்திருக்க மேலே தீச்சுடர் போல் விளங்கும் செந்தாமரை மலர் கள் உடைய வீழிமிழலையாகும்.

888. மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தாள் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

தெளிவுரை : நல்ல ஞானத்தால் வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கொண்டு செல்லக் கொதித்து வந்த கூற்றுவனை அழித்த ஈசன் உறையும் கோயிலாவது, ஆசார அனுட்டானங்களில் மிக்கவராய் விளங்கும பெருமக்கள், விதிப்படி நியமங்கள் புரியும் வீழிமிழலையாகும்.

889. எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள் ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

தெளிவுரை : மலையைப் பெயர்த்த இராவணனுடைய தருக்கினை அழித்துத் திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்து, பின்னர் மந்திரவாளைக் கொடுத்து ஆட்கொண்ட ஈசன் உறைகின்ற கோயிலாவது, வேதங்களை நன்று கற்றுத் தேர்ந்து வேள்விகளைப் பயின்று பாவத்தை வீழ்த்தியவர்கள் மிக வாழும் வீழிமிழலையாகும்.

890. கிடந்தான் இருந்தானும் கீழ்மேல் காணாது
தொடர்ந்து ஆங்கு அவர்ஏத்தச் சுடர்ஆ யவன்கோயில்
படந்தாங்கு அரவு அல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.

தெளிவுரை : கிடந்து பள்ளி கொள்ளும் திருமாலும், இருந்து தொழிலாற்றும் பிரமனும், அடியும் முடியும் காணாது தொடர்ந்து, அவர்கள் அயர்ந்து ஏத்தி வணங்கத் தீச்சுடர் ஆகிய ஈசன் உறையும் கோயிலானது, பாம்பின் படம் போன்ற அல்குலும், பவளம் போன்ற வாயும், விடம் தாங்கிய கண்களும் உடைய மாதர்கள் விளங்கும் வீழிமிழலையாகும்.

891. சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்
நக்கு ஆங்கு அலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.

தெளிவுரை : தட்டும், துவராடையும் கொண்டு ஏளனமாக நகை செய்து பழிச்சொல் கூறப்படும் ஈசன் உறையும் கோயிலானது, தகுதி வாய்ந்த வேத விற்பன்னர்கள் வேள்விகளை ஆற்றி உலகத்தின் தலை சிறந்தவர்களாக வாழும் வீழிமிழலையாகும்.

892. மேல்நின்று இழிகோயில் வீழிமிழலையுள்
ஏனத்து எயிற்றானை எழிலார் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவைசொல்ல வல்லோர் நல்லோரே.

தெளிவுரை : விண்ணுலகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த கோயிலாகிய வீழிமிழலையுள் வீற்றிருக்கும் பன்றியின் பல்லை அணியாகக் கொண்டுள்ள ஈசனை ஏத்தி, எழில் மிக்க பொழில்திகழ் காழியின் ஞானசம்பந்தன் மெய்யாகக் கூறிய இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லோர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

83. திருஅம்பர்மாகாளம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

893. அடையார் புரமூன்றும் அனல்வாய் விழவெய்து
மடையார் புனல்அம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

தெளிவுரை : முப்புரங்களைத் தீக்கிரையாக்கி, வாய்க்கால்களில் நீர் பெருகும் அம்பர்மாகாளத்தில் மேவிய இடபக் கொடி யுடைய எந்தை, வெண்பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன் ஆவர். சடையுடைய அப்பெருமான் கழல் ஏத்த வினை அணுகாது.

894. தேனார் மதமத்தம் திங்கள் புனல்சூடி
வானார் பொழில்அம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னில் பலிகொண்டு உழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.

தெளிவுரை : தேன் மிகுந்த ஊமத்த மலருடன், சந்திரனும், கங்கையும் சூடி வானளவு உயர்ந்த மரங்கள் கொண்ட பொழில் சேர் அம்பர்மாகாளம் மேவி, பிரம கபாலம் ஏந்திப் பலியேற்று உழலும் வாழ்க்கை உடையவனாகிய ஈசனார் கழல் ஏத்த, அல்லல் அடையாது.

895. திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழில்அம்பர் மாகாளம்மேய
நரையார் விடையூரு நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கள்மேல் ஒழியா ஊனம்மே.

தெளிவுரை : அலைகள் கொண்ட நீராகிய கங்கையுடன், செல்வம் மிக்க மதி சூடி, நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர்மாகாளம் மேவிய, கம்பீரமாகப் பீடுடையுடைய வெண்மையான இடப வாகனத்தில், ஊர்கின்ற நண்பனாகிய ஈசன் கழலை வணங்கித் தினந்தோறும் போற்றி உரைக்க வேண்டும். அவ்வாறு உரைக்காதவர்கள் குறைகள் தீராது. ஈசன் கழலை வணங்கிப் போற்ற குறைகள் தீரும்.

896. கொந்து அண்பொழில் சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலிஅம்பர் மாகாளம்மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன்சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந்து அடையாவே.

தெளிவுரை : கெத்தாகப் பூக்கும் பொழில்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகள் மகிழ்ந்து தேனருந்தவும், தென்றல் காற்று வீசும் அம்பர்மாகாளம் மேவி, கந்தம் கமழும் கொன்றை மலரை, நறுமணம் கமழும் சடையில் வைத்துள்ள, எந்தையாகி ஈசனார் கழலை ஏத்தி வணங்க, இடர் இல்லை.

897. அணிஆர் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணிஆர் புனல்அம்பர் மாகா ளம்மேய
துணிஆர் உடையினான் துதைபொன் கழல்நாளும்
பணியா தவர்தம்மேல் பறையா பாவம்மே.

தெளிவுரை : அழகு பொருந்திய மலை மங்கையான உமாதேவியை உடலில் ஒரு பாகமாக வைத்து, சங்கு, முத்துக்கள் விளங்கும் நீர்நிலைகள் கொண்ட அம்பர் மாகாளம் மேவி, துணிக்கப்பெற்ற  கிழிந்த, கோவணத்தை உடுத்திய ஈசனார் பொற்கழலை, நாள் தோறும் பணியாதவர்களின் பாவம் அழியாது. பணிபவர்கள் பாவம் அழியும் என்றவாறு.

898. பண்டுஆழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழில்அம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.

தெளிவுரை : கடல் நஞ்சை உண்டு மகிழ்ந்து அம்பர் மாகாளத்தில், முப்புரம் எரிசெய்வதற்காக, மேருவை வில்லாகக் கொண்டு, மேவிய ஈசனார் திருக்கழல் ஏத்தக் குற்றம் சாராது.

899. மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழில்அம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாரும் தவந்தானே.

தெளிவுரை : மிளிர்ந்து ஓங்கும் அரவுடன் வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி, கிளர்ந்து எழுகின்ற சடையுடைய அண்ணலாகிய ஈசனார், வளர்கின்ற பொழிலையுடைய, அம்பர்மாகாளத்தில் மேவியுள்ளார். அவருடைய, கெடுதியில்லாத திருக்கழலை ஏத்திப் பணிய, நோய்கள் யாவும் நீங்கும்; தவம் சார்ந்து மேவும்.

900. கொலைஆர் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலைஆர் புனல் அம்பர் மாகா ளம்மேய
இலைஆர் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய படைக்கலமாகிய மழுவும், அழகிய வில்லும் ஏந்தி, மூவிலையுடைய சூலம் கொண்டு, மலையிலிருந்து வீழும் நீர் வளம் மிக்க அம்பர்மாகாளத்தில் மேவிய ஈசனார் திருக்கழலை, நாள்தோறும் உறுதியாக நினைப்பவர்களுக்கு வினையானது, நின்று தீங்கு செய்யாது.

901. சிறைஆர் வரிவண்டு தேனுண்டு இசைபாட
மறைஆர் நிறைஅம்பர் மாகா ளம்மேய
நறைஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா
இறையான் கழல்ஏத்த எய்தும் இன்பமே.

தெளிவுரை : சிறகுகளை யுடைய வண்டுகள் தேன் உண்டு இசைத்து ரீங்காரம் செய்ய, வேதங்கள் முழங்கும் அம்பர்மாகாளம் மேவியவன் ஈசன். தேன் பொருந்திய தாமரை மலர்மீது உறையும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு முடியாத அப்பெருமான் திருக்கழலை ஏத்த, இன்பம் உண்டாகும்.

902. மாசூர் வடிவின்னார் மண்டை உணல்கொள்வார்
கூசாது உரைக்கும்சொல் கொள்கை குணமல்ல
வாசார் பொழில் அம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே.

தெளிவுரை : மாசு படிந்த வடிவம் உடையவர்கள், கூசாது உரைக்கும் பொய்யுரை குணம் மிக்கதாகாது. நறுமணம் மிக்க பொழிலுடைய அம்பர் மாகாளம் மேவிய ஈசன் திருநாமத்தை உரைப்பவர்களுக்கு, இடர் இல்லை.

903. வெரிநீர் கொளஓங்கும் வேணுபுரந் தன்னுள்
திருமா மறைஞான சம்பந்தன் சேணார்
பெருமான் மலிஅம்பர் மாகா ளம்பேணி
உருகா உரைசெய்வார் உயர்வான் அடைவாரே.

தெளிவுரை : தேன்போன்ற இனிமையான நீர் கொண்டு ஓங்கும் வேணுபுரத்தில் விளங்கும், செல்வ வளம் மிக்க மறைவல்ல ஞானசம்பந்தன், தேவர் பெருமானாக வீற்றிருந்து அருள்புரியும் ஈசன் திகழும் அம்பர் மாகாளத்தைப் பேணி, மனம் உருகி இத் திருப்பதிகத்தை ஓத, அவ்வாறு உரைப்பவர்கள் உயர்ந்த வானுலகத்தில் உள்ள பெருமையை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

84. திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

904. புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையும் சடைமேலோர் நகுவெண் தலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையும் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : அழகினைத் தரும் விரிந்த கொன்றை மலர் சூடிய கடவுள், கங்கை திகழும் சடைமேல், மண்டையோட்டினைத் தரித்து, வினையிலிருந்து நீங்கிய மெய்யடியார்கள் விதிமுறைப்படி வழிபாடு செய்ய, ஒலி எழுப்பும் கடற்கரையில் உள்ள நாகையில், காரோணத்தில் வீற்றிருப்பவர்.

905. பெண்ஆண் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூர் உறைஅம்மான்
மண்ஆர் முழவுஓவா மாடம் நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : சத்தியும் சிவனும் என நின்ற பெருமான், பிறைச் சந்திரனைச் சென்னியில் சூடிய அண்ணாமலையானாகவும், திருவாரூரில் உறைபவனாகவும், முழவு ஒலி ஓய்வின்றி மேவும் மாட மாளிகைகள் உடைய நீண்ட வீதிகளைக் கொண்ட, கடல் சூழ் நாகையில் காரோணத்தின்கண்ணும் விளங்கின்றான்.

906. பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழல்ஊட்டி அடியார்க்கு அருள்செய்தான்
தேரார் விழவுஓவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ னத்தானே.

தெளிவுரை : பூவுலகத்தவர் தொழ, தேவர்கள் பணிய மூன்று மதில்களை நெருப்புக்கு இரையாக்கி, அடியவர்க்கு அரும் செய்தவன், தேர்த் திருவிழா நடைபெறும் செல்வச் சிறப்புடையவனாக, அலைகடல் சூழ் நாகையின் காரோணத்தில் விளங்குபவனே.

907. மொழிசூழ் மறைபாடி முதிரும் சடைதன்மேல்
அழிசூழ் புனல்ஏற்ற அண்ணல் அணியாய
பழிசூழ் விலர்ஆய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : மந்திர மொழி யுடைய வேதங்களை ஆய்ந்து, சடையின்மேல், கங்கையை ஏற்ற அண்ணலாகிய ஈசன், எத்தகைய பழியையும் அடைதற்கு இல்லாத சிறப்புடைய பக்தர்கள் பணிந்து ஏத்த அண்மையனாய் உப்பங்கழி சூழ்ந்த கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவன்.

908. ஆணும்பெண் ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச்
சேண்நின் றவர்க்கு இன்னம் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : சிவனும் சக்தியுமாய் விளங்கி, அடியவர்களுக்குப் போகமும் ஞானமும் அருள் புரிந்து, தேவர்களுக்கு மேலும் வழங்குதற்கு வல்லவனாகிய ஈசன், அன்பு கொண்ட வழிபாடு புரியும் திருத்தொண்டர்கள், நாள்தோறும் கண்டு வழிபடும் கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவன்.

909. ஏனத்து எயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத்து இளந்திங்கள் வளரும் சடையண்ணல்
ஞானத்து உரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானல் கடல் நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : பன்றியும் பல்லும் அரவமும் அணியாகப் பூண்டு சந்திரனைச் சடையில் கொண்ட அண்ணலாகிய ஈசன், ஞான நூல்களில் வல்லவர்கள் நாள்தோறும் பணிந்தேத்தும் நாகைக் காரோணத்தானே !

910. அரையார் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு
விரையார் வரைமார்பில் வெண்ணீறு அணிஅண்ணல்
வரைஆர் வனபோலவளரும் வங்கங்கள்
கரைஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : அரையில் நாகம், மணி ஆகியவற்றைக் கட்டி அசைத்து மணம் கமழும் மார்பில் வெண்ணீறு தரித்த அண்ணல், மலைபோல் கப்பல்கள் வரும் கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவரே.

911. வலங்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண் டோள்
இலங்கைக்கு இறைவாட அடர்த்து அங்கு அருள் செய்தான்
பலங்கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : வளமான புகழ்கொண்டு, மலை போன்ற தோள்களும் உடைய, இலங்கையின் வேந்தனாகிய இராவணன் மெலியுமாறு அடர்த்து, பின்னர் வணங்கித் துதிக்க அருள் செய்த ஈசன், வலிமை மிக்க புகழுடைய பக்தர்கள் பணிந்து ஏத்தப் பூவுலகத்திற்கு அணிகலமாக உள்ள கடல் நாகைக் காரோணத்தானே.

912. திருமால் அடிவீழத் திசைநான் முகன்ஏத்தப்
பெருமான் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூரும் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை :  திருமால், திருவடியைத் தொழுது விழுந்து வணங்கவும், பிரமன் போற்றித் துதிக்கவும், பெருமானே என்று ஏத்தி வழிபடுபாறு நின்று ஈசன். பிறைச் சந்திரனைத் தலையில் சூடி மால்விடையூரும் செல்வன். அப்பெருமான், அலைகள் சூழ்ந்த கரிய பெருமையுடைய கடல் சூழ்ந்த நாகையில் விளங்கும் காரோணத்தில் வீற்றிருப்பவனே.

913. நல்லார் அறம்சொல்லப் பொல்லார் புறம்கூற
அல்லார் அலர்தூற்ற அடியார்க்கு அரும்செய்வான்
பல்லார் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : நல்லோர்கள் அறநூல் பொருள்களை நவிலவும், தீயவர்களும், அறியாமையுடையவர்களும் பயனற்றவைகளைப் பேசியிருப்பினும், பணிந்து ஏத்தும் அடியவர்களுக்கு அரும் செய்யும் ஈசன், தலை மாலை அணிபவனாகிய கடல் நாகைக் காரோணத்தானே.

914. கரை யார்கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலும் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்
கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே.

தெளிவுரை : கடற்கரையில் விளங்கும் நாகையில் காரோணத்தில் வீற்றிருக்கும் வெள்ளிடையானை ஏத்தி நவிலும் ஞானசம்பந்தன் தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் அனைவரும், அழியாத வடுவுடைய அழகினராய் விளங்கி, மங்கல ஒலி முழங்கும் வானுலகை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

85. திருநல்லம்  (அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

915. கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழு தேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்துவிழ எய்த
நல்லா(ன்) நமையாள்வா(ன்) நல்ல நகரானே.

தெளிவுரை : கல்லால மரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்த நீலகண்டப் பெருமானே ! என்று, எல்லா மொழியாலும் தேவர்கள் தொழுது ஏத்தி நிற்க, முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்து மேருமலையை வில்லாகக் கொண்டு விளங்கும், எல்லோரும் நல்லவனாகிய ஈசன், நம்மை ஆண்டு அருள்புரியும் நல்லம் என்னும் நகரை உடையவனே.

916. தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : ஈசனைப் புறம்பாக வைத்து, தக்கன் செய்த யாகத்தில் பங்கேற்ற தேவர்களைத் தண்டித்து, பொன் சடை தாழ்ந்து விளங்கி இருக்க, கொக்கின் இறகும், வெண்பிறைச் சந்திரனும் சூடும் பெருமான், நம்மை எல்லாம் ஆட்கொண்டு அருள் புரிபவன். அவன் நல்லம் என்னும் நகரை உடையவன்.

917. அந்திமதி யோடும் அரவச் சடைதாழ
முந்தி ஆனலேந்தி முதுகாட்டு எரியாடி
சிந்தித்து எழவல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : தேய்ந்த பிறைச் சந்திரனும் நாகமும், சடையில் விளங்க, நெருப்பைக் கரத்தில் ஏந்தி, மயானத்தில் நடம் புரிந்து சிந்தையால தொழுது போற்றும் அடியவர்களுடைய தீராத வினை யாவும் தீர்க்கும் ஈசன், நம்மை ஆட்கொண்டு அருள்புரிபவன். அவன் நல்லம் என்னும் நகரில் விளங்கபவன்.

918. குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே.

தெளிவுரை : குளிர்ந்த சந்திரனும் கொன்றையும் சடையில் விளங்க, மிளிர்ந்து விளங்கும் அரவமும் முப்புரிநூலும் திகழ் மார்பும், தளிர் போன்ற திருமேனியுடைய உமாதேவியைப் பாகமாக உடையவன், தண்வயல் சூழந்த நல்லம் என்னும் நகரத்தில் விளங்கும் ஈசன்.

919. மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடைஎந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : நீலமணி போன்று திகழும் கண்டத்தை உடையவன்; மலர்கள் சூடி பிணித்துக் கட்டப்பட்ட நீண்ட சடையுடைய எந்தையாகிய பெருமான் ஆவர். அப்பெருமானைத் தெளிந்த மனத்தை உடைய தொண்டர்களை மலர்கொண்டு கழல் பேணிப் போற்றித் தொழுது ஏத்த, நாடி வந்து நம்மை ஆட்கொண்டு அருள்புரிவான். அவன் நல்லம் என்னும் நகரில் வீற்றிருப்பவன்.

920. வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசும் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் எனஉள்கி எழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : வாசம் பொருந்திய மலர்கள் பெருகும் மலையான் மகளாகிய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு திருநீற்றை அழகாகத் தரித்து, விரிந்த கொன்றை மலரைச் சூடிய ஈசன், தன்னை நினைத்து வணங்குபவர்களுக்கு வினை நாசன் ஆகுபவன். அப்பெருமான் நம்மை ஆட்கொண்டு அருள் புரிபவன். அவன் நல்லம் எனும் நகரத்தில் விளங்குபவன்.

921. அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ(ன்) நமையாள்வா(ன்) நல்ல நகரானே.

தெளிவுரை : அழகிய வளையலை யணிந்த உமாதேவி கண்டு மகிழுமாறு, நெருப்பைக் கையில் ஏந்தி, தேன் சொரியும், வாசனைமிக்க கொன்றை மலர்சூடி, இளமை யழகு பொலிய, சுடுகாட்டில் ஊழித்தீயின் விளையாட்டை நிகழத்தும் நம் தலைவன், நம்மை ஆட்கொண்டு அருள்புரிபவன். அவன் நல்லம் என்னும் நகரில் விளங்குபவன்.

922. பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலின் கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரலூன்றி
நண்ணார் புரம்எய்தா(ன்) நல்ல நகரானே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாகத் திருமேனியில் கொண்டுள்ள பெருமான், பிறை சூடிய நெற்றியை உடையவன்; கருத்து இன்றிக் கயிலையை எடுத்த இராவணனை, ஒரு நொடிப்பொழுதில் விரலை ஊன்றி அடக்கியன்; அப்பெருமான், பகைவராய்த் திரிந்த முப்புராரிகளை எரித்து அழித்த நல்லம் என்னும் நகரத்தினன்.

923. நாகத்து அணையானு நளிர்மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்துஅங்கு அழகாரும்
நாகம் முரையார்த்தா னல்ல நகரானே.

தெளிவுரை : நாகத்தை அணையாகக் கொண்டு பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ச்சியான தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் போகத்தில் பொலிவடைந்து இருத்தலை யொட்டி உமா தேவியைப் பாகமாகக் கொண்டு, அழகிய நாகத்தை அரையில் கட்டி மகிழ்ந்தவன் நல்லம் என்னும் நகரில் வீற்றிருக்கும் ஈசன்.

924. குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறவில் லுரைகேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் ளரவுஆர்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.

தெளிவுரை : குறிக்கோள் இல்லாத சமணர்களும் தேரர்களும் கூறும் உரைகளை ஏற்காது, அரவத்தை அணியாகக் கொண்டுள்ள ஈசன், வினை தீர்ப்பவன்; பொழில் சூழ்ந்த நல்லம் எனும் நகரத்தில் வீற்றிருப்பவன்.

925. நலமார் மறையோர் வாழ் நல்ல நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைகள் இவைவல்லார் கவலை கழிவாரே.

தெளிவுரை : வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்து வேள்விகள் செய்து நலம் பரப்பும் மறையவர்கள் வாழ்கின்ற நல்லம் என்னும் நகரில் மேவிய, மழுப் படையேந்திய ஈசனை, காழிப்பகுதியில் திகழும் ஞானசம்பந்தன், கருதிச் சொன்ன சாத்திரக் கலைபோன்ற இத்திருப்பதிகத்தை உரைப்பவர்கள், கவலை யற்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

86. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

926. கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின்று இருபோது முனியாது எழுந்துஅன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.

தெளிவுரை : கொட்டும் பறைக்கு ஏற்றாற் போன்று அனலைக் கையில் ஏந்திச் சீராக நடனம் ஆடுகின்ற நல்லூர்ப் பெருமானை, காலை மாலை ஆகிய இரு காலங்களிலும் தடை இல்லாது, அன்பு பொருந்திய நெஞ்சினராய் வழிபடுகின்றவர்களுக்குப் பாவம் இல்லை.

927. ஏறில் எருதேறும் எழிலாய் இழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்தர் அவர்என்ன
நாறும் மலர்ப் பெய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட்கு அடையா குற்றமே.

தெளிவுரை : எருது வாகனம் அன்றி வேறு எதிலும் வாகனமாகக் கொள்ளாது, உமாதேவியுடனாகி அர்த்தநாரியாயும், வேறாயும் விளங்கும் விகிர்தராகிய ஈசன் வாசம் பொருந்திய பொய்கைசேர் நல்லூரில் விளங்கும் பெருமானே என்று கை தொழுது போற்றும் அடியவர்களுக்குக் குற்றங்கள் சாராது.

928. சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடைதாழ
ஓடுஉண் கலனாக ஊர்இடு பிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட்கு அடையா பாவமே.

தெளிவுரை : இளைய பிறைச் சந்திரனைச் சூடி, பொன் போன்ற சடை விரிந்து தாழ, பிரம கபாலம் ஏந்தி ஊர் இடுகின்ற பிச்சையை நாடும் நெறியுடைய நல்லூர்ப் பெருமானை, பக்தியால் பாடிப் போற்றும் அடியவர்களுக்கு, பாவம் சாராது.

929. நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெரியானைக் கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே.

தெளிவுரை : பந்த பாசங்களிலிருந்து நீத்து விளங்கும் தனித்துள்ள நெறியுடையவன், தவத்தினின்று நீங்காத் தன்மையன், உலகுக்குப் பொருந்திய நெறியினை வகுத்து, அந்நெறியாக விளங்குபவன் நல்லூரில் விளங்கும் ஈசன். உயிர்களைக் காத்தருளும் நெறியுடைய அப்பெருமானைக் கைகளால் கூப்பித் தொழும் அடியவர்களுக்கு இடர் இல்லை.

930. ஆகத்து உமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் அசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்துஅண்மித் தாள்கள் தொழும்தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே.

தெளிவுரை : தனத உடம்பில் ஒரு கூறாகிய உமாதேவிக்குத் துணைவனாகிய ஈசன், அரவம் சடையில் தாழ்ந்து அசைய நல்லூரில் வீற்றிருக்க, மிக்க ஆர்வம் கொண்டு நாடித் திருவடியைத் தொழும் தொண்டர்கள் போகம் கொண்டு மகிழ்ந்து புகழுடன் விளங்குவார்கள்.

931. கொல்லும் களியானை உரிபோர்த்து உமைஅஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தார் இடர்தீரச்
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு, கொல்லும் நோக்கத்துடன் வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்து, நன்னெறியாகிய முத்திவழங்கும் நல்லூர்ப் பெருமானையே அந்நெறியாகக் கொண்டு, அவன் திருவடியினைச் சிந்தித்துத் துதிக்கும் அடியவர்களுக்குத் துக்கம் இல்லை; துன்பமும் இல்லை. இம்மையில் துன்பமற்ற நிலையும், மறுமையில் முத்திப் பேறும் ஆகும் என்பதாம்.

932. எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி ஆள்என்று அடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

தெளிவுரை : எங்கள் பெருமான், தேவர்களால் தொழப் பெறும் பெருமான்; நல்லூரில் எக்காலத்திலும் நீங்காது விளங்கும் பெருமான்; தமது கைகளைத் தலைமேல் ஏற்றித் தூக்கி, அப்பெருமானுக்கு ஆட்படும் அடியவராய், திருவடி நிழலில் தங்கும் திருத்தொண்டர்கள், மனத் தடுமாற்றம் அற்றவர்களாய் உறுதியுடன் விளங்குவார்கள்.

933. காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக் கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாராய் இகழாது எழும்தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.

தெளிவுரை : மன்மதனுடைய அழகைத் தீய்த்து, கடல் சூழந்த இலங்கையின் தலைவனாகிய இராவணனுடைய பெயரைக் களங்கம் உறுமாறு அடர்த்து, நல்லூரில் வீற்றிருக்கும் ஈசனை, இகழ்ந்து கூறாது, இனப் மனத்தோடு துதித்துப் போற்றும் தொண்டர்கள், ஒளி பெறும் மனத்தினராய் விளங்கி தீமையற்ற வராய் இருப்பார்கள்.

934. வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியாணை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே.

தெளிவுரை : மலரோனாகிய பிரமனும், உலகம் அளந்த திருமாலும் நண்ணுவதற்கு அரிய நல்லூரில் விளங்கும் ஈசனை, மலர்கள் கொண்டு தூவித் திருவடியைத் தொழுது போற்ற நினைக்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை.

935. பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கிய
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் நாள்தோறும் பழிச் சொற்களைக் கூறித் தூற்றி நின்றாலும், நிலைத்து நின்ற ஈசனை, நஞ்சினை மிடற்றில் கொண்ட நல்லூர்ப் பெருமானை, உயர்வாகக் கொள்ளும் அடியவர்களுக்கு இடர் இல்லை.

936. தண்ணம் புனல்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.

தெளிவுரை : தண்மையான நீர்சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தன், நண்ணி நீர்சூழ்ந்த நல்லூரில் விளங்கும் ஈசனைப் போற்றி அழகாகப் புனைந்த சொல் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஏத்தி உரைப்பவர்கள் நிலஉலகத்திலும் விண்ணுலகத்திலும் புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

87. திருவடுகூர் (அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில், புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

937. கடுகூர் எரிமாலை அணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாள் ஒன்று உடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமம் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூர் அடிகளே.

தெளிவுரை : ஈசன் சுடுகின்ற எரியை அணிபவர், கொடிய கூர்மையான மழுப்படையேந்தியவர், இடப வாகனத்தில் ஊர்பவர். கடுமையான பசி, காமம், மனக்கவலை முதலான பிணிகள் இல்லாதவர். கரிய நுண்ணிய மணலில் நீர் சூழ்ந்த வடுகூரில் விளங்கும் அடிகள் ஆவர்.

938. பாலும் நுறுநெய்யும் தயிரும் பயின்றுஆடி
ஏலும் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
 ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : பால், நெய், தயிர், ஆகியவற்றைப் பூசனைப் பொருள்களாக ஏற்று மகிழந்து ஆடி, எலும்பு மாலையும், மணம் பொருந்திய திருவெண்ணீறும் கொண்டு, ஒளி மல்கும் அழகிய திருக்கோலத்தில், கொண்டும், ஒளி மல்கும் அழகிய திருக்கோலத்தில், சோலைகளில் அன்னப் பறவைகள் மகிழ்ந்து ஒலி செய்யும் வடுகூரில் ஈசன் நடம்புரிபவர்.

939. சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடைதன்மேல்
ஓடும் களியானை உரிபோர்த்து உமையஞ்ச
ஏடு மலர்மோந்தங்கு எழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : சுடர்கின்ற பொன்போன்று விளங்கும் சடையில் பிறைச் சந்திரனைச் சூடி, உமையவள் அஞ்சுமாறு ஓடி வந்த மதயானையின் தோலை உரித்துப் போர்த்து, இதழ்கள் விரிந்த மலர்களை அழகிய வண்டுகள் முகர்ந்து ரீங்காரம் செய்யும் வடுகூரில் ஈசன் நடம் புரிபவர்.

940. துவரும் புரிசையும் துதைந்த மணிமாடம்
கவர வெரி யோட்டிக் கடிய மதில்எய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : நவமணிகள் விளங்கும் வாசனை மலர்கள் சூழும் முல்லை நிலத்தில், மகளிர் விளங்கித் திகழும் வடுகூரில், ஆடல்புரியும் அடிகளாகிய ஈசன், துவர்வண்ணத்தில் மதில்கள்களும் மாடங்களும் கவருமாறு மும்மதில்களை எரித்தவர்.

941. துணியார் உடையாடை துன்னி அரைதன்மேல்
தணியா அழல்நாதம் தரியாவகை வைத்தார்
பணியார் அடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் அடிகளே.

தெளிவுரை : கிழிந்த துணியாகிய கோவணத்தை ஆடையாக உடுத்தி, அரையில் நாகத்தைத் தரித்து, பணி செய்யும் அடியவர்கள் பலர் வணங்கிப் போற்ற, அழகிய வடுகூரில் ஈசன் நடம் புரிபவர்.

942. தளரும் கொடியன்னாள் தன்னோடு உடனாகிக்
கிளரும் அரவுஆர்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண்டு இசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

தெளிவுரை : இளமையான கொடிபோன்ற உமாதேவியை உடனாகக் கொண்டு, கிளர்ந்து எழும் அரவத்தை முடிமேலே, வைத்துப் பிறை சூடி, வரி வண்டுகள் இசை பாடும் வடுகூரில் ஈசன் நடம் புரிபவர்.

943. நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வா கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்கலன் மடிய உதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : நெடிது ஓங்கியவர், சிறிய இளம்பிறைச் சந்திரனைச் சூடியவர், இடப வாகனத்தில் அமர்பவர், கொடிய சொற்களால் கூறப்படும் பழிச் சொற்களை ஏற்காதவர், கடுமையான தொழிலையுடைய காலன் மடியுமாறு உதைத்த பாதத்தை உடையவர், வடுகூரில் வீற்றிருந்து நடம் புரியும் ஈசர்.

944. பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டுஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும் கங்கையும் நீங்காது சூடிய முடியுடையவர், வேதமும் ஓதி, மயானத்தில் உறைந்து, யாழ் ஒலி போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழும் வடுகூரில் நடம் புரியும் அடிகளாவர், ஈசன்.

945. சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்துஎம்மை நன்று மருளசெய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : அழகிய மலர்கள் சூடிய சடையின் இடையில், அந்த மணத்தையுடைய சந்திரன் உதிர்க்கும் கதிர் அலைகள் விரும்பி வந்து நல்லருள் புரியுமாறும் செய்பவர், அழகிய குளிர்ச்சி பொருந்திய வடுகூரில் நடம்புரியும் அடிகளாகிய ஈசன்.

946. திருமால் அடிவீழத் திசைநான் முகனாய
பெருமான் உணர்கில்லாப் பெருமா(ன்) நெடுமுடிசேர்
செருமால் விடையூரும் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் உணர்வதற்கு அரிய பெருமான், மால் விடையூர்ந்து செல்லும் செம்மையுடையவன் ஆகிய ஈசன், எல்லாத் திசைகளிலும் ஒளிபரவும் சிறப்புடைய வடுகூரில் நடம்புரியும் அடிகள் ஆவார்.

947. படிநோன்பு அவையாவர் பழியில் புகழான
கடி நாள்திகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழிஆர் சம்பந்தன்
அடிஞா னம்வல்லார் அடிசேர் வார்களே.

தெளிவுரை : உலகத்தில் நோற்கப்படும் விரதங்கள் யாவும் ஆகியவர், பழியில்லாத புகழுடன், நறுமணம் கமழும் சோலைசூழ் வடுகூரில் விளங்க, சிந்தை பதித்து ஒருமைகொண்டு பாடிய, ஞானசம்பந்தன் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், ஈசன் திருவடியான முத்தி நலம் அடைந்து, பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

88. திருஆப்பனூர் (அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை)

திருச்சிற்றம்பலம்

948. முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம் அதுகொண்டு அரைக் கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : முதிர்ந்த சடைமுடியின் மீது, முதிராத இளைய பிறைச் சந்திரனைச் சூடி, படம் கொண்டு விளங்கும் அரவத்தை அரையில் அணிந்து சினம் அற்றவனாகி, சிறப்புடைய திருஆப்பனூரில் வீற்றிருக்கும் ஈசனை, பற்றுதல் கொண்டு வணங்கும் மனம் உடையவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

949. குரவம் கமழ் குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவும் திருமேனி விளங்கும் வளைஎயிற்றின்
அரவம் அணிந்தானை அணிஆப்ப னூரானைப்
பரவு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : குரவம் கமழ் குழலி என்னும் திருநாமம் கொண்ட உமாதேவி வீற்றிருக்க, உடனாகி வளைந்த பல்லையுடைய பாம்பினை அணிந்து, ஆப்பனூரில் விளங்கும் ஈசனைப் போற்றித் துதிப்பவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

950. முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தனை அணிஆப்ப னூரானைப்
பரவு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : அழகிய மணம் வீசும் கூந்தலையுடைய பெண்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் மன்மதனை, முன்னர் சினந்து எரித்துச் சாம்பலாக்கிப் பின்பு, உயிர் பெற்று எழுமாறு செய்த ஈசன், சுடுகாட்டில அரவம் அணிந்து விளங்கி, ஆப்பனூரில் வீற்றிருக்க, அப் பெருமானைத் துதிப்பவர்கள், வினையும் பற்றும் நீங்கியவர்கள் ஆவார்கள்.

951. பிணியும் பிறப்புஅறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி ஆடுவான்
அணியும் புனலானை அணிஆப்ப னூரானைப்
பணியு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : பிணிக்கப்படும் காரணமாகிய பிணி தீர்த்தலும், பிணிக்கப்படும் பிறவியின் துன்பத்தைத் தீர்த்தலும், இம்மையில் உடலில் தோன்றும் பிணியும், மீளவும் பிறவா நிலையை அளிப்பவனும் உடையவன் ஈசன் எனும் பொருள் தோன்ற, பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் என உணர்த்தப்பட்டது. இதனைப் பிணியும் பிறப்பும் அறுப்பான் எனலும் பொருந்தும்.

952. தகரம் அணியருவித் தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : மயிர்ச்சாந்து அணிகொளும் பெரிய மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு, மும்மதில்களை எரித்து வெற்றிகொண்டு, அகரமாக விளங்கி, எழுத்துக்கெல்லாமும், ஒலிக்கெல்லாமும் ஆதாரமாகிய முதற்பொருளாய் உள்ளவன், அழகிய ஆப்பனூரில் வீற்றிருப்பவனாகிய ஈசன். அப்பெருமானைத் தியானித்து வணங்குபவர்கள் வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

953. ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவியக்
காடது இடமாகக் கனல்கொண்டு நின்றுஇரவில்
ஆடும் தொழிலானை அணி ஆப்ப னூரானைப்
பாடு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : ஓடி, இறக்கைகள் கொண்டு பறந்து திரியும் மாயங்களையுடைய மூன்று புரங்களை விரைவில் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, சுடுகாட்டை இடமாகக் கொண்டு, கையில் நெருப்பு ஏந்தி, இரவில் நடனம் புரியும் தொழில் உடையவன், ஈசன். அப் பெருமான் அழகிய ஆப்பனூரில் வீற்றிருக்க, அவனை வணங்கிப் பாடித் துதிக்கும் சிறப்புடையவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

954. இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலின் இணைக் கண்ணாள் ஒருபால் கலந்துஆட
இயலும் இசையானை எழில்ஆப்ப னூரானைப்
பயிலு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : ஈசனார் திருமணம் கொள்ளும் வகையில் இயங்கும் இடப வாகனத்தில் ஏறி, எரியைப் போன்ற ஒளிதரும் மழுப்படையை வீசி, கயல் போன்ற கண்ணையுடைய உமாதேவி ஒரு பக்கம் இணைந்து ஆடும் தன்மையுடையவன், எழில் கொண்ட ஆப்பனூரில் வீற்றிருப்பவன். அப்பெருமானை வணங்கும் மனத்தினர்க்கு. வினையும் பற்று அறுந்தொழியும்.

955. கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறல்அழித்தான் அணிஆப்ப னூரானைப்
பருக்கு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : கரிய கண்டத்தை உடையவன்; சினம் கொண்ட நாகத்தை அரையில் கட்டியவன்; ஒளி மிக்க வெண்பிறை சூடி அடியவர்கள் பக்தியால் உருகி நிற்குமாறு செய்பவன்; இராவணனுடைய திறனை அழித்தவன் ஈசன். அப்பெருமான், அழகிய ஆப்பனூரில் வீற்றிருக்க, அவனை உள்ளத்தால் பருகி மகிழும் அடியவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்.

956. கண்ணன் கடிக்கமல மலர்மேல் இனிதுறையும்
அண்ணற்கு அளப்பரிதாய் நின்றுஆங்கு அடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழில்ஆப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர் வார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : திருமாலும், திருமாலின் உந்திக் கமலத்தில் இனிது உறையும் பிரமனும், அளப்பரியவாறு ஓங்கி, சோதிப் பிழம்பாகி நின்று, அடியவர்களிடம் பற்றியுள்ள எண்ணற்ற வினைச் சுமைகளைக் களைகின்ற, எழில் மிக்க ஆப்பனூரில் வீற்றிருக்கும் ஈசனை, பண்சேர்ந்து இசைகொளும், பக்திப் பாடல்களைக் கூறிப் போற்றும் அடியவர்கள் வினையும் பற்றும் அற்றவர் ஆவார்.

957. செய்ய கலிங்கத்தார் சிறுதட்டு உடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்து அடியாரை
ஐயம் அகற்று வான் அணிஆப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : சிவந்த காவித் துணியும், தட்டும் உடையவர்கள் பொய்ம்மை கூற, தன்னை நன்கு புரிந்த அடியார்களின் சந்தேகங்களை நீக்கி அருள் புரிபவன், அழகிய ஆப்பனூரில் வீற்றிருக்க, அப்பெருமானை ஆழ்ந்து தியானம் செய்து நினைப்பவர்களின் வினையும் பற்றும் அறும்.

958. அந்தண் புனல்வைகை அணி ஆப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை
நந்தி அடிபரவு நலஞான சம்பந்தன்
சந்தம் இவைவல்லார் தடுமாற்று அறுப்பாரே.

தெளிவுரை : அழகிய தண்புனலாகிய வைகையின் வளப்பத்தினால் அணிபெறும் ஆப்பனூரில் மேவும், அழகிய கொன்றை மலரைச் சடையில் கூடிய ஈசன், அடியை வணங்கியொழுகும் ஞானசம்பந்தன் உரைத்த சந்தப் பாடலாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், மனம் தடுமாற்றம் அற்றவராய், உறுதியான தன்மையுடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

89. திருஎருக்கத்தம் புலியூர் (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

959. படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனாய் இடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்தகு கோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.

தெளிவுரை : படைகள் உடைய பூதங்களையும் யானையை உரித்த தோலைப் போர்வையாகவும் உடையவனாகிய ஈசன், உமாதேவியை உடனாகிக் கங்கையைச் சடையில் கொண்டவனாய், எருக்கத்தம் புலியூர் மேவி உள்ளவன். இடப வாகனம் கொண்ட அப்பெருமான் திருவடியை வணங்கித் துதிக்க, வினையானது சாராது.

960. இலைஆர் தருசூலப் படைஎம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழஎய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.

தெளிவுரை : இலைபோன்ற சூலத்தைப் படையாகக் கொண்ட எம்பெருமானாய், மூன்று கோட்டைகளைச் சாம்பலாக்கிய வில்லை யுடையவன், எருக்கத்தம்புலியூரில் திகழும் கோயிலில் உள்ளவன். அப்பெருமானை, வேதத்தால் பாடித் தொழுது திருவடியைப் போற்ற, வினைகள் நாடாது.

961. விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ஆண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற
அண்ணா எனவல்லார்க்கு அடையா வினைதானே.

தெளிவுரை : தேவர்களுடைய தலைவனே ! விகிர்தா ! இடப வாகனத்தில் ஊர்பவனே ! பெண்ணும் ஆகி, ஆணும் ஆகி, இரண்டும் இல்லாத அலியும் ஆகிய பித்தா ! பிறை சூடிய பெருமானே ! எண்ணத்தில் பொருந்துகின்ற எருக்கத்தம் புலியூரில் மேவும் அண்ணா ! எனப் போற்றி வழிபடும் அடியவர்களுக்கு, வினை அடையாது.

962. அரைஆர் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரைஆர் தருகொன்றை உடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரைஆர் சடையானைச் சேரத் திருவாமே.

தெளிவுரை : அரையில் நாகத்தை அணிந்து, மணம் கமழும் கொன்றை மாலை தரித்து, இடப வாகனத்தில் அமர்ந்து, கயிலை மலையுடைய ஈசனை, எருக்கத்தம் புலியூரில் மகிழந்து உறையும், கங்கை பதிந்த சடையுடையவனை, மனம் ஒன்றி வணங்க, செல்வம் தரும்.

963. வீறுஆர் முலையாளைப் பாக மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.

தெளிவுரை : தனிச்சிறப்புடைய தனங்களையுடைய உமாதேவியை பாகம் வைத்தும், சீற்றம் மிகுந்த காலனை அழிவித்தும், ஏறுபோன்ற எருக்கத்தம் புலியூர் மேவும் இறைவனைத் தனித்திருந்து தியானம் செய்பவர்களுக்கு, வினை இல்லை.

964. நகுவெண் தலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்துஅங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.

தெளிவுரை : கபாலம் ஏந்தி, நாலாவிதமான பாட்டுகளைப் பாடி பிச்சை எடுத்து, புலித்தோலை மேலே உடுத்தித் தகுந்தவாறு எருக்கத்தம்புலியூரில் விளங்கி, முழுமை கொண்டுள்ள ஈசனின் கழலை ஏத்தி வணங்க, வினைகள் அணுகாது.

965. ஆவா எனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே எனஅல்லல் தீர்தல் திடமாமே.

தெளிவுரை : மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணன், ஆ! ஆ! என அலறித் துன்புறுமாறு அடர்த்து, பின்னர் அவன் தேவா ! என்று, சாமகீதம் கொண்டு இசைத்துப் போற்ற, அருள் மிகுந்த செல்வத்தைக் கொடுத்த தலைவரே, எருக்கத்தம் புலியூரில் கோயில் கொண்டுள்ளவர். அப்பெருமானை தேவன் என வணங்கித் தொழுபவர்களுக்கு, அல்லல் இல்லை.

966. மறையா(ன்) நெடுமால்காண்பு அரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூர் இடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவனாகிய ஈசன், மழுப்படை யேந்தி, நிறைவில்லாத பிறைச் சந்திரனைச் சூடி முத்துக் குவியலாக உள்ள இறைவன், எருக்கத்தம்புலியூரில் வீற்றிருந்து கறையுடைய கண்டத்தனாய் விளங்குகின்றான். அப்பெருமானை நினைக்க, வினை கெடும்.

967. புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
கத்தி தரித்துறையும் சோதி உமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய்
அத்தன் அறவன்றன் னடியே அடைவோமே.

தெளிவுரை : புத்தர்களும் அருகர்களும் கூறும் உரைகளைப் புறம்பாகத் தள்ளி வைத்து, தூய்மையாய் உறையும் சோதி வடிவான உமாதேவியை உடனாகக் கொண்டு, நித்திப் பொருளாகியவனாய், அத்தனாய், அறநெறியனாய், எருக்கத்தம்புலியூரில் வீற்றிருக்கும் ஈசன் திருவடியைச் சார்வோமாக.

968. ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
பார்ஆர் அவரேத்தப் பதிவான் உறைவாரே.

தெளிவுரை : சிறப்பு மிக்க எருக்கத்தம்புலியூரில் உறையும் ஈசனைச் சீர்மிக்க காழிப்பதியில் செல்வமாக விளங்கும் ஞானசம்பந்தன், ஏத்தி அளித்த இனிய அருந்தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை உலகத்தவர் பொருந்தி ஏத்த வானுலகில் இனிது வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

90. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

969. அரனை உள்குவீர் பிரமன் ஊருள்எம்
பரனையே மனம் பரவி உய்ம்மினே.

தெளிவுரை : ஈசனை நெஞ்சில் நினைமின். பிரமன் பூசித்த ஊராகிய பிரமபுரத்தில் எம் பரனை மனத்தால் பரவி ஏத்தி உய்து பெறுவீராக.

970. காண உள்குவீர் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணி உய்ம்மினே.

தெளிவுரை : ஈசனைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே ! சீகாழியில் மேவும் ஈசன் கழல் பேணி தரிசித்து உய்தி பெறுவீராக.

971. நாதன் என்பரீர்கள் காதல் ஒண்புகல்
ஆதி பாதமே ஓதி உய்ம்மினே.

தெளிவுரை : என் தலைவனே என ஈசனைப் போற்றுகின்றவர்களே ! ஆதிபரஞ்சுடராக விளங்கும் நாதன் பாதத்தை விரும்பி ஏத்தி உய்தி பெறுவீராக.

972. அங்க மாதுசேர் பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

தெளிவுரை : உடம்பில் உமாதேவியைப் பங்குடையவனாகிய சீகாழியில் விளங்குபவன் எங்கள் ஈசன்.

973. வாள்நி லாச்சடைத் தோணி வண்புரத்து
ஆணி நற்பொனைக் காணு மின்களே

தெளிவுரை : ஒளி மிக்க நிலவைச் சடையில் கொண்டவன், தோணிபுரத்தின் வள்ளல், உயர்ந்த வகையாகிய ஆணிப்பொன்னானவன், அத்தகைய ஈசனைக் கண்டு மகிழ்வீராக.

974. பாந்தள் ஆர்சடைப் பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே.

தெளிவுரை : பாம்பினைச் சடையில் கொண்டு பூந்தராய் எனப்படும் சீகாழியில் விளங்கும் ஈசனை, உமையவன் தலைவனை, நாமத்தால் ஏத்தி வணங்குவீராக.

975. கரிய கண்டனைச் சிரபுரத்துள்எம்
அரசை நாள்தொறும் பரவி உய்ம்மினே.

தெளிவுரை : கரிய கண்டத்தையுடைய ஈசனைச் சிரபுரம் எனும் சீகாழியில் விளங்கும் அரசனாகிய தலைவனை, நாள்தொறும் வணங்கி உய்திபெறுவீராக.

976. நறவம் ஆர்பொழில் புறவ நற்பதி
இறைவ(ன்) நாமமே மறவல் நெஞ்சமே.

தெளிவுரை : தேன் சொரியும் பொழிலையுடைய புறவம் என்கிற சீகாழியின் இறைவன் திருநாமத்தை, நெஞ்சமே ! மறவாதிரு !

977. தென்றில் அரக்கனைக் குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா நின்று நினைமினே.

தெளிவுரை : தென்திசையின் அரக்கனாகிய இராவணன் குன்றுமாறு, விரலால் ஊன்றி நெரித்த சண்பை என்னும் சீகாழியின் மன்னனாகிய ஈசனை, மணம் ஒருமிக்க நிறுத்தித் துதிப்பீராக.

978. அயனு மாலுமாய் முயலும் காழியாள்
பெயல் வைஎய்திநின்று இயலும் உள்ளமே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் முயன்று தேடியும் காணதற்கு அரியவனாய் மறைந்து நிற்க, அவனை உள்ளத்தில் பதிப்பீராக.

979. தேரர் அமணரைச் சேர்வில் கெச்சைமன்
நேரில் கழல்நினைந்து ஓரும் உள்ளமே.

தெளிவுரை : பௌத்தர், சமணர் உரைகளைக் கொள்ளாது, கொச்சைமன் எனப்படும் சீகாழியின் ஈசன் இணையில்லாத திருவடியை நினைத்து உள்ளத்தில் தியானிப்பீராக.

980. தொழும னத்தவர் கழுமலத் துறை
பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

தெளிவுரை : கழுமலத்தில் உறை ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகம் ஓதத்தொழும் மனத்தவர் உயர்ந்தோராவர்.

திருச்சிற்றம்பலம்

91. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

981. சித்தம் தெளிவீர்கள் அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ முத்தி யாகுமே.

தெளிவுரை : சித்தம் தெளிய விழையும் பெரியோர்களே ! ஆரூர்த் தலைவனாகிய ஈசனைப் பக்தியால் போற்றி மலர் தூவி நின்று ஏத்தி வழிபடுவீர்களாக. அது முத்தியைத் தரவல்லது.

982. பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின் துறவி யாகுமே.

தெளிவுரை :  பிறவியை அறுக்க வேண்டும் என்று விழைபவர்களே ! தரும நெரியில் விளங்கும் ஆரூர்ப் பெருமானை மறவாது ஏத்துவீர்களாக. அது துறவு நிலையைத் தரும்.

983. துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணிஆரூர்
நன்பொன் மலர்தூவ இன்பம் ஆகுமே.

தெளிவுரை : துன்பம் தீர வேண்டும் எனக் கருதுபவர்களே ! அழகிய ஆரூரில் விளங்கும் பெருமான் மிக்க அன்புடையவன். நல்ல பொன் போன்ற மலர்களால் தூவித் தொழுமின்கள். அது இன்பத்தை உண்டாக்கும்.

984. உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ நையும் வினைதானே.

தெளிவுரை : உய்ய வேண்டும் என நினைப்பவர்களே ! தலைவனாகிய ஆரூர்மேவும் செல்வனைக் கையினால் கூப்பித் தொழுவீராக. வினையானது நைந்து அழியும். உய்தி பெற்று விடுவீர்கள் என்றவாறு.

985. பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ விண்டு வினைபோமே.

தெளிவுரை : பிறவியைத் தரக்கூடிய வினையிலிருந்து மீள வேண்டும் என்று கருதுபவர்களே ! அண்டங்களுக்குத் தலைவனும் ஆகி, தானே முற்றுமாகவும் இருக்கும் ஆரூர்ப் பெருமானைக் கண்டு மலர் தூவிப் போற்றுவீராக. உங்கள் வினை யாவும் மாய்ந்து போகும்.

986. பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணிஆரூர்
வாச மலர்தூவ நேசம் ஆகுமே.

தெளிவுரை : பாசம் அறுத்து ஒதுக்க வேண்டும் என்று நினைப்பவர்களே ! அணிமிகும் ஆரூரின் ஈசன் திருவடியில் வாம மலர் தூவிப் பணிவீர்களாக. அது உலக பாசத்தைப் போக்கி ஈசன் மீது நேசம் கொள்ளுமாறு செய்யும்.

987. வெய்ய வினைதீர ஐயன்அணி ஆரூர்
செய்ய மலர்தூவ வையம் உமதாமே.

தெளிவுரை : கொடிய வினைகள் தீருவதற்கு, அழகிய ஆரூரின் தலைவனாகிய, ஈசனின் சேவடியைச் செம்மையான மலர்களால் தூவிப் போற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் இவ்வுலகம் உம்முடையதாகும்.

988. அரக்கன் ஆண்மையை நெருக்கி னான்ஆரூர்
கரத்தி னால்தொழத் திருத்தம் ஆகுமே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணனுடைய வன்மைமிக்க ஆணவத்தை அடக்கிய ஆரூரின் நாதனைக் கரத்தினால் தொழுது போற்ற, ஆணவ மலம் முதலான மலத் தொகுதிகள் களையப்பெற்று திருத்தம் பெறும்.

989. துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளும் அவர்தம் மேல் விள்ளும் வினைதானே.

தெளிவுரை : தாமே பெரியவர் என்று தருக்கிய திருமால், பிரமன் ஆகியோருக்குக் காண்பரிதாய் விளங்கிப் பின்னர் அருள் வழங்கிய வள்ளற் பெருமானாகிய ஆரூரில் விளங்கும் ஈசன் திருவடியைத் தியானிக்கும் உள்ளம் உடையவர்களுக்கு வினையானது நிற்காது.

990, கடுக்கொள் சீவரை அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே.

தெளிவுரை : தீய எண்ணங்களையுடைய சீவர்களை அடக்கிய ஆரூர் ஈசனை வாழ்த்துபவர்கள் பற்றற்றவர் ஆவார்கள்.

991. சீரூர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார் பேரார் இன்பமே.

தெளிவுரை : சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூரைச் சொன்ன, பாரில் பரவி விளங்கும் இத் திருப்பதிகத்தைப் பேணுபவர்கள், பெருமை மிக்க இன்பத்தில் திளைப்பார்கள். பேரின்பம் அடைவர்.

திருச்சிற்றம்பலம்

92. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

992. வாசிதீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.

தெளிவுரை : குற்றமற்ற மிழலையில் வீற்றிருக்கும் பெருமானே ! வேறுபாடு இல்லாது இருப்பதற்கு உரிய காசு நல்குவீராக. அவ்வாறு நல்கினால் நிந்தனை சொல்வதற்கு யாதும் இல்லை.

993. இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறையகாள் காசினை முறைமை நல்குமே.

தெளிவுரை : வேதத்தைக் கொண்டுள்ள மிழலையின் பெருமானே ! இறைவராக உள்ள நீவிர், கறை கொண்ட காசினை வழங்குதலை ஒயித்து, முறைமையான நல்ல காசினை நல்குவீராக.

994. செய்யமேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.

தெளிவுரை : செம்மேனியராக, மெய்ம்மை கொண்டு மிழலையில் விளங்கும் பெருமானே ! படம் கொண்ட பாம்பினை உடையவரே ! நாங்கள் உய்யுமாமறு நல்ல காசு தந்தருள்வீராக.

995. நீறு பூசினீர் ஏறது ஏறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.

தெளிவுரை : திருநீறு மெய்யில் பூசினீர், இடபவாகனத்தில் ஏறினீர், மிழலை நகரின் அங்கம் உடையீர், நற்பேறும் அருள்வீராக.

996. காமன் வேவஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

தெளிவுரை :  புகழ் மிக்க மிழலையில் உள்ள பெருமானே ! மன்மதன் எரியுமாறு நெருப்புக் கண் உடையவர் ஆயினீர்; பாதுகாப்பும் நலமும் புரிவீராக.

997. பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே.

தெளிவுரை : பிணித்துக் கட்டிய சடையை உடைய பெருமானே ! நீலகண்டத்தை உடைய நாதனே ! அழகிய மிழலையில் வீற்றிருப்பவனே ! எமது பணியை ஏற்றுக் கொண்டு அருள் புரிவீராக.

998. மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசனே ! சாந்தமான மிழலையின் நாதனே ! கங்கையைத் தரித்த முடியுடையவரே ! எஙகள் ஐயத்தைப் போக்கிக் குற்றமற்ற காசு தருவீராக.

999. அரக்க னெரிதர இரக்களம் எயிதினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணன், குற்றம் செய்தமையால் நெரிக்கப்பட்டு வருந்தினாலும், அவன் அழுகை கேட்டு இரக்கம் கொண்டு அருள் புரிந்த பெருமானே ! புகழ்பரவும் மிழலையில் வீற்றிருப்பவரே ! வஞ்சகம் தவிர்த்து நல்ல பொற்காசு தந்தருள்வீராக.

1000. அயனு மாலுமாய் முயலு முடியி னீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் முயன்று தேடிய தலைமை உடையவரே ! இயல்பின் மிக்க மிழலையில் வீற்றிருப்பவரே ! பயனை அருள்புரிவீராக.

1001. பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே.

தெளிவுரை :  மணம் கொள் மிழலையின் ஈசனே ! சமணர்கள், அறியும் பொருளை அறிந்திடாது நிற்க வேறு உரைப்பது அரியதாகும்.

1002. காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.

தெளிவுரை : காழியின் ஞானசம்பந்தன் வீழிமிழலை மேல் பதியக் கூறிய பதிகத்தை உரைப்பவர்கள் மேலாவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் முதல் திருமுறை »
temple news
 1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. சைவ சமயம் தழைக்க தோன்றிய சிவனடியார்களில் ... மேலும்
 
temple news
திருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று திருமுறைகளில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 ... மேலும்
 
temple news
93. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar