பதிவு செய்த நாள்
31
மே
2016
12:05
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலின், மூன்றாம் ஆண்டு விழா, நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் கிராமத்தில் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடந்து, நாளை (1ம் தேதி) மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. இதையொட்டி, நேற்று மாலை, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், தலையாறிதாங்கல் கிராமத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்றும், நாளையும் மூன்றாம் ஆண்டையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவர் வீதியுலா நடக்கிறது.