பதிவு செய்த நாள்
15
ஜூன்
2016
06:06
கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம் தாண்டி நாம் கலியுகத்தில் இருக்கிறோம். இந்த அவசர யுகத்தில் இறைவன் நம்மை தவமியற்றச் சொல்லவில்லை; யக்ஞம் செய்யப் பணிக்கவில்லை, வெறும் நாம ஸ்மரணம் செய்தாலே போதும்; ஜென்மம் கடைத்தேறும் என்பது திருவாக்கு. அது ஒரு தூய தவம் -அதுவே ஒரு பரிசுத்தமான வேள்வி என்பதை தத்தமது வாழ்வில் நிரூபித்த மகான்களின் வரலாறு நமக்கு போதிக்கின்றன. அத்தகு மகான்களின் வரிசையில், இக்கலியுகத்திலும் இன்றும் ஜீவனுடன் -கல்லுக்குள் கருணையுடன் கண்மூடி அமர்ந்துகொண்டு நியாயமான வேண்டுதல்களுடன் வரும் அன்பர்களின் குறைகளை நீக்கி அருள்புரியும் பூஜ்யாய ராகவேந்திரர் முக்கியமானவர். ராகவேந்திரரை சரணடைந்து, அவரை இன்றளவிலும் உலகம் முழுக்க வேண்டித் தொழ அற்புத சுலோகத்தை அர்ப்பணித்தவர் சுவாமிகளின் பிரதான சீடர் அப்பண்ணாச்சாரியார்.
ராகவேந்திர ஸ்வாமிகளின் பிரதான சீடர் அப்பண்ணா, பூர்ண போத குரு தீர்த்த எனத் துவங்கும் அற்புத சுலோகங்களை ஸ்வாமிகள்மீது இயற்றியுள்ளார். அந்த ராகவேந்திரர் ஸ்தோத்திரத்தில், ஸ்வாமிகள் நமக்கு என்ன வெல்லாம், எப்படியெல்லாம், எப்போதெல்லாம் தருவார் என்று அழகாக கோர்வையாக்கி இருக்கிறார். ஆனால் அவை சமஸ்கிருதத்தில் அமைந்திருக்கின்றது. அந்த பரந்த வெட்டவெளியில் திம்மண்ணர் ஓடிஓடி மூச்சிரைக்க வந்து நின்றார். அவர் ஓநாய்களின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அல்லது அகப்பட்டுக்கொண்டார். அவை கோரைப்பற்களுடன் உறுமியபடி நெருங்கத் தொடங்கின. கையிலிருந்த மிக நீண்ட கழி கொண்டு வீசித்துரத்தினார். அந்த கழிகள் காற்றைக் கிழித்து வினோத சப்தம் எழுப்பி கிலியை இன்னும் அதிகப்படுத்தின. ஓநாய்கள் சற்றே பின்வாங்கின. நீண்ட அந்தக் கழி சட்டென்று வீணையாய் மாறியது. தூக்கி வீசமுடியாதபடிக்கு கணக்க ஆரம்பித்தது. ஓநாய்கள் சுதாரித்து நெருங்கத் தொடங்கின. அவர் வீணையைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார். ஓநாய்கள் எச்சில் ஒழுகும் வாயுடன் அவர் குரல்வளை நோக்கிப் பாயந்தன. ஆனால் பயனில்லை. மடேர் என்று அடிவாங்கி மண்டையில் ரத்தம் ஒழுக தொப்பென்று கீழே விழுந்தன. வீணையை கோடாரிபோல் தோளில் தாங்கி கோபிகாம்பாள் அங்கே ஆவேசமாக நின்றிருந்தாள் -சம்ஹாரியாய்! கண்களில் கொப்பளிக்கும் கோபம் திம்மண்ணபட்டர் கையெடுத்துக் கும்பிட்டார். தாயே சாமுண்டீஸ்வரி, அம்பிகே என்று உரத்து நன்றி கூறிவணங்கினார்.
த்சோ... த்சோ. என்ன இது. பெண்டாட்டியை புருஷன் வணங்கலாமா? இப்படி கும்பிடுறது அபச்சாரமாச்சே. கேலி செய்யுறாளா? என்னை நல்லா பாருங்க, நான் உங்க ஆத்துக்காரி கோபிகா. என்னை கோபின்னுதானே கூப்பிடுவேள்? இது என்ன புதுமையா? ஒழுகும் ஓநாயின் ரத்தம் எடுத்து முகத்தில் தெளித்தாள். நல்லா முழுச்சிப் பாருங்கோ...ம்... பாருங்க என்று உலுக்கி எழுப்பினாள். உறக்கம் கலைந்து பதறி, சட்டென்று எழுந்தமர்ந்தார் திம்மண்ண பட்டர். எதிரே உண்மையான கவலையுடன், முகத்தில் தண்ணீர் தெளித்து கையில் சொம்புடன் கோபிகா நின்று கொண்டிருந்தாள். தொப்பலாய் நனைந்திருந்த அவரின் கைகள் கும்பிட்டுக்கொண்டுதான் இருந்தன. பிறகு வெட்கமாய்ப் போனது. அப்பிராணியாக எதிரில் நிற்கும் மனைவியைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. கனவில் அவள் ஓநாயை அடித்த கோலம் திரும்ப நினைவு வந்தது. சிரித்தார்.
என்ன சிரிப்பு? நடு இரவில்! கவலையுடன் கேட்டாள் கோபிகாம்பாள். வா, உட்கார் கோபிகா என்ற திம்மண்ணர் தன்னருகில் கைப்பிடித்து அமர்த்தினார்.
ஸ்வாமி, ஏதேனும் துர் சொப்பணமா? என்றாள் கோபிகா.
ஆம், ஆனால் சொன்னால் நீயும் சிரிப்பாய்.
என்னது, சொல்லுங்கள் என்றாள் கவலையோடு.
தான் கண்ட கனவைப் பற்றி விவரித்தார் திம்மண்ணர். ஆனால் கேட்ட அவளிடம் எந்த சலனமும் சிரிப்பும் இல்லை. மாறாக கலவரமானாள்.
என்ன கோபிகா, ஏன் மவுனம்?
நாமிருக்கும் இந்த சூழ்நிலையில் சிரிப்பும் குதூகலமும் எப்படி வரும் சொல்லுங்க என்றாள். எப்போதும் படை வரலாம். எப்போது வேண்டுமானாலும் கத்தி உருவி கலவரம் ஏற்படலாம். உயிர்கள் பலியாகலாம் என்ற நிலவரத்தில் சிரிப்புவேறு வருமா?
உண்மைதான். நேற்றைய நமது பேச்சின் தாக்கம்தான் எனக்கு இந்த கனவு வந்திருக்கிறது என்றார் திம்மண்ணர். அவர் முகத்தில் சோகம் மண்டியது.
யாரேனும் அந்நிய படைவீரன் நம் இல்லம் நுழைந்தான் என்றால் நான் கொல்லைப்புற கிணற்றில் குதித்து மாண்டு போவேன் அல்லது உத்திரத்தில் தொங்கிவிடுவேன். நீங்கள் கைப்பிடித்த எனது மேனியின் தலைமுடியைக் கூட பிறத்தியான் தீண்ட என்று முடிக்க இயலாமல் அழலானாள். அது கேவலாய்த் தொடர்ந்தது.
வெளியில் திண்ணையில் படுத்திருந்தவர்கள் எழுந்தமர்த்தனர். கணவன் - மனைவிக்குள் ஏதோ பிணக்குபோல் உள்ளது என்று, நாகரீகம் கருதி பேச்சு தங்கள் செவிக்கு எட்டாதபடிக்கு அடுத்த இல்லத்தின் திண்ணைக்குச் சென்றுபடுத்தனர். திம்மண்ணரின் மீதிருக்கும் மதிப்புக்கும், இந்த அசாதாரண போர் சூழ்நிலைக்கும் பாதுகாப்பு கருதி காவலுக்குப் படுத்திருந்தனர். அவர்களது இல்லங்களும் அடுத்தடுத்தே அமைந்திருந்தன.
திம்மண்ணர் சொன்ன சமாதானங்கள் எதுவும் அவளைத் தேற்றவில்லை. பயமும் இயலாமையும் அவளது அழுகையை அதிகப்படுத்தியது.
இருந்தாலும் திம்மண்ணருக்கு இத்தனை பிடிவாதம் கூடாது. நேற்று வண்டி கட்டியிருந்தால், இந்நேரம் எல்லைதாண்டி வெகுதூரம் பாதுகாப்பாய் போய்ச் சேர்ந்திருப்போம் என்றார் ஒருவர்.
ஆமாம், சரியாகவே சொன்னீர்கள். எனக்கும் தமிழகத்தில் சொந்தம் உண்டு. நாம் அங்கு சென்றுவிட்டிருந்தால் நமக்குரிய தொழிலையும் உரிய மதிப்பினையும் அவர்கள் நமக்கு பெற்றுத்தந்திருப்பார்கள். திம்மண்ணர் மனம் மாறினால் உண்டு. இல்லையெனில் நாமும் அவருடன் சேர்ந்து மிலேச்சர்களால் கொல்லப்படலாம் என்று சொல்லுகையில் அவர் தேகம் நடுங்கியது.
அப்போது திம்மண்ணர் வீட்டுக் கதவை யாரோ தட்டுகின்ற சப்தம் கேட்டது. கோபிகாவின் அழுகை நின்று முகம் வெளிறியது. கண்களில் பயம். வயிற்றிலிருந்து ஏதோ ஒரு உணர்வு கிளம்பி தொண்டையில் நின்று மூச்சினை சிரமப்படுத்தியது, திம்மண்ணரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். அநேகமாக கதவுக்கு அப்பால் பலர் இருக்கவேண்டும். குறைந்தது ஐவருக்குமேல் இருக்கவேண்டும் என்று மனதுள் எண்ணிக்கை வந்தது. கும்பலாக அரவம் கேட்டது. திம்மண்ணருக்கு திறக்க தயக்கமாக இருந்தது. தட்டுகின்ற சப்தம் பலமாகக் கேட்டது. கதவு தடதடத்து ஆடியது.
நீ போய் உள்ளறையில் மறைந்திரு என்று மனைவியை அனுப்பிவிட்டு கதவருகில் சென்றாலும் திறக்க தயக்கம் காட்டினார். அவருள் பயமும் அச்சமும் எழுந்தது.
திம்மண்ணா, கதவைத் திற! தூங்கி விட்டாயா? என்று மிக பரிச்சயமானதாகக் குரல் கேட்க, உடனடியாகத் திறந்தார்.
கதவு விரிய திறக்கப்பட, நான்கைந்து பேர் உள்ளே வந்தனர்.
இவர்கள் யார்? ஒரு முதியவருடன் வந்தவர்களை திம்மண்ணர் ஏறிட்டார். வந்தவர்கள் நீண்டு வளர்த்தியாக இருந்தனர். முகங்கள் சலனமில்லாது இருந்தன. ஒன்றுபோல கற்றை மீசை. பிடரிவரை வளர்ந்திருந்த முடிகாற்றில் பறந்து கலையாதிருக்க கீழ்நுனியில் மிகமிக மெல்லிய கயிற்றில் முடிந்திருந்தனர். இடையில் நீண்ட வாள்களும், கால்களை இறுகப் பற்றியதான காலணிகளும் அணிந்திருந்தார்கள். அவர்கள் அடுத்த நொடி போருக்கும் ஆயத்தமாய் இருந்தனர்.
யார் நீங்கள்... ஒன்றும் சொல்லாமல்... என்று யோசித்த திம்மண்ணர், சட்டென்று அடையாளம் கண்டுகொண்டார்.
ஆஹா, ரமணி மாமா! வாருங்கள் வாருங்கள் நலமா? என்ன இந்த அகாலத்தில் மாமா... கூட வந்திருக்கும் இவர்கள்....
திம்மண்ணா, பேச நேரமில்லை. நாங்கள் எங்கும் தங்காமல் ஓய்வெடுக்காமல் நேரே இங்கு வருகிறோம். இவர்கள் எனக்கு என்று அவர் மேலும் தொடர்வதற்குள் அவரை அந்த ஐவரில் ஒருவர் கையமர்த்தி.
எங்களின் அறிமுகம் உங்களுக்குத் தேவையில்லாத ஒன்று. நாங்கள் நாயக்க படைவீரர்கள். எங்களின் தலைவருக்கு இந்தப் பெரியவர் நெருக்கமானவர். அவர் பணிக்கவே இவரை நாங்கள் எங்களுடன் வர அனுமதித்தோம். நாங்கள் இவரை இங்கு சேர்ப்பித்து விட்டோம். புறப்படுகிறோம். முடிந்தால் நீங்கள் அனைவரும் இங்குள்ளதை விட்டுவிட்டு இடம்பெயருதல் நலம். சோழமண்டலம் வரை நட்பு வளையம் உண்டு. வழி நெடுகிலும் இடம்பெயரும் மக்களுக்குரிய உதவிகளைச் செய்ய மன்னர் உத்தரவு. நாம் அனைவரும் உயிருடனிருந்தால் மீண்டும் சந்திக்கலாம். நாங்கள் கிளம்புகிறோம் எனக் கூறி சட்டென்று வெளியேறி இருளில் கலந்தனர்.
நாம் உயிருடனிருந்தால் என்ற அந்த வீரனின் வார்த்தைகளிலிருந்த ஆழம் திம்மண்ணரை நிலைகுலையை வைத்துவிட்டது. ஒளிந்திருந்த கோபிகாம்மாள் நடுநடுங்கி வெளிவந்தாள். பெரியவரை கரம்கூப்பி வணங்கினாள்.
அப்பா, நெடுந்தொலைவு வந்துள்ளீர்கள். ஓய்வாய் சற்றே அமருங்கள். அகால நேரம். ஏதேனும் சாப்பிட்டீர்களா? பழம் கொண்டு வருகிறேன். சற்று கழித்து பாலும் அருந்தாலும் என்றவளிடம்.
வேண்டாமம்மா, நேரமில்லை. ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. காலம் தாழ்த்தல் கூடாது. நாம் தமிழகம் சென்றுவிடலாம். கிளம்புங்கள் கிளம்புங்கள்... என்று அவசரப்படுத்தினார்.
உறுதியாகத் தெரியாமல் ஏன் பயந்து ஓடவேண்டும் மாமா? என்றார் திம்மண்ணா.
நீ யோசித்துதான் பேசுகிறாயா திம்மண்ணா? இப்போதெல்லாம் போரில் நியாயம் காணாமல் போய்விட்டது. தர்மம் கடந்துவிட்டது. எதிரிப்படையினர் மிகமிக முரடர்கள். அந்தப் படைக்கு ஈவிரக்கமில்லை. எண்ணெயில் பொரித்த மாட்டிறைச்சியும், தணலில் வாட்டிய மீனையும், மதுவுடன் உண்டு போதையில் திளைப்பவர்கள். மிதப்பான தினவுடன் வேற்று தேசத்தில் எதிரில் நிற்பவன் எவனும் எதிரி என்ற நோக்கில் தலையை வெட்டுகிறார்கள். அவர்களின் இடுப்பில் தொங்கும் பெரும் பட்டையான கத்திகளை நம்மிரு கைகளால் தூக்க இயலாது. அவர்கள் அதனை ஒரே கையால் அனாயசமாய் சுழற்றி வீசி வெட்டிச் சாய்த்தும், அறுத்தும், கொலை வெறியுடன் போரிடுகிறார்கள். அந்த மாமிசப் பட்சினிகள் நம்மூர் பெண்களை வெறியுடன் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். திரும்ப தேவையிருப்பின், முக்காடிட்டு, பயமுறுத்தி தம்முடன் வைத்துக்கொள்கிறார்கள். மாறாக இச்சை தீர்ந்தவுடன் அவர்களின் சிரசையும் அறுத்துக் கொன்றுவிடுகின்றார். சொன்னால் வெட்கக்கேடு, உயிர்பயத்தில் அவர் மதம் சேர்ந்து முக்காடிட்ட நம் இந்துப் பெண்டிர் அநேகம். தெரியுமா உனக்கு? சரி... சரி.. புறப்படப்பா என்றார் பெரியவர்.
இருந்தாலும்... எவ்வளவு சம்பாதனை, செல்வங்கள், பெரிய இல்லம், சுற்றம்... இத்தனையும் இங்கேயே விட்டுவிட்டு நாம் மட்டும்.. திம்மண்ணா, கோபிகாம்பாளும் குழந்தைகளும் கண்களுக்குத் தெரியவில்லையா? என்றார் பெரியவர் சற்றே கோபமாக. அந்த கோபத்தில் அவருக்கு மேலும் மூச்சிரைத்தது. நன்றாகச் சொன்னீர்கள். வாழ்ந்த பூமி, சொந்தம் என்று சொல்லிச் சொல்லியே காலம் கடத்துகிறார். நீங்கள் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு பயத்தால் நடுங்குகிறது. வேண்டாம். எனக்கு மானம் பெரியது. நான் தீவளர்த்து அதில் விழுந்து விடுகிறேன் என்று பெரும் குரலெடுத்து அழத்தொடங்கினாள் கோபிகா. சத்தம் கேட்டு பக்கத்து இல்லத்தவர்கள் சூழத் தொடங்கினர். விவரம் முழுக்க கேட்டவர்கள் உறைந்துபோனார்கள். தட்டுமுட்டு சாமான்களை உடனடியாகக் கட்டிக்கொண்டு அக்கணமே ஆயத்தமாகத் தொடங்கினர்.