பதிவு செய்த நாள்
09
செப்
2011
05:09
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாசகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாவதாக விளங்குகிறது. இது மாணிக்க வாசகரால் அருளிச் செய்யப்பட்டது. இந்நூல் உருகா உள்ளத்தையும் உருக்கி உயிர்க்குப் பசுத் துவங்கெடுத்துப் பதித்துவம் அருளவல்லது. ஆதலால் இது செந்தமிழுக்கு அன்பு மறையாய்ப் போற்றப் பெறுகின்றது. திருவாசகம் என்ற பெயர் திருவுடைய சொற்களால் ஆகிய அருள் நூல் எனப் பொருள்படும். திருவாசகத்தைத் தேன் எனக் கூறுதல் மரபு. தேன் உடற்பிணிக்கு மருந்தாதல் போல, இந்நூல் உயிர்ப்பிணிக்கு மருந்தாகும்.
வெண்பா
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னும் தேன்.
இந்நூல், ஓதுவார் உள்ளத்தை உருக வைக்கும் பேராற்றல் மிக்கது. நாடு, மொழி, இனத்தால் வேறுபட்ட வெளிநாட்டவரையும் கசியவைக்கும். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்றும் கூறுவர். சிவப்பிரகாச சுவாமிகள் தமது நால்வர் நான் மணிமாலையில் இந்நூலைப் பத்து ஆசிரியப்பாவால் சிறப்பித்துள்ளார். அதே போல் இராமலிங்க அடிகளும் ஆளுடைய அடிகள் அருள் மாலையில் 10 நாட்கள் பாடியுள்ளார். டாக்டர்.ஜி.யு.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நூலின் அமைப்பு: திருவாசகத்தின் தொடக்கத்தில் சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல், திருஅண்டப் பகுதி, போற்றித் திருஅகவல் என்னும் நீண்ட அகவற் பாக்கள் அமைந்துள்ளன. இந்நான்கும் திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களைப் போல இந்நூலுக்குப் பாயிரமாக உள்ளன. அதன் பின்னர் 47 பதிகங்கள் உள்ளன. பாட்டுக்களின் மொத்த எண் 659.
1.சிவபுராணம் (சிவனது அநாதி முறைமையான பழமை)
எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானது அநாதி முறைமையான பழமையினை விரித்துரைக்கிறது. பொதுவாக இதனை அகவல் என குறிப்பிடுவது மரபாயினும் 95 அடிகளால் ஆன கலிவெண்பா பாட்டாகும் இது. சிவபுராணத்தில் முதற்கண் சிவ பரம்பொருளின் திருவடிகளை வாழ்த்துகிறார். அடுத்து அவற்றின் பிறப்பினை வியக்கின்றார். அதன்பின்னர் எண்வகைப் போற்றிகளால் எண் குணத்தானைப் போற்றுகின்றார். உயிர்களின் பிறப்பு வகைகள் இறைவனின் ஐந்தொழில், வணங்குவார் பெறும் பேறு இவற்றை ஆசிரியர் விளக்குகின்றார். இது திருப்பெருந்துறையில் பாடப்பட்டது.
1. சிவபுராணம் (கலிவெண்பா)
நமச் சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
பொருள்: நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் பொருளாக இருக்கும் இறைவனும், இந்த உலகத்தில் அனைத்துமாகவும், அதில் ஊடுருவியிருந்து அதை ஆள்கின்ற சொக்கநாதருடைய திருவடி வாழ்க. இறைவனைக்காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம். எனவே நமசிவாய எனும் ஐந்தெழுத்தை முதலில் கூறி, அதன் பொருளாகிய இறைவனைப் பின் கூறினார். மங்களமாகிய ஐந்தெழுத்தைக்கொண்டு நூலைத்தொடங்கினார். வாழ்க இறைவனிடத்து உள்ளன்பு மேலிட்டுப் பொங்கும் போது, அவனுக்கு என்ன தீங்கு நேருமோ என்ற அடியார் அஞ்சி, மனம் கலங்கிப் பரிவினால் அவனை வாழ்த்துதல் இயல்பு.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
பொருள்: இமைக்கும் அளவு காலம் கூட என்னுடைய நெஞ்சிலிருந்து நீங்காதவனுடைய திருவடி வாழ்க.
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
பொருள்: திருப்பெருந்துறைக்குத் தலைவனாகிய உயர்ந்த மாணிக்கம் போன்றவனுடைய திருவடி வாழ்க.மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டது கோகழி எனக்கூறப்படும் திருவாவடுதுறையிலேயாம். அது திருப்பெருந்துறை என்றும் கூறப்படுகிறது.
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
பொருள்: ஆகமப் பொருளாகி நின்று நினைத்த நெஞ்சம் தித்திப்பவனுடைய திருவடி வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
பொருள்: ஒன்றாக இருப்பவனும் பலவாக இருப்பவனும் ஆன இறைவனுடைய திருவடி வாழ்க.
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பொருள்: மனக்கலக்கத்தை போக்கி என்னை ஆட்கொண்டருளிய மகாப்பிரபுவினுடைய திருவடி வெற்றி பெறுக.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
பொருள்: பிறவித்துன்பங்களை ஒழித்தருளுகின்ற சிவபெருமானுடைய வீரக்கழலை அணிந்த திருவடிகள் வெற்றி பெறுக.
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
பொருள்: அன்பில்லாத பிறர்க்கு வெகு தூரத்தில் இருப்பவனுடைய தாமரை போன்ற திருவடிகள் வெற்றி பெறுக.
கரங்குவிவார் உண்மகிழும் கோன் கழல்கள் வெல்க
பொருள்: அன்போடு கைகளைக் கூப்பி வணங்குவோருடைய உள்ளத்தை மகிழ்விக்கும் இறைவனுடைய திருவடிகள் வெற்றி பெறுக.
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
பொருள்: தலையால் வணங்குபவர்களை உயர்த்துகின்ற சிறப்புடையவனது திருவடிகள் வெற்றி பெறுக.
ஈசன் அடிபோற்றி எந்தை அடி போற்றி
பொருள்: ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையின் திருவடிக்கு வணக்கம்.
நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
பொருள்: ஒளிமயமானவனது பாதங்களுக்கு வணக்கம். செந்தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்களுடைய சிவனுக்கு வணக்கம்.
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
பொருள்: அன்பில் ஊறியுள்ள தூயவனது திருவடிக்கு வணக்கம்.
மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
பொருள்: மாயையின் விளைவாகிய பிறப்பு, இறப்பு என்னும் மாறுபாட்டை அகற்றுகிற இறைவனது திருவடிக்கு வணக்கம்.
சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி
பொருள்: மேன்மை பொருந்திய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் கடவுளின் திருவடிக்கு வணக்கம்.
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பொருள்: தெவிட்டாத ஆனந்தத்தை ஊட்டியருளுகின்றவனும் மலைக்கு ஒப்பாகியவனும் ஆகிய சிவனுக்கு வணக்கம்.
சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
பொருள்: சிவபெருமான் எப்போதும் என் மனத்தில் வீற்றிருப்பதால், அவனது திருவருளை துணையாக கொண்டு, அவனது திருவடி தொழுது நான் ஆனந்தம் அடைதல் பொருட்டும், என் பழவினைகள் கெடுதல் பொருட்டும், எப்போதும் நிலைத்துள்ள சிவ தத்துவங்களை உணர்ந்து ஓதுவேன்.
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
பொருள்: நெற்றிக்கண்ணையுடைய உன் திருவருள் நோக்கம் புரிந்து வழிகாட்ட நான் உன்னை வந்தடைந்து,
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
பொருள்: கணக்கிட முடியாத மகிமைகளையுடைய உனது திருவடியை வணங்க,
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
பொருள்: நீ விண்ணுலகு மண்ணுலகு ஆகியவைகளை நிரப்பி, அவைகளுக்கு அப்பாலும் பெருகி இருக்கிறாய். கட்புலனாகின்ற ஒளியாய் இருக்கின்றாய்.
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொருள்: அளவு கடந்து எங்கும் நிறைந்திருக்கிறாய்.
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
பொருள்: உன்னுடைய பேரமைப்பைப் பாராட்டுகிற வழியை வினையில் கட்டுண்டு கிடக்கிற நான் சிறிதேனும் அறிந்திலேன்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
பொருள்: கல், புல் முதலிய பிறவிகளில் வாழ்வை துவக்கி அறிவோடு கூடிய மானுடன் ஆகும் வரை பல்கோடிப் பிறவிகளை எடுத்து இறைவா நான் சலிப்படைந்து விட்டேன்.
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
பொருள்:இறைவா! நான் பல பிறப்புகள் எடுத்திருந்தாலும், உனது ஒப்பற்ற திருவடிகளைச் சேவிக்கவே அது எனக்கு வீடு பேறு ஆயிற்று என்பதில் சந்தேகமில்லை.
உய்யஎன் உள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற
பொருள்: என் உள்ளத்தினுள்ள ஓங்காரமாக நீ ஒலித்து கொண்டிருப்பதை நான் உணரும் பொழுது உய்வு அடைகிறேன்.
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
பொருள்: மெய்ப்பொருளே, தூயவனே, காளை வாகனனே! வேதங்களால் ஐயா! என அழைக்கப்படுபவனே ! நீ உயர்ந்தும், தாழ்ந்தும் விரிந்தும் உள்ள நுண் பொருள் ஆகின்றாய்.
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொருள்: வெப்பமாயும், குளிர்ந்தும் உயிர்த்தத்துவமாயும், உள்ள தூயவனே!
பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
பொருள்: என்னிடத்து நிலையற்றவைகளை எல்லாம் அகற்றுதற்கு அருள்புரிந்து மெய்ஞ்ஞானமாய் ஒளிர்கின்ற பரஞ்சோதியே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
பொருள்: எந்தவிதமான அறிவுமில்லாத எனக்கு இன்பத்தை நல்கும் பெரியோய்! எனது மயக்கத்தை நீக்குகிற சிவஞானமே!
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
பொருள்: பிறப்பும், வாழும் கால அளவும் முடிவும் இல்லாத நீ அண்டங்களை உண்டு பண்ணுவாய். நிலைத்திருக்கச்செய்வாய். துடைத்திடுவாய். அதற்கிடையில் உயிர்களை உன் மயமாக்குவாய்.
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்
பொருள்: பிறவித்தளையைப் போக்குவிப்பதும் என்னை நினது திருத் தொண்டில் புகும்படி செய்வதும் நின் கருணையாகும்.
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றணம் மனம்கழிய நின்ற மறையோனே
பொருள்: பூவில் மணம் போன்றவனே! நீ வணங்காதவர்க்குத் தொலைவிலும், வணங்குபவர்க்கு பக்கத்திலும் இருக்கிறாய். மாறுபடுகிற மனம் அற்றவிடத்து மிளிர்பவன் நீயன்றோ!
கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பொருள்: கறந்த ஆவின் பாலோடு கருப்பஞ்சாற்றையும் நெய்யையும் கலந்து உண்ணும் பொழுது உண்டாகும் இன்பம் போன்றது, இறைவனிடத்திருந்து வரும் பேரின்பம், அப்பேரின்பமோ நல்ல அடியவர்களது உள்ளத்துள் தேன்போன்று ஊறித் தெவிட்டாது தித்திக்கின்றது.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
பொருள்: தொடர்ந்து வருகின்ற பிறவிகளை ஒழிக்கின்ற எங்கள் தலைவா!
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
பொருள்: கண்ணுக்கு நன்கு புலனாகும் ஐந்து வண்ணங்களோடு கூடியிருந்தும் கூட, செருக்குடனிருந்த தேவர்கள் உன்னைப் போற்றி துதித்தபோது,
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
பொருள்: அவர்களுக்கு புலனாகாமல் மறைந்திருந்தவனே! திறமை வாய்ந்துள்ள வினைக்கு அடிமைப்பட்டவன் நான். என்னை நான் அறிந்து கொள்ளாதபடி அஞ்ஞான இருள் என்னை மூடிக்கொண்டிருக்கிறது.
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்
பொருள்: நல்வினை தீவினை என்று சொல்லப்படும் கட்டு அறுக்க முடியாத பாசக்கயிறு என்னைக் கட்டிப் பிணித்து வைத்திருக்கிறது.
புறம் தோல் போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி
பொருள்: என் உடலின் உள்ளே புழுவுக்கு ஒப்பான தாதுக்களின் தத்துவம் நிறைந்திருக்கிறது. அது ஓயாத அழுக்காக மாறிக்கொண்டிருக்கிறது. அத்தகைய புல்லிய அமைப்பானது புறத்தில் தோலைப்போர்வையாக போட்டு மூடி வைக்கப்பட்டிருக்கிறது.
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
பொருள்: ஓயாது அழுக்கையே கொட்டிக்கொண்டிருக்கிற ஒன்பது துவாரங்களை உடைய உடல் என்னும் சிறு வீட்டில் அடைபட்டிருக்கின்றேன்.
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
பொருள்: அதில் அமைந்துள்ள ஐந்து இந்திரியங்களும் என்னை ஏமாற்றித் துன்புறும்படி செய்கின்றன.
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
பொருள்: மிருகத்துக்கு ஒப்பானது என்மனம். உன்னிடத்து உருகி அன்பு பூண்டு அது நல்ல மனமாகும்படி நீ அருள்புரிந்துள்ளாய். மண் உலகில் உன் காட்சியைக்காணும்படி நீ அருள்புரிந்துள்ளாய்.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
பொருள்: நாயினும் கீழாகிய என்னிடத்து மெய்ப்பொருளாகிய நீ தாயினும் மேலான தயாளுவாகக் கருணை காட்டியிருக்கிறாய்.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
பொருள்: எங்கும் நிறைவாயிருந்து ஒளிர்கின்ற பழுதற்ற சோதியே,
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பொருள்: அறிவொளியானவனே, தேனே, அரிய அமிர்தமே, சிவபுரனே,
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
பொருள்: பாசமாகிய கட்டையறுத்து, என்னை உய்விக்கும் குரு நீ.
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பொருள்: ஒன்று படுத்துகிற அருளைச்சொரிந்து, என் நெஞ்சில் உள்ள குறைபாட்டை நீ அகற்றுகிறாய்.
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
பொருள்: குற்றம் நிறைந்த என் நெஞ்சினின்றும் பிரிந்து போகாது, நிலைத்திருக்கிற கருணைப்பேராறே!
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
பொருள்: தெவிட்டாத அமிர்தம் நீ. அளப்பரிய பெருமானே,
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
பொருள்: ஆராயாதவர்களது மனத்தில் மறைந்திருக்கும் ஒளியே,
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
பொருள்: என் மனத்தை நீராய் உருகப்பண்ணி, எனது அரிய உயிராய் நிலைத்திருப்பவன் நீ.
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
பொருள்: நீ பரம் பொருள் ஆதலால் உனக்கு இன்பமும் துன்பமும் இல்லை.
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
பொருள்: ஆனால் உயிர்கள் அனைத்துமாய் நீ விளங்குவதால்,அவ்வுயிர்கள் அனைத்தின் இன்ப துன்பங்கள் உன்னுடையவைகளாம். உன்னை வழிபடுபவர்களுக்கு நீ முற்றிலும் சொந்தமாக இருக்கின்றாய். நீ உலகனைத்துமாய் இருக்கின்றாய். ஆயினும் அதனால் உன் நிஜ சொரூபம் சிறிதேனும் மாறவில்லை.
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
பொருள்: முரண்பாடுகளெல்லாம் உன்னிடம் கூடுகின்றன. நீ ஆத்ம ஜோதி. கட்புலனாகாத இருள். தோன்றியுள்ள பெருமை. தோன்றாப்பெருமையாகிய அனைத்தும் உனக்கே சொந்தம்.
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
பொருள்: சகுனப்பிரம்மம் என்னும் நிலையில் நீ பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ஆதிமூலம். இறுதியில் அது உன்னிடத்தில் ஒடுங்குகிறது. இடைநிலையிலும் அது உன்னிடத்திலேயே இருக்கிறது. நிர்க்குண பிரம்மம் என்னும் நிலையில் இந்த விகாரங்கள் உன்னை வந்து தொடுவதில்லை.
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
பொருள்: ஈசா நீ வலிய வந்து என்னை ஆட்கொண்டுள்ளாய். நீ எனக்கு தந்தையாகவும் இறைவனாகவும் இருக்கின்றாய்.
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்
பொருள்: மிகக் கூர்மையான மெய்ஞ்ஞானம் படைத்தவர்களே உன்னை உள்ளவாறு உணர்ந்து கொள்வார்கள்.
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
பொருள்: ஊனக்கண் கொண்டு காண முடியாது. ஆனால் தெளிந்த மனக்கண் கொண்டு உன்னைக்காணலாம். அந்தக்கரணம் அல்லது மனக்கண் பண்படுதற்கு ஏற்ப நீ நன்கு உணரப்படுகின்றாய்.
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
பொருள்: பூரணனாகிய நீ எங்கும் இருப்பதால், உனக்கு போதல், வருதல், பிற பொருளை சேர்தல் என்பன இல்லை. கலப்பதற்கு வேறு பொருள் ஒன்றும் இல்லாததால் நீ எப்போதும் புனிதமாகவே இருக்கிறாய். ஆதலால் நீ புண்ணியன். நீ சுத்த சிவம்.
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
பொருள்: நீ எப்போதும் சாட்சியாக இருந்து என்னைக் காப்பாற்றி வரும் வேந்தன். ஊனக்கண் கொண்டு காணமுடியாத மனசாட்சி எனும் மாறாத ஞானச்சுடர் நீ.
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய் நின்ற
பொருள்: நன்னெறியினின்று உதிக்கின்ற பேரின்ப பெருக்கே. நீ எனக்கு தந்தையாகவும், அதற்கு மேம்பட்டும் இருக்கிறாய்.
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுர்வாய்
பொருள்: சாஸ்வதமாய் உள்ள சுயஞ்சோதிப்பிழம்பே, நீ சொல்லில் அடங்காத பேருணர்வுப் பரம்பொருள்.
மாற்றமாம் வையகத்தே வெவ்வேறே வந்தறிவாம்
பொருள்: இடையறாது மாறுபாடு அடைந்து வருகிற நிலவுலகில் வெவ்வேறு வடிவங்களுடன் நீ அறிவாக விளங்குகின்றாய்.
தேற்றனே தேற்றத்தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
பொருள்: தெளிவானவனே, நிறைந்த தெளிவுடையவனே, நீ என் உள்ளத்தினுள் ஊற்றெடுத்துப்பெருகி உண்பதற்கான அரிய அமிர்தமானாய். என்னை உடைமையாய்க் கொண்டு இருப்பவன் நீயே.
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
பொருள்: சிறுவன், இளைஞன், கிழவன் என்று வெவ்வேறு விகாரங்களைஉடைய தசையுடலின் உள்ளே குடியிருக்கச் சகியேன்.
ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
பொருள்: உன்னுடைய அடியார்கள் உன்னை ஐயனே என்றும், அரனே என்றும் வழுத்தி, உன்னை பாராட்டி, உன் மயமாயிருந்து பொய் உடலை தவிர்த்து, சிவ சொரூபமானார்கள். நானும் அப்படியாக வேண்டும்.
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
பொருள்: மெய்ஞ்ஞானத்தை திரிபு படுத்தும் தன்மை பொறிகளுக்கு உண்டு. அப்பொறிகளுக்கு உறைவிடம் இவ்வுடல்.
கள்ளப்புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
பொருள்: என் உள்ளத்தினுள் சிவ போதத்தை வளர்ப்பதற்கு ஏற்ப நீ இந்த உடல் அமைப்பை கலைத்து விடுகிறாய். அதனால் நான் வினைக்கு வசப்பட வேண்டியதில்லை. மீடும் இவ்வுலகில் வந்து பிறக்கவும் வேண்டியதில்லை.
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே
பொருள்: உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையிலும் நீ நித்தியமாய் விழித்திருக்கும் தலைவன் ஆகின்றாய்.
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
பொருள்: அகில அண்டங்களையும் ஒழுங்காக இயக்குவித்தல் என்னும் கூத்தை நடத்துபவனே! நீ சிறப்பாகச் சிதம்பரம் என்னும் தலத்திலும் தமிழ்நாட்டிலும் திகழ்கின்றாய்.
அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று
பொருள்: ஓ என்று ஓலமிட்டு அரற்றிப் பூரணனை நாடுபவனது பிறவியையும் அதனின்று விளைகிற துன்பத்தையும் அகற்றுபவன் அவனேயாம்.
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
பொருள்: சொல்லில் அடங்காத சொற்கொண்டு போற்ற வேண்டும். இறைவனுடைய சொரூபத்தை உள்ளபடி உணர்ந்து போற்றுபவரே அவனது சன்னதி சார்கின்றனர். அப்படி சன்னதி சார்பவர்களை ஏற்கனவே சார்ந்த சிவ பக்தர்கள் பணிவோடு வணங்கி வரவேற்கின்றனர்.
2. கீர்த்தித் திருவகவல் (தில்லையில் அருளியது)
(சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை)
கீர்த்தித் திருஅகவல் சிவபெருமான் தன்பால் அன்புடைய மெய்யடியார்களுக்கு எளிவந்து அருள்சுரந்த புகழ்ச் செய்திகளை விரிந்துரைத்தலின் இப்பெயர் பெறுவதாயிற்று. இதற்குச் சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை எனக் கருத்துரைக்கப்பட்டது. 146 அடிகளில் நிலைமண்டில ஆசிரியப் பாவினால் அமைந்தது இப்பகுதி. உயிர்களின் உய்திப் பொருட்டாக இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை இது விரித்துரைக்கின்றது. திருப்பெருந்துறையிலிருந்து தம்மைத் தில்லைக்கு வருக எனப் பெருமான் அழைத்த செய்தி இறுதியில் குறிக்கப் பெற்றது.
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பலகுணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத் துறந்தும்
அடியார் உள்ளத்து அன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்
பொருள் : திருவிளையாடற்புராணத்திலுள்ள செய்திகள் இப்பகுதியில் கூறப்படுகின்றன. பழைய பதியாகிய சிதம்பரத்தில் நடனம் செய்த நடராசன் உயிர்கள் அனைத்தின் உள்ளத்திலும் இனிது இடம் பெற்றிருக்கின்றான். மண்ணுலகம், விண்ணுலகம், தேவலோகம் ஆகிய எங்குமே கணக்கிட முடியாதபடி குண பேதங்களும் அழகு வகைகளும் நிறைந்திருக்கின்றன. ஈசனுடைய திருவிளையாடலில் அப்போதைக்கப் போது தேவையாய் இருக்கின்ற கலைஞானங்கள்தோன்றவும் மறையவும் செய்கின்றன. ஆனால் என்போன்ற ஜீவனுடைய அஞ்ஞானத்தை நாளடைவில் முழுதும் போக்குதல் இறைவனுடைய மாறாத திட்டமாகும். பக்தி பெருக்கெடுத்தோடும் பக்தர்களது உள்ளமே இறைவனது பெருங்கோயில் ஆகிறது என்பது கோட்பாடு. இறைவனுடைய சான்னித்தியத்தை அங்கு நன்கு காணலாம். யாண்டும் நிலைத்திருக்கிற பெரிய மலையாகிய மகேந்திரத்தில் நீ ஆகமத்தைப் பகர்ந்தருளியிருக்கிறாய்.
கல்லா டத்துக் கலந்தினிது அருளி
நல்லா ளோடு நயப்புற எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பான்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிரது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து
உற்றஐம் முகங்க ளால்பணித் தருளியும்
பொருள் : கல்லாடம் என்னும் தலத்தில் நீ வீற்றிருக்கிறாய். உமாதேவியாரோடு நீ இன்புற்றிருக்கிறாய். பஞ்சப் பள்ளி என்னும் தலத்தில் சிவசக்தியாகிய நீ இனிய அருளை ஏராளமாகத் தோற்றுவித்துள்ளாய். அர்ச்சுன னுக்காக வேடனது கோலந்தாங்கி வந்தவன் நீ. முருக்கம் பூப் போன்ற உதடுகள் உடையவளும், நெருங்கி பருத்த மார்பகங்களை உடையவளும் ஆவாள் உமாதேவி. அத்தகைய சக்தி தேவியாகிய நல்ல தடாகத்தில் மூழ்கியிருப்பவன் நீ. செம்படவர் வேடம் தாங்கிக் கெளிற்றுமீனை வலைவீசிப் பிடித்து அதனூடு இருந்த ஆகம நூல்களை நீ மீட்டு எடுத்துள்ளாய். அந்த ஆகமங்களை ஆத்மாக்கள் யாண்டும் விரும்புகின்றனர். அந்த ஆகமங்களை மகேந்திரமலையில் எழுந்தருளியிருந்து உனக்கு வாய்த்துள்ள ஐந்து முகங்களால் உபதேசித்து அருளினை.
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசனிப் புவனியை உய்யக்
கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர், விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
பொருள் : நந்தம்பாடி என்னும் தலத்தில் நான்கு வேதங்களையும் ஓதியுணர்ந்த வேதியனாய் வந்து அளப்பரிய அறிவு படைத்த ஆசாரியனாய்த் திகழ்ந்தாய். எண்ணிறந்த உருவங்களையும், இயல்புகளையும் உடைய இயற்கைப் பொருள்களாக நீ வந்துள்ளாய். காளை வாகனத்தை யுடைய இறைவன் இவ்வுலகை உய்விக்கும் பொருட்டு மாதொருபாகனாக எழுந்தருளியுள்ளான். மேல் நாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த குதிரைகளைத் திறமையுடன் பழக்குபவனாக நீ எழுந்தருளினாய். வேலம் புத்தூரில் காளை வாகனத்தை விடுத்தருளி உன் திருக்கோலப் பொலிவையும் விளக்கியுள்ளாய்.
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
விற்பொடு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்பத்
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
பொருள் : சாந்தம் புத்தூரில் வில்லைக் கொண்டு போர் புரிகின்ற வேடனுக்குக் கண்ணாடியில் உனது காட்சி கொடுத்தருளினை. மொக்கணீச்சுரத்தில் அழகு பொருந்திய முழுத் தீ வண்ணனாக உன்னை நீ காட்டியருளியது பழைய நிகழ்ச்சியாகும். திருமாலும் பிரமதேவனும் உன்னை முழுதும் அறிந்து கொள்ள மாட்டார்கள். அத்தகைய நீ நரியைப் பரியாக்கியது உனது மகிமையாகும். அழகு நிறைந்த திருவடியையுடைய ஈசன் பாண்டியனை ஆட்கொள்ளும் பொருட்டு அவனுக்குத் தாம் குதிரை விற்றதனால் வந்த பொன் குவியலை ஏற்கவில்லை. மற்றோர் அதிசயத்தை அவர் செய்தார். ஆண்டவனாகிய எம் ஈசன் அருள் நெறியில் பாண்டியனை நிலைத்திருக்கச் செய்தல் பொருட்டுத் தமது பழைய திரண்ட சோதி சொரூபத்தை அவனுக்குக் காட்டியருளினார்.
அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்
பொருள் : வேதியனாக வந்து என்னை ஆட்கொண்டு இப்பிரபஞ்சம் இந்திரசாலம் போன்றது என்று தெளிவுபடுத்தியது அவருடைய அருள் திறம் ஆகும். பெரியதும் அழகானதுமாகிய மதுரை நலனுக்கு உறைவிடம். அங்கு நீ குதிரைப் பாகனாய் எழுந்தருளியுள்ளாய். அதே மதுரை நகரில் வந்தி என்னும் பிட்டு வாணிச்சிக்காக நீ கூலியாளாக வந்து முறையாகப் பணிவிடை செய்த பெருமை உனக்குண்டு. திருவுத்தர கோச மங்கை என்னும் தலத்தில் ஞானச் சாரியனாக எழுந்தருளிய பேரியல்பு உன்னுடையதாகும். திருப்பூவணம் என்னும் தலத்தில் தூய நிறமும் பிரகாசமும் உடைய திருமேனியைக் காட்டியருளியது தொன்று தொட்டு வந்துள்ள உனது பேரன்புக்கு அறிகுறியாகும்.
வாத வூரினில் வந்தினிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கருவார் சோதியில் கரந்த கள்ளமும்
பூவலம் அதனில் பொலிந்தினி தருளிப்
பாவ நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனிற்
குருந்தின் கீழ்அன் றிருந்த கொள்கையும்
பொருள் : திருவாதவூரில் நீ தோற்றமளித்த போது உன் திருவடிகளை அலங்கரித்த சிலம்பின் ஓசையில் இனிமை தவழ்வதாயிற்று. அழகு நிறைந்த திருப் பெருந் துறையில் ஞானாச் சாரியனாக வந்த நீ உன் கோலத்தை வஞ்சகமாக மறைத்து மாறாத ஜோதியாகிய உனது மூலநிலை எய்தினை. பூவலம் என்னும் ஊரில் காட்சியளித்து பாவத்தைப் போக்கிய பெருமை உன்னுடையதாம். போரில் பாண்டியன் வெற்றி பெறுதல் பொருட்டு நீ தண்ணீர்ப் பந்தல் வைத்து அவனுக்கும் அவனுடைய சேனைக்கும் நல்ல நீர்வழங்கும் தொண்டன் ஆனாய், இங்ஙனம் அடியவர்களுக்கு நீ எப்போதும் நன்மை செய்பவன். திருவெண்காட்டில் அன்று நீ விருந்தாக வந்து குருந்த மரத் தடியில் தங்கியிருந்தாய் ! அது பாராட்டுதற்குரியதாகும்.
பட்ட மங்கையில் பாங்காய் இருந்தங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னில் கரந்த கள்ளமும்
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிடும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
பொருள் : திருப்பட்ட மங்கை என்னும் தலத்தில் நன்கு அமர்ந்திருந்து அஷ்டமா சித்திகளை விளக்கருளிய பெருமை உனக்குண்டு. நீ விரும்பியபடி வேடனது உருவத்தை எடுத்துப் பிறகு காட்டில் மாயமாய் மறைந்து போன பெருமை உன்னுடையதாகும். அடியவர்களைக் காப்பாற்றுதல் என்னும் உண்மையை நிரூபித்தல் பொருட்டுத் தன் திருவுளத்துக்கு ஒப்பத் தகுதிவாய்ந்த ஒரு மனிதனாகத் தோன்றி வந்த பெருமை சிவனாருடையதாம். திருவோரியூரில் மகிழ்வுடன் எழுந்தருளி நிலவுலகுக்குரிய அரிய சிறுவன் ஆனது உனது அருள் தன்மையாகும். திருப்பாண்டூர் என்னும் தலத்தில் நீ கண் கூடாகக் காட்சியளித்திருந்தும் திருத்தேவூருக்குத் தென்பக்கத்தில் உள்ள தீவில் பேரழுகு பொருந்திய வடிவங்கொண்டு நீ காட்சி கொடுத்ததும் உனது திருவுளப் பாங்காகும்.
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்தவப் பரிசும்
ஏகம் பத்தினி இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ் சியத்தில சீர் பெற இருந்து
மருவார் குழலியோடு மகிழ்ந்த வண்ணமும்
பொருள் : தேன் அடைகள் நிறைந்துள்ள சோலைகளையுடைய திருவாரூரில் பரஞானத்தை வழங்கிய சிறப்பு சிவனாருடையதாகும். திருவிடைமருதூரில் தோன்றித் தனது புனிதமான பாதத்தை வைத்த பெருமை பரமனுக்குரியதாகும். காஞ்சிபுரத்தில் தனது தன்மைக்கு ஒப்ப சிவ சக்தியாய்ப் பரமன் மிளிர்வது அவனது மகிமையாம். திருவாஞ்சியம் என்னும் தலத்தில் பேரழகுடன் தோன்றி மணம் நிறைந்த கூந்தலையுடைய உமாதேவியாரை மகிழ்வித்தது உனது மகிமையாகும்.
சேவக னாகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும்
குற்றா லத்துக் குறியாய் இருந்தும்
பொருள் : போர் வீரனாகத் தோன்றி, வலிய வில் தாங்கி நின்று, விரும்பியவாறெல்லாம் நீ பல வடிவங்களை எடுத்து உன் திறமைகளைக் காட்டியருளினை. திருக்கடம்பூர், திருஈங்கோய் மலை, திருவையாறு ஆகிய தலங்களில் உன் விபூதிகளுடன் நீ எழுந்தருளியுள்ளாய். திருத்துருத்தி, திருப்பனையூர் ஆகிய தலங்களில் நீ மகிழ்வுடன் எழுந்தருளியுள்ளாய். சீகாழி, திருக்கழுக்குன்று ஆகிய தலங்களில் கண்கூடாக எழுந்தருளியிருக்கிறாய். திருப்புறம் பயம் என்னும் பதியில் நீ அறநூல்களைச் செய்தருளினை. திருக்குற்றாலத்தில எழுந்தருளியிருக்கிறாய்.
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வௌர் தன்மையும் தன்வயின் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்இறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத்து இழிந்துவந்து அழகமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
பொருள் : பிரளயத்தினின்று சிருஷ்டி வந்தபோது நீ முதலில் இரண்யகர்பன் அல்லது பொன்போன்ற தீ வண்ணன் ஆனாய், பின்பு முக்குண பேதத்தால் எண்ணிறந்த அழகு வடிவங்களை எடுத்தாய். உனது மாயா சக்தியால் உலகம் முழுவதையும் தோற்றுவித்தாய். பல்வேறு வகைப்பட்ட உயிர்களின் இயல்புகள் எல்லாம் உன்னிடத்திருந்தே வந்தவைகளாம். இறைவா உன் அருள் சக்தியினின்று நீ இத்தனையும் தோற்றுவித்துள்ளாய். சந்திர தீபம் என்னும் தலத்தில் நீ ஒரு சாஸ்திரியாக வடிவெடுத்து வந்தாய். வான வெளியினின்று கீழே இறங்கி வந்து அழகிய பாலை என்னும் பதியில் பேரழகனாக நீ பொலிந்தருளினாய்.
மந்தர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை யாண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை ஒருங்குடன் அறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
பொருள் : வேதங்களின் உட்பொருளை விளக்குதற்கு இடமாயிருந்த மகேந்திர மலைவாசி நீ. எண்ணிறந்த விபூதிகளையும் அருள் சக்திகளையும் படைத்துள்ள பெருமான் நீ. எம்மை நீ ஆட்கொண்டருளிய பேரியல்லை எவ்வாறு எடுத்துரைப்பது! சர்வ சக்திமானும் சுந்த ரேசனுமாகிய எம்பெருமான் தமது பேரழைகைத் திருநீற்று வரிகளால் மேலும் அழகுறச் செய்கிறார். கேடதனை ஒன்று சேர்த்து அறவே அகற்றுகிற பேரானந்தத்தை ஐயனே எனக்கு நீ ஆறாகக் கொடுத்தருளினை ! நீ ஒரு பாகம் அம்மையாக இலங்குவதால் உனது பெருங்கருணை நன்கு உணரப்படுகிறது. நீ நாதப் பிரம்மமாக சதா சப்தம் செய்து கொண்டிருப்பதால் நன்கு அறியப்படுகின்றனை.
அழுக்கடை யாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்ட டருளியும்
மூல மாகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
உத்தர கோச மங்கையூர் ஆகவும்
பொருள் : உயிர்களை மலத்தினின்று விடுவித்து உன்மயம் ஆக்குவது ஈசா, உனது அருள் செயலாம். திரிசூலத்தை நீ கையில் தாங்கியிருந்து உயிர்களைப் பக்குவப்படுத்துவதும் உனது அருள் செயலாம். இறைவா, நீ ஞானப்பிரகாசன். உனது சுய சோதியின் முன்னிலையில், அஞ்ஞான இருள் இடம் பெறாது. அஞ்ஞான அந்தகாரம் அகலுமிடத்து அதனிடத்திருந்து உதிக்கின்ற மும்மலங்களும் அறுபடுகின்றன. நீ உயிர்களுக்கு மணாளன் ஆகிச் செங்கழுநீர்ப் பூவின் மாலையைப் பொருத்தமாக அணிந்து கொண்டு உன் அழகைப் பெருக்கு கின்றாய். ஈசா, உன்னை நாராய்ணனும் நான் முகனுமே முழுதும் அறிந்து கொள்ள மாட்டார்கள். இனி மற்றவர்கள் எப்படி அறிய முடியும்? அத்தகைய நீ பல தடவைகளில் குதிரையின் மீது ஊர்ந்து வந்து உன்னை விளக்கியருளினாய். மீண்டும் பிறப்பு எடுப்பதற்கு அவசிய மில்லாதவாறு ஈசா, நீ முக்தியைக் கொடுத்தருள்பவன். அத்தகைய நீ பாண்டி நாட்டை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கொண்டுள்ளாய். பக்தி பண்ணுகிற அன்பர்களுக்கு ஈசா, நீ முக்தியைக் கொடுத்தருள்கின்றாய். அத்தகைய நீ உத்தர கோச மங்கையை உனது ஊராகக் கொண்டிருக்கிறாய் !
ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்
இருள்கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வௌர் திறமும்
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டு அருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை ஈங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்
பொருள் : சிருஷ்டியின் பக்திகளுக்கெல்லாம் அதிஷ்டான தேவர்களாய் வாய்த்தவர்களுக்கெல்லாம் தேவையான வல்லமைகளை நீ தந்தருளியிருப்பதால், ஈசா, உனக்கு மகாதேவன் என்னும் காரணப் பெயர் வந்துள்ளது. பேரானந்தத்தை வாகனமாகக் கொண்டுள்ள இறைவா, உன்னை அடையும் அடியார்களுக்கு ஆனந்தத்தின் மேலீட்டால் அஞ்ஞான இருள் அகல்கிறது. நீ அருளே வடிவெடுத்திருப்பதால் நீ வீற்றிருக்கும் கயிலை மலையும் அருள் மயமாய் இலங்குகிறது. யார்யார் எத்தகைய பெருமையோ, வல்லமையோ, தனி இயல்போ படைத்தவர்களாய் இருக்கிறார்களோ அவையாவும் அவர்களுக்கு உன்னிடத்திருந்து வந்தவைகளாம்.
திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட ஈசன் சிவபுரத்துக்கு என்னை உடன் அழைத்துச் செல்லவில்லை. மண்ணுலகில் நலனும் அழகும் நிறைந்த சிதம்பரத்தில் தம்மை வந்து தரிசிக்கும்படி ஆக்ஞாபித்து என்னைப் பின்விட்டுச் சென்றனர். அருள் மேனி பெற்றுத் தம்மோடு நெருங்கியிருந்த திருக்கூட்டத்தை மட்டும் தம்மோடு அவர் அழைத்துச் சென்றனர். அப்படி அவர் செய்தது அவருடைய திருவுளப் பாங்கு ஆகும்.
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி
நாத நாத என்றழுது அரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக்கு அருளிய பரமநா டகஎன்று
இதஞ்சலிப் பெய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்
பொருள் : ஈசா, உன்னை அடைய மனமுவந்து வராதவர்கள் தீக்கு இரையாவதற்கு நிகராக அழிந்து பட்டுப் போகின்றனர். அருளை நாடாதவர்கள் உலக ஆசையைப் பெருக்கி அறிவை இழக்கின்றனர். நிலவுலகில் மக்கள் பிறந்து வீழ்ந்து வாழ்வில் புரண்டு படாதபாடு படுகின்றனர். பிறவிப் பெருங்கடலில் புகாதபடி அதனோடு மூண்டு போராடி, அதனிடத்தில் இருந்து விலகி விரைந்தோடி, நாதா, நாதாவென்று உன்னைநாடி யழுது உன்னை அடைந்தவர்களைப் பின்பற்ற நான் விரும்புகிறேன். பதஞ்சலி முனிவர்க்கு அருள்புரிந்த மேலான தில்லைக் கூத்தனே ! என்று அருள்தாகம் எடுத்து நெஞ்சம் உருகினவர்கள் மேலும் மேலும் உருகும்படி நீ அருள்புரிந்துள்ளாய்.
எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவர் ஓடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினது அருளினன்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.
பொருள் : அழகு நிறைந்த இமயமலையின் மேற்பகுதி பொன் மயமாய்த் திகழ்வது போன்று அழகிய சிதம்பரமும் பொன்னம்பலமாகத் திகழ்கிறது. ஆங்கு இறைவா நீ நடனம் புரிகின்றாய். உனது அழகு நிறைந்த திருமுகத்தில் புன்னகை பொலியப் பெற்றவனாய் நீ இருக்கின்றாய். அத்தகைய நீ உனது அருளால் கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியார்க்கும் பயங்கர சொரூபிணியாகிய காளிகாதேவிக்கும் இரண்டுவித இயல்பை நல்கியிருக்கின்றாய். கைலாசபதியாகிய நீ நாதப்பிரம்மம். அத்தகைய நீ சிதம்பரத்தின்கண் எழுந்தருளி அடியவர்களோடுகூடி இனிது வீற்றிருக்கின்றாய்.
குறிப்பு : சிவன் சாந்த மூர்த்தி: ருத்திரன் உக்கிர மூர்த்தி. அதே விதத்தில் உமாதேவி சாந்த மூர்த்தி; காளிகா தேவி உக்கிர மூர்த்தி. சாதகன் ஒருவன் இந்த இரண்டு அம்சங்களையும் சரியாக உபாசிக்கின்ற பொழுது அவனுடைய உபாசனை பரிபூரண உபாசனை ஆகின்றது.
3. திருவண்டப் பகுதி (தில்லையில் அருளியது)
(சிவனது தூல சூக்குமத்தை வியந்தது)
இப்பகுதியில் சிவபெருமான் எல்லா அண்டங்களிலும் பெரியவனாய் அவற்றையும் கடந்து நிற்கும் பெருநிலை பேசப்படுகின்றது. அம்முதல்வனது தூல சூக்கும. நிலையை வியந்து போற்றுவதாக அமைந்துள்ளது இது. இணைக்குறள் ஆசிரியப் பாவினால் 182 அடிகளில் இது நிறைகிறது. சிவபெருமானின் பஞ்ச கிருத்தியங்களுள் அருளல் ஒழிந்த ஏனை நான்கினை இப்பகுதி விரித்துரைக்கின்றது. (ஏனை நான்கு: ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல்)
உருண்டு திரண்டு அக்கினிக் காற்றாயிருப்பது சூரியன். அதனிடத்திருந்து சிதறிவந்து குளிர்ந்து இறுகியிருப்பது நில உலகம். அதே விதத்தில் சுத்த சைதன்யமாயிருப்பது சிவம். அந்த சிவனிடத்திருந்து ஜடசக்தி வந்துள்ளது. ஜடசக்தி பஞ்ச பூதங்களாயின. பஞ்ச பூதங்களிலிருந்து எண்ணிறந்த அண்டங்கள் உண்டாயின. அவை யாவும் சிவனாருக்கு உடலாக அமைந்துள்ளன. ஆதலால் அவைகளைத் திரு அண்டம் என அழைப்பது முறை. அண்டம் என்னும் சொல் உருண்டை அல்லது முட்டை வடிவில் இருப்பது எனப் பொருள் படுகிறது.
இணைக்குறள் ஆசிரியப்பா
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியுந்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்போர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து
எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்
பொருள் : பிரமாண்டமானது எண்ணிறந்த கோளங்களையுடையது. அக் கோளங்களின் தன்மைகளை முற்றிலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆராயும் அளவு அவைகளின் அழகும் சீரமைப்பும் கண்டு வியப்பதற்கு உரியவைகளாயிருக்கின்றன. ஒவ்வொரு கோளத்திலும் ஒரு தனியழகு பொலிகிறது. விளக்கிச் சொல்லுமிடத்துக் கோடிக் கணக்கில் அவைகள் அகண்டா காரத்தில் விரிந்து போகின்றன. ஒரு பொத்தலில் வீட்டுக்குள் வருகிற சூரிய வெளிச்சத்தில் அணுப்போன்ற தூசிகள் அலைந்து திரிவது தென்படுகிறது. அது போன்று கோளங்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சிறியதாகிய அணுவுக்கும் பெரியதாகிய அண்டத்துக்கும் அமைப்பு ஒன்றேயாம். ஆராய்ந்து பார்ப்பவருக்கு இவ்வுண்மை விளங்குகிறது.
எண்ணிறந்த பிரம்மாக்களும், அவர்களுக்கெல்லாம் சேஷனாய் இருக்கிற விஷ்ணுவும், சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் ஆகிய முத்தொழில்களும் மகாபிரளயமும் அதன் இருப்பும் முடிவும் ஆகிய இவையாவும் உனது விராட் சொரூபத்தின் பாங்குகளாம். வீசுகின்ற பெரிய சுழல்காற்றில் அடங்கியிருக்கிற சிறிய காற்றும் சுழன்று இடம் மாறுகிறது. அங்ஙனம் நித்திய யௌவனத்தில் இருக்கிற பரமனது சான்னித்தியத்தில் கிருத்திய கர்த்தாக்களாகிய தெய்வங்கள் அவரவர் செயல்களை முறையாகச் செய்து வருகின்றனர். அப்படி அவர்கள் செய்கிற பிரபஞ்சக் கிருத்தியங்கள் சூட்சும நிலையிலும் ஸ்தூல நிலையிலும் நிகழ்ந்து வருகின்றன.
படைப்போன் படைக்கும் பழையோன்படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாள்தொறும்
பொருள் : அனைத்தையும் படைப்பவனாகிய பிரம்மதேவன் தொல்லோன் ஆகிறான். படைக்கப்பட்டவைகளைக் காப்பவன் திருமால்; காக்கப்பட்டவைகளைத் துடைப்பவன் ருத்திரன். இம் முத்தொழில்களில் கருத்தைச் செலுத்தாமல் அதீதத்தில் இருப்பவன் பரமசிவம். வேதத்துக்கு உடன்பாடான ஆறு சமயங்களை அனுஷ்டிப் பவர்களுக்கெல்லாம் முக்தியைக் கொடுப்பவர் ஈசன். தேவர் கூட்டம் முதல் புழு வரையில் உள்ள ஜீவர்கள் எல்லாரிடமும் சம திருஷ்டி வைத்திருப்பவர் ஈசன்.
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதொன்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்னேர் இல்லோன் தானே காண்க
பொருள் : நீ சூரியனிடத்து ஒளியை உண்டு பண்ணியுள்ளாய்; அழகுடைய சந்திரனிடத்துக் குளிர்ச்சியை யமைத்தாய்; வலிய வெற்றியையுடைய நெருப்பில் வெப்பத்தைத் தோற்றுவித்துள்ளாய்; யாண்டும் நிலைத்திருக்கிற ஆகாசத்தில் வியாபகத் தன்மையை அமைத்துள்ளாய். மேன்மை பொருந்திய காற்றில் விரைந்தடித்தல் என்னும் வேகத்தைக் கொடுத்துள்ளாய்; குளிர்ச்சி பொருந்திய நீரில் நீ இனிய சுவையை வைத்துள்ளாய்; இப்படியெல்லாம் உன் மகிமைகளை வேண்டியவாறு விளக்கிக் கொண்டே போகலாம். கோடிக்கணக்கில் அவைகள் விரிகின்றன. அவை யாவையும் நீ அவைகளுக்குரிய இடங்களில் வைத்துள்ளாய். அதற்கு மேலும் உன்மகிமை உள்ளது. அனைத்துக்கும் ஆதிமூலமாய் இருப்பவனும் பூரணனாய் இருப்பவனும் சுவானு பூதிக்கு உரியவன் ஆகுக. அவன் பூரணப் பொருள் ஆதலால் அவனுக்கு ஒப்பானவன் வேறு யாருமில்லை என்பதை உணர்க.
ஏனத் தொல்எயிறு அணிந்ததோன் காண்க.
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க
அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க
பொருள் : காட்டுப் பன்றியின் முதிர்ந்த தந்தத்தை அணிந்து கொண்டிருப்பவனைக் கண்டு கொள்க. வனத்தில் வசிக்கின்ற புலியின் தோலை அணிந்துள்ள அரையையுடையவனை அறிந்து கொள்க. திருநீறு பூசியவனைக் கண்டு கொள்க. அவனை நினைந்து நினைந்து இன்புறும் நான் அவனை மறந்திருக்கச் சகியேன் என்பது வெளிப்படை. ஒருவேளை அவனை மறந்தால், ஐயோ நான் கெட்டொழிவேன். வீணையினின்று வருகின்ற இனிய இசை வடிவினன் ஈசன். அந்த இசையை ரசிப்பவனாகவும் அவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
பரமசிவன் பிரபஞ்சத்துக்கு அப்பால் இருப்பவன் என்பதையும் அவன் புராணன் என்பதையும் அறிந்து கொள்க. அவன் அகண்ட வஸ்துவாதலால் கிருத்திய கர்த்தாக்களாகிய நான்முகப் பிரமனும் திருமாலும் அவனை முற்றும் அறியார்கள் என்பதையும் அறிந்து கொள்க. ஈசன் வியப்புக்குரிய பெரிய பொருள் என்பதையும் அவன் எண்ணிறந்த வடிவங்களை எடுத்திருப்பவன் என்பதையும் எண்ணிப் பார்க்கவும்.
சித்தமும் சொல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் உணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க
பொருள் : மனத்துக்கு எட்டாததினால் அவன் தூரத்தில் இருப்பவன் போன்று காணப்படுகின்றான். ஆனால் பக்தியின் மூலம் அவனை நாம் முற்றிலும் நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்க. அவனைத் தவிர இரண்டாவது பொருள் ஏதும் இல்லை. அத்தகைய ஒருவனே உலகாய், உலகில் எல்லாமாய் விரிந்திருக்கிறான். இதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. வண்ணத்தில் அணுப் போன்று நுண்ணியனாய் இருக்கும் ஈசன் பெருமையில் ஒப்பற்றவனாய் இருப்பதை அறிந்து கொள்க.
மனதால் கிரகிப்பதற்கும் வாயால் விளக்குதற்கும் அரியவனாய் இருப்பவன் ஈசன். பின்பு அவன் அனைத்திலும் ஊடுருவியிருந்து அவையாவையும் வளர்த்து வருகிறான் என்பதை அறிந்து கொள்க. பரமன் ஏட்டுக் கல்விக்கு எட்டாத சூட்சுமப் பொருள் என்பதையும் அவன் நீக்கமற எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்க.
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க
பொருள் : ஈசனுக்கு முடிவோ துவக்கமோ இல்லை என்பதையும் அவன் ஜீவர்களுக்குக் கர்ம பந்தத்தையும் மோட்சத்தையும் உண்டு பண்ணுகிறான் என்பதையும் அறிந்து கொள்க. இயங்கா திருப்பதும் இயங்குவதும் ஈசன் செயல். காலத்தை யுணர்ந்து காலாதீதத்தில் இருப்பவன் ஈசன். பக்தி பண்ணுபவர் அனைவரும் ஈசனை அடைவர்; பக்தி பண்ணாதவர்கள் தேவராயிருந்தாலும் அவர்களால் ஈசனை அடைய முடியாது. பெண், ஆண், அலி ஆகிய எல்லா உயிர்களாக இலங்குபவன் ஈசன். ஞானக் கண்ணைப் பெற்றபின் இவ்வுண்மை எனது ஊனக்கண்ணுக்கும் புலனாகிறது. அருளை மிகுதியாகப் பொலிகின்ற அமிர்த சொரூபம் ஈசன். அவன் கருணைக்கடல் என்பது எனது அனுபவம்.
புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானும் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க
பரமா னந்தப் பழங்கடல் அதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய
பொருள் : அடியேன் பொருட்டு ஆண்டவன் தனது செவ்விய திருவடி நிலத்தைத் தொடும்படி செய்தான். அவனைச் சிவனென நான் தெரிந்து கொண்டேன். அவனும் என்னை ஆட்கொண்டருளினான். குவளைப் பூவை யொத்த கண்களையுடைய அம்பிகையின் பாகன் சிவனார். அவர்கள் இருவரும் சொரூபத்தில் ஒன்று என்பதை அறிந்து கொள்க.
சிவசக்தியின் ஐக்கியத்தினின்று பிரபஞ்சமெங்கும் பொலிகிற பரமாநந்தம் பழைய ஆழ்கடல் போன்று அளப்பரியது. பெருத்த கார்மேகம் உதித்து நான்கு திசையிலும் பரவுவது போன்று பரமன் அழகு நிறைந்த திருப்பெருந்துறை மலையின் மீது பிரசன்னமாகித் தனது ஞானப் பிரகாசத்தை எங்கும் ஒளிரச் செய்தான். உலகில் பந்தப் படுத்துகிற ஐம்பொறிகள் என்னும் ஒளி நிறைந்த பாம்பு விரண்டோடுகிறது.
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியில் கோபம் மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்டவரையுறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி
இருமுச் சமயத்து ஒருபேய்த் தேரினை
நீர் நசை தரவரும் நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெரும் தாபம் நீங்காது அசைந்தன
பொருள் : வெவ்விய கோடைக்காலம் போன்று இருக்கிற கொடிய துன்பம் அழிந்து பட்டுப் போகிறது. முகவிலாசத்தில் அழகும் பிரம்ம தேஜசும் ஒளிர்கின்றன. மேலும் பிறவிகள் எடுப்பதில் எனக்கு அருவருப்பு மிக உண்டாகும்படி செய்தருளினை. உலகம் அறியும் வண்ணம் பறையடித்து இறைவா, என்னை நீ பகிரங்கமாக ஆட் கொண்டருளினை. நான் கை கூப்பித் தொழுத காட்சியானது இன்னும் அலராது கூம்பியிருந்த கார்த்திகைப் பூவின் தோற்றத்தை ஒத்திருந்தது.
இறைவனது குறையாத இனிய அருள் ஆனந்தக் கண்ணீர் சொட்டும்படி செய்தது. மலைமீது வைத்த விளக்குப் போன்று இறைவனது செவ்விய ஞானப் பிரகாசமானது திசைகள் எல்லாம் திகழ்ந்தது. துன்பம் என்னும் சிறுமை செயலற்றுப் போய் அது பேரின்பமாக ஓங்கிற்று.
பெரிய கண்களையுடைய மான்கூட்டம் கானல் நீரை நிஜநீர் என்றெண்ணி அதை நாடிச் சென்று தாக சாந்தியடையாது தவித்தது. அதுபோன்று புறச்சமயம் ஆறினுள் புகுந்து கடுந்தவம் புரிந்தவர் பலர் பரமனது அருளுக்குப் பாத்திரமாகாது அல்லல் பட்டனர்.
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்
பாய்ந்தெழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரைபொருது அலைத்திடித்து
ஊழுழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்பறித்து எழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறை அகில்
பொருள் : வானத்தைத் தொடுகிற அம்மலையினின்று பெரிய ஆறு பெருக்கெடுத்து வந்தது. ஆனந்தத்தை ஊட்டும் பெரியசுழிகள் அதில் உருவெடுத்தன. சுழித்துச் சுரித்துப் புரண்டோடி வருகிற அப்பேர் ஆறானது என்னைப் பிறவியிலே தளைக்கிற பற்றுதல் என்னும் பெரிய கரையில் மீது மோதி, அதை அசைத்து இடித்து வீழ்த்தியது. எத்தனையோ பிறவிகளில் நம்மை வந்து சூழ்ந்த இருவினையாகிய பெரிய மரத்தை வேரோடு பறித்துக் களைந்தது அந்த நீர்ப்பெருக்கு.
திருவருளாகிய நீர் ஆனது ஊடுருவிப் பாய்ந்து ஓடும்படி செய்தும் அருமையான மலையிடுக்கில் பெரிய அணைகட்டிப் பரந்த நீர்த்தேக்கத்தைக் குளமாக அமைத்தும், அங்குத் தேன்சொட்டுகிற நறுமணத்தோடு கூடிய மலர்கள் உண்டாகும்படி செய்தும் நீ அருளினை.
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
பொருள் : கரையில் மக்கள் எரித்த அகில் சுட்டையினின்று கிளம்பிய வாசனைப் புகை, படலம் படலமாகப் பரவிற்று. குளத்தினுள் வண்டினங்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கும், கேட்பதற்கும், மோப்பதற்கும் அவையாவும் தகுந்தவைகளாயிருந்து மகிழ்வூட்டின. வழிபாடு என்னும் வயலில் அன்பு என்னும் விதையை இட்டு, பரவெளியில் பிரகாசிக்கிற பெரிய பொருளாகிய மேகேசுவரனிடமிருந்து வருகிற சிவபோகம் என்னும் அமிர்தத்தை இறைவனது தொண்டர்களாகிய உழவர்கள் விளைவித்தார்கள். அருட்பசியைப் போக்குவதற்கு அது நல்லுணவாயிற்று.
கருநிறப் படத்தோடு கூடிய பாம்பை இடுப்பில் கச்சையாகக் கட்டியிருக்கும் கடவுள் வாழ்க. அரிய தவத்தைச் செய்கின்ற தவசிகளுக்கு அருள்புரிகிற முதல்வன் வாழ்க. மரண பயத்தைப் போக்குகிற வீரன் வாழ்க. எப்பொழுதும் அடியவரைத் தன்பால் கவர்ந்தெடுத்து ஆட்கொள்கிற ஈசன் வாழ்க.
சூழிருந் துன்பம் துடைப்போன் வாழ்க
எய்தினார்க்கு ஆரமுது அளிப்போன் வாழ்க
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க்கு ஏதில்எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பபினில் வைப்பு வாழ்க
நச்சரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்செமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅப்
பொருள் : வளைத்துப் பிடித்திருக்கிற பெரிய வினையின் வேதனையை அகற்றுவோன் வாழ்க. தன்னை வந்தடைந்தவர்களுக்கு அரிய அருள் அமிர்தத்தை வழங்குபவன் வாழ்க. அடர்ந்த இருளிலும் ஆனந்தக் கூத்தாடும் இறைவன் வாழ்க. தோள் அழகு மிகப் படைத்துள்ள உமாதேவியாரின் பாகன் வாழ்க. தொழாது பராமுகமாய் இருப்பவர்க்குத் தீங்கு ஒன்றும் செய்யாத சிவன் வாழ்க. அன்போடு நேசிப்பவர்க்கு வறுமைக் காலத்தில் உதவும் சேம நிதிபோன்று உள்ள இறைவன் வாழ்க.
விஷமுடைய பாம்பை ஆட்டுகிற கடவுளுக்கு வணக்கம். பக்திமிகுதியால் என்னைப் பிடித்துப் பித்தனாக்கிய பெரிய பொருளுக்கு வணக்கம். திருநீறு பூசப் பெற்றவனாகக் காட்சி கொடுக்க வல்லவனுக்கு வணக்கம். நான்கு திசைகளிலும் நடமாடுபவைகளை நடமாடச் செய்பவனும், அசையாது கிடப்பவைகளை அந் நிலையில் வைத்திருப்பவனும் ஆகிய ஈசனுக்கு வணக்கம்.
நிற்பன நிறீஇச்
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந்து எங்கும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்
இன்றெனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
பொருள் : நிற்கின்றவைகளை ஈசன் நிற்கச் செய்கிறான். பழைய பொருளாகிய அவன் சொல்லில் அடங்காதவன் ஆகிறான். அந்தக் கரணங்களாகிய மனம் புத்தி ஆகியவைகளுக்கு ஈசன் எட்டாதவன், புறக்கரணங்களாகிய கண், காது முதலியவைகளைக் கொண்டும் அவனை அறிந்து கொள்ளமுடியாது. ஆகாயம் முதலிய ஐம்பூதங்கள் இந்திரியங்களுக்கு எட்டும் வண்ணம் ஈசன் அவைகளை அமைத்துள்ளான்.
மலரில் மணம் போன்று இருந்து ஈசன் தனது விபூதியைப் பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைத்து வைத்துள்ளான். இன்று எளிதில் வந்து என்னை ஆட்கொண்டருளினை. அழியும் தன்மையுடைய உடலைப் பற்றிய உணர்வை என்னிடமிருந்து நீக்கி வைத்தாய். அத்தகைய செம்பொருள் நீ. இன்று எனக்காக வென்று எளிதில் பிரசன்னமாயிருப்பவனை வணங்குகிறேன். பக்தியைப் பெருக்குவதற்கான அருள் உடம்பை என் பொருட்டு அமைத்துக் கொடுத்தவனுக்கு வணக்கம்.
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையொளி போற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்
பொருள் : அன்பு சொரூபியாகிய சிவன் உள்ளத்தினுள் அன்பாக ஊற்றெடுத்து ஆனந்தத்தைப் பெருக்குகிறான். அன்னவனுக்கு வணக்கம், பேரின்பம் பெருகி அலை வீசிக் கொண்டு வந்து என்னைத்தன் மயமாக்குகிற பொழுது அதை ஏற்றுக் காப்பாற்றி வைக்க இயலாத ஊன் உடலைச் சுமக்க நான் விரும்ப மாட்டேன். பச்சை மணிக்குவியல், சிவப்பு மணிக்குவியல் ஆகியவைகளின் பிரகாசமும் மின்னலின் ஒளியும் தங்கத்தின் ஒளியும் ஒன்று சேர்ந்து திகழ்கின்ற தெய்வமே. புறநாட்டம் கொண்டு உன்னை வெளியுலகில் தேடுகிறவர்களுக்கு நீ தென்படாது ஒளிந்திருக்கிறாய்.
நூல்களில் சொல்லி வைத்துள்ள நன்னெறிகளை ஒழுங்காகப் பழகியவர்களுக்கும் காட்சிக் கெட்டாதவன் பரமன். பந்த பாசத்தால் நட்பும் அனுதாபமும் கொண்ட உறவினர் மனம் வருந்தும்படி வெளியில் கடுந்தவம் புரிகிறவர்களாலும் காணப் பெறாதவன் ஈசன். சாஸ்திர ஞானத்தைக் காரணமாகக் கொண்டு இறைவனைக் காண முயல்பவர்க்கு அவன் அகப்படான்.
இந்தந் திரத்தில் காண்டுமென்று இருந்தோர்க்கு
அந்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கவ்வி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதல் பெண்ணென ஒளித்தும் சேண்வயின்
ஐம்புலன் செலவிடத்து அருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்து வெற்றுயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருத்த ஒளித்தும்
ஒன்றுண்டு இல்லை என்றறி ஒளித்தும்
பொருள் : இந்த உபாயத்தால் இறைவனைக் கண்டு விடலாம் என்று முயல்பவர்க்கு அந்த உபாயத்திலேயே அங்கு அவன் மறைந்திருந்து காட்சிக்கு எட்டாதவன் ஆகிறான். பேரூக்கத்துடன் உன்னை நன்றாகப் பற்றிப் பிடித்து ஆராய்ந்து பார்ப்பவர்க்கு நீ ஆணாக விளங்குகின்றாய். அலியாக விளங்குகின்றாய். பண்பாடு அடைந்துள்ள பெண்ணாகப் பரிணமிக்கின்றாய். பின்பு இவை யாவையும் கடந்தும் இருக்கின்றாய்.
ஐம்பொறிகளின் செயல்களைத் தூர ஒதுக்கி வைத்து விட்டு, அரிய மலைகளிடையே சென்று உணவையும் அறவே துறந்துவிட்டு வெறும் குற்றுயிர் பிடித்துள்ள கடுந்தவசிகளுடைய தேங்கிய அறிவுக்கும் எட்டாதவன் ஈசன். அனைத்துக்கும் ஆதாரமாய் முழுமுதற் பொருள் ஒருவன் இருக்கிறான் என்று ஓர்ந்து கொள்ள இயலாத சிற்றறிவுக்கு ஈசன் எட்டாதவன் ஆகிறான்.
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவவர் பற்றுமுற்று ஒளித்தும்
தன்னேர் இல்லோன் தானே ஆனதன்மை
என்னேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டு அருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்புஎன்பு உருக ஓலமிட்டு
பொருள் : முன்பு தோன்றிய நூல்களிலும் பின்பு தோன்றிய நூல்களிலும் சிறு தெய்வங்கள் வசப்படுத்துதற்கான வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அம்முறைகளைக் கையாண்டு கள்வனைக் கண்டுபிடிக்க முயல்வது போன்று, கடவுளைக் காணுதற்குப் படாடோபமான வழிபாடுகளில் ஆரவாரியுங்கள். புதிய மலர்கொண்டு தொடுத்த மாலைகளால் அவனுடைய திருவடிகளைத் தளைத்திடுங்கள். சுற்றுங்கள், சூழுங்கள், தொடருங்கள், விடாதேயுங்கள். பற்றிப் பிடியுங்கள் என்றெல்லாம் முயலுபவர்க்கு ஈசன் அகப்படமாட்டான்.
இறைவா, உனக்கு நீயே நிகர், உனக்கு ஒப்பானவர் எவருமிலர், தன்னில் தானாகிய நீ என் போன்ற அடியார்கள் உய்தற் பொருட்டு அந்தணன் வேடம் பூண்டு வந்து என் மகிமையைப் புகட்டி யருளினை. என்னை நீ வலிய வந்து அழைத்து ஆட்கொண்டருளியதை வியந்து வருந்தி நான் அன்பினால் எலும்பு உருகும்படி ஓலமிட்டு அழுதேன்.
அலைகடல் திரையின் ஆர்த்தார்த்து ஓங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண்டு அலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின்
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோல்தேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித்து ஆங்கன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்
பொருள் : அலை வீசுகின்ற கடலில் எழுகின்ற ஓசை போன்று நான் பிரலாபிக்கிறேன். அந்த அலைபோன்று நான் தலைகீழாக வீழ்ந்து புரண்டு கத்துகிறேன். பித்துப் பிடித்தவர் போல மயக்கம் கொண்டும் வெறி பிடித்தவர் போலக் களியாட்டம் காட்டியும் நான் என் பேருணர்வை வெளிப்படுத்தினேன். இதையெல்லாம் பார்த்த ஊரார் திகைத்தனர். வதந்தி மூலம் கேள்விப்பட்டவர் வியப்படைந்தனர்.
மதம் பிடித்த ஆண்யானையானது தன் மீது பாகன் ஏற வொட்டாது தனது தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. என்னுடைய நிலையும் அத்தகையதாய் இருக்கிறது. அன்பின் பெருக்கினால் என் உடம்பில் உள் உறுப்புகள் அனைத்தும் கொம்புத் தேனில் ஊறவைத்தவைகள் போன்று தித்திக்கின்றன. அன்று தனது அழகிய புன்னகை என்னும் தீயைக் கொண்டு மிகப் பழையனவாகிய முப்புரங்களைச் சம்காரம் செய்தவன் வாயிலாகத் தன்னைப் புறக்கணித்து வாழ்ந்தவர்களையெல்லாம் இறைவன் துடைத்தருளினான். ஆனால் அவனுடைய அடியார்களாகிய எங்களிடம் பிறவிப் பிணிக்கு ஏதுவாயிருந்த பிரகிருதி என்னும் மலத்தைத் தனது அருள் என்னும் ஞானாக்கினியினால் சுட்டெரித்து அவன் எங்களை முற்றிலும் தன்வயமாக்கினான். என்னே !.
தடக்கையின் நெல்லிக் கனியெனக்கு ஆயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஓல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து
உவர்க்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
பொருள் : உள்ளங்கை நெல்லிக்கனி போல இறைவன் எனக்கு முற்றிலும் பிரத்தியட்சமானன். சுவானுபூதியில் சிவானந்த போகத்தை அனுபவிக்கப் பெற்ற யான் அதைப் பற்றி எப்படி எடுத்துரைப்பது என்று அறிந்திலேன். இறைவா, நீ வாழ்வாயாக. என்னை நீ ஆட்கொண்டது முறையோ அல்லவோ நானறியேன். நீ என்னை ஆட்கொண்டதை அற்பனாகிய நான் ஆற்றேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆஆ நான் மடிந்தேன். நீ அருள் புரிந்தது என் அறிவுக்கு எட்டாதிருக்கிறது. பருகப் பருக அது தெவிட்டாதது. உண்ண உண்ண அது போதும் என்னாதது.
செழுமையும் குளிர்ச்சியும் பொருந்திய பல கடலில் கிளம்பும் அலைகள் போன்றது இறைவனிடத்திலிருந்து வருகிற பேரானந்தம். நிறை நிலாவன்று கடலில் நீர் உயர்ந்திருப்பது போன்று என் உள்ளத்தினுள் ஆனந்தம் பொங்கி நிற்கிறது.
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது
உள்ளங் கொண்டோர் உருச்செய்து ஆங்கெனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னல் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க
அருளொடு பராஅமுது ஆக்கினன்
பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.
பொருள் : சொல்லில் அடங்காத அமிர்த சொரூபமாகிய ஆனந்தம் மயிர்க்கால் தோறும் ததும்பியிருக்கும்படி இறைவன் செய்தான். வினையேனது தசையினால் கொழுத்த உடம்புகள் அனைத்திலும் தகுதியற்ற என் உடலை இருப்பிடமாகக் கொண்டு சிவானந்தம் என்னும் தேனை இறைவன் பொழிந்தான். அப்படி நிறைந்த வியக்கத் தக்க அமிர்த தாரைகளை எலும்பின் துவாரங்களில் எல்லாம் இறைவன் ஏறப் பண்ணினான். அதை முன்னிட்டு உருகுவதாகிய மனத்தைக் கொண்டு ஒருவடிவத்தைச் செய்தாற் போல என்னிடம் அன்பு கசிந்தூறும் உடலை இறைவன் செய்தருளினன். அறிவுடைய யானையானது கரும்பையும் விளாங்கனியையும் தேடுவது போன்று தகுதியற்ற என்னையும் இறைவன் பேரானந்தத்தில் திளைத்திருக்கச் செய்தனன். என்னிடத்தில் சிவஞானம் என்னும் தேனில் திளைத்திருந்து நான் அமிர்த சொரூபம் ஆகும்படி இறைவன் செய்தருளினன். பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் எட்டாத பேரியல்புடைய பெம்மான் எனக்கு எட்டியவன் ஆனான். என்னே !
தேவர்களுக்கு ஆயுள் அதிகம். ஆதலால் அவர்கள் அமிர்தம் அல்லது சாவா மருந்து அருந்தினவர்களாகத் கருதப் படுகின்றனர். ஆனால் பரம்பொருளை அடைகிற மனிதன் அமிர்தத்துவம் அடைந்தவனாகிறான். அதுபிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்ட பெருநிலையாம். அது ஞானிகளின் தனியுடைமை.
தேன் என்னும் சொல்லைப் பல இடங்களில் மாணிக்கவாசகர் பகர்வதற்குக் காரணம் அவர் பரஞானத்தில் திளைத்திருந்தேயாம்.
4. போற்றித் திருவகவல் (தில்லையில் அருளியது)
சகத்தின் உற்பத்தி
போற்றி என்பது வணக்கம் என்று பொருள்படும்; போற்றி என்னும் தமிழ் மந்திரத்தால் இறைவனை முன்னிலைப் படுத்துவதால் இப்பகுதி போற்றித் திருவகவல் எனப்பட்டது. இதற்குச் சகத்தின் உற்பத்தி என்று கருத்துரைக்கப் பெற்றது. உயிர்கள் இவ்வுலகில் பிறந்து வீடுபேறு அடைதற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் இந்தப் பாடல் அமைந்திருத்தலால் முத்தி பெறு நெறியறியும் மொழி போற்றித் திருவகவல் என இதனைச் சிறப்பித்தனர்.
இது 225 அடிகளால் ஆன நிலை மண்டில ஆசிரியப்பா. இறைவன் மண்ணில் வந்த எளிய கருணையும், உயிர்களின் பிறப்பும், பிறப்பிடைத் துன்பமும், அதிலிருந்து தப்பிப் பிழைக்கத் தெய்வ சிந்தனையும், இறைவனே குருவாக எழுந்தருளிய செய்தியும் முதற்பகுதியாக உள்ளன. எஞ்சிய பகுதிகள் சில மந்திரங்களாகக் கொண்டு அருச்சனை செய்யத்தக்க தன்மையன. இப்பகுதி யஜுர் வேதத்தின் இடைப்பட்ட ஸ்ரீ ருத்ரத்தினை ஒத்தது என்பர்.
(நிலைமண்டில ஆசிரியீப்பா)
நான்முகன் முதலா வானவர் தொழுதெழு
ஈரடி யாலே மூவுலகு அளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர் முடித் திருநெடு மால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடுமுரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலரடி இணைகள்
பொருள் : நான்கு முகங்களையுடைய பிரம்மா முதலாகிய தேவர்கள் தொழுது வழுத்திக் கொண்டிருக்கையில் இரண்டு அடியில் மூன்று உலகங்களையும் லட்சுமி நாராயணன் அளந்து முடித்தான். அப்போது நான்கு திக்குகளிலும் உள்ள முனிவர்கள் தங்களின் ஐம்பொறிகளும் மலரும்படி பிரகாசமான கிரீடத்தையுடைய அத் திருமாலை வணங்கினார்கள். பின்பு அத் திருமால் ஈசனுடைய அடிமுடி காண விரும்பினான். வேகமும் வலிவும் கூடிய பன்றி வடிவெடுத்து வந்து முன்னே தோன்றி ஏழு பாதாளங்களையும் ஊடுருவிப் பிளந்து பார்த்துத் திருமால் தளர்வுற்றனன். அனைத்திற்கும் முதல்வனே, உனக்கு வெற்றி உண்டாகுக என்று அவன் சிவனை வழுத்திய பின்பும் அவருடைய தாமரைத் திருவடிகளைக் காண அவனுக்கு முடியவில்லை.
வழுத்துதற்கு எளிதாய் வார்கடல் உலகினில்
யானை முதலா எறும்புஈ றாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
பொருள் : அருவநிலையில் தேவர்களாலும் காண முடியாத திருவடிகளை உயிர்கள் கண்டு வழுத்துதற்கு எளிதாகும்படி சிவன் உருவம் தாங்கி வருகிறான். இறைவனை வழுத்துதற்குப் பக்குவமாக வேண்டிய ஜீவர்கள் கடல் சூழ்ந்த உலகில் வந்து பிறக்கின்றனர். வினைக்கு ஏற்ப அவ்வுயிர்கள் யோனிகளில் யானை முதல் எறும்பு வரையில் உள்ள பல வடிவங்களில் பிறக்கின்றன. பிறகு மானிட யோனியில் மனிதனாய்ப் பிறக்கின்றன. யோனி வாசத்தில் ஒன்றையொன்று ஒத்துள்ள உயிர்த் தத்துவங்களுக்கிடையில் போராட்டம் ஏற்பட்டு அவைகளுள் ஏதேனும் ஒன்று ஓங்கி வளர்கிறது.
ஒருமாதம் பூர்த்தியானதும் தான் தனக்காக என்று ஒரு தனி வடிவெடுத்தல் என்னும் செயலில் தேர்த்தியடைந்தும், இரண்டு மாதங்கள் நிறைவேறும் பொழுது தனது தனி வியக்தி வலிவடைவதில் ஈடேறியும், மூன்றாம் மாதத்தில் தாயின் கருவில் பெருகும் கொழுப்பு நீரில் பதையுண்டு போகாமல் உயிர் வாழ்ந்திருந்தும், நான்காவது மாதத்தில் கண் இல்லாதிருப்பதற்கிடையில் உயிர்வாழ்ந்திருந்தும், ஐந்தாவது மாதத்தில் கருக்கலைந்து செத்துப் போகாதிருந்தும், ஆறாவது மாதத்தில் அவயவங்கள் முறையாக அமைந்து உயிர் வாழ்ந்திருந்தும்.
ஏழு திங்களில் தாழ்புலி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தவக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
பொருள் : ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில் இயல்பாக உண்டாகும் பல துன்பங்கிளினின்று ஈடேறியும், பத்தாம் மாதம் வரையில் தகுதியுடன் கர்ப்பத்தில் வளர்ந்து பிறக்கும் போது தாயும் சேயும் ஆகிய இருவரும் பிரசவ வேதனையில் கஷ்டப் படுகின்றனர். காலக் கிரமத்தில் காயம் கட்டுடன் வளர்ந்திருக்கிறது. உண்பது, உறங்குவது ஆகிய நித்திய கருமங்களை முறையாகச் செய்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்து
எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
பொருள் : அதாவது காலைப் பொழுதில் மலத்தானும், உச்சிப் பகற் பொழுதில் பசியாலும், இராப் பொழுதில் துயிலாலும் இவை யொழிந்த காலங்களில் ஊர்ப் பயணம் போதலாலும் நேரும் துன்பங்களுக்குத் தப்பியும் என்பது பொருள்.
கரிய கூந்தலையும், சிவந்த வாயையும், வெள்ளிய மூரலையும். கார் காலத்து ஆண் மயில்போல் ஒரு வழிப்பட்ட மென்மையையும் மிகப் பொருந்தியிருத்தலின் ஒன்றோடொன்று நெருங்கி, உள்ளே களிப்புப் கொண்டு, பட்டிகை அறும்படி மிகைத்து ஒளிவீசி, எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தா நிற்க எழுச்சி பெற்று, பக்கங்களிற் படர்ந்து, ஈர்க்கும் நடுவே நுழையாத இளமை பொருந்திய கொங்கைகளையும் உடைய மகளிருடைய மிகுதியான கண்களின் சூறைக்குத் தப்பியும்.
நிலவுலக வாழ்க்கையில் பயித்தியம் கொண்டுள்ள மக்களுக்கு இடையில் வாழ்க்கையில் வரும் பேராசை என்னும் மதயானையின் இடத்திருந்து தப்பிப் பிழைத்தும், வீடுபேறு அடைவதற்கு விக்கினமாயிருக்கிற கல்விச் செருக்கினின்று விலகியிருந்தும், செல்வம் என்னும் துன்பத்திலிருந்து தப்பித்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம் பாய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறுகோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
பொருள் : தரித்திரம் என்னும் கொடுமையினின்று விடுபட்டும், பொருந்தாத நடத்தை பலவற்றினின்று ஈடேறியும், வெறுப்பு என்னும் எதிர்மறை உணர்ச்சி சிறிதேனும் இல்லாமல் பேரன்பு சொரூபமாகிய பரம்பொருள் ஒன்று உண்டு என்ற விவேகம் ஜீவாத்மாவுக்கு எண்ணிறந்த பிறவிகளுக்குப் பிறகு உண்டாகிறது. ஆனால் அந்த நல்லறிவுக்கு விக்கினமாக இயற்கையின் எத்தனை எத்தனையோ இயக்கங்கள் குறுக்கிடுகின்றன.
அன்பினரும் மற்றவர்களும் கூடிக் கடவுளே இல்லையென்று நாவில் தழும்பு ஏறும் வரையில் நிரீசு வர வாதம் செய்கின்றனர். (மாயா சக்தியின் மோக வலைகளில் இது ஒன்று ஆகிறது.) உறவினர் என்று சொல்லப்படும் ஜீவாத்மாக்கள் வந்து சூழ்ந்துகொண்டு பாரமாத்திகத்தில் தீவிரமாகப் போக வேண்டாமென்று வருந்தி வேண்டினர்.
விரத மேபர மாகவே தியரும்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து
உலோகா யதமெனும் ஓண்டிறல் பாம்பின்
கலாபே தத்த கடுவிடம் எய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத்
தொழுதுளம் உருகி உழுதுடல் கம்பித்து
பொருள் : கர்ம காண்டத்தில் சொல்லியுள்ள கரும நியதிகளே பெரு நலனைத் தரும் என்று அவ்வழி செல்லுகின்ற வேதியர் தக்க சாஸ்திரப் பிரமாணங்கள் காட்டி, ஆத்ம சாதகனை ஈசுவர உபாசனையினின்று மாற்ற முயன்றனர். பல்வேறு சமயங்களை அனுஷ்டித்து வருபவர்கள் தங்கள் மதங்களைப் பின்பற்றினால் ஒழிய உய்வு இல்லையென்று வீண்பெருமை காட்டினர்.
இவ்வுலகம் வெறும் பொய்த்தோற்றம் என்று மாயாவாதம் செய்பவர்களுடைய விவாதம் பெருங் காற்றுப் போன்று குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது. இறை வழிபாட்டில் செல்பவன் அதனின்று தப்பிப்பது அவசியமாகிறது.
இவ்வுலகைத் தவிர மறுமையென்பது ஒன்றுமில்லை என்று வாதிப்பவன் உலகாயதன். அவன் ஒளிவீசிக் கொண்டும் திறமை நிறைந்தும் இருக்கிற பாம்புக்கு நிகரானவன். அவனுடைய பிரீதமான கோட்பாடுகள் கடுகடுக்கிற விஷத்துக்கு ஒப்பானவைகள். எது சரி, எது தப்பு என்று ஓர்ந்து கொள்ள முடியாமல் அக்கோட்பாடுகள் மயக்கத்தை உண்டு பண்ணுவனவாயின.
இத்தனை விதமான மதிமயக்கங்களுக்கிடையில் தனது தெளிந்த கொள்கையினின்று பிசகாதிருக்கும் ஆத்ம சாதகன் பாக்கியவான் ஆகிறான். அவன் தீயிலிட்ட மெழுகுபோல உள்ளம் உருகி இறைவனைத் தொழுகிறான். இறைவனை நாடி அழுது உடல் நடுங்குகிறான்.
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் இடையறா அன்பில்
பசுமரத்து ஆணி அறைந்தாற்போலக்
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந்து அனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுதல் இன்றிச்
பொருள் : பக்தன் ஆடவும், அரற்றவும், பாடவும், வழுத்தவும் செய்கிறான். அவன் குறுடு போன்றும் அறிவிலி போன்றும் தான் பிடித்த நன்னெறியின்று சிறிதும் பிசகுவதில்லை. பக்தி என்னும் தூய அன்பில் மூழ்கியவனாக இருக்கிறான். பச்சை மரத்தில் ஆணியை இலகுவாகச் செலுத்துவது போன்று பேருணர்ச்சியை உள்ளத்தினுள் ஊட்டி, அதன் விளைவாக உள்ளம் குழைவதும் உடல் சுழலுவதும் நிகழ்கின்றன.
நெஞ்சம் நைந்து உருகுகிறது; அதன் ஸ்தூல தோற்றமாகிய உடல் நடுங்குகிறது. பக்தனை உலகத்தவர் பேய் என்று நகைக்கின்றனர். நல்ல ஆத்ம சாதகன் வெட்கப் படுவதுமில்லை. எதைக் குறித்தும் மனம் கோணுவதும் இல்லை. உலகத்தவர் நிந்தையை அவன் ஆபரணமாக எடுத்துக் கொள்ளுகிறான். ஏனென்றால் தன்னிடத்துத் தற்பெருமை ஏதாவது இருக்குமாகில் அதைச் சோதித்து அறிந்து கொள்வதற்கு அது பயன்படுகிறது.
சதுரிழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி யருளிய பெருமையைச்
சிறுமையென்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
பொருள் : நான் நல்லவன் என்னும் செருக்கு, சாதனத்துக்குத் தடையாகும். மெய்யறிவு ஓங்க வேண்டும் என ஊக்கங்கொள்ளுதல் வேண்டும். பக்தன் பெறுகிற பேறுகளில் முக்திக்கு நிகரானது ஒன்றுமில்லை என்று அதன் மகிமையைக் குறித்து வியப்பு அடைதல் நல்ல ஆத்ம சாதனமாகிறது. கன்றுக்காகப் பசு உருகுவது போன்று பக்தர்கள் பகவானுக்காக உருகுகின்றனர். அவர்கள் கதறவும் பதறவும் செய்கின்றனர். இறைவனைப் பற்றியல்லாது வேறு எந்தச் சிந்தனையும் அவர்கள் உள்ளத்தில் கனவிலும் வருவதில்லை.
பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கிற பரமன் பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாகிய பூமியில் பரம குருவாக வந்து என்னை ஆட் கொண்டது அவனுடைய பெருமைக்கு எடுத்துக் காட்டாகும். இறைவன் இப்படிச் செய்தது சாமானியமான செயல் என்று அதை அலட்சியப் படுத்தலாகாது. நிழல் வஸ்துவை விட்டுப் பிரியாதிருப்பது போன்று அவனுடைய திருவடிகளைப் பக்தன் ஒரு பொழுதும் மறந்துவிடலாகாது.
முன்பின் ஆகி முனியாது அத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதவென்று அரற்றி
உரைதடு மாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
பொருள் : மெய்யன்பன் கொண்டுள்ள பர பக்தியில் ஏற்றத் தாழ்வோ வெறுப்போ உண்டாவதற்கு இடமில்லை, தான் ஆட்கொள்ளப்பட்ட திக்கை நோக்கி அவன் எலும்பு உருகும்படி தழுதழுத்து அன்பு செலுத்துகிறான். ஆறு கரை புரளப் பெருக்கெடுப்பது போன்று அவனது பக்தி பெருகுகிறது. அவனுடைய ஐம்புலன்களும் ஒன்றுபடுகின்றன. இறைவனது நாமம் அவனது நாவினின்று வருகிறது.
பக்தியின் மேலீட்டால் சொல் தடை படுகிறது. மயிர்க் கூச்சு உண்டாகிறது. கைகுவிகிறது. உள்ளத்தில் உணர்ச்சிப் பேருவகை யடைகிறது. ஆனந்தக் கண்ணீர் துளியாக அரும்புகிறது. பக்தி அழிந்து பட்டுப் போகாமல் தினந்தோறும் அதைச் செழிக்கச் செய்பவர்களுக்கு இறைவன் தாயாகி அவர்களுடைய அன்பை வளர்க்கிறான். அன்னவனுக்கு வணக்கம். மெய்ப் பொருள் அல்லது பரதத்துவத்தை விளக்கிக்காட்டுகிற அந்தணனாக வந்து என் பழவினைகளை யறுத்து உதவுகிற கடவுளே, உனக்கு வணக்கம்.
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின்னார் அருவ விகிர்தா போற்றி
கன்னார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக்கு அருளாய் போற்றி
பொருள் : மதுரையைத் தாண்டவத்துக்குரிய பதியாய்க் கொண்டுள்ள இறைவா, போற்றி; என்னைச் சிஷ்யனாக உன்னோடு சேர்த்துக் கொண்ட பரமா சாரியனே, உனக்கு வணக்கம். தெற்கில் உள்ள சிதம்பரத்தில் ஆடினவனுக்கு வணக்கம். என்னை அமிர்த சொரூபம் ஆக்கியவனுக்கு வணக்கம். காலத்தால் அடிபடாத நான்கு வேதங்களுக்கும் தலைவா போற்றி; காளையின் வடிவத்தைப் பொறித்து அலங்கரிக்கப்பட்டுள்ள வெற்றிக் கொடியையுடைய சிவனே போற்றி.
பிரபஞ்சம் எங்கும் உள்ள வேறு வேறு வடிவங்களை எடுத்து உள்ள ஒளிவண்ணனே போற்றி; கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பப் பெறுதற்கு அரிய ஞானக்கனியே போற்றி; பொன்மலை போன்று இருந்து என்னைக் காப்பவனே, உனக்கு வணக்கம். ஆ,ஆ, என்று அரற்றி உன்னை அழைக்கின்ற எனக்கு அருள் செய்வாய் போற்றி.
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
பொருள் : பிரபஞ்சத்தின் ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்பவனே, உனக்கு வணக்கம். உயிர்களுக்கு உண்டாகும் இடுக்கண்களை அகற்றும் எந்தையே போற்றி; என்னை ஆள்பவனே போற்றி; என் தலைவா போற்றி; திரண்ட ஆத்ம ஜோதியே போற்றி; வேந்தே போற்றி; அமிர்தமே போற்றி; மணம் நிறைந்த திருவடிகளை உடையவனும் உலகுக்குப் புறம்பானவனும் ஆகிய இறைவா போற்றி; அனைத்தையும் அறிந்தவனே போற்றி; புனிதனே போற்றி; முதல்வனே போற்றி; பேரறிவே போற்றி; முக்தி யென்னும் கதியைக் கொடுப்பவனே போற்றி; கங்கா நதியைச் சிவந்த சடைமுடியில் வைத்திருக்கும் சிவனே போற்றி.
உடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுற நரகிடை
ஆழா மேஅருள் அரசே போற்றி
பொருள் : அனைத்தையும் தனக்குச் சொந்த மாக்கியவனே போற்றி; மெய்யுணர்வே போற்றி; கீழான என்னை உனக்குச் சொந்தமாக்கியவனே போற்றி; பெரியவனே போற்றி; அணுவாய் இருப்பவனே போற்றி; மங்கள சொரூபமே போற்றி; அனைத்துக்கும் ஈசா போற்றி, வாழ்க்கையின் லட்சியமே போற்றி; சீரிய குணமே போற்றி; நன்னெறியே போற்றி; பிரக்ஞை வடிவினனே போற்றி; தேவர்களுக்குக் கிடைப்பதற்கரிய அமிர்தமே போற்றி; எம்மனோர்க்கு எளிதில் வாய்க்கும் இறைவா போற்றி. ஜீவன் ஒருவன் சிவ சாயுஜ்யம் என்னும் முக்தியடைவானாகில் அவனுடைய சுற்றத்தார் இருபத்தொரு தலைமுறையாக வருபவர்கள் நரகத்தில் மூழ்கித் துன்பப்படாமல் அவர்களைக் காத்தருளும் அரசே போற்றி.
தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி யரனே போற்றி
உரையுணர்வு இறந்த ஓருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
பொருள் : என் நண்பா போற்றி; ஆதரவே போற்றி; வாழ்வுக்கு மூலகாரணனே போற்றி; எனக்கு யாண்டும் இருப்பிடமே போற்றி. நித்திய முக்தனாய் இருக்கும் ஈசா போற்றி; அனைத்துக்கும் ஆதிமூலமே போற்றி; அனைவர்க்கும் தந்தையே போற்றி; உயிர்களின் மலத்தை அகற்றும் அரசனே போற்றி.
சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாத தனிப் பொருளே போற்றி; கடல் சூழ்ந்த உலகில் வாழ்ந்திருப்பவர்கள் வாழ்வில் பெறுகிற பேறுகளுள் பெரிய பேறே போற்றி; உயிர்களால் பெறமுடியாத அருமையான பொருள் நீ. ஆயினும் பக்தர்களுக்கு எளிதில் அகப்படக்கூடிய அழகன் நீ. அத்தகைய உன்னை வணங்குகிறேன். உயிர்களை உய்வித்தல் பொருட்டுக் கார் மேகமாகி அவைகளின் யோக ÷க்ஷமத்தைப் பார்த்து வருகிற கண்ணே போற்றி.
அருள் சுரப்பதில் நிலை பேறுடைய மகாமேருமலையை போற்றி, தகுதியற்ற என்னையும் தகுதிவாய்ந்த ஒருவனாகச் செய்து உனது பெரிய பாதத்தை என் சிரசில் வைத்து என்னை ஆட்கொண்ட வீரனே போற்றி.
தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானேர் நோக்கி மணாளா போற்றி
வானகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
பொருள் : உன்னை வந்தடைந்து வழுத்துபவர்களுடைய துன்பத்தைத் துடைப்பவனே போற்றி; சாசுவதமாயுள்ள ஆனந்தக் கடலே போற்றி; ஒடுங்குவதும் தோன்றுவதும் ஆகிய பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவனே போற்றி; பிரபஞ்ச சம்பந்தமான அனைத்தும் மறைந்த பின்பும் அதற்கு மூலபொருளாய் யாண்டும் இருப்பவனே போற்றி; மான் விழிகளை யொத்த கண்களையுடைய உமாதேவியார்க்கு மணவாளா போற்றி. விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்குத் தாயாக இருந்து காப்பவனே போற்றி.
நிலமாகிய ஐந்தாவது பூதமாயும், நீராகிய நான்காவது பூதமாயும் பரிணமித்துள்ள உன்னை வணங்குகிறேன். மூன்றாம் பூதமாகிய அக்னியாகவும் இரண்டாம் பூதமாகிய வாயுவாகவும் முதல் பூதமாகிய ஆகாசமாகவும் இருப்பவனே போற்றி; மனம் முற்றிலும் பரிபக்குவமாயிருப்பவர் உள்ளத்தில் அமிர்தமாக ஒளிர்பவனே போற்றி.
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
கனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலைஎம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
பொருள் : நனவில் கைகூடாத சில திவ்விய தரிசனங்கள் கனவில் வாய்ப்பதுண்டு. ஆனால் தேவர்களுக்கு அவை வாய்ப்பதில்லை. அற்பனாகிய எனக்கு ஜாக்கிரத அவஸ்தையில் வந்து அனுக்கிரகம் செய்தனை போற்றி; திருவிடை மருதூரில் எழுந்தருளியுள்ள இறைவா போற்றி; கங்காதரனாய் இலங்குபவனே போற்றி; திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் ஈசா போற்றி; அழகு நிறைந்த திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனே போற்றி; திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள ஈசா போற்றி; ஞானம் நிறைந்த அமிர்த சாகரமே போற்றி.
ஏகபத்துறை எந்தாய் போற்றி
மாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங்கு அறியேன் போற்றி
குற்றா லத்தெம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
பொருள் : திருவேகம்பத்தில் உறைகின்ற என் ஈசா போற்றி; அர்த்த நாரீசுவரனாய் இருப்பவனே போற்றி; திருப்பராய்த் துறையில் வீற்றிருக்கும பெரியோய் போற்றி; திருச்சிராப்பள்ளியில் திகழும் தலைவா போற்றி; உன்னையல்லால் வேறு ஒரு பற்றுக் கோட்டை இவ்வுலகில் நான் அறிந்திலேன். அத்தகைய உனக்கு வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற கூத்தா உனக்கு வணக்கம்.
திருவாவடுதுறையில் தோன்றியுள்ள வேந்தே போற்றி; திருவீங்கோய் மலையையுடைய எம் தந்தையே போற்றி; அழகு நிறைந்த திருப்பழனத்தில் அழகனாய் வீற்றிருப்பவனே போற்றி; திருக் கடம்பூரில் எழுந்தருளியுள்ள அழகா போற்றி; உன்னை வந்து சேர்பவர்க்கு அனுக்கிரகம் செய்பவனே போற்றி. விடங்கன் என்னும் சொல்லுக்குச் சுயம்புலிங்கம் என்பது மற்றொரு பொருள். கோகழி திருவாவடுதுறை; திப்பெருந்துறை என்றும் கூறுவர்.
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் குயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருளகெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களங்கொளக் கருத அருளாய் போற்றி
பொருள் : கல்லால மரத்தின் கீழ் இருந்த ஆறு பேர்க்கும் யானைக்கும் அருள் செய்த அரசே போற்றி. நீக்கமற எங்கும் நிறைந்துள்ள ஈசா உன்னை நான் தென்னாட்டில் சிறப்பாகக் காண்கிறேன். அத்தகைய உன்னை வணங்குகிறேன். பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டி அருள் புரிந்தவனே போற்றி; மேன்மை பொருந்திய கயிலை மலையில் உறைபவனே போற்றி.
தாயை ஒத்த இறைவா, எனக்கு அருள்புரிவாயாக. அஞ்ஞான இருளை அகற்றும் இறைவா போற்றி; பிறவிப் பெருங்கடலில் தன்னந்தனியனாய், அலைந்து அலுத்துப் போய் உன்னை அழைக்கிறேன். அருள் புரிவாயாக. எனக்கு நிலைத்த இருப்பிடமாகிய உன்னையே யாண்டும் நினைந்து நாடியிருக்கும்படி அருள்புரிவாயாக.
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி
பொருள் : அபயம் அளிப்பவனே போற்றி. விஷத்தை விரும்பி அமிர்தம் ஆக்கியவனே போற்றி. அப்பனாயும், ஆசிரியனாயும், அழிவற்றவனாயும், மாசற்றவனாயும், பேரன் பாயும்; உயிர்களுக்குப் பிறப்பிடமாயும் இருப்பவனே போற்றி; அனைத்துக்கும் பெரியவனே, உயிர்களை இரட்சிப்பவனே, பஞ்சேந்திரியங்களுக்கு எட்டாதவனே, நிர்மலனாய் இருப்பவனே போற்றி.
நேர்மை பிறழாதவனே, நீ வேதியன் வடிவெடுத்து வந்துள்ளாய். அனைத்துக்கும் முதல்வா, நான் பிறவிப் பிணியை இனித் தாங்க மாட்டேன். அத்தகைய என்னை ஆட் கொள்ளாதிருப்பது தகுமோ? உன்னை நான் போற்றுகிறேன்.
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சேல் அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கலைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநாடு உடைய மன்னே போற்றி
கலையார் அரிகே சரியாய் போற்றி
பொருள் : நீ எனக்குச் சுற்றம்; எனது உயிர்; நலன் அனைத்தும் நீ; மங்களம் யாவும் நீ; அத்தகைய உனக்கு வணக்கம். (சிறவு சிறப்பு). நீ அழகன்; உயிர்களுக்கு நீ மணவாளன்; செம்பஞ்சு ஊட்டிய அழகிய பாதங்களையுடைய உமாதேவியின் பங்கன் நீ. அத்தகைய உனக்கு வணக்கம்.
உன்னைச் சார்ந்துள்ள நான் துன்பங்களில் மிகவும் வருந்துகின்றேன். சுய சோதியாய் உள்ள இறைவா போற்றி, கலைத்தலை என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள ஞான சொரூபமே போற்றி. குவைப்பதி என்னும் ஊரில் உள்ள இறைவா போற்றி. மலை நாட்டுக்கு அதிபதியே உனக்கு வணக்கம். கலை ஞானங்கள் நிறைந்த அரிகேசரி என்னும் ஊருக்கு உரியவனே உனக்கு வணக்கம்.
திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவரிது ஆகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி
பொருள் : திருக்கழுக்குன்றிலும் மலைகளோடு கூடிய திருப்பூவணத்திலும் எழுந்தருளியுள்ள இறைவா போற்றி. வடிவம் இல்லாதவனும் வடிவம் உடைத்தாயிருப்பவனும் ஆனாய் போற்றி. மலைபோன்ற பெருங்கருணையுடையவனே போற்றி, துரியாதீதமாய் இருக்கும் பேரொளியே போற்றி, சிவ சைதன்யமாய் விளங்கும் பரமனே போற்றி.
துளைக்கப்படாத முத்தின் ஒளியே போற்றி; ஆட்பட்டவர்களுக்கு அன்பு மிகக் காட்டுபவனே உனக்கு வணக்கம். தெவிட்டாத அமிர்தமே, அருளாளா போற்றி; ஆயிரம் பெயர்களை உடையவனே போற்றி;
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன்று அருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
பொருள் : தாளிக்கொடி, அறுகம்புல் ஆகியவைகளைக் கொண்டு அமைந்துள்ள மாலையை அணிந்திருப்பவனே போற்றி; அகண்டாகார சோதியாகிய சிதாகாசத்தில் தாண்டவம் ஆடுபவனே போற்றி; சந்தனக் குழம்பைத் பூசியுள்ள அழகனே போற்றி; மனத்துக் கெட்டாத மங்கள சொரூபமே போற்றி; சிவம் மங்களம்.
வேதங்களை விளக்குதல் பொருட்டு மகேந்திர மலையில் எழுந்தருளியவனே போற்றி. எங்களை மேன்மையுற ஆட்கொள்வாய் போற்றி; மான்குட்டிக்குப் புலி முலைப்பால் தரும்படி அளியவனே போற்றி; கடல் மீது நடந்தவனே போற்றி; (இவை யிரண்டும் திருவளையாடல் புராண வரலாறுகள்) கருங்குருவிக்கு அருள் செய்தவனே போற்றி. பெரிய புலன்களைச் செயலறக் செய்தவனே போற்றி.
படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்புஒன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி.
பொருள் : மண்ணுலகத்தவனாகிய என்னை ஆட்கொள்ளுதல் பொருட்டு நிலவுலக நிலைக்குக் கீழ் இறங்கி வந்தும் உனது தூய்மையை இழக்கா திருப்பவனே போற்றி; துவக்கம், நடு, முடிவு ஆகிய அனைத்துமாய் இருப்பவனே போற்றி. நரகம், சுவர்க்கம், பூமி ஆகிய பிறப்புக்கு ஏதுவான கீழ்நிலைகளில் விட்டு விடாது வீடு பேற்றினைப் பாண்டியனுக்குக் கொடுத்தருளிய இறைவா போற்றி;
பரிபூரணனாய் எங்கும் நிறைந்திருப்பவனே போற்றி; செழுமையான பூக்கள் நிறைந்துள்ள சிவபுரத்துக்குத் தலைவா போற்றி; செங்கழுநீர்மலை அணிந்திருக்கும் கடவுளே போற்றி; உன்னை வணங்குபவரது அஞ்ஞான இருளை அகற்றுபவனே போற்றி; எது பிழை, எது சரியென்று ஒன்றும் அறியாத இச்சிறுவன் அமைத்துள்ள சொல்மாலையை ஏற்று அருளும் ஈசா உன்னைப் போற்றுகிறேன்.
திரிபுரங்களைச் சம்காரம் செய்த மிகப் பழைய பொருளே போற்றி; பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள ஆத்ம சோதி சொரூபமான மேலான பொருளே போற்றி; பாம்பை அணிந்திருக்கும் தலைவா போற்றி; அனைத்துக்கும் ஆதி காரணனே போற்றி; உனது திருவிளையாடலில் வெற்றியாய் விளங்குபவனே போற்றி.
குறிப்பு : மாணிக்கவாசகர் இந்நூலில் பல இடங்களில் தன்னை நாயேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பொருள் எழுதும் போது சிறுமையேன் என்ற சொல் பயன்படத்தப்பட்டுள்ளது.