பதிவு செய்த நாள்
10
செப்
2011
12:09
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருக்கோவையார் 400 பாடல்களும் , அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் திருக்கோவையார் என்னும் அகப்பொருள் கோவை நூலைப் பாடினார். இதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற வேறு பெயரும் உண்டு. இது, அடிகள் திருவாய் மலரத் திருச்சிற்றம்பலமுடையானே தம் கைப்பட எழுதிக் கொண்ட சிறப்பினை உடையது, தமிழில் உள்ள பிரபந்த வகைகளுள் கோவை ஒன்று, அகப்பொருள் துறைகளை நிரல்படக் கோத்து அமைத்தமையின் கோவை எனப் பெயர் வழங்கலாயிற்று. இந்நூல் முழுவதும் கட்டளைக் கலித்துறையாப்பால் அமைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலவன் இதன் பாட்டுடைத் தலைவன், 400 துறைகள் உள்ளன. அகப்பொருள் துறைகளைத் தழுவியே இந்நூலுள் துறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் அதன் கருத்தை விளக்கும் கொளு ஒன்று உள்ளது.
இந்நூலுள் இயற்கைப் புணர்ச்சி முதல் பரத்தையிற் பிரிவு ஈறாக இருபத்தைந்து கிளவிக் கொத்துகள் உள்ளன. திருக்குறள் காமத்துப்பாலிலும் இருபத்து ஐந்து அதிகாரங்கள் உள்ளன. சிவபெருமான் பாட்டுடைத் தலைவன். அவனது திருவடிகளைச் சிந்தையிலும் சென்னியிலும் கொண்டு விளங்குபவனே இந்நூலின் கிளவித் தலைவன். அறிவன் நூற்பொருளும் உலக நூல் வழக்கும் கலந்து இந்நூலை அடிகள் அருளியுள்ளார். உரை எழுத வந்த பேராசிரியர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். இக்கோவை நூலில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களும் அடங்கியுள்ளன. ஆர் விகுதி சேர்த்துத் திருக்கோவையார் என வழங்கப்படுகிறது.
உரை : பேராசிரியரின் உரை திட்ப நுட்பம் செறிந்து அடிகளாரின் கருத்தை இனிது விளக்குகின்றது. அவரது புலமையும் அடிகளாரிடத்து அவர் கொண்டுள்ள பக்தியும் அவ்வுரையில் காணப்படுகின்றன. துறை விளக்கம், பாடல், கொளு, பொழிப்புரை, சிறப்புரை ஆகியவற்றை இவ்வுரை கொண்டுள்ளது. உள்ளுறை, நயங்கள், சிலேடை முதலியன உரையில் உள்ளன. திருவாசக ஒப்புமைப் பகுதிகளும் உரையில் இடம் பெறுகின்றன.
பிற சிறப்புக்கள் : இந்நூலுள் பல அணிகள் அழகு செய்கின்றன. ஒவ்வொரு பாட்டிலும் தில்லைநகர் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. தில்லை மூவாயிரவர் பற்றிய குறிப்பும் திருமால் சயனமும் குறிக்கப் பெற்றுள்ளன. தில்லையேயன்றி இடைமருது, சீர்காழி, குற்றாலம், மதுரை, கயிலை, திருப்பரங்குன்றம், திருப்பூவணம், மலையம், பொதியல், ஈங்கோய்மலை, ஏகம்பம், கடம்பை, கழுக்குன்று, சிவநகர், சுழியல், பெருந்துறை, மூவல், வாஞ்சியம், அம்பர், அரசம்பலம், கொடுங்குன்று, திருவெண்காடு முதலிய தலங்களும் குறிக்கப் பெற்றுள்ளன. இராவணனை அடர்த்தது, காமனை எரித்தது, காலனைச் சாய்ந்தது, மேருவை வளைத்தது, யானையை உரித்தது முதலிய புராணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. ஆகம நூற்கருத்துக்கள் பல இந்நூலுள் இடம் பெறுகின்றன.
கோவை நூல்கள் : அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியில் பொருள் இலக்கணம் மிக்க சிறப்பு வாய்ந்தது. அப்பொருள் அகம், புறம் என இரு கூற்றனவாய்ப் பிரிவு பட்டு வழங்குகிறது. அவற்றுள் ஆகம் என்பது உருவும் திருவும் குறியும் குணனும் பருவமும் ஒத்து, அன்பு வாய்ந்த காதலன் காதலி இருவரின் உள்ளத்தில் கிளைத்தெழுந்து ஓங்கி எழுகின்ற இன்பச் செவ்வி, இச் செவ்வியைக் கிளைந்தெடுத்து ஓதும் தமிழ் நூல்கள் பல. அவற்றுள் முறைப்படுத்தி அந்த இன்பத்துறைகள் எல்லாம் ஒருங்கே முற்ற முடிய விளங்கும் இலக்கிய நூல்களே கோவை என்னும் பெயரில் வழங்கப்பெறுவன். தொடர்புபடுத்திக் கோத்து உரைக்கபடுவதால் இது கோவை எனப்பட்டது.
தலைவன் : இவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலனாய்ப் பிணி மூப்புச் சாக்காடும் இலனாய்ப் பெருமையும் உரனும் உடையனாய்ப் புலவரால் புனைந்துரையாக, நாட்டிக் கொள்ளப்பட்டவன் ஆவான். பிறப்பு முதலிய பத்து வகையால் தலைவியோடு ஒத்து அவளை முதற்கண் காணும்போது பதினைந்து ஆண்டும் பத்துத் திங்களும் புக்கவனாய்ப் பின் பதினாறாண்டு நிறைந்து யாண்டும் இந்நிலையிலேயே இருப்பவனாவான். இவன் வெற்பன், நாடன், ஊரன், சேர்ப்பன் எனக் கூறப்படுவதன்றி இயற்பெயரிட்டுக் கூறப்படான்.
பாட்டுடைத் தலைவன் : இவன் கிளவித் தலைமகனினும் உயர்ந்தவனாகக் கருதப்படுவான், அஃதாவது, பாட்டுடைத் தலைமகனுக்கு உரிய நாட்டில் ஒரு பகுதியில் கிளவித் தலைவன் வாழ்பவனாகக் கூறப்படுவான், நிலம், தொழில், பண்பு, குலம் ஆகியவற்றால் வரும் சிறப்புப் பெயரும் அவனுக்குக் கூறப்பட்டு அவை செய்யுட்களில் பேசப்படும். இவன் ஒருகாலத்தில் உலகத்தில் உண்மையில் வாழ்ந்தவன் ஆவான். மலை நாடன் - நிலப் பெயர்; தூங்கெயில் எறிந்தான் - தொழிற்பெயர்; பெருவழுதி - பண்புப் பெயர்; வேள் ஆய் - குலப் பெயர்; அருண்மொழிவர்மன் - இயற் பெயர்; இவ்வாறு செய்யுட்களில் வரும்.
கிளவித் தலைவன்: இவன் அகப்பொருள் துறைகளில் (கிளவி) கூற்றிற்கு உரியவனாகக் குறிக்கப்படும் தலைவனாவான். பிறப்பு முதலிய பத்து வகையாகத் தலைவியொடு ஒத்துப் பிற யாரும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக இருப்பான். மற்றும் பிணி, மூப்பு, சாக்காடு இன்றி என்றும் பதினாறு ஆண்டு உடையவனாய் வாழ்பவனாகப் புலவரால் நாட்டிக் கொள்ளப்பட்டவனாவான். இவன் எக்காலத்தும் உலகத்தில் வாழ்பவன் அல்லன்; கற்பனையில் வாழ்பவன் நிலம், தொழில், பண்பு, குலம் ஆகியவற்றால் வரும் சிறப்புப் பெயரால் மட்டும் குறிக்கப்படுவான். இயற்பெயரால் குறிக்கப்படமாட்டான். சிலம்பன் முதலியன நிலப்பெயர்; வேட்டுவன் முதலியன தொழிற்பெயர்; அண்ணல் முதலியன பண்புப் பெயர்; குறவன் முதலியன குலப்பெயர். அகப்பாட்டில் இத் தலைமக்கள் இருவரும் ஒருங்கே வருதலும், தனித்தனி வருதலும் இருவரும் வாராதொழிதலும் உண்டு.
தலைவி : இவள் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவளாய், பிணி மூப்புச் சாக்காடும் இல்லாதவளாய், அச்சம் நாணம் மடன் உடையவளாய்ப் புலவரால் புனைந்துரையாக நாட்டில் கொள்ளப்பட்டவள் ஆவாள். பிறப்பு முதலிய பத்து வகையால் தலைவனோடு ஒத்து அவனை முதற்கண் காணும் போது பதினோரு யாண்டும் பத்துத் திங்களும் புக்கவளாய்ப் பின் பன்னிரு யாண்டு நிறைந்து யாண்டும் அந்நிலையிலேயே இருப்பவளாவள். இவள் கொடிச்சி, கிழத்தி, மனைவி எனக் கூறப்படுவதன்றி இயற் பெயரிட்டுக் கூறப்படாள்.
பாங்கர் : இவர்கள் பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என இருவகைப்படுவர். தங்களைப் பெற்ற தாய் தந்தையரால் தலைவனுக்கு இன்னுயிர்த் துணையாய் இருக்கும்படி அடைக்கலமாகக் கொடுக்கப்பட்டவராவர்.
இளையர் : இவர்கள் தலைவனுக்குப் பகலும் இரவும் களையப் பெறாத கவசத்தைப் போன்றவர். அதாவது மெய்க்காப்பாளராவர்.
தோழி : தலைவியுடன் வளர்ந்து, உடன் நீராடிச் சீருடன் பெருகத் தாலுடனாட்டப் பாலுடன் உண்டு, பல்லுடன் எழுந்து சொல்லுடன் கற்றுப் பழைமையும், பயிற்சியும், பண்பும், நண்பும், விழுப்பமும், ஒழுக்கமும் மாட்சியும் உடையவளாவாள். செவிலியின் மகளாவாள். தலைவிக்கு ஆராய்தலோரு அவட்குப் பேச்சுத் துணையாகி, அவளது வருத்தத்தைத் தணிவிப்பவள் ஆவாள். தலைவியின் ஒத்த உணர்வினளாய் அவட்கு உயிர்த் தோழியாவாள். செய்திறன் அறிதலும், உய்திறன் ஆய்தலும், வல்ல சொல்லாற்றலும், நல்லன கூட்டலும் வாய்த்தவள் ஆவாள்.
செவிலி : இவள் நற்றாய்க்குத் (தலைவியைப் பெற்ற தாய்) தோழியாயும், தலைவிக்கு வளர்ப்புத் தாயாயும், தோழிக்குத் தாயாயும் விளங்குபவள். இவள் தலைவிக்கு அறிவும், ஆசாரமும் கொளுத்துபவளாய் முன்வரு நீதியும் பின்வரு பெற்றியும் உலகியல் நீதியும் உணர்த்துபவளாய்த் திகழ்வாள்.
அகத்திணையில் பொருட் பாகுபாடு : அகத்திணையானது கைக்கிளை எனவும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணை எனவும் பெருந்திணை எனவும் ஏழுவகைப்படும். இவற்றுள் ஐந்திணைக்குரிய பொருள்கள் முதல், கரு, உரி என மூவகைப்படும். கைக்கிளை, பெருந்திணைகட்கு உரியவெனத் தனியே பொருள்கள் இல்லை. ஐந்திணைகட்கு உரியவற்றையே இவைகளும் பெறும்.
முதற் பொருள் - அடிப்படைப் பொருள்கள் : முதற்பொருள் நிலமும் பொழுதும் என இருவகைப்படும். இவற்றுள் மலை, சுரம், காடு, வயல், கடல் எனவும் இவற்றைச் சார்ந்த இடங்கள் எனவும் (5+5) பத்து வகைப்படும்; பொழுதாவது, பெரும்பொழுதும் சிறுபொழுதும் என இருவகைப்படும்; இவற்றுள் பெரும்பொழுதாவது கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முது வேனில் என ஆறுவகைப்படும். இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு பெரும்பொழுது. அது:
கார் - ஆவணி, புரட்டாசி
குளிர் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனி - மார்கழி, தை
பின்பனி - மாசி, பங்குனி
இளவேனில் - சித்திரை, வைகாசி
முதுவேனில் - ஆனி, ஆடி
சிறுபொழுதாவது, மாலை மணி (6 - 10). யாமம் (10 - 2), வைகறை (2-6), விடியல் காலை (6-10), நண்பகல் (10-2), எற்பாடு (2-6) என ஆறுவகைப்படும். நான்கு மணி நேரம் கொண்டது ஒரு சிறுபொழுது. பகலில் மூன்றும் இரவில் மூன்றுமாகக் கொள்ள வேண்டும்.
கருப்பொருள் - இருக்கும் பொருள்கள் :
1. தெய்வம், 2. உயர்ந்தோர், 3. தாழ்ந்தோர், 4. புள், 5. விலங்கு, 6. ஊர், 7. நீர், 8. பூ, 9. மரம், 10. உணா, 11. பறை, 12. யாழ், 13. பண், 14. தொழில் என பதினான்கு வகைப்படும்.
உரிப்பொருள் - உயர்மக்கட்குரிய ஒழுக்கங்கள் :
புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் எனவும் அவற்றின் நிமித்தங்கள் எனவும் (5+5) பத்து வகைப்படும்.
குறிப்பு: இனி ஒவ்வொரு திணைக்கும் உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை பிரித்துக் கூறப்படும்.
.
குறிஞ்சி- முதற்பொருள் :
1. நிலம் - மலையும் மலைசார்ந்த இடமும்
2. பொழுது - பெரும்பொழுது - குளிர் காலம், முன்பனிக்காலம் சிறு பொழுது - யாமம்.
கருப்பொருள் :
1. தெய்வம் - முருகன்
2. உயர்ந்தோர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி
3. தாழ்ந்தோர் - குறவர், கானவர், குறத்தியர்
4. உணவு - மலை நெல், தினை, மூங்கில் அரிசி
5. புள் - கிளி, மயில்
6. விலங்கு - யானை, புலி, கரடி, சிங்கம்
7. ஊர் - சிறுகுடி
8. நீர் - அருவி நீர், சுனை நீர்
9. பூ - குறிஞ்சிப் பூ, காந்தள் பூ, வேங்கைப் பூ
10. மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்
11. பறை - தொண்டகப் பறை
12. யாழ் - குறிஞ்சி யாழ்
13. பண் - குறிஞ்சிப் பண்
14. தொழில் - வெறியாடல், மலை நெய் விதைத்தல், தினை காத்தல், தேன் அழித்து எடுத்தல், கிழங்கு அகழ்தல், அருவி நீராடல், சுனை நீராடல்
உரிப்பொருள் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
.
முல்லை- முதற்பொருள் :
1. நிலம் - காடும் காடு சார்ந்த இடமும்
2. பொழுது - பெரும்பொழுது - கார்காலம்
சிறுபொழுது - மாலை
கருப்பொருள் :
1. தெய்வம் - திருமால்
2. உயர்ந்தோர் - குறும்பொறைநாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
3. தாழ்ந்தோர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
4. உணவு - வரகு, சாமை, முதிரை
5. புள் - காட்டுக்கோழி
6. விலங்கு - மான், முயல்
7. ஊர் - பாடி, சேரி
8. நீர் - குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர்
9. பூ - முல்லைப் பூ, குல்லைப் பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ,
10. மரம் - கொன்றை, காயா, குருந்தம்
11. பறை - ஏறுகோட் பறை
12. யாழ் - முல்லை யாழ்
13. பண் - சாதாரி
14. தொழில் - சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களைகட்டல், அவற்றை அரிதல், கடாவிடுதல், கொன்றைக் குழலூதல், கால்நடைகளை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடுதல், கான்யாறாடல்.
உரிப்பொருள் :
ஆற்றியிருத்தலும், இருத்தல் நிமித்தமும்.
.
மருதம் - முதற்பொருள் :
1. நிலம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
2. பொழுது - பெரும்பொழுது: ஆறு பெரும்பொழுதுகளும்
சிறுபொழுது: வைகறை, காலை.
கருப்பொருள் :
1. தெய்வம் - இந்திரன்
2. உயர்ந்தோர் - ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
3. தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்
4. உணவு - செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
5. புள் - வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா
6. விலங்கு - எருமை, நீர்நாய்
7. ஊர் - பேரூர், மூதுர்
8. நீர் - ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்
9. பூ - தாமரைப் பூ, குவளைப் பூ, கழுநீர்ப் பூ
10. மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம்
11. பறை - நெல்லரிகிணை, மண முழவு
12. யாழ் - மருத யாழ்
13. பண் - மருதப் பண்
14. தொழில் - விழாச் செய்தல், வயற் களைகட்டல், நெல்லரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
உரிப்பொருள் : ஊடலும் ஊடல் நிமித்தமும்.
நெய்தல் -முதற்பொருள் :
1. நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
2. பொழுது - பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகளும்
சிறுபொழுது - எற்பாடு.
கருப்பொருள் :
1. தெய்வம் - வருணன்
2. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
3. தாழ்ந்தோர் - நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
4. உணவு -மீன், மீனையும் உப்பையும் மாற்றுதலால் வரும் பொருள்
5. புள் - கடற்காகம்
6. விலங்கு - சுறா மீன், முதலை
7. ஊர் - பாக்கம், பட்டினம்
8. நீர் - உவர்நீர்க்கேணி, கவர் நீர்
9. பூ - நெய்தல் பூ, புன்னைப் பூ, தாழம் பூ, முண்டகப் பூ, அடம்பம் பூ
10. மரம் - கண்டல், புன்னை, ஞாழல்
11. பறை - மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
12. யாழ் - விளரி யாழ்
13. பண் - செவ்வழிப் பண்
14. தொழில் - மீன் பிடித்தல், உப்பு உண்டாக்கல், அவை விற்றல், மீன் உணக்கல், அவற்றை உண்ண வரும் பறவைகளை ஓட்டுதல், கடலாடல்
உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
.
பாலை- முதற்பொருள் :
1. நிலம் - மணலும் மணல் செறிந்த வெளியும்
2. பொழுது - பெரும்பொழுது - இளவேனில், முதுவேனில், பின்பனி
சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள் :
1. தெய்வம் - துர்க்கை
2. உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயிற்றி
3. தாழ்ந்தோர் - மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
4. உணவு - வழி பறித்தவை, கொள்ளை அடித்தவை
5. புள் - புறா, பருந்து, எருவை, கழுகு
6. விலங்கு - செந்நாய்
7. ஊர் - குறும்பு
8. நீர் - நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு
9. பூ - மராம் பூ, குராம் பூ
10. மரம் - உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
11. பறை - துடி
12. யாழ் - பாலை யாழ்
13. பண் - பஞ்சரம்
14. தொழில் - போர் செய்தல். பகற் சூறையாடுதல்
உரிப்பொருள்: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
களவும் கற்பும்
இவ்விரண்டு ஒழுக்கங்களிலும் காணப்படும் புனைந்துரையும் உலகியிலும் வருமாறு: புனைந்துரை என்பது, உலகியலில் இல்ல தனைத் தாமே படைத்துக் கொண்டு அதனைக் கேட்போர் விரும்புமாறு அழகுபடுத்தி உரைப்பதாகும். இதனை நாடக வழக்கம் என்றும் கூறுப.
உலகியல் என்பது, உலகில் இயல்பாக நடக்கின்றவற்றை அவ்வாறே உரைப்பதாகும்.
தலைவனும் தலைவியும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிப் பிணி மூப்புச் சாக்காடின்றி இருப்பவர் என்பதும், தலைவன் மடல் ஏறுதல் என்பதும், தலைவனுக்கு வரும் வழியில் யாதொரு தீங்கும் நேரவில்லை என்பதும் போன்றவை புனைந்துரைகளாம், தலைவனும் தலைவியும் களவினில் எதிர்ப்பட்டுப் புணர்தலும், உடன்போக்கும் வரைவும் போன்ற பிற யாவும் உலகியல்களாம்.
1. கைக்கிளை : கைக்கிளை என்பது, ஒரு மருங்கு பற்றிய கேண்மையாகும். அதாவது ஒருதலைக் காமம், தலைவன் தலைவி என்னும் இருபாலாரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் காதலிப்பது.
கை - சிறுமையாகிய, கிளை - உறவு.
2. ஐந்திணை : ஐந்திணை என்பது இருமருங்கும் ஒத்த காதலாகும். அதாவது அன்புடைக் காமம். தலைவன் தலைவி என்னும் இருபாலாரும் ஒருவரையொருவர் மனமொத்துக் காதலிப்பது, இவ் ஒழுக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐவகைப்படும்.
ஐந்து - ஐவகைப்பட்ட; திணை - ஒழுக்கம்.
3. பெருந்திணை : பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். தலைவன் பொருந்தா முறையில் தலைவியைக் காதலிப்பது. பெரு - உலகில் பெருவழக்காகிய, திணை - ஒழுக்கம். (தன்னை விட வயதில் மூத்தவளைக் காதலிப்பது போன்றவை)
களவு: ஐந்திணை - களவு, கற்பு என்னும் இரண்டு ஒழுக்கங்களை உடையது. அவற்றுள் களவு என்பது வேதத்துள் கூறப்பட்ட எண்வகை மணத்துள் யாழோர் கூட்டமாகிய காந்தருவ மணத்தை ஒத்ததாகும். தலைவியைக் கொடுப்போரும் எடுப்போடும் இன்றித் தலைவன் தானே ஊழ்வகையான் எதிர்ப்பட்டு அத் தலைவியைப் புணர்தலானும் அவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகாமை மறைக்கப்படுதலானும் களவு என்னும் பெயர் பெற்றது.
உலகத்துக் களவெல்லாம் பிறர்க்குரிய பொருளை மறையிற் கொண்டாரைக் கை குறைத்தும் கால் குறைத்தும் கால் குறைத்தும் கண் தோண்டியும் கழுவேற்றியும் பழிபாவங்கட்கு ஆளாக்கியும் பின் நரகத்தும் உய்க்கும், ஆனால், இக் களவு மேன்மக்களால் புகழப்பட்டு ஞான ஒழுக்கத்தோடு ஒத்த இயல்பிற்றாய்ப் பின் துறக்க வீடுகளையும் பயக்கும். இக் களவு மறமெனத் தோன்றினும் பின்பு கற்பின் வழி நிற்றற்குக் காரணமாகலின் அறமேயாம், இன்னவகையான் இக்களவொழுக்கம் நன்றாயிற்று.
கற்பு: கற்பாவது, களவின் ஒழுகி வந்த தலைவனும் தலைவியும் ஊர் அறிய மணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதாகும். இது உள்ள மகிழ்ச்சியும் ஊடலும் ஊடல் உணர்த்துதலும் பிரிவும் பிறவும் என பல பகுதிப்படும். அதன் விளக்கம் வருமாறு:
தலைவியே, நின்னைப் பெறக் காரணமாக இருந்தது நின் தோழி என்பால் வைத்த அன்பன்றோ? என்று தலைவன் பாங்கினைப் புகழ்வான். அதுகேட்ட தோழி தலைவனை வாழ்த்துவாள். பின் தோழி தலைவியைப் பார்த்து, வரையும் நாள்வரை நீ ஆற்றியிருந்தது எவ்வாறு ! என வினவுவாள்; தலைவன் தந்த கையுறையால் ஆற்றினேன் எனத் தலைவி கூறுவாள்.
பின் தலைவனை நோக்கி அவ்வாறே பாங்கி வினவுவாள். தலைவனும் ஆற்றியிருந்தவாறு உரைப்பான். ஒரு நாள் செவிலி தலைவியின் வீட்டிற்கு வந்து தலைவன்-தலைவியரது அன்பு பற்றித் தோழியிடம் வினவுவாள். தோழியும் அவ் இருவரது அன்புறவு பற்றிக் கூறுவாள். மேலும் இல்வாழ்க்கைச் சிறப்பும் தலைவன் தலைவியரது காதற் சிறப்பும் கூறுவாள்.
திருக்கோவையார்: திருக்கோவையார் 400 செய்யுட்களைத் தன்னகத்தே கொண்டு சொல்லணி, பொருளணி முதலிய அணிகள் யாவும் ஒருங்கே அமைந்து கற்றார் நெஞ்சம் கனிவு கொள்ளுமாறு இலங்குகின்றது. மற்றைக் கோவைகளைப் போல பாட்டுடைத் தலைவராக மன்னர்களையோ வள்ளல்களையோ கொண்டு பாடப் பெறாமல், தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நாயகனையே தலைவனாகக் கொண்டு அமைவுறப் பாடப்பட்டுள்ளது. ஆகவே இக்கோவை மற்று எவ்வகைக் கோவையினும் தனக்கொரு சிறப்பினதாய்த் திகழ்ந்து விளங்குகிறது. இந்நூல் மற்றைய கோவைகளினும் சிறந்த பொருள்களையும் அருஞ் சொற்றொடர்களையும் கோத்து அமைந்துள்ளதை நோக்குங்கால், இந்நூலாசிரியர் நல்லிசைப் புலமை வல்லுனராகவே உள்ளார்.
மக்கள் இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்பர்; மறையவர் வேதம் என்பர்; சிவ யோகத்தர் ஆகமம் என்பர்; காமுகர் இன்ப நூல் என்பர்; தர்க்க நூலவர் எண்ணூல் என்பர்; தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்பர்; இதைப் பாடக் கேட்டவரும் எழுதியவரும் வேதியராகி முன்னின்று அருளிய ஆதியங்கடவுளேயாதலால், இதன் மெய்ச்சிறப்பு நன்குணரப்படும். திருக்கோவையார் உண்மை என்னும் நூலை நோக்கின், அது துகளறு போதப் பொருளை ஒட்டிச் செல்வது என்பது தெற்றென விளங்குகிறது. உரையாசிரியர் முதற் பாடலுக்கு உரையெழுதப் புகுங்கால், ஓர் அகவல் பாட்டின் மூலம் இந்நூலில் பொதிந்துள்ள செய்திகளை விளக்குகிறார்.
அச் செய்திகளாவன: சித்தும் அசித்துமாகிய அட்டமூர்த்தம், ஐந்தொழில்கள், பெத்தம் முத்தி, ஆண்டவனது அணுவும் மகத்துமாகிய இயல்பு, அவனுடைய சொரூபநிலை, அடி முடியறியாப் புராணம், பதிகிருத்தியம், தில்லைத் திருக்கூத்து, சதாசிவமாகிய தாண்டவேசுரர் திருவுருவம், அவரது முப்பத்தெட்டுக் கலை, அவர் அருளால் மாணிக்கவாசகர் பாடிய உண்மை, அவரது தூய ஞானச் செல்வம், அவர் அருளிய இந்நூல் பொருட் பாகுபாடு, அவற்றின் பெயர், அவற்றுள் உணர்த்தற்கரும் பொருள். உணர்த்த நின்ற பொருளின் பெருமை உணர்த்தும் அளவின் சிறுமை, தம் அறிவின் சிறுமை, மரபு வழுவாத தம் முறைமை முதலிய அரும் பேருண்மைகளைக் கூறியுள்ளார்.