குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பிரசாத கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2016 12:06
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் உள்ள பிரசாத கடை விற்பனை கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் ஜூன் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. குச்சனுார் சுரபி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. வாரத்தின் சனிக்கிழமைகளில் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும், ஆடி சனி வாரங்களில் வெளி மாவட்டங்களிலிருந்தும், சனிப்பெயர்ச்சியின் போது பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். சனி திசை நடப்பவர்கள் மண்காகம், எள், பொரிகடலை வைத்து வழிபாடு நடத்தினால் உக்கிரம் குறையும் என்பது ஐதீகம். இதற்காக சுரபி நதியில் நீராடி உடுத்திய ஆடைகளை அங்கேயே விடுவார்கள். எள் விளக்கு ஏற்றி கொடி மரத்தை சுற்றி பொரிகடலை துாவி வழி படுவார்கள். கோயில் வளாகத்தில் எள் விளக்கு, மண் காகம், பூஜை பொருட்கள் விற்பனை கடை இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பூஜை பொருட்கள் விற்பனை கடை ரூ.10 லட்சத்திற்கும், எள் தீபம் விற்பனைக்கடை ரூ.22 லட்சத்திற்கும் ஏலம் போனது. கோயிலின் நுழைவுப்பகுதி, வளாகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதால், ஏலம் எடுத்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்தாண்டு ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.