பதிவு செய்த நாள்
20
ஜூன்
2016
12:06
சேலம்: கரூரில், 100 ஆண்டுகள் பழமையான, வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட திருநாம விளக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு முன், பயன்படுத்தப்பட்ட அரியவிளக்குகள், தற்போது புழக்கத்தில் இல்லை. இந்நிலையில், கரூரில் திருநாம விளக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கரூர் மாவட்ட நாணயவியல், பழம் கலை பொருட்கள் சேகரிப்பாளர்கள் சங்க செயலர் ராஜா கூறியதாவது: காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கு முன் வெண்கலம், பித்தளையால் தயாரிக்கப்பட்ட திருநாம விளக்குகள் நம் முன்னோர்கள் மத்தியில் அதிக மவுசுடன் இருந்துள்ளது. அந்த விளக்குகளில், கிளி, அன்னபட்சி, இயற்கை, தெய்வ உருவங்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர்களின் அடையாளமான சிலுவையும் இடம்பெற்றுள்ளன. கரூரில் கண்டெடுக்கப்பட்ட திருநாமவிளக்கில், சூரியன், சந்திரன் விளக்கின் முகப்பில் மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது. அந்த விளக்கு, தற்போது விலை மதிக்க முடியாத கலை பொருளாக கருதப்படுகிறது. பிற விளக்குகள் விற்பனைக்கு உள்ள நிலையில், திருநாம விளக்கின் தயாரிப்பு இல்லை என்பதால், அதற்கு மவுசு அதிகம். ஒரே ஒரு விளக்கை மட்டும், நான் கலை பொருளாக காத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.