சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2016 12:06
காரைக்குடி: காரைக்குடி சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனி திருவிழா, கடந்த 16ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. 9ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
முன்னதாக காலை 11.30 மணிக்கு வீரசேகரர் பிரியா விடை, உமையாம்பிகை தாயார், விநாயகர் ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4.35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. விநாயகர் தேர் முதலில் வர அதை தொடர்ந்து வீரசேகரர் பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதியில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. சண்டீகேஸ்வரர், முருகன் சப்பரத்தில் வீதி உலா வந்தனர். தேரின் முன்பு இளைஞர்கள் சிலம்பாட்டம் ஆடியும், வழி நெடுக பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் சுவாமியை வழிபட்டனர். மாலை 5.45 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.