பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
11:07
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின், வடகாடு மலைப் பகுதியில், 3000 ஆண்டுகள் பழமையான சங்ககால பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவில் உதவிப் பேராசிரியர் அசோகன், தொல்லியல் ஆர்வலர்கள் பெருமாள், மனோஜ்குமார், ஆறுமுகம், தங்கவலசு நடத்திய ஆய்வில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் கூறியதாவது:ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் இந்த தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வடகாடு, கண்ணனுார் மலைப் பகுதிகளுக்கு இடையே உள்ள ஒரு மலைக்குகையில் இந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் உள்ளது. சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு நிகழ்ச்சியை இந்த குகைப்பாறையில் ஓவியங்களாக தீட்டி வைத்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வரையப்பட்ட இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை அழியும் நிலையில் உள்ளன. சில ஓவியங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. முக்கியமாக ஒரு அரசனின் இறுதி ஊர்வலக் காட்சியை முதன்மைப்படுத்தி இந்த ஓவியத் தொகுப்பு வரையப்பட்டுள்ளது. அழிந்து போன
ஓவியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிற ஓவியங்களை வைத்துப் பார்த்தால், எதிர்பாராத தாக்குதலில் இந்த அரசன் கொல்லப்பட்டு, அவனை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் காட்சி தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளது.பாடையில் அரசன்ஓரளவு அழிந்து போன நிலையில் உள்ள ஓவியங்கள் அரசன் கொல்லப்படுவதற்கு முன்பு இருந்த நிலையை காட்சிப்படுத்துகின்றன. ஒரு ஓவியத்தில் அரசனும், அரசியும், அவர்களது குழந்தையும் நின்று கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஓவியத்தில் இவர்கள் பதற்றத்துடன் வேகமாக ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.அடுத்த ஓவியத்தில் ஒருவன் யானை மேல் எதிர்ப்படுகிறான். அரசி தன் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தப்பிக்கும் காட்சியும், அரசன் பிரிந்து யானை மேல் இருக்கும் ஒருவனுடன் போரிடும் காட்சியும் உள்ளது. இன்னொரு ஓவியத்தில் போர் நடக்கும் போது அரசியை சுற்றி 2 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை மக்கள் ஏற்படுத்தி அரசியை காப்பாற்றுகின்றனர். குழந்தை தனித்து விடப்படும் காட்சி வரையப்பட்டுள்ளது.
3000 ஆண்டுகள் பழமை: 30 நுாற்றாண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியில் நடந்த சோகமான நிகழ்ச்சியை இந்த பாறை ஓவியங்கள் காட்டுகின்றன. குகைக்கு நேர் கீழே 260 மீ., ஆழத்தில் கடல் மட்டத்தில் இருந்து 540 மீ., உயரத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த 5 ராட்சத கல்திட்டைகள் (புறாக்கூண்டு வடிவ கல்) காணப்படுகின்றன. இதில் ஒன்று இறந்து போன அரசனின் கல்திட்டையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஓவியத்தின் வடிவமைப்பு (பிக்டோகிராப்), 3000 ஆண்டுகள் பழமையானது என கணிக்க உதவுகிறது, என அவர்கள் தெரிவித்தனர்.