ரம்ஜான் எனப்படும் பெருநாள் நமக்கெல்லாம் நன்னாள். இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை என்பதால் தான், பெருநாள் எனப்பட்டது. ரம்ஜான் பெருநாளைக் கொண்டாட இருக்கும் இந்த நல்வேளையில் அண்ணல் நபிகள் நாயகம் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம்.
* ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள். * நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடன் இருக்கும். * மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும். ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும். ஆக, ரம்ஜான் என்றாலே தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. நீங்கள் தர்மம் செய்வதில் ஏதோ சில காரணங்களால் தடங்கல் ஏற்பட்டிருந்தா-லும் உடனடியாக அதை நிறைவேற்றி விடுங்கள்.