பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
03:07
இந்த உலகில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு, தேர்ந்தெடுப்பது உன் கையில், இதை வைத்தே உலகியல் வாழ்க்கை நடக்கின்றது என்றார் அன்னை சராதாதேவி. உலகின் உள்ளது போன்றே சாதாரண மனிதனின் உள்ளத்திலும் நல்லதும் கெட்டதும் இருக்கின்றன. அதனால் மனதில் ஏற்ற இறக்கங்கள் வருகின்றன. இவையே நல்வினை - தீவினை என்ற கட்டுக்களால் பம்பரம் போன்று ஒருவனைச் சுழல வைத்து, செயல்களில் ஈடுபடும்படிச் செய்கின்றன. இந்தப் போராட்டத்தினால் அவன் தான் யார்? தன் இயல்பு என்ன? என்பதையே மறந்து வாழ்கின்றான். ஆனாலும் சில தருணங்களில் அவன் மனம் உள்நோக்கிப் பார்க்கிறது. அது அவன் வாழ்வில் சில மகான்களின் வாழ்க்கையைப் பார்த்தோ, கேட்டோ, படித்தோ அறிந்ததால் வந்திருக்கலாம். அதன் பலன், அவன் இதயத்தில் இறைதாகம் அதிகரிக்கிறது. அதனாலேயே நன்மை தீமைகளான சூழலிலிருந்து விடுபட்டு இறைவனை அடைந்து விட முடியாது. அதற்கு அப்யாசம் அதாவது தொடர்ந்த பயற்சியும் இறைநிலைக்கு மாறான விஷயங்களை முற்றிலும் ஏற்க மறுக்கும் வைராக்கியமும் தேவை.
இவற்றைப் பயிற்சி செய்வதற்குப் பூஜை மகத்தான சாதனமாக ஆகிறது.
காயமே கோயிலாகக் கடி மனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் பொற்றுவிக் காட்டினோமே
உடம்பே கோயிலாகவும், புலன்களின் வழி செல்லாது காக்கப்படும் மனம் அக்கோயிலில் தொண்டு செய்கின்ற சேவகனாகவும், வாய்மையே கோயிலின் தூய்மையாகவும், அவ்விதம் தூய்மை பெற்ற மனத்தினுள் துலங்கும் ஞான ஒளியையே லிங்கமாகக் கொண்டு, அன்பையே பக்தியாக நெய்யும் பாலுமாக நிறைய அபிஷேகம் செய்து, துதியை நிவேதனமாக்கி, இறைவனுக்கு பூஜை செய்யும் முறையைக் காட்டினோம் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். இவ்விதம் ஆத்மார்த்தமாகத் தன்னுள் இருக்கின்ற இறையைப் பூஜிக்கும்போது ஒருவரிடத்தில் இறைபாவனை பெருகி, தெய்வீக விழிப்புணர்வு உண்டாகிறது. அந்த விழிப்புணர்வால் அத்தகையோரின் வாழ்வு தெய்வீக வாழ்வாக ஆகிறது. இதே பூஜையைத் தான் வசிக்கும் இடத்தில் புறமுகமாகச் செய்யும்போது அந்த இடமும் தூய்மை பெற்று தெய்வீக சாந்நித்தியம் உள்ள இடமாக, கடவுள் வாழும் புனிதத்தலமாக ஆகிறது. இதுபோன்ற வாழ்க்கையை வாழ்ந்து பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாந்நித்தியத்தை ராமகிருஷ்ண இயக்கத்தில் துலங்கச் செய்தவரையே இங்கு காண்போம்.
ராமகிருஷ்ணானந்தரின் வழிபாட்டு முறை: குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் பெருவாழ்வானது அவரது ஆனந்தத்தின் ஊற்றாய் இருப்பவரும் தெய்வீகத்தின் திருஅவதாரமுமான குருதேவரை அகத்திலும் புறத்திலும் பூஜை செய்தபடி அவரிடத்திலேயே நிலைபெற்றதாக உள்ளது. காலையில் நீராடித் தூய உடை அணிந்து வேறெதையும் பார்க்காமல் நேராக மடத்தின் பூஜை அறைக்குச் செல்வார் சுவாமிகள். சக்கவர்த்தி திருமகன் போன்று குருதேவரின் குழந்தையாக உள்ளே நுழைவார். குருதேவரின் திருவுருவப் படத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார். சுவாமிகளை பொருத்தவரை அது வெறும் படமல்ல, உயிருணர்வுடன் கூடிய குருதேவரே அது. தமது அன்புச் சீடனின், மகனின் சேவையை ஏற்றுக்கொள்வதற்காக, குருதேவரே விரும்பி அந்தப் படத்தில் எழுந்தருளியிருப்பதாகத் தோன்றும். சுவாமிகள் பூஜை செய்யத் தொடங்கிவிட்டால், ஜடமாகிய கவரும், ஜன்னலும் கதவும் தரையும் கூட உணர்ச்சி பெற்றுத் துடிப்பது போன்று இருக்கும். இறைவனில் மனம் ஒன்றியிருக்க, பக்தி வெள்ளத்தில் இதயம் மூழ்கியிருக்க, உலகச் சிந்தனையே இல்லாது தெய்விக உணர்வில் ஒன்றி ராமகிருஷ்ணானந்தர் இருப்பார்.
தெளிந்த குரலில் பூஜை மந்திரங்களை அவர் ஓதும்போது பிரேமை அலைகள் நாலாபுறமும் தவழும். குருதேவரைப் பற்றிய துதிப்பாடல்களைப் பாடும்போது அவரது கண்களில் நீர் மல்கும். உடல் அலாதி எழிலுடன் பிரகாசிக்கும். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வகுத்தது போன்றே ராமகிருஷ்ண மடத்துப் பூஜைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வராக நகர் மடத்தில் சுவாமிகள் இருந்தபோது, அதிகாலையில் எழுந்து கை கால் அலம்பிவிட்டு, பூஜை அறைக்குச் சென்று குருதேவரைத் துயிலெழுப்புவார். அவர் பல் தேய்ப்பதற்குக் குச்சியும் வாய் அலம்ப கங்கை நீரையும் தருவார். தேங்காய் லட்டும் தண்ணீரும் அதிகாலை உணவாக நைவேத்தியம் செய்வார். குருதேவர் புகைப்பிடிக்க ஹுக்காகவும் ஏற்பாடு செய்வார்.
பிறகு காலை நித்திய பூஜைக்காகப் பூப்பறிப்பது, பூஜை அறையைக் கூட்டுவது, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று திருப்பணிகள் செய்வார். இதன் பின் கடைத்தெருவிற்குச் சென்று சமையலுக்குத் தேவையானவற்றை வாங்கி வருவார். குருதேவரின் நைவேத்தியம் என்பதால் மிக நல்ல பொருட்களையே வாங்கி வந்து நைவேத்யம் தயாரிப்பார். பிறகு கங்கையில் நீராடி பூஜைக்கான நீரைக் கொண்டு வருவார். பூஜையறையில் பூக்களால் குருதேவரை அலங்காரம் செய்வார். பூஜைக்கான மந்திரங்களை ஓதி, அகத்தையும் புறத்தையும் தூய்மை செய்து, புனிதப்படுத்தி, அனைத்திலும் குருதேவரின் சாந்நித்தியம் துலங்கச் செய்வார். அதன் பின், தியானத்தில் ஈடுபட்டு, அக பூஜை செய்வார். அப்பூஜைக்குப் பின், புறத்தே சிவலிங்கத்தில் குருதேவரை எழுந்தருளச் செய்வார். இதன்பின் பத்து வித அங்கங்கள் கூடிய தசோபசார பூஜையை ஆழ்ந்த பக்திப் பெருக்குடன் செய்வார். இறுதியில் பலமுறை குருதேவருக்கு மலர்களை அர்ப்பணித்து ஜபத்தில் லயித்து விடுவார் சுவாமிகள். உயிருடன் இருப்பவருக்கு எப்படி உபசாரங்கள் செய்யப்படுமோ அப்படியே அவர் குருதேவரை வழிபட்டார். மாலையில் குருதேவருக்கு ஆரதி, பஜனையும் பக்தியுடன் நடைபெறும். இரவில் குருதேவருக்கு நிவேதனம் செய்து அவரைப் படுக்கையில் துயில வைப்பார் ராமகிருஷ்ணானந்தர்.
தாம் செய்த ஒவ்வொரு செயலையும் வழிபாடாகச் செய்தார். வழிபடு மூர்த்தியாகிய குருதேவரின் மகிமைகளைக் கிரகித்து, அவற்றைச் செயல்வடிவத்திலும் கொண்டு வந்தார் சுவாமிகள். அவதார புருஷராகிய ஸ்ரீராமகிருஷ்ணருக்கு சுவாமிகள் செய்த சேவை அவதார சேவை அல்லது அவதார வழிபாடு. குருதேவரின் மறைவிற்குப் பிறகு அவரது மனம் அவதார சேவையிலிருந்து அர்ச்சாவதார சேவை அல்லது அர்ச்சாவதார வழிபாட்டில் ஈடுபட்டது. கோயிலில் உள்ள விக்கிரங்களே அர்ச்சாவதாரம். இந்த அர்ச்சாவதாரக் கோட்பாடு ராமானுஜரால் பிரபலப்படுத்தப்பட்டது. அவதார புருஷர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே பூமியில் வாழ்கிறார்கள். அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர்களைச் சாதாரண மனிதர்கள் காண்பதோ வழிகாட்டுதல் பெறுவதோ இயலாது ஆனால் அர்ச்சாவதாரம் நிரந்தரமானது எந்த பக்தர்களும் எந்தக் காலத்திலும் அவர்களை வழிபட முடியும்.
ராமகிருஷ்ண சங்கத்தின் அடித்தள வலிமை: வராக மடத்தில் குருதேவரின் இளம் துறவறச்சீடர்கள் தங்கியிருந்தபோது சுவாமிகள் குருதேவருக்காகச் செய்த நித்திய பூஜையானது மடத்தின் அடித்தள வலிமைகளில் ஒன்றாக ஆனது. மற்ற சீடர்கள் அவ்வப்போது தீர்த்தயாத்திரை சென்று வந்தாலும் சுவாமிகள் மட்டும் எங்கும் செல்லாமல், குருதேவருக்குச் சேவை செய்தபடி மடத்தில் குருதேவரின் சாந்நித்தியம் நிரந்தரமாகத் துலங்கும்படி வழிபட்டு வந்தார். பணம் இல்லாததால் மடத்தையே மூடிவிடலாம் என்றுகூட நான் நினைத்ததுண்டு. ஆனால் சசியை (ராமகிருஷ்ணானந்தர்) அதை ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய முடியவில்லை. அவனே இந்த மடத்திற்கு நடுநாயகமானவன்..... அவனது ஒருமைப்பட்ட ஈடுபாடுதான் எவ்வளவு அற்புதமானது என்று பின்னாளில் விவேகானந்தர் கூறினார். சில காலத்திற்குப் பின் மடம் வராக நகரிலிருந்து ஆலம்பஜாருக்கு மாற்றப்பட்டது. 1897-ல் சுவாமி விவேகானந்தர் மேலைநாட்டில் ஆன்மிகத்தை நிலைநாட்டி, தாய்மண்ணிற்குத் திரும்பினார். கல்கத்தா சென்றதும், அவர் சென்னை அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுவாமி ராமகிருஷ்ணானந்தரை சென்னையில் மடம் துவக்க அனுப்பினார்.
தென்னகத்தில் ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு: புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுவாமிகள் சென்னையில் வராக நகர் மடத்தில் செய்த அர்ச்சாவதார வழிபாட்டிலிருந்து விஸ்வரூப ஸ்ரீராமகிருஷ்ண வழிபாட்டில் ஈடுபடத்தலைப்பட்டார். மடத்தில் நித்திய பூஜையுடன் சமய வகுப்புகள், சொற்பொழிவுகள் என்று குருதேவரின் செய்தியையும் அவரது பெருவாழ்வையும் மக்களிடையே பரப்பலானார். சென்னையில் சுமார் 7, 8 இடங்களில் வாரம் தோறும் வகுப்புகள் நடத்தினார்; சொற்பொழிவுகள் ஆற்றினார். கீதை, உபநிடதங்கள், பாகவதம், பஞ்சதசி கொண்ட சாஸ்திர வகுப்புகளும் அதில் அடக்கம். ஒரு வாரத்திற்கு சுமார் 11 வகுப்புகள் வரை சசி மகராஜ் நடத்தியுள்ளார். இவ்விதம் அவர் செய்து கொண்டிருந்த பணி மெல்லமெல்ல மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. பெங்களூரு, கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற இடங்களில் அவர் குருதேவரின் செய்தியைப் பரப்பினார். சுவாமிகளின் முயற்சியால் பெங்களூருவில் மடம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமிகள் செய்த மடத்தின் நித்திய பணி மற்றும் பிரச்சாரங்களுடன் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஜயந்தி விழாக்கள். ஜயந்தி விழாக்கள் வெறும் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் நிற்காமல், வருபவர்களுக்குப் பிரசாதம் அளித்து, அத்துடன் ஆன்மிக உணர்வும் வழங்கவேண்டும் என்பது சுவாமிஜியின் கருத்து. அதற்கேற்ப விழா நிகழ்ச்சிகளை வகுத்தார் சுவாமிகள். 1898-இல் முதன் முறையாக சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தி விழாவைக் கொண்டாடினார் சுவாமிகள்.
விசேஷ பூஜை, சங்கீர்த்தனம், அன்னதானம், ஹரிகதை, சொற்பொழிவு, ஆரதி மற்றும் பஜனை என்று விழா நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானத்தில் சுமார் 3500 ஏழை மக்களுக்கு உணவளிக்கப்பட்டது. ஜாதி மத பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்றனர். அன்னதானப் பந்தலில் குருதேவர் படம் மையமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூஜையில் குருதேவருக்கு எப்படி பரவசத்துடன் சுவாமிகள் நிவேதிப்பாரோ அது போன்று இங்கே ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் மூலம் குருதேவரே உணவை ஏற்கிறார் என்று சுவாமிகள் பரவசத்துடன் கைகளைத் தலைக்கு மேல் வைத்து அவர்கள் அனைவரையும் கண்டு வணங்குவார்.
இளம் துறவியரை வழிநடத்துதல்: மடத்தில் சேர்ந்த இளம் துறவியரை வழிநடத்தும் ஆச்சார்யராக, குருவாக, ரிஷியாக விளங்கினார் சுவாமிகள். அன்பு மற்றும் புனிதத்தின் திரண்ட வடிவம் சசிமகராஜ். உடலாலும் உள்ளத்தாலும் அத்தகையதொரு புனிதரை நான் எங்கும் கண்டதில்லை என்றார் அவரது சகோதரத்துறவியான சுவாமி சிவானந்தர். அத்தகைய புனிதரான சுவாமிகள் இளம் பிரம்மசாரிகளுக்கான வழிகாட்டு நெறிகளை மந்திரங்கள் வடிவில் கண்டறிந்து கூறினார். அவையே இன்று ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் பிரம்மசரிய தீக்ஷைக்கு உரிய மந்திரங்களாகும். தீக்ஷைக்கு உரியவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழிகளுடன் குருதேவரின் வாழ்வையும் செய்தியையும் இணைத்துப் புது மந்திரங்களாக அவர் தந்திருக்கிறார்.
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோவிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே.
முருகக் கடவுளைப் பெற்ற உமை அன்னையை ஒரு பாகத்தில் உடையவரும் தெற்கே திருக்கடம்பூர் தலத்தில் திருக்கரக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் கடமை அவனது அடியவனான என்னைப் பேணிக் காப்பது எனது கடமையாவது அவரது திருத்தொண்டு செய்து எல்லாம் அவனே என்று கிடப்பதே என்றார் திருநாவுக்கரசர். அதுபோன்றதொரு பெருவாழ்க்கையை வாழ்ந்ததன் மூலம் ஆன்மிக லட்சியங்களால் ஈர்க்கப்பட்டு நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்ப்பட்ட நிலையை அடைய, ஆன்மிக வாழ்க்கை வாழ விரும்பும் பக்தர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விளங்குகிறார்.