பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
01:07
காரைக்கால்: காரைக்காலில் உள்ள கோவிலில், அம்மன் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டதால், பரபரப்பு நிலவுகிறது. புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில், நிரவி பகுதியில் ஆலடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜைகள் முடிந்து, கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கோவில் காவலர் அண்ணாதுரை நேற்று காலை பார்த்தபோது, கோவில் வாயிலில் இருந்த அம்மன் சிலையின்(சுதை சிற்பம்) கைகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், நிரவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக் டர் முருகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வழக்குப் பதிந்து, சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். இதேகோவிலில், கடந்த 2013ம் ஆண்டும், அம்மன் சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர். மீண்டும் சிலை உடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.