பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
12:07
திருப்பூர் :அவிநாசியில் வீற்றிருக்கும் கரிவரதராஜ பெருமாள், வீர ஆஞ்சநேயர் கோவில்கள் கும்பாபிஷேகம், 11ல் நடைபெறுகிறது; தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நேற்று, நடைபெற்றது.அவிநாசியில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெற்றது. நாதஸ்வரம் இசை முழங்க, இறைவனை அழைக்கும் விதமாக, 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு ஏந்தியபடி, ஊர்வலத்தில் முன்னே செல்ல, மேளதாள இசை முழங்க ஆஞ்சநேயர், பெருமாள் கோவில் கலசங்களும், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. 600 பெண்கள், அவிநாசி லிங்கேஸ்வரர் குளத்தில் இருந்து எடுத்த தீர்த்த குடங்களை சுமந்து செல்ல, 250 பெண்கள், முளைப்பாலிகை எடுத்துச் சென்றனர்.கோவில் குளத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், நான்கு ரத வீதிகள் வழியாக, பெருமாள் கோவிலை வந்தடைந்தது. கோலாட்டம், கும்மியாட்டம் என நடனமாடியபடியும், பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் இசைத்தபடியும் சென்றனர். தாரை தப்பட்டை, குதிரையாட்டம், வாண வேடிக்கையுடன் சென்ற ஊர்வலத்தை, பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர். ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் பக்தர் பேரவை மற்றும் சேக்கிழார் புனித பேரவை செய்திருந்தது.